திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்... பொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு
பதிவின் சுருக்கம் : உத்தரையை மருமகளாக ஏற்றது ஏன் என்று அர்ஜுனன் விராடனுக்குச் சொன்னது; அர்ஜுனனின் திட்டத்தை விராடன் ஏற்பது; அபிமன்யு உத்தரை திருமணத்திற்காக அர்ஜுனனும் விராடனும் நண்பர்களையும் உறவினர்க்ள அனைவரையும் அழைத்தது; கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்தது; காசி மன்னனும், சைப்பியனும் படைகளுடன் வந்தது; துருபதன் தனது உறவினர்களுடன் வந்தது; அபிமன்யு உத்தரை திருமணம் நிறைவு பெற்றது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் வழங்கிய கொடை...
விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை?” என்று கேட்டான்.
அதற்கு அர்ஜுனன் {விராடனிடம்}, “நான் உமது அந்தப்புரத்தில் வசித்தபோது, உமது மகளை {உத்தரையைப்} பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு எப்போதும் வாய்த்தது. தனிமையிலோ, துணையுடனோ இருக்கும்போதெல்லாம் அவளும் {உத்தரையும்} என்னை ஒரு தந்தையை நம்புவது போல நம்பினாள். பாடலையும் ஆடலையும் நன்கு அறிந்ததால், நான் அவளால் விரும்பப்பட்டு, மதிக்கப்பட்டேன். உண்மையில் உமது மகள் என்னை அவளது பாதுகாவலனாகவே [1] எப்போதும் கருதுகிறாள். ஓ! மன்னா, அவள் பூப்படையும் வயதை அடைந்தும் கூட நான் அவளுடன் ஓர் ஆண்டு முழுவதும் வாழ்ந்தேன். இந்தச் சூழ்நிலையில், நீரோ, பிற மனிதர்களோ அவள் மீதோ என் மீதோ காரணமில்லாமலேயே சந்தேகங்கொள்ள இஃது ஏதுவாக இருக்கும்.
பதிவின் சுருக்கம் : விராடன் அர்ஜுனனிடம் மற்ற பாண்டவர்களை அடையாளங்காட்டச் சொல்வது; அர்ஜுனன் ஒவ்வொருவராக அடையாளங்காட்டுவது; உத்தரன் மீண்டும் பாண்டவர்களை வர்ணித்து அடையாளங்காட்டுவது; விராடன் தனது மகளை அர்ஜுனனுக்குக் கொடுக்க முன் வருவது; அர்ஜுனன் உத்தரையைத் தனது மருமகளாக ஏற்பதாகச் சொல்வது...
விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “உண்மையில், இவரே குந்தியின் மகனான குரு மன்னன் யுதிஷ்டிரர் என்றால், இவர்களில் யார் இவரது தம்பி அர்ஜுனன். இதில் யார் பலமிக்கப் பீமன். இவர்களில் யார் நகுலன், யார் சகாதேவன், கொண்டாடப்படும் அந்தத் திரௌபதி எங்கே? பகடையாட்டத்தில் வீழ்ந்த பிறகு, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} குறித்து யாராலும் எதுவும் கேள்விப்படவில்லை” என்றான் {விராடன்}.
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு விராடனின் சபையில் மன்னர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது; அங்கே வந்த விராடன் அதைக் கண்டு கோபமுற்று, கங்கனை நிந்திப்பது; அர்ஜுனன் விராடனைப் பரிகசிக்கும் வகையில் யுதிஷ்டிரனின் புகழைச் சொல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, {அன்றிலிருந்து} மூன்றாவது நாளில் [1] குளித்து முடித்து வெள்ளுடை உடுத்தி, அனைத்து வகைகளிலாலான ஆபரணங்களும் தரித்துக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களும், தங்கள் நோன்பை முடித்து, ஐந்து மதங்கொண்ட யானைகளைப் போல யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு, பிரகாசத்துடன் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர். விராடனின் சபா மண்டபத்துக்குள் நுழைந்த அவர்கள், மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரியணைகளில் அமர்ந்து கொண்டு, வேள்விப்பீடத்தில் இருக்கும் நெருப்புகள் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர். அப்படிப் பாண்டவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பிறகு, பூமியின் தலைவனான விராடன், தனது அரச அலுவல்களை முடித்து, தனது சபையை நடத்த அங்கே வந்தான். சுடர்விடும் நெருப்புகளைப் போன்ற ஒப்பற்ற பாண்டவர்களைக் கண்டு சிறிது நேரம் அந்த மன்னன் {விராடன்} சிந்தித்தான். பிறகு, கோபம் நிறைந்த மத்ஸ்ய மன்னன், மருதர்களால் சூழப்பட்ட தேவர்கள் தலைவனைப் போல அமர்ந்திருந்த கங்கனிடம் பேசினான். அவன் {விராடன்}, “பகடையாட்டக்காரனான நீ என்னால் சபை உறுப்பினராகவே அமர்த்தப்பட்டாய்! அழகிய ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அரச ஆசனத்தில் நீ எப்படி அமரலாம்?” என்று கேட்டான்.
பதிவின் சுருக்கம் : பசுக்கள் மீட்கப்பட்டதும், கௌரவர்கள் வெல்லப்பட்டதும் தன்னாலல்ல என்றும் ஒரு தெய்வ மகன் வந்து அவற்றைச் சாதித்தானென்றும் விராடனிடம் உத்தரன் சொல்வது; விராடனிடம் அனுமதி பெற்று, அர்ஜுனன் உத்தரைக்கு ஆடைகளைப் பரிசளிப்பது...
உத்தரன் {மன்னன் விராடனிடம்} சொன்னான், “பசுக்கள் என்னால் மீட்கப்படவில்லை; எதிரிகளும் என்னால் வீழ்த்தப்படவில்லை. அவை யாவும் ஒரு தெய்வ மகனால் நிறைவேற்றப்பட்டன. வஜ்ரத்தைப் போலத் தாக்கவல்ல அந்தத் தெய்வீக இளைஞன், அச்சத்தால் ஓடும் என்னைக் கண்டு, என்னை நிறுத்தி தானே எனது தேரில் ஏறிக் கொண்டான். அவனாலேயே பசுக்கள் மீட்கப்பட்டு, கௌரவர்கள் வீழ்த்தப்பட்டனர். ஓ! தந்தையே, அக்காரியம் அந்த வீரனால் ஆனது, என்னாலல்ல. கிருபரையும், துரோணரையும், பலமிக்க சக்தி கொண்ட துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சூதனின் மகனையும் {கர்ணனையும்}, பீஷ்மரையும் அவனே கணைகளால் துரத்தினான்.யானை மந்தையின் தலைமை யானை ஓடுவதைப் போலஅச்சத்தால் ஓடிக்கொண்டிருந்த இளவரசன்துரியோதனனிடம் அந்த வலிமைமிக்க வீரன் {தெய்வ மகன்}, “ஓ! குரு குலத்தின் இளவரசே, ஹஸ்தினாபுரத்திலும் நீ பாதுகாப்பாக இருப்பதற்கான எந்தக் காரணிகளையும் நான் காணவில்லை. உனது பலத்தை வெளிப்படுத்தி, உனது உயிரைக் காத்துக் கொள். ஓடுவதால் நீ என்னிடமிருந்து தப்ப இயலாது. எனவே, உனது மனதைப் போருக்குத் தயார் செய்வாயாக. வெற்றியடைந்தால், பூமியின் ஆட்சியுரிமை உனதாகும், கொல்லப்பட்டால், சொர்க்கமேகூட உனதாகும்” என்ற சொற்களைச் சொன்னான்.
பதிவின் சுருக்கம் : சபைக்குள் நுழைந்த உத்தரன், இரத்தம் சொட்ட ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் கங்கனைக் கண்டு பயந்து விராடனை அதட்டுவது; கங்கனிடம் விராடனை மன்னிப்பு கோரச் சொல்வது; விராடன் யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரியது; யுதிஷ்டிரனுக்கு இரத்தம் சொட்டுவது நின்றதும், அர்ஜுனன் உள்ளே நுழைவது; அர்ஜுனன் கேட்கும்படி விராடன் உத்தரனைப் புகழ்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னனின் {விராடனின்} மூத்த மகனான பூமிஞ்சயன் {உத்தரன்}, உள்ளே நுழைந்து, தனது தந்தையின் {விராடனின்} பாதங்களை வழிபட்டு, கங்கனை {யுதிஷ்டிரனை} அணுகினான். இரத்தத்துடன் இருக்கும் கங்கன், சபையின் ஒரு மூலையில், தரையில் அமர்ந்திருப்பதையும், சைரந்திரி {திரௌபதி} அவனுக்காகக் காத்திருப்பதையும் அவன் {உத்தரன்} கண்டான். இதைக் கண்ட உத்தரன், தனது தந்தையிடம் {விராடனிடம்} அவசரமாக, “ஓ! மன்னா {விராடரே}, இவர் யாரால் அடிக்கப்பட்டார்? இந்தப் பாவச்செயல் யாரால் மேற்கொள்ளப்பட்டது?” என்று கேட்டான்.
