Indra hid himself again! | Udyoga Parva - Section 13 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 13)
பதிவின் சுருக்கம் : சச்சி நகுஷனிடம் அவகாசம் கேட்பது; நகுஷன் சம்மதிப்பது; சச்சியின் நிலையைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்டுவது; விஷ்ணு இந்திரனுக்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்யச் சொன்னது; வேள்வி முடிந்ததும் இந்திரன் சுயநினைவை அடைவது; பலமிக்க நகுஷனைக் கண்ட இந்திரன் மீண்டும் ஒளிந்து கொள்வது; இதனால் துக்கமுற்ற இந்திராணி உபஸ்ருதி தேவியை வேண்டுவது...
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தேவர்கள் மன்னனான நகுஷன் அவளை {இந்திரனின் மனைவியான சச்சியைப்} பார்த்து, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் மூன்று உலகங்களுக்கும் இந்திரனாவேன். ஓ! அழகிய தொடைகளும் அழகிய நிறமும் கொண்டவளே, என்னை உனது தலைவனாக ஏற்றுக் கொள்வாயாக!” என்றான். நகுஷனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய தேவி, பயந்து போய், தென்றல் {காற்று} வீசுமிடத்தில் இருக்கும் வாழைமரம் போல நடுங்கினாள். பிரம்மாவுக்குத் தலைவணங்கிய அவள் {சச்சி}, தனது கரங்களைக்கூப்பியபடி, தேவர்களின் மன்னனான கடுமுகம் கொண்ட நகுஷனிடம், “ஓ! தெய்வங்களின் தலைவா {நகுஷா}, நான் காலத்தைப் {அவகாசத்தைப்} பெற விரும்புகிறேன். இந்திரருக்கு என்ன நேர்ந்தது என்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் அறியப்படவில்லை. அவரைக் குறித்த உண்மையை விசாரித்த பின், ஓ! தலைவா, அவரை {இந்திரரைக்} குறித்த எந்தச் செய்தியையும் அடையவில்லையென்றால், நான் உம்மைச் சந்திக்கிறேன்; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள் {சச்சி}.
இந்திரனின் ராணி இப்படிச் சொன்னதும், நகுஷன் மகிழ்ந்தான். பிறகு நகுஷன் {சச்சியிடம்}, “ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். செய்திகளை உறுதி செய்து கொண்ட பின் நீ வருவாயாக. சாதகமற்ற உனது உண்மை நிலையை நீ நினைத்துப் பார்ப்பாய் என்று நான் நம்புகிறேன்” என்றான். நகுஷனால் அனுப்பப்பட்ட அந்த மங்கலகரமான பார்வை கொண்டவள் {சச்சி}, {அங்கிருந்து} வெளியே வந்தாள். அந்தப் புகழ்பெற்ற மங்கை {சச்சி} பிருஹஸ்பதியின் {பிரகஸ்பதியின்} இல்லத்திற்குச் சென்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அக்னியைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், அவளது {சச்சியின்} சொற்களைக் கேட்டதும், இந்திரனின் நலன்களை அறிய ஊக்கம் கொண்ட நோக்கத்துடன் {தங்களுக்குள்} கலந்தாலோசித்தனர். பிறகு அவர்கள் தேவர்களுக்குத் தேவனான வலிமைமிக்க விஷ்ணுவைச் சேர்ந்தனர் {சென்றடைந்தனர்}.
உரையாற்றுவதில் வல்லவர்களான தேவர்கள், அவனிடம் {விஷ்ணுவிடம்} வருத்தத்துடன், “தேவர்கள் அனைவருக்கும் தலைவனான இந்திரன், {பிராமணனைக் கொன்ற பாவத்தால் ஏற்பட்ட} பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களுக்குத் தலைவா {விஷ்ணுவே}, முதலில் பிறந்தவனும் {அனைத்திற்கும் முன்பு பிறந்தவனும்}, அண்டத்தின் ஆட்சியாளனும், எங்களின் புகலிடமும் நீயே. அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காகவே நீ விஷ்ணுவின் உருவை ஏற்றாய். உனது சக்தியால் விருத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரன் பிரம்மஹத்தி பாவத்தால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களில் சிறந்தவனே, அவனை {இந்திரனை} விடுவிக்க வேண்டிய வழிகளைப் பரிந்துரைப்பாயாக!” என்றனர் {தேவர்கள்}.
