Sachi beheld Indra! | Udyoga Parva - Section 14 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 14)
பதிவின் சுருக்கம் : உபஸ்ருதி தேவி இந்திராணியிடம் வருவது; உபஸ்ருதி தேவியைத் தொடர்ந்து சென்ற இந்திராணி; இமய மலைகளைத் தாண்டி வடக்கே செல்வது; கடலுக்கு நடுவில் ஒரு தீவைக் காண்பது; அந்தத் தீவுக்கு மத்தியில் ஒரு பெரிய தடாகத்தைக் காண்பது; அந்தத் தடாகத்தின் மத்தியில் பெரிய தாமரை மலர்களைக் காண்பது; தாமரைக்கூட்டத்திற்கு மத்தியில் இருந்த ஒரு பெரிய வெண்தாமரையினுள் உபஸ்ருதியும், இந்திராணியும் பிரவேசிப்பது; அங்கே அந்த மலர்த்தண்டின் இழைகளுக்குள் இந்திரன் ஒளிந்து கொண்டிருந்தது; இந்திரனிடம் பேசிய இந்திராணி...
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தக் குறிசொல்லும் தேவி {உபஸ்ருதி தேவி} அந்தக் கற்புடைய அழகிய மங்கையின் {இந்திராணியான சச்சி} அருகே நின்றாள். அழகும், இளமையும் கொண்ட அந்தத் தேவி தன்னெதிரே நிற்பதைக் கண்ட இந்திரனின் ராணி {சச்சி}, இதயத்தில் மகிழ்ந்து, அவளுக்கு {உபஸ்ருதி தேவிக்குத்} தனது மரியாதைகளைச் செலுத்தி, “ஓ! அழகிய முகம் கொண்டவளே, நீ யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றாள். அதற்கு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி}, “ஓ! தேவி, உன்னருகே வந்திருக்கும் நான் ஒரு குறி சொல்லி {உபஸ்ருதி} ஆவேன். நீ உண்மையானவளாக இருப்பதால், ஓ! உயர்ந்த மனம் கொண்ட மங்கையே {சச்சி}, நான் உனக்குக் காட்சியளித்தேன். நீ உனது கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளாகவும், தன்னடக்கத்துடன் இருப்பவளாகவும், அறச்சடங்குகள் பயில்வதில் ஈடுபடுபவளாகவும் இருப்பதால், விருத்திரனைக் கொன்ற தேவனான இந்திரனை, நான் உனக்குக் காட்டுவேன். என் பின்னே விரைந்து வா, உனக்கு நன்மையே விளையும்! நீ தேவர்களில் சிறந்தவனை {இந்திரனைக்} காண்பாய்” என்றாள் {உபஸ்ருதிதேவி}.
பிறகு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி} புறப்பட்டாள். இந்திரனின் தெய்வீக ராணியும் அவளுக்குப் பின்னே சென்றாள். இப்படியே அவள் {உபஸ்ருதி} தெய்வீகத் தோப்புகளையும், பல மலைகளையும், இமய மலைகளையும் கடந்து, அதன் {இமயமலைக்கு} வடபுறத்திற்கு வந்து சேர்ந்தாள். பிறகு பல யோஜனைகள் நீண்டிருந்த கடலை அடைந்த அவள், பல்வேறு மரங்களாலும், செடிகளாலும் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய தீவுக்கு வந்தாள். அங்கே, தெய்வீக தோற்றத்துடன் எண்ணூறு மைல்கள் {நூறு யோஜனைகள்} நீளமும், அதே போன்ற அளவு அகலமும் கொண்ட ஓர் அழகிய தடாகத்தைக் கண்டாள். அங்கே பறவைகள் நிறைந்திருந்தன. ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, முழுதும் மலர்ந்த தெய்வீகத் தோற்றமுடைய ஐவண்ணத்தாமரைகள் {பஞ்சவர்ணத் தாமரைகள்} அதில் {அந்தத் தடாகத்தில்} இருந்தன. அவற்றைச் {அந்தத் தாமரைகளைச்} சுற்றி ஆயிரக்கணக்கில் வண்டுகள் ரீங்காரமிட்டபடி இருந்தன. அந்தத் தடாகத்திற்கு மத்தியில் அழகிய, பெரிய தாமரைகளின் கூட்டம் ஒன்று இருந்தது. அதன் மத்தியில் ஒரு பெரிய வெள்ளைத் தாமரை, ஓர் உயர்ந்த தண்டில் நின்று கொண்டிருந்தது. அந்தத் தாமரைத் தண்டினுள் சச்சியுடன் ஊடுருவிய அவள் {உபஸ்ருதி}, {அத்தண்டின்} இழைகளுக்குள் {நூல்களுக்குள்} நுழைந்திருந்த இந்திரனைக் கண்டாள்.
நுண்ணிய உருவில் அங்கே கிடக்கும் தனது தலைவனை {இந்திரனைக்} கண்ட சச்சியும் நுண்ணிய உருவைக் கொண்டாள். அதே போல அந்தக் குறிசொல்லும் தேவியும் {உபஸ்ருதியும்} செய்தாள். அந்த இந்திரனின் ராணி {சச்சி}, பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட அவனது செயல்களை உரைத்து அவனைத் {இந்திரனைத்} துதிக்கத் தொடங்கினாள். இப்படித் துதிக்கப்பட்ட தெய்வீகமான புரந்தரன் {இந்திரன்}, சச்சியிடம், “என்ன காரியத்திற்காக நீ இங்கே வந்தாய்? நான் எப்படி உங்களால் கண்டுபிடிக்கப்பட்டேன்?” என்று கேட்டான். பிறகு அந்தத் தேவி நகுஷனின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாள். அவள் {சச்சி}, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவரே, மூன்று உலகங்களின் அரசாட்சியை அடைந்த அவன் {நகுஷன்}, பலமும் கர்வமும், தீய ஆன்மாவும் கொண்டு, நான் அவனைச் சந்திக்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறான். அந்த இழிந்த கொடூரன் எனக்கு ஒரு திட்டவட்டமானக் காலத்தை நிர்ணயித்திருக்கிறான். நீர் என்னைப் பாதுகாக்கவில்லையெனில், ஓ! தலைவா, அவன் என்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வான். இதன்காரணமாகவே, ஓ! இந்திரரே, அச்சத்தால் நான் உம்மிடம் வந்தேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {இந்திரரே}, தீய ஆன்மாக் கொண்ட கொடூரனான நகுஷனைக் கொல்லும். ஓ! தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்றவரே {இந்திரரே}, உம்மை அறிவீராக. ஓ! தலைவா, உமது பலத்தை அடைந்து, தேவலோகத்தை ஆள்வீராக!” என்றாள் {சச்சி}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.