பதிவின் சுருக்கம் : திரிகார்த்தர்களை வீழ்த்திய பிறகு, விராடன் தனது நகருக்குத் திரும்புவது; உத்தரன் குருக்களை எதிர்த்துத் தனியாகச் சென்றிருப்பதை அறிந்து வருந்துவது; பிருஹந்நளன் உடன் சென்றிருந்ததால் வருந்த வேண்டாம் என்று கங்கராக இருக்கும் யுதிஷ்டிரன் விராடனிடம் சொல்வது; உத்தரன் வென்றான் என்ற செய்தியை விராடன் கேள்விப்பட்டு மகிழ்வது; கங்கரை விராடன் சூதாட அழைப்பது; சூதாடும்போது தனது மகன் உத்தரனை விராடன் புகழ்வது; பிருஹந்நளனே அதற்குக் காரணம் என்பது போலக் கங்கரான யுதிஷ்டிரன் சொல்வது; கோபமடையும் விராடன் யுதிஷ்டிரனைப் பகடைக் காய்களால் தாக்குவது; யுதிஷ்டிரனின் மூக்கில் இருந்து இரத்தம் வழிவது; அதைத் திரௌபதி பிடிப்பது;...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விரைவாகத் தனது செல்வத்தை மீட்ட விராடன்,நான்கு பாண்டவர்களின் துணையோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், பெரும்படையுடனும் தனது நகரத்திற்குள் நுழைந்தான். போரில் திரிகார்த்தர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்ட அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {விராடன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் சேர்ந்து பிரகாசமடைந்து, அழகில் ஒளிர்ந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனான அந்த வீரமிக்க மன்னன் {விராடன்}, தனது அரியணையில் அமரந்ததும், அந்தணர்களின் தலைமையிலான அவனது குடிமக்கள் அவன் {விராடன்} முன் வந்து நின்றனர். அவர்களால் வழிபடப்பட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, தனது படையின் தலைமையில் நின்று, அந்த அந்தணர்களையும், குடிமக்களையும் பதிலுக்கு வணங்கி, அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தனுப்பினான். பெரிய படையைக் கொண்டவனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், உத்தரனைக் குறித்து விசாரிக்கும் வகையில், “உத்தரன் எங்கே சென்றிருக்கிறான்?” என்று கேட்டான்.
அரண்மனையில் இருந்த பெண்களும், கன்னிகைகளும், அந்தப்புரத்தில் வாழ்ந்த மற்ற மகளிரும், அவனிடம் {விராடனிடம்}, மகிழ்ச்சியுடன், “நமது பசுக்களைக் குருக்கள் {கௌரவர்கள்} கைப்பற்றினர். இதனால் கோபமுற்ற பூமிஞ்சயன் {உத்தரன்}, அந்தக் குரு {கௌரவப்} படையுடன் வந்திருக்கும் சந்தனுவின் மகன் பீஷ்மர், கிருபர், கர்ணன், துரியோதனன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய ஆறு பலமிக்கத் தேர்வீரர்களை வீழ்த்த எண்ணி, மிகுந்த துணிச்சலுடன், பிருஹந்நளையைத் துணைக்கழைத்துக் கொண்டு, தனியாகச் சென்றிருக்கிறான்” என்றனர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஒரே தேருடன், பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, தனது வீர மகன் {உத்தரன்} சென்றிருப்பதைக் கேட்டமன்னன் விராடன், துயரில் மூழ்கி, தனது தலைமை ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்}, “திரிகார்த்தர்களின் தோல்வியை அறிந்த கௌரவர்களும், பூமியின் பிற தலைவர்களும் தங்கள் நிலையில் நிற்க மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, திரிகார்த்தர்களால் காயங்கொள்ளாத எனது பிற வீரர்கள், இந்தப்பெரும்படையைத் துணைக்கழைத்துக் கொண்டு உத்தரனின் பாதுகாப்புக்காகச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.
இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்களைத் தனது மகனுக்காக விரைந்து அனுப்பினான். பெரும்படைக்குச் சொந்தக்காரனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், இப்படியே, நால்வகைத் துருப்புகளைக் கொண்ட தனது படையின் பெரும்பிரிவை விரைந்து செல்ல கட்டளையிட்டான். இதைச் செய்த பிறகு, அவன் {விராடன்}, “இளவரசன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தாமதிக்காமல் அறியுங்கள்! அலியைத் தேரோட்டியாகக் கொண்டு சென்றிருக்கும் ஒருவன் உயிரோடு இருக்க மாட்டான் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், துன்பத்திலிருந்த மன்னன் விராடனிடம், சிரித்துக் கொண்டே, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, பிருஹந்நளன் அவனது {உத்தரனது} தேரோட்டியாகச் சென்றிருந்தால், உமது பசுக்களை எதிரியால் இன்று கைப்பற்ற இயலாது. அந்தத் தேரோட்டியால் பாதுகாக்கப்படும் உமது மகன், குருக்களுடன் கூடி வரும் பூமியின் அனைத்து தலைவர்களையும், ஏன், தேவர்களோ, அசுரர்களோ, சித்தர்களோ, யக்ஷர்களோ உண்மையில் வந்தால் கூட, அவர்களையும் போரில் வீழ்த்தவல்லவனாவான்”, என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதே வேளையில், உத்தரனால் அனுப்பப்பட்ட, வேகமான பாதங்களைக் கொண்ட தூதர்கள், விராடனின் நகரத்தை அடைந்து, வெற்றிச் செய்தியைத் தந்தனர். பிறகு தலைமை அமைச்சர், பெரும் வெற்றி அடையப்பட்டதையும், உத்தரனின் வருகை ஆகிய அனைத்தையும் மன்னனிடம் {விராடனிடம்} தெரிவித்தார். அவர் {தலைமை அமைச்சர்}, “அனைத்துப் பசுக்களும் திரும்பக் கொண்டு வரப்பட்டன, குருக்கள் வீழ்த்தப்பட்டனர். எதிரிகளைக் கொல்பவனான உத்தரனும், அவனது தேரோட்டியும் {உடல்நலத்துடன்} நன்றாக இருக்கின்றனர்” என்றார். பிறகு யுதிஷ்டிரன் {மன்னன் விராடனிடம்}, “நற்பேறாலேயே, பசுக்கள் மீட்கப்பட்டு, குருக்கள் {கௌரவர்கள்} முறியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்டவனுக்கு வெற்றி உறுதி என்பதால், உமது மகன் {உத்தரன்}, குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தியதை நான் வியப்பாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா பலம் கொண்ட தனது மகன் {உத்தரன்} அடைந்த வெற்றியைக் கேட்ட மன்னன் விராடன், மயிர்சிலிர்க்கும் வண்ணம் மகிழ்ச்சியை அடைந்தான். தூதர்களுக்கு ஆடைகளைப் பரிசாக வழங்கிய பிறகு, அவன் தனது அமைச்சர்களிடம், “நெடுஞ்சாலைகள் {ராஜபாட்டைகள்} கொடிகளால் அலங்கரிக்கப்படட்டும், மலர்க்காணிக்கைகளால் அனைத்து தேவர்களும், தேவிகளும் வழிபடப்படட்டும். இளவரசர்களும், துணிவுமிக்க வீரர்களும், இசைக்கலைஞர்களும், கணிகையரும் {பொதுமகள் = வேசி = harlots} வெளியே அணிவகுத்து எனது மகனை வரவேற்கட்டும். கிங்கரர்கள் {மணியாட்டிகள் – bellmen}, மதங்கொண்ட யானைகளில் விரைந்து சென்று, நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் எனது வெற்றியை அறிவிக்கட்டும். கன்னியராலும், துதிபாடுவோராலும் சூழப்பட்டு, அழகான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட {எனது மகள்} உத்தரையும், எனது மகனை {உத்தரனை} எதிர்கொண்டழைக்கச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னனின் இச்சொற்களைக் கேட்ட குடிமக்கள் அனைவரும், தங்கள் கைகளில் மங்கலகரமான பொருட்களுடன் சென்றார்கள். அவர்களில் பலர் கைத்தாளங்களுடனும் {வெண்கலத்தாளம்}, பூரிகைகளுடனும், சங்குகளுடனும் சென்றார்கள். அழகான ஆடைகள் உடுத்திய அழகிய பெண்டிரும், துதிபாடுவோரும், புனித பாடல்களைப் பாடுவோரும், முகமன் கூறுவோரும் {encomiasts}, பாணபத்திரரும் {minstrels}, பேரிகையிசைப்பவர்களும், இன்னும் பிறவகை இசைக்கலைஞர்களும் அளவிலா பராக்கிரமம் கொண்ட உத்தரனை வரவேற்பதற்காக, வலிமைமிக்க விராடனின் நகரத்தில் இருந்து வெளியே வந்தனர். துருப்புகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னியரையும், கணிகையரையும் {வேசிகளையும்} அனுப்பிய பிறகு, விவேகம் நிறைந்த மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} மகிழ்ச்சியுடன், “ஓ! சைரந்திரி {மாலினி},பகடையைக் கொண்டு வா. ஓ! கங்கரே, ஆட்டம் ஆரம்பமாகட்டும்” என்றான். அதற்குப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, “மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்டவன், தந்திரமான ஒரு சூதாடியுடன் விளையாடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் கேள்விப்படுகிறோம். எனவே, மகிழ்ச்சியாக இருக்கும் உம்முடன் நான் சூதாடத் துணிய மாட்டேன். எப்போதும் நான் உமக்கு நன்மையே செய்ய விரும்புகிறேன். எனினும், உமக்கு விருப்பமுண்டானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்” என்றான்.
அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சூதாடாவிட்டாலும், எனது அடிமைப்பெண்கள், பசுக்கள், தங்கம், மற்றும் நான் கொண்டுள்ள அனைத்துச் செல்வங்கள் ஆகிய இவை யாவற்றையும் உம்மால் இன்று காக்க முடியாது” என்றான். அதற்குக் கங்கன் {யுதிஷ்டிரன் விராடனிடம்}, “ஓ! ஏகாதபதி, ஓ! வெகுமதிகள் அளிப்பவரே {விராடரே}, எண்ணற்ற தீமைகள் நிறைந்த சூதாட்டத்தால் உமக்கு என்ன பயன்?சூதாட்டம் பல தீமைகளைக் கொண்டது; எனவே, அதை விலக்க வேண்டும். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரை நீர் பார்த்திருக்கலாம், அல்லது {அவரைக் குறித்துக்} கேட்டிருக்கலாம். அவர், தனது விரிந்த செழிப்பான நாட்டையும், தேவர்களைப் போன்ற தம்பிகளையும் பகடையால் இழந்தார். இதற்காகவே, நான் சூதாடத் தயங்குகிறேன். ஆனால் நீர் விரும்பினால், ஓ! மன்னா {விராடரே}, நான் விளையாடுவேன்” என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விளையாட்டு நடந்து கொண்டிருந்த போது, மத்ஸ்யன் {விராடன்}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “பாரும், பெரும் வல்லமை கொண்ட கௌரவர்களை எனது மகன் {உத்தரன்} போரில் வீழ்த்திவிட்டான்” என்றான். அதற்குச் சிறப்புமிக்க மன்னனான யுதிஷ்டிரன் {விராடனிடம்},“பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்ட அவன் {உத்தரன்} ஏன் வெல்லமாட்டான்?” என்று கேட்டான்.
இப்படிச் சொல்லப்பட்டதும், மிகுந்த கோபம் கொண்ட மத்ஸ்ய மன்னன் {விராடன்}, பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களில் இழிந்தவனே, அலியோடு எனது மகனை ஒப்பிடுகிறாயா? ஒருவரிடம் எதைச் சொல்வது சரி, எது சரியன்று என்ற அறிவு உனக்கில்லையா? நீ என்னை அவமதிக்கிறாய் என்பதில் ஐயமில்லை. பீஷ்மரையும், துரோணரையும் தலைவர்களாகக் கொண்ட அவர்களை {கௌரவர்களை} எனது மகன் ஏன் வீழ்த்த முடியாது? ஓ! பிராமணா {கங்கா}, நட்பால் மட்டுமே, நான் உனது இக்குற்றத்தை மன்னிக்கிறேன். எனினும், நீ வாழ விரும்பினால் {உயிரோடிருக்க விரும்பினால்} மீண்டும் அவ்வாறு சொல்லாதே” என்றான் {விராடன்}.
யுதிஷ்டிரன் {விராடனிடம்},“பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கிருபர், மன்னர் துரியோதனன் மற்றும் பிற பலமிக்க அரசர்களான தேர்வீர்கள் கூடியிருந்தாலும், மருதர்களால் சூழப்பட்ட இந்திரனே கூட இருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் மோதிப் போரிட பிருஹந்நளனைத் தவிர வேறு எந்த மனிதனால் முடியும்? கரங்களின் வலிமையில் அவனுக்கு நிகர் யாரும் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை! உண்மையில், ஒரு பயங்கரப் போரைப் பார்க்கும்போதும் பிருஹந்நளனின் இதயமே மகிழ்ச்சியில் நிறையும். தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் கூடி வந்த போதும் அவனே அவர்களை வீழ்த்தியிருக்கிறான். அப்படிப் பட்ட ஒருவனைக் கூட்டாளியாகக் கொண்டிருப்பவனான உமது மகன் {உத்தரன்}, ஏன் எதிரியை வெல்லக் கூடாது?” என்றான். அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “மீண்டும் மீண்டும் தடுத்தும் நீ உனது நாவை அடக்க மறுக்கிறாய். தண்டிக்க எவரும் இல்லையாயின், யாரும் அறம் பயிலமாட்டார்கள்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, கோபத்தால் எரிந்து, பகடைக் காயால் யுதிஷ்டிரனை வலிந்து அடித்து, அவனை நிந்தித்தபடி, “இது மீண்டும் நடவாதிருக்கட்டும்!”என்றான். இப்படிக் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவனது{யுதிஷ்டிரனின்} மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.ஆனால், அது தரையில் விழும் முன்னரே குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அதைத் தனது கைகளில் பிடித்தான். பிறகு தன்னருகே நின்று கொண்டிருந்த திரௌபதியை அறம் சார்ந்த அந்த யுதிஷ்டிரன் பார்த்தான். தனது தலைவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளான களங்கமற்ற திரௌபதி, {அந்தப் பார்வையின்} பொருளை உணர்ந்து, நீர் நிறைந்த ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொண்டுவந்து, அவனது {யுதிஷ்டரனின்} மூக்கில் இருந்து வழிந்த இரத்ததைப் பிடித்தாள் [1].
[1] மெலிதான மேலாடையால் இரத்ததை ஏந்தி, தங்கப் பாத்திரத்தில் அதைப் பிழிந்தாள் என்றும், அப்போது திரௌபதி விராடனிடம், கங்கரின் இரத்தம் எத்தனை துளிகள் தரையில் விழுகின்றனவோ, அத்தனை வருடங்கள் அவனது நாட்டில் மழையில்லாமல் போய்விடும் என்பதால்தான் தான் அந்த இரத்தத்தைப் பிடிப்பதாகச் சொல்வதாகவும் வேறு பதிப்புச் சொல்கிறது.
அதே வேளையில், பலவிதமான இனிய நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் ஊக்கப்படுத்தப்பட்ட உத்தரன், குடிமக்களாலும், பெண்களாலும், மாகாணங்களின் மக்களாலும் வரவேற்கப்பட்டு, மெதுவாக நகரத்திற்குள் நுழைந்தான். அரண்மனையின் வாயிலை அடைந்த அவன் {உத்தரன்}, தனது வருகையைக் குறித்துத் தனது தந்தைக்கு {மன்னன் விராடனுக்குச்} செய்தி அனுப்பினான். பிறகு மன்னனை அணுகிய சுமைதூக்கி {porter} {வாயில் காப்போன் = gatekeeper} ஒருவன், “பிருஹந்நளையைத் துணையாகக் கொண்ட உமது மகன் உத்தரன் வாயிலில் காத்திருக்கிறான்” என்றான். மத்ஸ்ய மன்னன் {விராடன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம், “நான் அவர்களைக் காண ஆவலுடன் இருப்பதால், அவர்கள் இருவரையும் இங்கே வரவேற்று அழைத்துவா” என்றான்.
