வெண்முரசு விழா அழைப்பிதழ் |
நவம்பர் மூன்றாம் தேதி திரு.ஜெயமோகன் அவர்கள் “வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்கு வாருங்கள்” என்று மின்னஞ்சலில் எனக்கு அழைப்பு கொடுத்திருந்தார். "உங்கள் நேரடி அழைப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன். உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருப்பவர் நினைவில் நான் இருப்பதே எனக்கு கர்வத்தைத் தருகிறது. நிச்சயம் வருவேன். உங்களை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இம்முறை தீரும் என்பதே விளக்க முடியாத ஆனந்தத்தைத் தருகிறது." என்று அவருக்குப் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். பிறகு அவரிடம் தொலைபேசியில் பேசினேன். "அவரது குரல் கேட்டதே எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. விழாவுக்கு நிச்சயம் போகவேண்டும் என்று தீர்மானித்தேன்.
நாம் மட்டும் போனால் போதாது நம் நண்பர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து, நமது வலைத்தளத்தில் ஒரு வாழ்த்து செய்தியையும், நண்பர்களுக்கான அழைப்பையும் கொடுத்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இருந்து என் வருகை குறித்து கேட்டு உறுதி செய்யும் விதமாக திரு.ராஜகோபால் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். “விழாவுக்குக் கட்டாயம் வருவேன் சார்” என்று சொன்னேன்.
என் நெருக்கமான நண்பர்கள் எழுவர் சேர்ந்து செல்வது எனத் தீர்மானித்தோம். விழா 5 மணிக்குதான் என்றாலும் 4 மணிக்கு அரங்கத்தை அடைந்து விட வேண்டும் என்று தீர்மானித்தோம். எனினும் அரங்கை அடையும்போது மணி 4.45 ஆகிவிட்டது. நண்பர்கள் திரு.ஜெயவேல், திரு.சீனிவாசன், திரு.ஜெகதீஷ், திரு.கமலக்கண்ணன், திரு.லூர்துராஜ், திரு.சார்லஸ் ஆகியோர் சேர்ந்து ஒரு படையாக விழாவுக்குச் சென்றோம். அரங்கத்தை அடைந்ததும் வாசலில் திரு.அரங்கன் அவர்களைக் கண்டோம். அவர் உள்ளே செல்வதற்கான வழிகாட்டினார். உள்ளே சென்று பார்த்தால் அப்போதே கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்திருந்தது. பின்வரிசையில் இடம் இருந்தது. அங்கு சென்று நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.
பிறகு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரங்கத்துக்கு நான் வந்துவிட்டதைத் தெரிவித்தேன். அவர் என்னை அழைத்துச் சென்று முன் வரிசையில் இருந்த மகாபாரத பிரசங்கியர் அருகில் அமர வைத்தார். அவர்கள் அருகில் நான் அமர்ந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. சற்று நேரத்தில் ஒரு நண்பரையும் என் அருகில் வந்து அமர வைத்தார். சிறிது நேரம் நானும் அந்த நண்பரும் அறிமுகம் இல்லாமலேயே பேசிக்கொண்டிருந்தோம். அவர் யார் என்பது எனக்குத் தெரியாது. எனவே, அவரைக் குறித்து விசாரித்தேன் “நான் வெண்முரசில் ஓவியம் வரையும் ஷண்முகவேல்” என்றார்.
