Agni received his share in sacrifices! | Udyoga Parva - Section 16 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 16)
பதிவின் சுருக்கம் : அக்னியைப் புகழ்ந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியின் துதியை ஏற்ற அக்னி, நீர்நிலைகளில் இந்திரனைத் தேடப் புறப்பட்டது; தாமரைத்தண்டின் இழைகளுக்குள் மறைந்து கிடந்த இந்திரனைக் கண்ட அக்னி, பிருஹஸ்பதியிடம் அதைத் தெரிவிப்பது; தேவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்த பிருஹஸ்பதி, இந்திரனைத் துதிப்பது; துதியால் பலம் பெற்ற இந்திரன்; லோகபாலர்கள் இந்திரன் இருந்த இடத்திற்கு வருவது; அவர்களின் உதவியை இந்திரன் கோருவது; வேள்விப் பங்குகளையும், ஆட்சியுரிமைகளையும் அந்த லோகபாலர்களுக்கு இந்திரன் வழங்குவது ...
பிருஹஸ்பதி {அக்னியிடம்} சொன்னார், “ஓ! அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ! எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ! அக்னியே, புனிதக் காணிக்கைகளைத் தாங்குபவன் நீயே.
ஓ! அக்னி, தன்னளவில் சிறந்த காணிக்கையானவன் நீயே. உயர்ந்த வகையிலான வேள்விச் சடங்கில், அபரிமிதமான பரிசுகளுடனும், காணிக்கைகளுடனும் வழிபடப்படுபவன் நீயே. ஓ! காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ! அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ! பரிசுத்தம் செய்பவனே, மூவுலகங்களிலும் நீ அறியாதது எதுவும் இல்லை. தன் முன்னோடியை {முன்னோடியான உன்னை} அனைத்தும் அன்பாகவே ஏற்றுக் கொள்ளும். வேதங்களின் நித்திய பாடல்களால் உன்னை நான் பலமாக்குகிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}.
இப்படித் துதிக்கப்பட்டதால், எரிந்த காணிக்கைகளைத் தாங்குபவனான அந்தக் கவிகளிற்சிறந்தவன் {அக்னி}, மிகவும் மகிழ்ந்து, பாராட்டத்தக்க சொற்களைப் பிருஹஸ்பதியிடம் பேசினான். பிறகு அவன் {அக்னி பிருஹஸ்பதியிடம்}, “நான் இந்திரனை உமக்குக் காட்டுகிறேன். இதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்” என்றான் {அக்னி}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அக்னி, கடல்களிலும் சிறு குளங்களிலும் நுழைந்து, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தத் தடாகத்திற்கு வந்து, தாமரை மலர்களில் தேடிய போது, அங்கே ஒரு தாமரைத் தண்டின் இழையினுள் கிடக்கும் தேவர்கள் மன்னனை {இந்திரனைக்} கண்டான். பிறகு விரைந்து திரும்பிய அவன் {அக்னி}, நுண்ணிய வடிவம் கொண்டு தாமரைத் தண்டின் இழைகளில் எப்படி இந்திரன் தஞ்சமடைந்திருக்கிறான் என்பதைப் பிருஹஸ்பதியிடம் தெரிவித்தான். பிறகு தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய பிருஹஸ்பதி அங்கே சென்று, வலனைக் கொன்றவன் {இந்திரன்} முன்பு செய்த செயல்களைச் சுட்டிக்காட்டி அவனை {இந்திரனை} மகிமைப்படுத்தினார்.
அவர் {பிருஹஸ்பதி இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ! இந்திரா, எழு! இங்கே கூடியிருக்கும் தேவர்களையும் துறவியரையும் பார். ஓ! இந்திரா, ஓ! பெரும் தலைவா, அசுரர்களைக் கொன்று உலகங்களை விடுவிப்பவன் நீயே. விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட நீர் நுரைகளால் பலம் கொண்டு முன்பு விருத்திரனைக் கொன்றவன் நீயே. அனைத்து உயிர்களுக்கும் புகலிடமும், வணங்கத்தக்கவனும் நீயே. உனக்கு நிகரான எவனும் இல்லை. ஓ! இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ! பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக!” என்றார் {பிருஹஸ்பதி}.
இப்படித் துதிக்கப்பட்ட இந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்தான். பிறகு தனது சுய உருவை அடைந்து, பலத்தில் வளர்ந்த அவன் {இந்திரன்}, தன் முன்னிலையில் நின்ற ஆசான் பிருஹஸ்பதியிடம் பேசினான். அவன் {இந்திரன் பிருகஸ்பதியிடம்}, “பெரும் அசுரர்களான துவஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, மிகப்பெரிய வடிவம் கொண்டவனும் உலகங்களை அழித்தவனுமான விருத்திரனும் கொல்லப்பட்டுவிட்டனரே. உமக்கு இன்னும் வேறு என்ன காரியம் மீதமிருக்கிறது?” என்று கேட்டான் {இந்திரன்}. அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனிதனான நகுஷன் என்ற மன்னன், தெய்வீகத் துறவியருடைய சக்தியின் அறத்தால் சொர்க்கத்தின் அரியணையை அடைந்து, எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறான்” என்றார் {பிருகஸ்பதி}.