பிறகு, குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன், {அந்தப்} பாதுகாவலனின் காதுக்கருகில் மெதுவாக, “உத்தரன் மட்டும் உள்ளே வரட்டும்.பிருஹந்நளன் உள்ளே வரக்கூடாது. போரிலின்றி வேறு நேரத்தில் எவன் என் மேனியில் காயமேற்படுத்தவோ, இரத்தம் சிந்தவோ செய்கிறானோ, அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்பது அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பிருஹந்நளன்} ஏற்றிருக்கும் நோன்பாகும். {இதைக் கண்டால்} ஆத்திரத்தில் அழற்சியுறும் அவன், நான் இரத்தம் சிந்துவதைப் பார்க்கப் பொறாமல் {பொறுக்க முடியாமல்}, ஆலோசகர்கள், துருப்புகள், குதிரைகளுடன் சேர்த்து விராடரையும் இப்போதே கொன்று விடுவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
பதிவின் சுருக்கம் :அர்ஜுனனைத் தஞ்சம் அடைந்த கௌரவப் படைவீரர்கள்; அபயமளித்த அர்ஜுனன்; அர்ஜுனனும் உத்தரனும் மீண்டும் வன்னிமரத்தை அணுகி உடை மாற்றிக் கொள்வது; அர்ஜுனன் உத்தரனிடம் உத்தரனே இப்போரை வென்றதாக அவனது தந்தையிடம் சொல்லச் சொல்வது; விராட நகரத்தை அடைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களைப் போரில் வீழ்த்தியபிறகு, காளையின் கண் போன்ற கண்களைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் அளவிலான விராடனின் கால்நடைச் செல்வங்களை {பசு மந்தையை} திரும்ப மீட்டான். திருதராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும்} படுதோல்வியடைந்து சென்ற பிறகு, பெரும் எண்ணிக்கையிலான குரு படைவீரர்கள், ஆழ்ந்த கானகத்தில் இருந்து வெளியேறி, இதயத்தில் அச்சத்துடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} முன்பு வந்தனர். கலைந்த கேசத்துடனும், கூப்பிய கரங்களுடனும் அவர்கள் அவன் {அர்ஜுனன்} முன்பு வந்தனர். அந்நிய நிலத்திற்கு வந்து, பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து, அச்சத்தால் உணர்வற்றுப் போய், மனக் குழப்பமடைந்திருந்த அவர்கள் அனைவரும், பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} முன்பு வந்து, “நாங்கள் உமது அடிமைகள்” என்றனர்.
பதிவின் சுருக்கம் :அர்ஜுனனின் வசைகளைத் தாங்கிக் கொள்ளாமல் திரும்பி வந்த துரியோதனனைக் கர்ணன் தடுத்து தானே அர்ஜுனனை எதிர்த்துச் சென்றது; கௌரவர்கள் அனைவரும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு தாக்குவது; சம்மோகனம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன் கௌரவர்களை மயக்குவது; அவர்களது ஆடைகளை எடுத்துக் கொள்வது; பீஷ்மர் துரியோதனனை ஹஸ்தினாபுரம் திரும்புமாறு வேண்டுவது; அர்ஜுனன் அடைந்த வெற்றி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த ஒப்பற்ற வீரனால் {அர்ஜுனனால்} அழைக்கப்பட்ட அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்தக் கண்டனங்களால் குத்தப்பட்டு, அங்குசத்தால் குத்தப்பட்ட வலிமையும் சீற்றமும் மிக்க யானையைப் போலத் திரும்பினான். தன்னால் தாங்கிக் கொள்ளமுடியாத நிந்தனைகளால் குத்தப்பட்ட அந்த வலிமையும் துணிச்சலும் மிக்கத் தேர்வீரன் {துரியோதனன்}, பாம்பை மிதித்துவிட்டவன் போலப் பெரும் வேகத்துடன் தனது தேரைத் திருப்பினான். தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்படவனும், மனிதர்களில் வீரனுமான கர்ணன், காயங்களுடன் துரியோதனன் திரும்புவதைக் கண்டு, அம்மன்னனை {துரியோதனனை} வழியிலேயே தடுத்து நிறுத்தி, அவனுக்கு {துரியோதனனுக்கு} ஆறுதல் அளித்து, துரியோதனனின் தேருக்கு வடக்கில் இருந்த பார்த்தனைப் {அர்ஜுனனைப்} போரில் சந்திக்க அவனே {கர்ணனே} சென்றான்.
பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; துரியோதனன் அர்ஜுனனைத் தாக்கியது; விகர்ணன் துரியோதனனின் உதவிக்கு வந்து புறமுதுக்கிட்டு ஓடியது; அவனைக் கண்ட மற்ற படைவீரர்களும் களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடுவது; துரியோதனனும் புறமுதுகிடுவது; அர்ஜுனன் துரியோதனனை நிந்திப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,“களத்தின் முன்னணியை விட்டு பீஷ்மர் ஓடியதும்,திருதராஷ்டிரனின் சிறப்புமிக்க மகன் {துரியோதனன்}, தனது கொடியை உயர்த்தியபடி, கையில் வில்லுடனும், உரத்த கர்ஜனையுடனும் அர்ஜுனனை அணுகினான். தனது வில்லைக் காது வரை இழுத்து ஈட்டி முனை கொண்ட கணையை அடித்து, எதிரிகளுக்கு மத்தியில் உலாவி கொண்டிருந்த கடும் பராக்கிரமமிக்கப் பயங்கர வில்லாளியான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நெற்றியைத் துளைத்தான். தனது புகழ்பெற்ற செயல்களின் காரணமாகப் பிரகாசமாக இருந்தவனான அந்த வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா} கூரிய தங்க முனை கொண்ட அந்தக் கணையால் நெற்றியில் துளைக்கப்பட்டு,ஒற்றைச் சிகரமுடைய அழகிய மலை போல இருந்தான். அந்தக் கணையால் வெட்டப்பட்டு உண்டான புண்ணிலிருந்து உயிரோட்டமான சூடான இரத்தம் அதிகமாகப் பாய்ந்தது. அப்படி அவனது {அர்ஜுனனின்} உடலில் சொட்டிய இரத்தம், தங்க மலர்களால் ஆன மாலை போல அழகாக ஒளிர்ந்தது.
பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற கடும் போர்; வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிவது; இருவரும் கடுமையாகப் போரிடுவது; அர்ஜுனன் அடித்த கணைகளால் பீஷ்மர் மயங்குவது; தேரோட்டிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களுக்கு மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்ட போது, சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமாகிய பீஷ்மர், அர்ஜுனனை நோக்கி விரைந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது அற்புத வில்லையும், எதிரிகளின் முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல கூரிய முனை கொண்ட பல கணைகளையும் எடுத்து, அடித்து அவனைக் {அர்ஜுனனைக்} கடும் வேதனைக்குள்ளாக்கினார். அவரது {பீஷ்மரது} தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டதன் விளைவாக அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சூரிய உதயத்தின் போது காணப்படும் அழகிய மலை போலத் தெரிந்தார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதக் குலத்தவனே {ஜனமேஜயா}, குருக்களில் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி அனைத்துப் புறங்களில் இருந்தும் அர்ஜுனனைத் தாக்கினர். ஆனால் அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்த வலிய தேர்வீரர்களை, மலைகளை மூடும் பனி போலத் தனது கணை மேகங்களால் மூடினான். பெரும் யானைகளின் பிளிறல்களும், சங்கொலிகளும் ஒன்றாகக் கலந்து அங்கே பெரும் ஒலியை உண்டாக்கின. யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும், இரும்புக்கவசங்களையும் பார்த்தன் {அர்ஜுனன்} அடித்த அம்புகள் துளைத்து வெளியேறி ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. மிகுந்த வேகத்துடன் கணைகளை அடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போட்டியில், கூதிர்காலத்தின் {இலையுதிர் காலத்தின்} நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் சூரியனை நினைவுபடுத்தினான்.
பதிவின் சுருக்கம் : பீஷ்மரை நோக்கி அர்ஜுனன் முன்னேறுவது; துச்சாசனன் தடுப்பது; துச்சாசனனை ஒரு நொடியில் களத்தைவிட்டு ஓடச் செய்த அர்ஜுனன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்களை அர்ஜுனன் வீழ்த்துவது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விகர்த்தனன் மகனை {கர்ணனை} வீழ்த்திய பிறகு, அர்ஜுனன், விராடனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கப் பனைமரம் தெரியும் பிரிவை நோக்கி என்னை அழைத்துச் செல்வாயாக. அங்கே எங்கள் பாட்டனான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, என்னுடன் மோதுவதற்கு விரும்பி தேவனைப் போலக் காத்திருக்கிறார்” என்றான் {அர்ஜுனன்}.
