Nahusha’s fall! | Udyoga Parva - Section 17 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 17)
பதிவின் சுருக்கம் : திக்பாலர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்த இந்திரனிடம் அகத்தியர் வந்தது; அகத்தியர் இந்திரனை வாழ்த்துவது; நகுஷன் சொர்க்கத்தில் இருந்து விழுந்ததை அகத்தியர் சொன்னது; இந்திரன் அக்கதையை விரிவாகக் கேட்டது; அகத்தியர் நடந்ததைச் சொன்னது; நகுஷன் வீழ்ந்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைவது ...
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “தேவர்கள் தலைவனான புத்திக்கூர்மையுள்ள பெரும் இந்திரன் லோகபாலர்களுடனும், பிற தேவர்களுடனும் நகுஷனைக் கொல்லும் வழிமுறைகளைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பெரிதும் மதிக்கப்படும் தவசியான அகத்தியர் {அகஸ்தியர்} அங்கே அவ்விடத்தில் தோன்றினார். தேவர்கள் தலைவனால் மதிக்கப்பட்ட அகத்தியர், “அண்ட வடிவம் கொண்டவன் {திரிசிரன்} மற்றும் விருத்திரன் ஆகியோரின் அழிவுக்குப் பின்னரும் மலர்ச்சியுடன் இருப்பதற்கு நீ எப்படிப்பட்ட நற்பேறைப் பெற்றிருக்க வேண்டும். ஓ! புரந்தரா {இந்திரா}, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நகுஷன் தூக்கியெறியப்பட்டது எவ்வளவு பெரிய நற்பேறு? ஓ! வலனைக் கொன்றவனே {இந்திரா}, உனது எதிரிகள் அனைவரையும் கொன்ற உன்னைக் காண நான் என்ன நற்பேறு செய்திருக்க வேண்டும்?” என்று கேட்டார் {அகத்தியர்}.
இந்திரன் {அகத்தியரிடம்}, “ஓ! பெருந்துறவியே, இங்கே வந்த உமது பயணம் இனிமையாக இருந்ததா? உம்மைக் காண்பதில் நான் மகிழ்கிறேன். பாதம் மற்றும் முகத்தைக் கழுவி கொள்ள நீரும், ஆர்க்கியாவும், பசுவையும் என்னிடம் இருந்து ஏற்றுக் கொள்ளும்” என்றான்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மிகவும் மகிழ்ந்த இந்திரன், உரிய மரியாதையைப் பெற்று, இருக்கையில் அமர்ந்திருந்த அந்தத் துறவியரில் சிறந்தவரும், அந்தணர்களில் பெரியவரிடம் {அகத்தியரிடம்}, “ஓ! மதிப்புமிக்கத் துறவியே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தீய ஆன்மா கொண்ட நகுஷன் சொர்க்கத்தில் இருந்து எப்படி வீசப்பட்டான், என்பது உம்மால் உரைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றான்.
அகஸ்தியர் {இந்திரனிடம்} சொன்னார், “ஓ! இந்திரா, பலத்தில் கர்வம் கொண்ட தீயவனான நகுஷன் சொர்க்கத்தில் இருந்து எப்படி வீசப்பட்டான் என்ற இனிய உரையைக் கேள். தூய எண்ணம் கொண்ட அந்தணர்களும், தெய்வீகத் துறவிகளும், அவனைச் சுமந்து சென்றதால் களைப்படைந்திருந்த போது, ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே {இந்திரா}, அவர்கள் அத்தீயவனிடம் {நகுஷனிடம்}, “ஓ! இந்திரா {நகுஷா}, மாடுகள் மீது தெளிக்கும்போது ஓத வேண்டிய வேதங்களின் குறிப்பிட்ட சில பாடல்கள் இருக்கின்றன. அவை நம்பத்தக்கவையா? இல்லையா?” என்று கேட்டனர். தமஸ் செயல்பாடுகளால் {தமோ குணத்தால்} உணர்வுகளை இழந்திருந்த {அறிவு மழுங்கிய} நகுஷன் அவர்களிடம் அவை நம்பத்தக்கவை அல்ல என்று சொன்னான். பிறகு அந்தத் துறவிகள் {நகுஷனிடம்}, “அநீதியே உனக்கு உகந்ததாய் இருக்கிறது; நீ நீதியின் வழியைப் பின்பற்றவில்லை. ஓ! இந்திரா {நகுஷா}, அவை நம்பத்தக்கவை என்று பெரும் முனிவர்கள் முன்பு சொல்லியிருக்கின்றனர்” என்றனர்.
