Draupadi’s lament to Bhima | Virata Parva - Section 18 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 5)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் திரௌபதி புலம்புவது…
திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “யுதிஷ்டிரரைக் கணவனாகக் கொண்டவள் என்ன துயரத்தைத்தான் அடையமாட்டாள்? எனது துயரங்களனைத்தையும் அறிந்தும், ஏன் என்னிடம் கேட்கிறீர்? “அடிமையே” என்று அழைத்து, கூடியிருந்த சபை உறுப்பினர்களுக்கு மத்தியில் என்னைப் பிராதிகாமின் [1] இழுத்துச் சென்றான். ஓ! பாரதா {பீமரே}, என்னை அத்துயரம் {இன்னும்} எரித்துக் கொண்டிருக்கிறது. திரௌபதியைத் தவிர வேறு எந்த இளவரசி இத்தகு கடுந்துன்பங்களை அனுபவிப்பாள்? காட்டில் வசித்து வந்த போது, தீய சைந்தவனால் {ஜெயத்ரதனால்} இரண்டாம் முறையும் அவமானப்படுவதை, என்னைத் தவிர வேறு எவரால் தாங்கிக் கொள்ள முடியும்? மத்ஸ்யர்களின் தீய மன்னன் {விராடன்} கண்ணெதிரிலேயே, கீசகனால் உதைக்கப்பட்டும், எனது தகுதிக்குத் தக்கவர்களில் என்னைத்தவிர வேறு யாரால் உயிரோடு இருக்க முடியும்?
[1] சபா பர்வம் பகுதி 66ல் இக்கதை வருகிறது. ஆனால் அங்கே துச்சாசனனே திரௌபதியை இழுக்கின்றான். இங்கே திரௌபதி சொல்வது பிராதிகாமினை! திரௌபதி சொல்வது முரணா? அல்லது சபாபர்வத்தின் அந்தப் பகுதியில் இடையில் ஏதாவது விடுபட்டுள்ளதா என்பது தெரியவில்லை. கங்குலியின் படைப்பை முன்வைத்து மட்டுமே இதைச் சொல்கிறேன்.
ஓ! பாரதா {பீமரே}, ஓ! குந்தியின் மகனே {பீமரே}, இத்தகு துயரங்களில் நான் பாதிக்கப்பட்டாலும், நான் துயரத்தில் இல்லை என நீர் நினைத்தால் எனது உயிருக்குத்தான் என்ன மதிப்பிருக்கிறது? ஓ! பாரதா {பீமரே}, மன்னன் விராடனுக்கு மைத்துனனும், அவனது படைகளுக்குத் தளபதியும், இழிந்தவனும், கீசகன் என்ற பெயரில் அறியப்படுபவனுமான பொல்லாத பாதகன், ஓ! மனிதர்களில் புலியே {பீமரே}, அரண்மனையில் சைரந்திரியாக வசித்துவரும் என்னிடம், “நீ எனது மனைவி ஆவாயாக” என்று கோருகிறான். ஓ எதிரிகளைக் கொல்பவரே {பீமரே}, கொல்லத்தக்க அந்த இழிந்தவனால் {கீசகனால்} இப்படிக் கேட்கப்படும் போது, பருவத்தால் முதிர்ந்த பழம் வெடிப்பது போல, எனது இதயம் வெடிக்கிறது.
மோசமானப் பகடைக்கு அடிமையான உமது அண்ணனை {யுதிஷ்டிரரைக்} கண்டிப்பீராக! அவரது செய்கையின் விளைவாக மட்டுமே நான் இத்தகு துன்பத்தை அனுபவிக்கிறேன். அவரைத்தவிர வேறு எந்தத் தீவிரச் சூதாடி, நாட்டையும், தன்னுடன் கூடிய அனைத்தையும் கைவிட்டு, காட்டில் வாழும்படி, விளையாடுவான்? ஆயிரக்கணக்கில் நிஷ்கங்களையும் {தங்கம்}, கணிசமான மற்ற வகைச் செல்வங்களையும் காலையும் மாலையும் எனப் பலவருடங்கள் சேர்ந்தாற்போல, பந்தயமாக வைத்துச் சூதாடினாலும், அவரது {அவர் கொண்டிருந்த} வெள்ளியும், தங்கமும், ஆடைகளும், வாகனங்களும், அணிகளும், வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும், திரளான குதிரைகளும், கோவேறு கழுதைகளும் எவ்விதத்திலும் குறைந்திருக்காதே. ஆனால், இப்போதோ பகடைப்பகைமையின் மூலம் செழிப்பிழந்து, தனது சொந்தத் தவறுகளை நினைத்துக் கொண்டே மூடனைப் போல ஊமையாய் அமர்ந்திருக்கிறாரே. ஐயோ, யார் செல்லும்போது, தங்க மாலைகள் பூண்ட பத்தாயிரம் யானைகள் பின் தொடருமோ, அப்படிப்பட்டவர் இன்று பகடை வீசி தன்னைத் தாங்கிக் கொள்கிறாரே.
எவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தபோது, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட மன்னர்களால் புகழப்பட்டாரோ அந்த யுதிஷ்டிரர்; எவருடைய மடைப்பள்ளியில் {சமையலறையில்} ஒரு லட்சம் {1,00,000} பணிப்பெண்கள், கையில் தட்டுகளுடன், இரவும் பகலும் எண்ணிலடங்கா விருந்தினருக்கு உணவு படைத்தனரோ அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரர்}; (தினமும்) எவர் ஆயிரம் நிக்ஷங்கள் தானமளித்தாரோ அந்தத் தாராளவாதிகளில் சிறந்தவர் {யுதிஷ்டிரர்}; ஐயோ, தீமைக்கு வேரான சூதாட்டத்தின் விளைவாக, துன்பத்தில் மூழ்கி, இப்போது பகடை வீசி தன்னைத் தாங்கிக் கொள்கிறாரே!
பிரகாசமான ரத்தினங்கள் மின்னும், காது வளையங்களைப் பூண்டவர்களும், இனிமையான குரலைக் கொடையாகக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான புலவர்களும், துதிபாடிகளும், காலையிலும், மாலையிலும் அவரை {யுதிஷ்டிரரை} வணங்குவார்கள். ஐயோ, தவத்தகுதி படைத்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான ஆயிரம் தவசிகள் சபை உறுப்பினர்களாக இருந்து யாருக்காகத் தினமும் காத்திருந்தனரோ அந்த யுதிஷ்டிரர்; எண்பத்தெட்டாயிரம் {88,000} இல்லற ஸ்நாதகர்களையும், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நியமிக்கப்பட்டிருந்த முப்பது பெண் பணியாட்களையும், எந்தக் கொடையும் பெறாது, தங்கள் உயிர்வித்தை உயர் நோக்கச் செய்யும் பத்தாயிரம் யதிகளையும் பராமரித்த அந்த யுதிஷ்டிரர்; ஐயோ, அப்படிப்பட்ட வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரர்} இன்று மாறுவேடத்தில் வாழ்கிறாரே.
கருணை நிறைந்தவரும், ஒவ்வொரு உயிரினத்துக்கும் முறையாகக் கொடுப்பவரும், அற்புத குணங்களைக் கொண்டவரும், கெடுநோக்குகள் ஏதுமற்றவருமான அந்த யுதிஷ்டிரர், ஐயோ, இப்படி மாறுவேடத்தில் வாழ்கிறாரே. உறுதியும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமமும், அனைத்துயிருக்கும் முறையாகக் கொடுக்கும் குணம் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரர், இரக்கம் கொண்டு, தன் நாட்டில் வாழ்ந்த குருடர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், பெற்றோரற்றவர்கள் மற்றும் ஆட்சிகுட்பட்ட ஏனைய பிறரையும் இது போன்ற துயரங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பராமரித்தாரே. ஐயோ, அந்த யுதிஷ்டிர், மத்ஸ்யனைச் {விராடனைச்} சார்ந்து, அவனுக்குப் பணியாளாகி, அவனது சபையில் பகடை வீசுபவராகி, இப்போது தன்னைக் கங்கன் என்று அழைத்துக் கொள்கிறாரே.
இந்திரப்பிரஸ்தத்தில் வசித்துவந்தபோது, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்திற்குத் தக்க யாரிடம் கப்பம் கட்டுவார்களோ, ஐயோ அப்படிப்பட்டவர் வாழ்வாதாரத்திற்காக அடுத்தவர் கரங்களில் இப்போது பிச்சை எடுக்கிறாரே. யாரை அண்டி பூமியின் மன்னர்கள் இருந்தனரோ, ஐயோ, அந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, தனது சுதந்திரத்தை இழந்து, அடுத்தவரை அண்டி வாழ்கிறாரே. தனது சக்தியால் சூரியனைப் போல முழு உலகத்தையும் பளிச்சிட வைத்த அந்த யுதிஷ்டிரர், ஐயோ, இப்போது மன்னன் விராடனுக்குச் சபை உறுப்பினராக இருக்கிறாரே.
ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, மன்னர்களாலும், துறவிகளாலும் தாங்கப்பட்ட மரியாதைக்குரிய அந்தப் பாண்டவர் {யுதிஷ்டிரர்}, வேறொருவருக்காகக் காத்திருப்பதைப் {சேவகம் செய்வதைப்} பாரும்.
ஐயோ, அடுத்தவர் பக்கத்தில் உட்கார்ந்து, அடுத்தவரிடம் பல்லைக் காட்டிப் பேசும் சபை உறுப்பினராக யுதிஷ்டிரரைக் கண்டு வருத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு யாரால் உதவ முடியும்? வாழ்வாதாரத்திற்காக அடுத்தவரை அண்டி வாழும் உயர்ந்த விவேகியும், அறம் சார்ந்தவருமான யுதிஷ்டிரரைக் கண்டு வருத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு யாரால் உதவ முடியும்? உண்மையில், ஓ! வீரரே {பீமரே}, சபையில், முழுப் பூமியாலும் வழிபடப்பட்டவர், அடுத்தவரை வழிபடுவதைப் பாரும். ஓ! பாரதா {பீமரே}, கேவலமானவளைப் போல, துன்பக்கடலில் மூழ்கி, பல்வேறு கவலைகளால் பாதிக்கப்பட்டவளாக என்னை ஏன் கருதாமல் இருக்கிறீர்?” என்று கேட்டாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.