உடனே, கணைகளால் கடுமையாகத் துளைக்கப்பட்டிருந்த உத்தரன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நெருக்கமாக இருந்த அந்த வலிமைமிக்கப் படையைக் கண்டு, “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னால் இனிமேலும் உமது அற்புத குதிரைகளை வழிநடத்த இயலாது. எனது ஆவியில் உற்சாகம் குறைகிறது. என் மனது மிகவும் குழம்பிப் போயுள்ளது. உம்மாலும் குருக்களாலும் பயன்படுத்தப்பட்ட தெய்வீக ஆயுதங்களுடைய சக்தியின் விளைவாக அனைத்துப் புறங்களும் எனது கண்களுக்கு முன்பாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. முடைநாற்றம் கொண்ட கொழுப்பு, இரத்தம் மற்றும் சதை ஆகியவற்றால் நான் எனது உணர்வுகளை இழந்துவிட்டேன். இவை அனைத்தையும் கண்ட எனது மனது பயங்கரத்தால், இருந்த இடத்திலேயே இரண்டாகப் பிளக்கிறது {மனம் உடைந்து போகிறது}. இதற்கு முன்னர் நான் போரில் குதிரைகளின் இத்தகு திரட்சியைக் கண்டதில்லை. ஓ! வீரரே {அர்ஜுனரே}, வீரர்களால் ஏற்படும் கையுறைகள் உராயும் ஒலி {சிறகடிப்பு}, சங்கொலி, சிம்ம கர்ஜனைகள், யானைகளின் பிளிறல்கள், இடியைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக் கேட்டும் நினைத்துப் பார்த்தும் வாயடைத்துப் போகிறேன்.
ஓ! வீரரே {அர்ஜுனரே}, மோதலின் போது நெருப்பு வட்டத்தைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தை இடைவிடாமல் நீர் வட்டமாக வளைத்ததைக் கண்டதால், எனது கண்கள் தோற்று {செயலிழந்து}, இதயம் பிளக்கிறது. கோபத்தில் இருக்கும் பினகைதாங்கியைப் {சிவனைப்} போலப் போர்க்களத்தில் உமது கடும் வடிவத்தையும், உம்மால் அடிக்கப்படும் பயங்கரக் கணைகளையும் கண்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். நீர் உமது அற்புதமான கணைகளை எப்போது எடுக்கிறீர், வில்லின் நாணில் எப்போது பொருத்துகிறீர், அவற்றை எப்போது விடுகிறீர் என்பதைக் காண்பதில் நான் தோற்றேன். இவையாவையும் நீர் எனது கண்களுக்கு முன்பே செய்திருந்தாலும், உணர்வுகளை நான் இழந்திருந்ததால் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. எனது உற்சாகம் குன்றுகிறது, உலகமே எனது முன்னிலையில் நீந்திக் கொண்டிருப்பதைப் போல எனக்குத் தெரிகிறது. சாட்டையையும், கடிவாளங்களையும் பிடிக்க என்னிடம் பலம் இல்லை” என்றான் {உத்தரன்}.
இச்சொற்களைக் கேட்ட அர்ஜுனன் {உத்தரனிடம்}, “அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, நீயும் இப்போர்க்களத்தில் அற்புதச் சாதனைகளைச் செய்தாய். மத்ஸ்யர்களின் ஒப்பற்ற வழியில் பிறந்து, இளவரசனாக இருக்கும் நீ அருளப்பட்டிருப்பாயாக. எதிரிகளைத் தண்டிப்பதில் நீ உற்சாகமிழக்கலாகாது. எனவே, ஓ! இளவரசே {உத்தரா}, நான் மீண்டும் போரில் ஈடுபடும்போது, எனது தேரில் இருந்துகொண்டு, உனது மனோபலத்தைப் பெருக்கிக் கொண்டு, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {உத்தரா}, எனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மகனிடம் {உத்தரனிடம்} இதைச்சொன்ன, அந்த மனிதர்களில் சிறந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அர்ஜுனன், விராடன் மகனிடம் {உத்தரனிடம்} மீண்டும், “பீஷ்மரின் படைப்பிரிவின் முன்னணிக்குத் தாமதமில்லாமல் என்னை அழைத்துச் செல்வாயாக. இந்தப் போரில் நான் அவரது {பீஷ்மரின்} வில்லின் நாணை அறுப்பேன். வானில் இருக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்படும் மின்னல் கீற்றுகளைப் போலச் சுடர்மிகும் அழகுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களை நான் அடிப்பதை இன்று நீ காண்பாய். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காண்டீவத்தின் பின்புறத்தை இன்று கௌரவர்கள் காண்பார்கள். கூடியிருக்கும் எதிரிகள் பிறகு “இவன் எந்தக் கையில் அடிக்கிறான். வலதிலா இடதிலா” என்று தங்களுக்குள் சச்சரவு செய்வார்கள்.
நான் இன்று பயங்கரமான (மரண) ஆற்றை மறு உலகத்தை நோக்கிப் பாயச் செய்வேன். அது {அந்த ஆறு} இரத்தத்தை நீராகவும், தேர்களை எதிர்சுழிப்புகளாகவும், யானைகளை முதலைகளாகவும் கொண்டிருக்கும். எனது நேரான கணைகளால், கரங்களையும், பாதங்களையும், தலைகளையும், முதுகுகளையும், தோள்களையும் கிளைகளாகக் கொண்டிருக்கும் மரங்கள் அடர்ந்த குரு காட்டை {கௌரவக் காட்டை} நான் இன்று முற்றாக ஒழிப்பேன்.கையில் வில்லுடன் தனியாக நான் கௌரவப் படையை வீழ்த்துவதால், எரியும் காட்டில் இருந்து எனக்கு நூறு வழிகள் திறக்கும். என்னால் தாக்கப்படும் குரு படை (களத்தைவிட்டு ஓட இயலாமல்) திரும்பத் திரும்பச் சக்கரத்தைப் போலச் சுழன்று வருவதை நீ இன்று காண்பாய். கணைகளிலும் ஆயுதங்களிலும் எனக்கு உள்ள அற்புதப் பயிற்சியை நான் இன்று உனக்குக் காட்டுவேன்.
{போர்க்களத்} தரை, சமமானதாகவோ, சமமற்றதாகவோ இருப்பினும், நீ எனது தேரில் உறுதியாக நிற்பாயாக. இறகு படைத்த எனது கணைகளால் சொர்க்கத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் மேரு மலையைக் கூட என்னால் துளைக்கமுடியும். பழங்காலத்தில், இந்திரனின் கட்டளையின்பேரில், பௌலோமர்களையும் காலகஞ்சர்களையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றேன். நான் எனது பிடியின் உறுதியை இந்திரனிடம் பெற்றேன். எனது கரங்களின் இலகுத்தன்மையைப் பிரம்மனிடம் பெற்றேன். எதிரிக்கூட்டத்தின் மத்தியில் போரிடும் வகையில் தற்காப்பு மற்றும் கடுந்தாக்குதல்களில் உள்ள பல்வேறு முறைகளைப் பிரஜாபதியிடம் இருந்து கற்றிருக்கிறேன். பெருங்கடலுக்கு அப்பாலுள்ள ஹிரண்யபுரத்தில் {தங்கத்தாலான மிதக்கும் நகரம் - பௌலோமர்களுடைய தலைநகரம்}வசித்த கடும் வில்லாளிகளான அறுபதினாயிரம் தேர்வீரர்களை முன்பு வீழ்த்தினேன். பஞ்சுப் பொதியைச் சிதறடிக்கும் புயலென நான் குருக்களின் {கௌரவர்களின்} பெரும்படையை வீழ்த்தப்போவதை இப்போது பார்.
பதாகைகளை மரங்களாகவும், காலாட்படையைச் செடிகொடிகளாகவும், தேர்வீரர்களை இரைதேடும் விலங்குகளாகவும் கொண்டிருக்கும் இந்தக் குரு என்ற காட்டை {கௌரவக்காட்டை}, தீ போன்ற எனது கணைகளால் நான் இன்று எரிப்பேன். வஜ்ரதாங்கி {இந்திரன்} தானவர்களை {அசுரர்களை} வீழ்த்துவது போல, தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டுவரும் குரு படையின் வலிமைமிக்க வீரர்களை, நான் தனியாகவே, எனது நேரான கணைகளால், அவர்களுடைய தேர்க்கூண்டுகளில் இருந்து விழ வைப்பேன். ருத்ரனிடம் {சிவனிடம்} இருந்து ரௌத்திரத்தையும்,வருணனிடம் இருந்து வருணத்தையும் {வருணபாசத்தையும்},அக்னியிடம் இருந்து ஆக்னேயத்தையும்,காற்றின் தேவனிடம் {வாயுவிடம்} இருந்து வாயவ்யத்தையும்,சக்ரனிடம் {இந்திரனிடம்} இருந்து வஜ்ரத்தையும் இன்னும் பிற ஆயுதங்களையும் நான் பெற்றிருக்கிறேன். சிங்கம் போன்ற பல வீரர்களால் காக்கப்பட்டாலும் அந்தக் கடும் தார்த்தராஷ்டிர காட்டை நான் நிச்சயம் அழிப்பேன். எனவே, ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உறுதிகூறப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டிருந்த கடுந்தேர்களின் வரிசைக்குள் ஊடுருவினான். எனினும் கடுஞ்செயல்கள் புரியும் கங்கையின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தின் வீரர்களை வீழ்த்த விருப்பம் கொண்டு முன்னேறி வரும் வலிய கரங்கள் கொண்ட வீரனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் எதிர்த்து நின்றார். எதிர்த்து நின்ற பீஷ்மரின் கொடிக்கம்பத்தை, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது கணையைக் கொண்டு ஜிஷ்ணு {அர்ஜுனன்} வேரோடு வெட்டி வீழ்த்தினான். இதனால், அழகிய மலர்மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த துச்சாசனன், விகர்ணன், துஸ்ஸஹன், விவிங்சதிஆகிய நான்கு வீரர்களும் அந்தக் கடும் வில்லாளியை நோக்கி விரைந்து வந்தனர். கடும் வில்லாளியான பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வீரனான துச்சாசனன், ஒரு பிறை வடிவக் கணையால் விராடன் மகனையும் {உத்தரனையும்}, மற்றொரு கணையால் அர்ஜுனனின் மார்பையும் துளைத்தான்.