அவர்களது சொற்களைக் கேட்ட விஷ்ணு {தேவர்களிடம்}, “இந்திரன் எனக்கு வேள்வியைக் காணிக்கையாக்கட்டும். அப்போது நான் அந்த வஜ்ரதாங்கியை {இந்திரனைச்} சுத்திகரிப்பேன். புனிதமான குதிரை வேள்வியைச் செய்யும் அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்}, தேவர்கள் தலைவனாக மீண்டும் தனது கண்ணியத்தை அடைவான். தீய மனம் கொண்ட நகுஷன், தனது தீச்செயல்களால் அழிவை நோக்கி வழிநடத்தப்படுவான். தேவர்களே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார் {விஷ்ணு}.
உண்மையான சொற்களான, காதுகளுக்கு இனிமையான அமுதம் போன்ற அந்த விஷ்ணுவின் சொற்களைக் கேட்ட தேவர்கள், கவலையுடனும் அச்சத்துடனும் இந்திரன் இருந்த பகுதிக்குத் தங்கள் ஆசான் மற்றும் முனிவர்கள் ஆகியோருடன் சென்றனர். அங்கே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த மனம் கொண்ட பெரும் இந்திரனைச் சுத்திகரிப்பதற்காகப் பிரம்மஹத்தியை நீக்க வல்ல பெரும் குதிரை வேள்வி செய்யப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, மரங்கள், நதிகள், மலைகள், பூமி மற்றும் பெண்கள் ஆகியோருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவத்தைப் பகிர்ந்தளித்தான். இப்படி அந்த உயிரினங்களுக்கு அதைப் {பிரம்மஹத்தியைப்} பிரித்தளித்து, அதில் இருந்து விடுபட்ட இந்திரன், நோயில் இருந்து விடுபட்டான். இப்படியே அதை {பிரம்மஹத்தியை}, அந்த உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்தளித்து அதில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, நோயில் இருந்தும் விடுபட்டான். பாவத்தில் இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, தன்னிலையை அடைந்தான். பிறகு, அசையும் உயிரினங்கள் அனைத்தின் பலத்தை உறிஞ்சுபவனும், முனிவர்கள் அளித்த வரத்தின் அறத்தால் அணுகமுடியாதபடி இருந்தவனுமான நகுஷனைக் கண்டு வலாசுரனைக் கொன்றவன் {இந்திரன்} நடுங்கினான்.
பிறகு, அந்தச் சச்சியின் கணவன் {இந்திரன்}, மீண்டும் பார்வையில் இருந்து மறைந்து போனான். உயிரினங்கள் அனைத்தின் பார்வைக்கும் மறைந்தபடி, காலத்தை எதிர்பார்த்து அவன் {இந்திரன்} உலவி கொண்டிருந்தான். இந்திரன் மறைந்ததும், சச்சி {இந்திராணி} துயரத்தில் விழுந்தாள். பிறகு, பெரும் துன்பமடைந்த அவள் {சச்சி}, “ஐயோ! ஓ! இந்திரரே, நான் ஏதாவது கொடையளித்திருந்தால், தேவர்களுக்குக் காணிக்கை அளித்திருந்தால், எனது ஆன்மிக வழிகாட்டிகளை மனநிறைவு கொள்ளச் செய்திருந்தால், என்னில் ஏதாவது உண்மை இருந்தால், எனது கற்புக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என நான் வேண்டிக் கொள்வேன். புனிதமானவளும், தூய்மையானவளும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் [1] சென்று கொண்டிருப்பவளுமான {உத்தராயணக் காலத்தில் நடப்பவளும்} இந்த இரவின் தேவியை, எனது விருப்பம் நிறைவேற்றுவதற்காக வணங்குகிறேன்” என்றாள் {சச்சி}.
[1] “குளிர் காலத்தில் இருந்து கோடைகாலத்திற்குள் நுழையும் சூரியனின் பாதை {உத்தராயணக் காலம்}” என்கிறார் கங்குலி.
இதைச் சொன்ன அவள் {சச்சி}, தன் உடலையும், ஆன்மாவையும் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இரவின் தேவியை வழிபட்டாள். தனது கற்பு மற்றும் உண்மையின் {சத்தியத்தின்} பெயரால் அவள் {சச்சி}, குறிசொல்பவளிடம் {சந்தேகத்தைத் தெளிவிக்கும் அந்தத் தேவியான உபஸ்ருதியிடம்} [2] கேட்டாள். அவள் {சச்சி}, “தேவர்களின் தலைவர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாயாக. உண்மை உண்மையாலேயே சரிபார்க்கப்படட்டும்” என்றாள். இப்படியே அவள் {சச்சி}, குறிசொல்லும் தேவியிடம் {இரவின் தேவியான உபஸ்ருதியிடம்} பேசினாள்.
[2] “இரவில் நட்சத்திரங்களின் குறிப்புகளைக் கொண்டு {பழங்காலத்தில்} நடைமுறையில் பயிலப்பட்ட குறிகேட்பு முறையாகும்” என்கிறார் கங்குலி
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.