Uttara untied the wrappings! | Virata Parva - Section 41 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 16)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : மரத்தில் ஏற முதலில் தயங்கிய உத்தரன், பிறகு அதில் ஏறி ஆயுதங்களைக் கீழ இறக்கி, பொதிகளை அவிழ்த்து ஆயுதங்களைப் பார்த்தல்...
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “இந்த மரத்தில் ஒரு பிணம் கட்டப்பட்டுள்ளது என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, பிறப்பால் இளவரசனான நான், எனது கைகளால் அதை எப்படித் தொட முடியும்? க்ஷத்திரிய வகையில் உள்ள ஒரு பெரும் மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மந்திரங்களையும் மற்றும் நோன்புகளையும் எப்போதும் நோற்கும் நான் அதைத் தொடலாகாது. ஓ! பிருஹந்நளா, ஒரு பிணத்தைத் தொட வற்புறுத்தி, பிணங்களைச் சுமக்கும் சுத்தமற்றவனாகவும் மாசுபட்டவனாகவும் என்னை ஏன் ஆக்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டான் {விராடனின் மகன் உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான விராடனின் மகன் {உத்தரன்}, தேரில் இருந்து இறங்கி, தயக்கத்துடன் அந்த வன்னி மரத்தில் ஏறினான். தேரிலேயே நின்றிருந்த எதிரிகளைக் கொல்பவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனிடம் {உத்தரனிடம்}, “மரத்தின் உச்சியில் இருந்து அந்த விற்களை விரைவாகக் கொண்டு வா” என்றான். {ஆயுதங்களைக் கீழே இறக்கிய பிறகு}, முதலில் பொதிகளை {wrappings} அறுத்து, பிறகு அவற்றில் கட்டப்பட்டிருந்த கயிறுகளையும் அறுத்த அந்த இளவரசன் {உத்தரன்}, வேறு நான்கு விற்களுடன் காண்டீவம் இருப்பதைக் கண்டான். அப்படி அவை அவிழ்க்கப்படும்போது, சூரியப் பிரகாசம் கொண்ட அந்த விற்கள், கோள்கள் உதிக்கும் நேரத்தில், அவை உமிழும் பேரொளியால் பிரகாசிப்பது போல ஒளிர ஆரம்பித்தன. சீறும் பாம்புகள் போன்ற வடிவங்களில் இருந்த அவற்றைக் {விற்களைக்} கண்ட அவன் {உத்தரன்} அச்சத்தால் பீடிக்கப்பட்டு, ஒரு நொடியில் மயிர்ச்சிலிர்த்து நின்றான். பிறகு பெரும்பிரகாசம் கொண்ட அந்தப் பெரிய விற்களைத் தொட்ட விராடனின் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனிடம் இப்படிப் பேசினான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.