துச்சாசனனை எதிர்த்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, கழுகின் இறகுகளைப் படைத்த தனது கூரிய கணைகளால், தனது எதிரியின் {துச்சாசனனின்} தங்க முலாம் பூசப்பட்ட வில்லை வெட்டி, ஐந்து கணைகளால் அவனது மார்பைத் துளைத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற துச்சாசனன், போரை விட்டு விலகி {புறமுதுகிட்டு} ஓடினான். பிறகு திருதராஷ்டிரன் மகனான விகர்ணன், எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனனை கழுகின் இறகுகள் கொண்ட நேரான கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது நேரான கணைகள் மூலம் ஒரு நொடிக்குள் அவனது {விகர்ணனின்} நெற்றியில் அடித்தான். அர்ஜுனனால் துளைக்கப்பட்ட அவன் தனது தேரில் இருந்து விழுந்தான். இதைக் கண்ட துஸ்ஸஹன், விவிங்சதியை ஆதரித்தபடி, தனது சகோதரனை மீட்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு மேகம் போன்ற கூரிய கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.
எனினும், இதற்குக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே நொடியிலேயே இரு கணைகளால் அவர்கள் இருவரையும் துளைத்து, அவர்கள் இருவரது குதிரைகளையும் கொன்றான். இதனால், குதிரைகளை இழந்து, தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்ட அந்த இரு திருதராஷ்டிரன் மகன்களையும், மற்ற தேர்களில் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பிற வீரர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்த்தப்பட முடியாதவனும், கிரீடம் தரித்தவனும், குந்தியின் பலமிக்க மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, தனது கணைகளைக் கொண்டு, குறிதவறாமல் அனைத்துப்புறங்களிலும் அடித்துக் கொண்டிருந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
பதிவின் சுருக்கம் : கர்ணனுக்குச் சவால் விட்ட அர்ஜுனன்; அர்ஜுனனை இகழ்ந்த கர்ணன்; ஏற்கனவே கர்ணன் தன்னிடம் இருந்து தப்பி ஓடியதைச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; அர்ஜுனன் கர்ணனின் மார்பைத் துளைத்தது; கர்ணன் போர்க்களத்தை விட்டு வடதிசை நோக்கி ஓடி மீண்டும் புறமுதுகிடுவது...
அர்ஜுனன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, போரில் உனக்குச் சமமான எவனும் இல்லை என்று சபா மண்டபத்தின் மத்தியில் நீ பேசிய இறுமாப்பான பேச்சுக்கு நல்லது செய்யும் நேரம் {இதோ} வந்துவிட்டது. இன்று, ஓ! கர்ணா, என்னிடம் நீ மோதப் போகும் இந்தப் பயங்கர மோதலால், உனது சொந்த பலத்தை நீ அறிந்து கொள்வாய்; இதற்கு மேலும் யாரையும் நீ அவமதிக்கமாட்டாய். நற்பிறப்பைத் துறந்து, நீ பல கொடுஞ்சொற்களைப் பேசியிருக்கிறாய். ஆனால், இப்போது நீ செய்ய முயலும் இது, மிகக் கடுமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, குருக்களின் {கௌரவர்களின்} பார்வையில் என்னிடம் மோதும் நீ, இதற்கு முன் என்னை அவமதித்ததற்கு நல்லது செய்வாயாக. {அந்த வார்த்தைகளை உண்மையென நிரூபிப்பாயாக}.
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த கர்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! வலிமைமிக்க மன்னா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அர்ஜுனனுடன் மோதினான். கணைகளை மழையெனப் பொழிந்து, மோதலுக்கு விரைந்து வந்த அவனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, கணைகளின் மேகத்தால் அவனை {அஸ்வத்தாமனை} வரவேற்றான். தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று, அந்த மோதல், பயங்கரமாக இருந்தது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருத்திரனையும் வாசவனையும் {இந்திரனையும்} போலக் கணைகளை அடித்துக் கொண்டனர். கணைகளைக் கொண்டு ஆகாய விரிவின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்து, சூரியனை முழுமையாக மறைத்து, காற்றே நின்று போகும்படி போரிட்டனர்.
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த அஸ்வத்தாமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருபர் இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சிவப்புக் குதிரைகள் கொண்ட ஒப்பற்ற துரோணர், ஏற்கனவே நாணில் கணை பொருத்தப்பட்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு, வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனை நோக்கி விரைந்தார். தனது தங்கத் தேரில் முன்னேறி வரும் ஆசானை சிறிது தொலைவில் கண்ட வெற்றி வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், உத்தரனிடம், “ஓ! நண்பா, நீ அருளப்பட்டிருப்பாயாக. சுடர்விடும் நெடும் நெருப்பைப் போன்ற தங்க பலிப்பீடத்தைத் தனது உயர்ந்த பதாகையின் தலைப்பில் கொண்டவரும், {தேரைச்} சுற்றிலும் நிறையக் கொடிகள் கொண்டவரும், அமைதியான இனிய முகமும், பவளம் மற்றும் தாமிர வண்ணமும், உயர்ந்த பயிற்சியும் கொண்ட, மிக அழகான பெரிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வருபவரான துரோணரிடமே நான் போரிட விரும்புகிறேன்.
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்},விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியும் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.
பதிவின் சுருக்கம் :கௌரவர்களுக்கு அர்ஜுனனுக்கும் இடையில் நடக்கும் போரைக் காண வந்திருந்த தேவர்களும் இந்திரனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மழைக்காலத்தில், மென்மையான காற்றின் முன்னிலையில் செல்லும் மேகத்திரள் போல, அந்தக் கடும் வில்லாளிகளின் படைகள் {காலாட்படைகள்} தெரிந்தன. (அந்தக் காலாட்படையின்) அருகில் பயங்கரமான போர்வீரர்களால் நடத்தப்படும் எதிரிகளின் குதிரைகள் {குதிரைப்படைகள்} நின்றிருந்தன. அங்கே, பயங்கர முகம் கொண்டவையும், அழகிய கவசத்தால் ஒளிருபவையும், திறமையான போராளிகளால் நடத்தப்படுபவையும், இரும்பு அங்குசங்களால் தூண்டப்படுபவையுமான யானைகளும் {யானைப்படைகளும்} இருந்தன.
பதிவின் சுருக்கம் : போரில் அர்ஜுனன் செய்த சாகசம்; அர்ஜுனன் உத்தரனுக்கு எதிரிணியின் படைத்தலைவர்களை அறிமுகப்படுத்தியது; உத்தரன் கிருபரை நோக்கித் தேரை நடத்திச் சென்றது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராதையின் மகன் {கர்ணன்} களத்தை விட்டு ஓடியதும், துரியோதனன் தலைமையிலான பிற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் இருந்து பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். துள்ளும் கடலின் கோபத்தைத் தாங்கும் கரையைப் போல, போர்க்களத்தில் வரிசையாக அணிவகுத்து, தன்னை எதிர்த்து விரைந்தோடி வந்த எண்ணிலடங்கா தலைவர்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, {அவர்கள் மீது} கணைகளின் மேகங்களைப் பொழிந்தான். தேர்வீரர்களில் முதன்மையானவனும், வெள்ளைக் குதிரைகளைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, எந்நேரமும் தெய்வீக ஆயுதங்களை அடித்துக் கொண்டே எதிரியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.