இந்திரன் {பிருகஸ்பதியிடம்}, “அடைவதற்கு அரிதான சொர்க்கத்தின் அரியணையை நகுஷன் அடைந்தது எப்படி? அவன் பயின்ற தவங்கள் என்னென்ன? ஓ! பிருஹஸ்பதி, அவனது வலிமை எவ்வளவு பெரியது?” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ! இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக!” என்று சொன்னார்கள். அவர்களிடம் நகுஷன், “நான் திறனற்றவனாக இருக்கிறேன். உங்கள் சக்தியாலும், உங்கள் தவங்களின் அறத்தாலும் என்னை நிரப்புங்கள்” என்று சொன்னான்.
இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், ஓ! தேவர்களின் மன்னா {இந்திரா}, அவனைப் {தங்கள் தவங்களின் அறத்தால்} பலவானாக்கினார்கள். பிறகு, நகுஷன் பயங்கரப் பலம் கொண்டவனாக ஆனான். இப்படியே மூன்று உலகங்களின் ஆட்சியாளனாக ஆன அவன் {நகுஷன்}, பெரும் துறவிகளைப் (தனது தேரில்} பூட்டினான். இப்படியே {முனிவர்களை வாகனமாகப் பயன்படுத்திய} அந்த இழிந்தவன் {நகுஷன்} உலகம் விட்டு உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். பயங்கரமான நகுஷனை நீ பார்த்துவிடாதே. அவன் தனது கண்களில் இருந்து நஞ்சை உமிழ்ந்து, அனைவரின் சக்தியையும் உறிஞ்சி விடுகிறான். தேவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருக்கின்றனர். அவன் மீது தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அவர்கள் {தேவர்கள்} மறைந்தே செல்கின்றனர்” என்றார்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அங்கீரஸ் குலத்தில் சிறந்தவர் {பிருஹஸ்பதி} அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, உலகத்தின் காப்பாளர்களான {திக்பாலர்களான} குபேரனும், சூரியனின் மகனான யமனும், பழந்தேவனான சோமனும் {சந்திரனும்}, வருணனும் அங்கே வந்தனர். அங்கே வந்த அவர்கள் {திக்பாலர்கள்} பெரும் இந்திரனிடம், “நற்பேறாலேயே துவஷ்ட்ரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, விருத்திரனும் கொல்லப்பட்டனர். ஓ! இந்திரா, உனது எதிரிகள் கொல்லப்பட்ட பிறகும், பாதுகாப்பாகவும், பலமாகவும் நீ இருப்பதும் நற்பேறாலேயேதான்” என்றனர். உலகத்தின் காவலர்களான {லோகபாலர்களான} அவர்கள் அனைவரையும் வரவேற்ற இந்திரன், நகுஷன் தொடர்பாக அவர்களிடம் முறையான வடிவில் கோரிக்கை வைக்கும் நோக்கில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களை வாழ்த்தினான். பிறகு, அவன் {இந்திரன்}, “கடுமுகம் கொண்ட நகுஷன் தேவர்களின் மன்னனாக இருக்கிறான். அதன் நிமித்தமாக உங்கள் உதவி எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் {திக்பாலர்கள்}, “நகுஷன் கோர முகம் கொண்டவன்; ஓ! தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ! இந்திரா, வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பங்குகளைப் பெற நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம்” என்றனர். அதற்கு இந்திரன், “அப்படியே ஆகட்டும். என்னுடன் சேர்த்து, நீரின் ஆட்சியாளனான நீயும் {வருணனும்}, யமனும், குபேரனும் இன்றே முடிசூட்டப்படுவீர்கள். தேவர்கள் அனைவரின் துணையுடன், பயங்கரப் பார்வை கொண்ட எதிரியான நகுஷனை நாம் வீழ்த்துவோமாக” என்றான். பிறகு அக்னி, இந்திரனிடம், “வேள்விக் காணிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கைத் தா. நான் எனது துணையை உனக்கு அளிப்பேன்” என்றான். அவனிடம் {அக்னியிடம்} இந்திரன், “ஓ அக்னி, பெரும் வேள்விகளில் நீயும் ஒரு பங்கைப் பெறுவாய். (அப்படிப்பட்ட நேரங்களில்), இந்திரன் அக்னி ஆகிய இருவருக்கும் ஒரே பங்கு கிடைக்கும்” என்றான்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகனைத் தண்டித்தவனும், வரங்களை அளிப்பவனுமான ஒப்பற்ற தலைவனான இந்திரன், இவ்விதம் ஆலோசித்து, யக்ஷர்கள் மீதான ஆட்சி மற்றும் உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கும்; பித்ருக்கள் மீதான ஆட்சியை யமனுக்கும், நீர்நிலைகள் மீதான ஆட்சியை வருணனுக்கும் அளித்தான்.
************************************
இந்திரன் – இந்திராணி - நகுஷன் – சம்பந்தப்பட்ட இந்தக் கதை இன்னும் விரிவாக தேவி பாகவதத்தில் உள்ளது. http://www.sacred-texts.com/hin/db/bk06ch07.htm
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.