மஹாபாரதப் பிரசங்கியர் மற்றும் வெண்முரசு ஓவியர் திரு.ஷண்முகவேல் அவர்களுடன் நான் |
அவர் ஓவியங்கள் ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன். வாசிப்புத்தான் மழைப்பாடல் பாதி அளவுக்கு மேல் தொடர முடியவில்லையெனினும் {நிச்சயம் தொடர்வேன்}, ஒவ்வொரு பதிவின் ஓவியத்தையும் குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். “சார் மன்னிச்சுக்கங்க உங்கள எனக்குத் தெரியாம போச்சே” என்றேன். பிறகு வெண்முரசு குறித்தும், ஜெயமோகன் அவர்கள் குறித்தும், ஓவியங்களை எந்த மென்பொருள் துணையுடன் வரைகிறார் என்பது குறித்தும் பேசிக்கொண்டோம். இவ்வளவு பேசிய பிறகும் மனிதர் “நீங்கள் யார்?” என்று கேட்ட பாடில்லை. “சார் நானும் ஒரு கணினி வரைகலைஞன்தான். அது போக மற்ற நேரத்தில் மஹாபாரதத்தை மொழிபெயர்த்து வருகிறேன். அதனால் தான் நீங்கள் எந்த மென்பொருளில் வரைகிறீர்கள் என்று கேட்டேன்.” என்றேன்.
நம் வலைப்பூவில் இருக்கும் எனது படம் |
கேட்டதும் "டக்" என்று திரும்பிப் பார்த்த திரு.ஷண்முகவேல், “நீங்களா? Website-ல பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே! Sorry எனக்குத் தெரியல! தப்பா நினைச்சுக்காதீங்க” என்று குரல் அதிகம் வெளிப்படாதவண்ணம் சொன்னார். “உண்மை முகம் இதுதான் சார். பயணப்பட்டு வந்ததால், முகத்தில் கொஞ்சம் களைப்பு தெரிகிறது போல” என்றேன். வலைத்தளத்தில் உள்ள புகைப்படம் மூன்று வருடங்களுக்கு முன் எடுத்ததாகும். மேலும் அது போட்டோஷாப் வேலைப்பாடு கொண்ட புகைப்படமாகும். “நான் தொடர்ந்து உங்கள் வலைப்பூவைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். விராட பர்வம்தானே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஆமாம் சார். எனது மொழிபெயர்ப்பையும் நீங்கள் படிப்பதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றேன். அநியாயத்திற்கு தன்னடக்கம் கொண்ட மனிதர் திரு.ஷண்முகவேல். அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எனக்கு முன் வரிசையில் திரு.ஜடாயு, திரு.பத்ரி சேஷாத்ரி, மற்றும் திரு.பிரசன்னா |
பிறகு திரு.ஷண்முகவேல் அவர்களை நண்பர் ஒருவர் வந்து அழைத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு நான் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். இதற்குள் அரங்கம் நிறைந்து விட்டது. போக்குவரத்து நெரிசலின் காரணமாக திரு.இளையராஜா அவர்கள் வருவதற்கு சற்றுத் தாமதமாகும் என்று அறிவித்தனர். எழுத்தாளர்கள் திரு.அசோகமித்திரன், திரு.பி.ஏ.கிருஷ்ணன், திரு.பிரபஞ்சன், திரு.நாஞ்சில்நாடன் மற்றும் நடிகரும் இயக்குனருமான திரு.கமல்ஹாசன் ஆகிய சிறப்பு விருந்தினர்கள் வந்துவிட்டனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் அழகாகத் தொகுத்து வழங்கினார். பிறகு, திரு.இளையராஜா அவர்களும் வந்து சேர்ந்தார்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேச்சிலும் நிறைய தகவல்கள் இருந்தன. ரசிக்கும்படியாக இருந்தன. குறிப்பாக திரு.அசோகமித்ரன் அவர்கள் பேச்சு கருத்தாழம் மிக்கதாக இருந்தது. சில இடங்களில் அவர் என்ன பேசினார் என்பதை மனதுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. அவருடைய முதிர்ச்சி கொண்டோர், நிச்சயம் அவற்றைப் புரிந்து கொண்டிருப்பர். திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் பேச்சு பெரும்பாலும் காணொளியில் கண்ட அவரது வாழ்த்தை ஒட்டியே இருந்தது. புதிய தகவல்களையும் சேர்த்துச் சொன்னார். திரு.பிரபஞ்சன் அவர்கள் "நீலம்" நூலைக் குறித்தே அதிகம் சொன்னதால் என்னால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அனைவரும் ரசிக்கும்படி இனிமையாகப் பேசினார். "நீலம்" நாவலை முழுமையாகப் படித்தவர்கள் அவரது பேச்சை முழுமையாக ரசித்திருப்பர்.