பொய்மையால் உந்தப்பட்ட அவன் {நகுஷன்}, தனது காலால் எனது தலையைத் தொட்டான். ஓ! சச்சியின் தலைவா {இந்திரா}, இதனால் அவன் {நகுஷன்} பலத்தையும், நல்ல பார்வையையும் இழந்தான். பிறகு அச்சத்தால் பீடிக்கப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த அவனிடம் {நகுஷனிடம்} நான், “பிரம்ம முனிவர்களால் (அந்தணத் துறவிகளால்) உரைக்கப்பட்ட குற்றங்குறையற்ற வேதப் பாடல்கள் போலித்தனமானவை என்று நீ சொன்னதாலும், உனது காலால் எனது தலையைத் தொட்டதாலும், ஓ! இழிந்த மூடா {நகுஷா} பிரம்மனுக்கு நிகரான அணுக முடியாத இந்தத் துறவிகளை, உன்னைச் சுமப்பதற்காக விலங்குகளைப் போல மாற்றியதாலும், ஓ! இழிந்தவனே {நகுஷா}, நீ உனது காந்தியை இழந்து, உனது நற்செயல்கள் {நற்செயல்களின் பலன்கள்} அனைத்தும் தீர்ந்து போய்ச் சொர்க்கத்தில் இருந்து தலைகுப்புற விழுவாயாக. பெரும் பாம்பின் வடிவத்தில் நீ பத்தாயிரம் வருடங்கள் பூமியில் அலைவாயாக. அக்காலம் நிறைவடைந்ததும் நீ சொர்க்கத்திற்குத் திரும்பலாம்” என்று சொன்னேன். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {இந்திரா}, இப்படியே அந்த இழிந்தவன் {நகுஷன்} சொர்க்கத்தின் அரியணையில் இருந்து தூக்கி வீசப்பட்டான். ஓ! இந்திரா, இப்போது மலர்ச்சியுடன் இருக்கும் நாம் பேறு பெற்றவர்களே. அந்தணர்களுக்கு முள்ளாக இருந்தவனும் கொல்லப்பட்டான். ஓ! சச்சியின் தலைவா {இந்திரா}, சொர்க்கத்திற்குத் திரும்பி, உலகங்களைக் காத்து, புலன்களைக் கட்டுப்படுத்தி, உனது எதிரிகளை அடக்கி, பெரும் துறவிகளால் துதிக்கப்பட்டு இருப்பாயாக” என்றார் {அகத்தியர்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, தேவர்களும், பெரும் முனிவர்கள் கூட்டங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர். பித்ருக்களும், யக்ஷர்களும், பாம்புகளும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், தேவ கன்னியர் கூட்டங்களும் அப்படியே {மகிழ்ச்சியாக} இருந்தனர். குளங்களும், நதிகளும், மலைகளும், கடல்களும் கூட மகிழ்ந்தன. அவை அனைத்தும் {இந்திரனிடம்} வந்து, “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரா}, நீ மலர்ச்சியுடன் செழித்து இருப்பது பெரும்பேறேயாகும். புத்திக்கூர்மையுள்ள அகத்தியர் தீயவனான நகுஷனைக் கொன்றதும் பெரும்பேறேயாகும். அத்தீயவன் {நகுஷன்} பாம்பாக மாறி உலகத்தில் திரிய வைக்கப்பட்டதும் பெரும்பேறேயாகும்” என்றன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.