The victory of Indra! | Udyoga Parva - Section 18 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 18)
பதிவின் சுருக்கம் : இந்திரன் மீண்டும் மூவுலகுக்கும் தலைவன் ஆனது; இந்திரனைக் காண அங்கிரஸ் முனிவர் வந்தது; அதர்வ வேதத்தில் அங்கிரஸ் அதர்வாங்கிரஸ் என்ற பெயரில் அறியப்படுவார் என்று இந்திரன் சொன்னது; அங்கிரசுக்கு வேள்விகளில் ஒரு பங்கை இந்திரன் கொடுத்தது; இந்திர விஜயம் என்ற இந்தக் கதையைப் படிப்பதால் ஏற்படும் நன்மை; யுதிஷ்டிரன் வெற்றி பெறவே தான் இந்தக் கதையை அவனுக்குச் சொன்னதாகச் சல்லியன் சொன்னது; அர்ஜுனனைப் போற்றி, கர்ணனின் ஊக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று யுதிஷ்டிரன் மீண்டும் சல்லியனிடம் வேண்டுவது; சல்லியன் அதை ஏற்பது; சல்லியன் புறப்பாடு ...
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, கந்தர்வர்கள் மற்றும் தேவகன்னியர் கூட்டங்களால் துதிக்கப்பட்ட இந்திரன், மங்கலக்குறிகளைக் கொண்ட யானைகளின் மன்னனான ஐராவதத்தின் மீது ஏறினான். ஒப்பற்ற அக்னி, பெரும் துறவியான பிருஹஸ்பதி, யமன், வருணன், செல்வங்களின் தலைவன் குபேரன் ஆகியோர் அவனுக்கு {இந்திரனுக்குத்} துணையாக இருந்தனர். விருத்திரனைக் கொன்றவனான தலைவன் சக்ரன் {இந்திரன்}, கந்தர்வர்கள் மற்றும் தேவகன்னியர்களுடன் கூடிய தேவர்கள் சூழ மூன்று உலகங்களுக்கும் சென்றான். நூறு வேள்விகளைச் செய்த அந்தத் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தனது மனைவியுடன் {சச்சியுடன்} இப்படியே சேர்ந்தான். அதன்பிறகு, பெரும் மகிழ்ச்சியுடன் அவன் உலகங்களைப் பாதுகாக்க ஆரம்பித்தான்.
தெய்வீகத் துறவியான ஒப்பற்ற அங்கிரஸ் இந்திரனின் சபைக்கு வந்து, அதர்வப் பாடல்களை உரைத்து அவனைப் {இந்திரனைப்} போற்றினார். அந்தப் பெரும் இந்திரன் மனநிறைவு கொண்டு, அந்த அதர்வாங்கிரசுக்கு வரம் அளித்தான். இந்திரன் {துறவி அங்கிரஸிடம்}, “அதர்வ வேதத்தில் நீர் அதர்வாங்கிரஸ் என்ற பெயரால் அறியப்படுவீர். மேலும் வேள்விகளில் நீரும் ஒரு பங்கைப் பெறுவீர்” என்றான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி அதர்வாங்கிரசை மதித்த அந்த நூறு வேள்விகளைச் செய்த பெரும் தலைவனான இந்திரன், அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான். பிறகு அவன் {இந்திரன்} தேவர்கள் அனைவருக்கும் மற்றும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட துறவிகள் அனைவருக்கும் மரியாதை செலுத்தினான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மிகவும் மகிழ்ந்த இந்திரன் மக்களை அறத்துடன் ஆண்டான். இவ்வாறே, தன் மனைவியுடன் {சச்சியுடன்} கூடியவனான இந்திரனின் துன்பம் இருந்தது. தனது எதிரிகளைக் கொல்லும் நோக்கத்தில் அவன் {இந்திரன்} கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறைந்து வாழ வேண்டி இருந்தது {அஜ்ஞாதவாசம் செய்ய வேண்டி இருந்தது}. ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, திரௌபதியுடனும், உயர்ந்த மனம் கொண்ட உனது தம்பிகளுடனும் பெருங்காட்டில் துன்பப்பட வேண்டியிருந்ததை மனதில் நினைக்காதே {வருந்தாதே}. ஓ! மன்னர்களுக்கு மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, ஓ! குருகுலத்தை மகிழ்விப்பவனே {யுதிஷ்டிரா}, விருத்திரனைக் கொன்ற பிறகு இந்திரன் அடைந்தது போலவே, நீயும் உனது அரசை மீண்டும் பெறுவாய். தீய மனம் கொண்டவனும், அந்தணர்களுக்கு எதிரியுமான தீய நகுஷன், அகத்தியரின் சாபத்தால், எல்லையற்ற வருடங்களுக்கு ஒன்றுமில்லாமல் போகுமாறு தூக்கிவீசப்பட்டான். அது போலவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, கர்ணன், துரியோதனன் மற்றும் பிற தீய ஆன்மாக்கள் விரைவில் அழிவார்கள். பிறகு, ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உனது தம்பிகள் மற்றும் இந்தத் திரௌபதியுடன், கடல் வரையுள்ள இந்த மொத்த உலகத்தையும் நீ அனுபவிப்பாய்.