திரு.இளையராஜா அவர்களின் சிறப்புரை |
திரு.இளையராஜா அவர்கள் “நானும் கமலும் சாதிக்காததை ஜெயமோகன் சாதிக்கிறார்” என்று சொன்னது விழா நாயகரை கவுரவிக்கும் வெற்று வார்த்தையாக இல்லாமல் உயிரோட்டமாக இருந்தது. “நீங்க-லாம் விஷ்ணுபுரம், நான் சிவபுரம்” என்றார் திரு.இளையராஜா. அவரைத் தொடர்ந்து வந்த திரு.கமல்ஹாசன் அவர்கள் “நீங்க விஷ்ணுபுரம், அவர் சிவபுரம், நான் வேறுபுறம்” என்று சொன்னது ரசிக்கும்படி இருந்தது. மஹாபாரதம் குறித்தும், புராண இதிகாசங்கள் குறித்தும் திரு.கமல் அவர்கள் நிலை, மிக வித்தியாசமானது. ஆனால் அவர் அதை அழகாக எதிர்கொண்டார். திரு.ஜெயமோகன் அவர்களின் அசுர வேக எழுத்தைப் பாராட்டி உள்ளம் நெகிழ வைத்தார்.
இதற்கு இடையில் வெண்முரசின் நாவல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சி நிரலின் படி அடிபிறளாமல் அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்தவர்களின் ஏற்பாடு மிகவும் கச்சிதமாக இருந்தது. மகாபாரத பிரசங்கியர்களைக் கவுரவித்துப் பரிசளித்தனர். திரு.கமல்ஹாசன் அவர்கள், அந்தப் பிரஞ்சங்கியரில் ஒருவரான முனைவர் திரு.கமலக்கண்ணன் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு "எங்களுக்கெல்லாம் முன்மாதிரியானவர்கள் இவர்கள்!" என்று குறிப்பிட்டது நிறைவாக இருந்தது. அடுத்ததாக ஓவியர் திரு.ஷண்முகவேல் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
அடுத்ததாக, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிசாரி மோகன் கங்குலி என்ற வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட "The Mahabharata" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அருட்செல்வப்பேரரசன் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியதைத் தனி ஒருவராக செய்துவருகிறார். மேலும் ஆடியோ கோப்புகளையும் பதிவிறக்கத்திற்குத் தந்து வருகிறார். அவரைக் கவுரவிக்கும் விதமாக பிரபஞ்சன் அவர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்குவார்” என்று அறிவித்தார்.
மேடையில் ஏறிய அந்தக்கணம் |
என் இதயம் ஒரு நிமிடம் நின்றேவிட்டது! இது நான் சற்றும் எதிர்பாராதது! என்ன செய்வது என்று அறியாது திகைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வந்து என்னை அழைத்து மேடையில் ஏற்றி விட்டார். மேடை என்பது எனக்கு அறிமுகமே இல்லாத ஒன்று. மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாது. சொக்கன் எழுதிக்கொடுத்த பாடலை எடுத்துக் கொண்டு, பாண்டியன் முன்பு நின்று, பரிசுக்காகக் காத்திருக்கும் திருவிளையாடல் தருமியின் நிலை எனக்கு நினைவுக்கு வந்தது. ஓடிச் சென்று திரு.ஜெயமோகன் அவர்களது கரங்களைப் பற்றிக் கொண்டேன். “சார் ரொம்ப நன்றி சார்” என்றேன். அவர் என் தோள்களைத் தட்டிக் கொடுத்தார்.