விரைவில், சூரியன் தனது கதிர்களால் முழு உலகத்தையும் மூடுவதைப் போல, பார்த்தன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால், வானத்தின் அனைத்து திக்குகளையும் நிறைத்தான். தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் இருந்து போரிட்டவர்கள் மற்றும் கவசம் பூண்டு தரைப்படையில் போரிட்ட வீரர்கள் ஆகியோரில், கூர்மையான அம்புகளால் காயம்படாதவாறு தங்கள் உடலில் இரண்டு விரல் அகலத்தில் எஞ்சிய இடம் கொண்டவர்கள் எவரும் இல்லை. தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இருந்த திறமையாலும், அந்தக் குதிரைகள் பெற்றிருந்த பயிற்சியாலும், உத்தரனனின் திறமையாலும், அவனது {அர்ஜுனனின்} ஆயுதங்கள் சென்ற விதத்தாலும், அவனது பராக்கிரமத்தாலும், இலகுவான கரங்களாலும், அர்ஜுனனை, படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் அண்ட அழிவின் போது, உட்கொள்ளும் சுடர்மிக்க நெருப்பாக மக்கள் கருதத் தொடங்கினர்.
எதிரிகள் மத்தியில் எவராலும், சுடர்விடும் தீ போலப் பெரும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த அர்ஜுனன் மீது தங்கள் கண்களைச் செலுத்த முடியவில்லை. அர்ஜுனனின் கணைகளால் சிதைக்கப்பட்ட எதிரிப்படை தலைவர்கள், மலையின் மார்பில் புதிதாக உதித்திருக்கும் மேகங்கள் சூரியக் கதிர்களைப் பிரதிபலிப்பதைப் போலவும், அசோக மரங்கள் நிறைந்த தோப்பு, கொத்து கொத்தான மலர்களால் பிரகாசிப்பது போலவும் தோன்றினர். உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற படைவீர்கள் இவற்றைப் போலவே இருந்தனர். அல்லது மலர்கள் படிப்படியாகத் தளர்ந்து விழும் அழகிய பூமாலை போல இருந்தனர். அனைத்திலும் வியாபித்துள்ள காற்று, எதிரிப்படை தலைவர்களுடைய கிழிந்த கொடிகளையும், குடைகளையும் தனது சிறகுகளில் தாங்கிச் சென்றது.
மேலும், தங்கள் அணிகளின் மத்தியில் ஏற்பட்ட அழிவைக் கண்டு பயந்த குதிரைகள், பார்த்தனின் அம்புகளால் {தேர்களின்} நுகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்களின் உடைந்த பாகங்களை இழுத்தபடியே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின. காதுகளிலும், விலாப்புறங்களிலும், தந்தங்களிலும், கடைவாயருகிலும், உடலின் முக்கியப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட யானைகள், அந்தப் போர்க்களத்தில் கீழே விழ ஆரம்பித்தன. மேலும், கௌரவர்களைச் சார்ந்த யானைகளின் சடலங்கள் குறுகிய காலத்தில் பரவலாகச் சிதறுண்டதால், அந்தப் பூமியைக் காண பெருந்திரளான கருமேகங்கள் நிறைந்த மேகமூட்டமான வானம் போல இருந்தது. யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட நெருப்பு, உலகத்தில் அழிந்து போகக்கூடிய அசைவன, அசையாதன ஆகிய அனைத்துப் பொருட்களையும் எரிப்பது போல, அந்தப் போர்க்களத்தில் அனைத்து எதிரிகளையும் பார்த்தனும் {அர்ஜுனனும்} எரித்தான். தனது ஆயுதங்களின் சக்தியாலும், தனது வில்லின் நாணொலியாலும், கொடிக்கம்பத்தில் நிலைத்திருக்கும் உயிரினங்களின் இயல்புக்கு மிக்கக் கதறல்களாலும், அந்தக் குரங்கின் பயங்கரமான கர்ஜனையாலும், சங்கொலியின் வெடிப்பாலும், எதிரிகளைப் பலமாக அடிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, துரியோதனனுடைய துருப்பினரின் இதயங்களில் திகிலை உணரச் செய்தான்.
அர்ஜுனன் பார்வைக்கெதிரிலேயே, எதிரி வீரர்கள் ஒவ்வொருவரின் வலிமையும் தூசிக்குச் சமானமாக மாறுவது தெரிந்தது. பாதுகாப்பற்றவர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்யத் துணிய விரும்பாத அர்ஜுனன்,திடீரெனத் திரும்பி, தங்கள் இலக்கைக் கூர்முனை கணை மேகங்களால் தாக்குவதற்காகப் பருந்துகளைத் தப்பவிடும் வேடர்களைப் போல அப்படையைப் பின்னால் இருந்து தாக்கினான். அவன் {அர்ஜுனன்} விரைவில், இரத்தம் குடிக்கும் அம்புகளைக் கொத்துக் கொத்தாக ஆகாயம் முழுவதும் நிரப்பினான். சக்தி மிக்கச் சூரியனின் (முடிவிலியான} கதிர்கள் சிறு பாத்திரத்திற்குள் நுழைந்து, அதை முழுவதுமாக நிரப்புவது போல, அர்ஜுனனின் எண்ணற்ற கணைகள் விரிவடைவதற்கு ஆகாயத்தில் இடம் இல்லாமல் போயிற்று.
அருகில் இருக்கும்போது ஒரே ஒரு முறை மட்டுமே எதிரிகளால் அர்ஜுனனின் தேரைக் காண முடிந்தது. ஏனெனில், அதன் பிறகு {அப்படிப் பார்த்த} உடனேயே அவர்கள் தங்களுடைய குதிரைகளுடன் சேர்த்து அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர் {அடுத்த நொடியிலேயே கொல்லப்பட்டனர்}. அவனது கணைகள் எப்படி எதிரிகளின் உடலைத் தடங்கலற்றுக் கடந்து சென்றனவோ, அதே போல, அவனது தேரும் எதிரி தலைவர்கள் மத்தியில் தடங்கலற்று கடந்து சென்றது. உண்மையில், பெருங்கடலில் விளையாடும் ஆயிரம் தலை கொண்ட வாசுகியைப் போல, அவன் எதிரி துருப்புகளைப் பெரும் வன்முடையுடன் தூக்கியெறிந்து கலங்கடிக்கத் தொடங்கினான். இடையறாது கிரீடி {அர்ஜுனன்} தனது கணைகளை அடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வில்லின் நாணொலி, மற்ற உயிரினங்களால் ஏற்கனவே கேட்கப்படாத அளவுக்கு அனைத்து ஒலிகளையும் விஞ்சி இருந்தது. சூரியக் கதிர்களால் பளிச்சென ஒளிர்ந்த கருமேகங்கள் போல, களத்தை நிரப்பிய யானைக்கூட்டம், தங்கள் உடல்கள் (கொழுந்துவிட்டெரியும்) கணைகளால் துளைக்கப்பட்டு ஒளிவீசின. அனைத்துத் திசைகளிலும் உலவி, வலதிலும் {வலது கையாலும்}, இடதிலும் {இடது கையாலும்} (கணைகளை) அடித்த அர்ஜுனனின் வில் இழுக்கப்பட்டு எப்போதும் சரியான வட்டமாகத் தெரிந்தது. அழகற்ற எதன் மீதும் கண்கள் நிலைக்காததைப் போல, அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} கணைகள் இலக்கைத் தவிர வேறு எதையும் அடையவில்லை. யானைக்கூட்டத்தின் நடையால் பாதை உண்டாவது போல, அந்தக் கிரீடியின் {அர்ஜுனனின்} தேரால் அங்குப் பாதை உண்டாக்கப்பட்டது. பார்த்தனால் அடிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்த எதிரி வீரர்கள், “பார்த்தனின் வெற்றியை விரும்பும் இந்திரனே இறவாதவர்கள் {தேவர்கள்} அனைவரையும் அழைத்து வந்து நம்மைக் கொன்று கொண்டிருக்கிறானோ” என்று எண்ணினார்கள்.