இந்திரனின் இந்த வெற்றிக்கதை {இந்திர விஜயம்}, அதன் புனிதத்தன்மையில் வேதத்திற்கு நிகரானதாகும். போர்க்களத்தில் தனது படைகள் அணிவகுக்கப்பட்டிருக்கும் வேளையில், வெற்றியை விரும்பும் ஒரு மன்னன் இதைக் {இந்தக் கதையைக்} கேட்க வேண்டும். எனவேதான், ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, இந்தக் கதையை நான் உனக்கு உரைத்தேன். உயர்ந்த ஆன்மா கொண்டவர்கள் போற்றப்படும்போது செழிப்பை அடைகிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, துரியோதனனின் குற்றங்களின் காரணமாகவும், பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தின் மூலமாகவும், உயர்ந்த ஆன்மா கொண்ட க்ஷத்திரியர்களின் அழிவு கையருகிலேயே இருக்கிறது.
இதயம் நிறைந்த சமய நம்பிக்கையுடன் {தர்மத்தில் கொண்ட நம்பிக்கையுடன்} எவன் இந்திரனின் வெற்றி {இந்திர விஜயம்} என்ற இந்தக் கதையைப் படிக்கிறானோ, அவன் தனது பாவங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, அருளுலகை அடைந்து, இவ்வுலகத்திலும், அடுத்த உலகத்திலும் மகிழ்ச்சியை அடைகிறான். அவனுக்கு {இந்திர விஜயத்தைப் படிப்பவனுக்கு} எதிரிகளிடம் அச்சமில்லை. அவன் மகனற்ற மனிதனாவதில்லை. எத்தகு துன்பத்தையும் சந்திக்காமல், அவன் நீண்ட வாழ்வை மகிழ்வான். எங்கும் அவனுக்கு வெற்றியே கிடைக்கும். தோல்வி என்பதை அவன் அறிவதில்லை” என்றான் {சல்லியன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, நேர்மையான மனிதர்களில் சிறந்தவனான அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, சல்லியனால் இப்படி ஊக்குவிக்கப்பட்டதும், அவனுக்கு {சல்லியனுக்கு} முறையான வடிவத்தில் மரியாதை செலுத்தினான். வலிய கரங்கள் கொண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், சல்லியனின் சொற்களை ஏற்றுக் கொண்டு, மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான். யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “நீர் கர்ணனின் தேரோட்டியாகச் செயல்பட வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. {அப்போது} அர்ஜுனனின் பெருமைகளைப் போற்றி விவரித்து, கர்ணனின் நம்பிக்கையை ஒடுக்க வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்குச் சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “அப்படியே ஆகட்டும். நீ சொல்வது போலவே நான் செயல்படுவேன். என்னால் செய்ய முடிந்த வேறு எதுவாக இருந்தாலும், நான் அவற்றை உனக்காகச் செய்வேன்” என்றான் {சல்லியன்}.
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, மத்ர மன்னனான சல்லியன் குந்தியின் மகன்களிடம் பிரியா விடைபெற்றுக் கொண்டான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, பிறகு அந்த அழகிய மனிதன் {சல்லியன்} தனது படையுடன் துரியோதனனிடம் சென்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.