திரு.பிரபஞ்சனிடம் பரிசு பெறும்போது... தோளைத் தட்டிக் கொடுத்த திரு.கமல்ஹாசன் அவர்கள்... திரு.பி.ஏ.கிருஷ்ணன், திரு.ஜெயமோகன் திரு.இளையராஜா, திரு.பிரபஞ்சன் மற்றும் திரு.நாஞ்சில் நாடன் |
திரு.கமல்ஹாசனின் ஸ்பரிசம் கிடைத்தது; திரு.ஜெயமோகனின் அரவணைப்பு; திரு.அசோகமித்ரன், திரு.கமல்ஹாசன், திரு.இளையராஜா, திரு.ஜெயமோகன், திரு.பி.ஏ.கிருஷ்ணன், திரு.நாஞ்சில்நாடன் ஆகியோர் முன்னிலையில் திரு.பிரபஞ்சன் கரங்களில் பெற்ற நினைவுப்பரிசு எனக் காட்சிகள் நகர நகர, நான் இன்னும் பூமியில் தான் இருக்கிறேனா? அல்லது இது சொர்க்கமா? என்று நினைக்க வைத்தது. பிறகுதான் என் பாதம் தரையில் பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்!
மேடையில் இருந்த போதே திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் என்னை அழைத்து “அருமையா செய்றீங்க!” என்று மகிழ்ச்சி ததும்பிய முகத்துடன் சொன்னது; திரு.இளையராஜா அவர்கள், “வாழ்த்துகள்” என்று சொன்னது; திரு.கமலஹாசன் அவர்கள் என் தோள்களில் தட்டிக் கொடுத்தது; திரு.நாஞ்சில் நாடன், திரு.பிரபஞ்சன், திரு.ஜெயமோகன் அவர்களது இன்முகங்கள்; திரு.அசோகமித்ரன் அவர்களின் அருகாமை என இத்தனையும் எத்தனை பேருக்கு ஒரே சமயத்தில் கிடைக்கும்? “பரமா! போனஜென்மத்துல என்ன தவம் செய்தேண்டா?” என்று இறைவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டேன். அதனாலோ என்னவோ நினைவு தவறாமல் மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்தேன். அந்தக் காட்சிகள் அனைத்தும் இப்போதும் என் கண் முன்னே நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
பரிசு பெற்ற அத்தருணம் |
நான் கீழே இறங்கி வந்ததும் சில நண்பர்கள் கை குலுக்கினர். நாம் அமர்ந்திருந்த இருக்கைக்குத் திரும்பிய போது, எனக்குப் பின் இருக்கையில் இருந்த பெண்மணிகள் இருவர். “அருமையா இருக்குங்க! நாங்களும் படிக்கிறோம்!” என்றார்கள். இதைவிட வேறு என்ன எனக்குப் பெருமை வேண்டும்? இறந்து போன என் தாயாரே வந்து சொன்னது போல இருந்தது. எப்படியோ, அந்த ஐந்து நிமிடம் எனக்கு ஒரு யுகம் போல இருந்தது. ஒரு யுகத்தைப் பெரும்புகழுடன் சொர்க்கத்தில் கழித்த உணர்வுடன் மீண்டும் என் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன்.
அதன் பிறகும், ஏற்புரை சொல்ல வந்த திரு.ஜெயமோகன் அவர்கள் ம.வீ.ராமானுஜாச்சாரியார். அவர்களையும், வில்லிபுத்தூராழ்வார், நல்லாப்பிள்ளை ஆகியோரையும் பல மஹாபாரத முன்னோடிகளையும் குறித்துச் சொல்லிவிட்டு, இருமுறை என் பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டு வாழ்த்தியது, “நான் இதற்கெல்லாம் தகுதியானவன்தானா? பெரிய மனிதர்கள் நம் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே! தகுதி இருக்கிறதோ இல்லையோ இனியாவது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்ற எண்ணத்தைத் தூண்டியது.