சுற்றிலும் பயங்கரப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த விஜயனை {அர்ஜுனனை} கண்ட அவர்கள், அனைத்து உயிரினங்களையும் கொல்வதற்காக மரணமே அர்ஜுனனின் உருவில் வந்திருப்பதாகவும் கருதினார்கள். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகள், பார்த்தனின் மோதல்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலும், பார்த்தனின் சாதனையை விவரிக்கும் வண்ணமும் சிதைக்கப்பட்டு, சிதறப்பட்டு இருந்தன. {பருவ காலத்தில்} இலையுதிர்க்கும் மூலிகைச் செடிகளின் மேல்புறத்தைத் துண்டிப்பதைப் போல, அவன் {அர்ஜுனன்} பகைவரின் தலைகளை வெட்டிச் சாய்த்தான். அர்ஜுனனால் ஏற்பட்ட பயங்கரத்தைக் கண்ட குருக்களின் சக்தி அனைத்தும் தொலைந்து போயிற்று. அர்ஜுனனின் எதிரிகள் நிரம்பிய காடு, அர்ஜுனன் என்ற புயலால் சிதைக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது போல, ஊதா நிற சுரப்பு நீரால் {purple secretions} பூமியைச் சிவப்பாக்கியது. குருதி கலந்த புழுதி காற்றால் உயர்த்தப்பட்டு, சூரியனின் கதிர்களையே கூட, மேலும் சிவப்பாக்கியது. விரைவில் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட வானம் மாலைவேளை வந்துவிட்டதைப் போல அதிகச் சிவப்பாக இருந்தது. உண்மையில், சூரியன் கூட அஸ்தமித்ததும் தனது கதிர்களை நிறுத்திவிடுவான், ஆனால் பாண்டுவின் மகன் தனது கணையடிப்பை நிறுத்தினானில்லை. எதிரியின் பெரும் வில்லாளிகள் அனைவரும் பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டிருந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத சக்தி கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது அனைத்து தெய்வீக ஆயுதங்களாலும் அவர்களை மூழ்கடித்தான்.
பிறகு அர்ஜுனன், துரோணர் மீது கூர்முனை கொண்ட எழுபத்துமூன்று {73} அம்புகளை அடித்தான்.துஸ்ஸஹன் மீது பத்தும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது எட்டும், துச்சாசனன் மீது பனிரெண்டும், சரத்வானின் மகன் கிருபர் மீது மூன்றும் அடித்தான். பிறகு, அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரையும், மன்னன் துரியோதனனையும் நூறு அம்புகளால் துளைத்தான். கடைசியாக, பராசத்தைக் கொண்டு கர்ணனுடைய காதைத் துளைத்தான். அனைத்து ஆயுதங்களிலும் திறமைபெற்ற பெரும் வில்லாளியான கர்ணன் அப்படித் துளைக்கப்பட்ட போது, அவனது குதிரைகளும், தேரும், தேரோட்டியும் என அனைத்தும் அழிக்கப்பட்டன. அவனுக்கு {கர்ணனுக்கு} ஆதரவாக இருந்த துருப்புகள் உடைய ஆரம்பித்தன. அப்படி அந்த வீரர்கள் உடைவதைதக் கண்ட விராடன் மகன் {உத்தரன்}, பார்த்தனின் நோக்கத்தை அறிந்து அவர்களுக்கு வழி கொடுத்தபடியே அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்டு, இந்த அழகிய தேரில் நின்று கொண்டிருக்கும் உம்மை, நான் எந்தப் பிரிவுக்கு {எந்தப் பிரிவின் பக்கம்} அழைத்துச் செல்லட்டும்? நீர் உத்தரவிட்டால், நான் உடனே அங்கு அழைத்துச் செல்வேன்” என்றான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, புலித்தோலைக் கவசமாக அணிந்து, சிவப்பு நிற குதிரைகளால் இழுக்கப்படும் நீலக்கொடி பொருந்திய தேரில் இருக்கும் மங்கலவீரரான கிருபர் அதோ இருக்கிறார். கிருபரின் படைப்பிரிவின் முகப்பு அதோ தெரிகிறது. அங்கே என்னை அழைத்துச் செல். அந்தப் பெரும் வில்லாளிக்கு {கிருபருக்கு}, நான் வில்வித்தையில் எனது வேகமான கரங்களின் திறனைக் காட்ட விரும்புகிறேன்.
தனது கொடியில் தங்க வேலைப்பாடு கொண்ட நேர்த்தியான நீர்க்குடத்தைக் கொண்டிருக்கும் அந்த வீரரே அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையானவரான ஆசான் துரோணராவார். ஆயுதம் தாங்கும் அனைவரைக்காட்டிலும், நான் அவர் மீது எப்போதும் மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். எனவே, நீ உற்சாகமாக அவரை {துரோணரை} வலம் வா. அங்கே நமது சிரம் தாழட்டும். அதுவே நிலைத்த அறமாகும். எனது உடலை துரோணர் முதலில் தாக்கிய பிறகே நான் அவரைத் தாக்குவேன்.ஏனெனில், அப்போதுதான் அதற்காக அவரால் சீற்றங்கொள்ள இயலாது.
அதோ, அங்கே துரோணருக்கு அருகில், வில்லைக் கொடியில் தாங்கியிருக்கும் வீரர், ஆசானின் {துரோணரின்} மகனான பெரும் தேர்வீரர் அஸ்வத்தாமன் ஆவார். ஆயுதம் தாங்கும் அனைவரிலும் நான் பெரிதும் மதிப்பவர்களில் அவரும் {அஸ்வத்தாமரும்} ஒருவராவார். எனவே, நீ அவரது தேர் அருகே செல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுத்துவாயாக.
அதோ, தங்கக்கவசம் பூண்டு, {நான்காகப் பிரிக்கப்பட்ட படையின்} மூன்றாவது பிரிவான மிகத் திறமையான துருப்பால் சூழப்பட்டு, தங்கத்தரையில் இருக்கும் யானையைத் தனது கொடியில் கொண்டிருப்பவன், திருதராஷ்டிரரின் மகனான துரியோதனனாவான். ஓ! வீரா {உத்தரா}, எதிரிப்படையின் தேர்களைக் கலங்கடிக்கும் உனது தேரை அவனுக்கு முன்பாக நடத்து. இம்மன்னன் {துரியோதனன்} போர்க்களத்தில் வீழ்த்தப்படக் கடினமானவனும், அனைத்து எதிரிகளையும் கலங்கடிக்க வல்லவனும் ஆவான். கரங்களின் வேகத்தில் இவனே துரோணரின் சீடர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். நான் விற்கலையில் மேன்மையான வேகத்தைப் போர்க்களத்தில் அவனுக்குக் காட்டுவேன்.
அதோ, யானைகளைக் கட்டும் தடித்த கயிறைத் தனது கொடியில் தாங்கியிருப்பவன் விகர்த்தனன் மகனான கர்ணனாவான்.அவனை நீ ஏற்கனவே அறிவாய். ராதையின் அந்தத் தீய மகனருகே {கர்ணனருகே}நீ செல்லும் போது, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் என்னிடம் எப்போதும் மோதலுக்குச் சவால் விடுவான்.
அதோ, (நடுவில்) சூரியனையும், ஐந்து நட்சத்திரங்களையும் தனது நீல நிறக் கொடியில் கொண்டவரும், பெரும் சக்தியுடன் தனது தேரில் நிற்பவரும், கையில் பெரும் வில்லுடன் இருப்பவரும், அற்புதமான கையுறைகளை அணிந்திருப்பவரும், சுத்தமான வெள்ளை நிறத்திலான குடையைத் தனது தலைக்கு மேலே கொண்டவரும், பெருந்திரளான கருமேகங்களுக்கு முன்னிலையில் இருக்கும் சூரியனைப் போல, பல்வேறு கொடிகளும் பதாகைகளும் தாங்கி வரிசையாக நிற்கும் பெருந்தேர்களுக்குத் தலைமையாக நிற்பவரும், சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் பிரகாசமிக்கத் தங்க கவசத்தை அணிந்தவரும். தலையில் அணிந்திருக்கும் தங்கக் கவசத்தால் எனது இதயத்தை அச்சமூட்டுபவரும், எங்கள் அனைவருக்கும் பாட்டனுமான சந்தனுவின் மகன் பீஷ்மர் அவரே ஆவார்.
துரியோதனனால், அரசருக்குரிய பிரகாசத்துடன் தான் உற்சாகமூட்டப்படுவதால், அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} அவர் {பீஷ்மர்} பாசம் கொண்டு மிகுந்த பாகுபாட்டுடன், இருக்கிறார். அவரை நாம் கடைசியாக அணுகுவோமாக. ஏனெனில், இப்போது கூட அவரால் {பீஷ்மரால்} எனக்குத் தடையாக இருக்க முடியும். என்னோடு {அவர்} போரிடும்போது, குதிரைகளை நீ கவனமாகச் செலுத்துவாயாக” என்றான் {அர்ஜுனன்}. அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் அவசரத்துடன், அந்தச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேரை, போரிட ஆவலாக நின்று கொண்டிருந்த கிருபரிடம் நடத்திச் சென்றான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
All Images in this blog are obtained from Google images . If the authors of those images appose the presence of them in this blog, that image will removed immediately.
None of the images are / will be used for commercial purposes.