“நன்றி திரு.ஜெயமோகன் சார். நான் நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி என்னை வடிவமைத்துக் கொள்வேன். பரமன் நிச்சயம் எனக்குத் துணை புரிவான்”
விழா இனிதே நிறைவுற்றது. சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டனர். திரு.ஜெயமோகன் அவர்களை வாசகர்களும் நண்பர்களும் சூழ்ந்து கொண்டனர். அந்த நேரத்தில் திரு.ஜடாயு அவர்களிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. திரு.ஜடாயு அவர்களை முகநூலிலும், தமிழ்ஹிந்துவிலும், பிளாகரிலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவரே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திகைத்த நான், “சார் உங்கள் வாசகன் சார் நான். உங்கள எப்படி எனக்குத் தெரியாம இருக்கும்” என்றேன். பிறகு சிறிது நேரம் பேசினோம். திருவொற்றியூர் வரும்போது, என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். “கண்டிப்பா சந்திப்போம் சார்” என்றேன். இனிமையான மனிதர் அவர்.
திரு.ஜெயமோகன் அவர்களிடம் எனது வாழ்த்துப்பாவைச் சமர்ப்பித்தபோது... |
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு வாழ்த்துப்பா பாடி, நானே அதற்கு வரைகலை வடிவமைப்புச் செய்து, அதைப் பிரேம் செய்து கையோடு எடுத்து வந்திருந்தேன். வெகுநேரம் ஆகியும் "திரு.ஜெயமோகன் அவர்களை அணுக முடியுமா?" என்பது தெரியவில்லை. "அவரிடம் வாழ்த்துப்பாவைக் கொடுத்துவிட முடியுமா?" என்று நான் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, திரு.சிறில் அலெக்ஸ் அவர்கள் வந்து என்னை அழைத்துச் சென்று திரு.ஜெயமோகன் அவர்களிடம் அழைத்துச் சென்றார். நேரடியாகவே திரு.ஜெயமோகன் அவர்கள் கரங்களிலேயே என் வாழ்த்தைக் கொடுத்ததும், என் உள்ளம் பூரிப்படைந்தது. மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினேன்.
நான் பெற்ற நினைவுப்பரிசு |
நினைவுப்பரிசை நான் வாங்கிய உடனேயே, நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் அந்தப் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்திருந்ததால், வீட்டிற்கும் செய்தி எட்டியிருந்தது. வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். நவம்பர் 9 மறக்க முடியாத நாளாக இனி இருக்கும்… இவை யாவுக்கும் காரணமாக இருந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு எனது நன்றி.
இத்தகு உணர்ச்சிமயமான சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தியும், அனைத்திற்கும் மேலே, நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் முழுமஹாபாரதத்திற்கு இலக்கியச் சபையின் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பளித்தும் என் மீது பெரும் கருணை புரியும் திரு.ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது எனது முன்வினைப்பயனாகவே இருக்க வேண்டும். அவருக்கு என் நன்றிகள் கோடி. அவற்றை வார்த்தைகளால் எனக்கு வடிக்கத் தெரியவில்லை.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
11.11.2014, திருவொற்றியூர்.
********************************
பிற்சேர்க்கை : நிகழ்ச்சியைத் தொகுத்தவர்தான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு.ராஜகோபால் என்பது தெரியாமல், மேற்கண்ட பதிவில் பெயர் குறிப்பிடாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று இட்டிருக்கிறேன். நான் அவரிடம் தொலைபேசியில் மட்டுமே பேசியிருந்தேன். மேலும் குறுந்தாடியுடன் அவரது படத்தையும் எங்கோ கண்டிருக்கிறேன். அதனால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
********************************
பிற்சேர்க்கை : நிகழ்ச்சியைத் தொகுத்தவர்தான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு.ராஜகோபால் என்பது தெரியாமல், மேற்கண்ட பதிவில் பெயர் குறிப்பிடாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று இட்டிருக்கிறேன். நான் அவரிடம் தொலைபேசியில் மட்டுமே பேசியிருந்தேன். மேலும் குறுந்தாடியுடன் அவரது படத்தையும் எங்கோ கண்டிருக்கிறேன். அதனால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.