Krishna is the great judge! | Udyoga Parva - Section 28 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 28)
பதிவின் சுருக்கம் : தன்னை சஞ்சயன் எப்படி நினைக்கிறான், நல்லவனாகவா? தீயவனாகவா என்று யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் வினவுவது; அறமும் மறமும் வழக்கமான காலங்களிலும் ஆபத்து காலங்களிலும் தங்கள் தன்மைகளை எப்படி மாற்றிக் கொள்கின்றன என்று சொல்வது; ஆபத்து காலத்திலும் விடாமல் தான் நினைப்பதே அறம் என்று இருப்பவன் மெச்சத்தகுந்தவன் அல்ல என்று சொல்வது; முன்னோர் சென்ற வழியையே தான் பின்பற்றுவதாக யுதிஷ்டிரன் உரைப்பது; கிருஷ்ணன் சொல்லும் எந்தக் கருத்தையும் தான் ஏற்பதாக சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது…
யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீர் சொல்வது போல, நமது செயல்கள் அனைத்திலும் நீதிமிக்க {நேர்மையான} செயல்களே முதன்மையானவை என்பதில் ஐயமில்லை. எனினும், நான் பயில்வது அறமா {தர்மமா?} அல்லது மறமா {அதர்மமா} என்பதில் நீர் முதலில் உறுதியடைய வேண்டும். மறம் {அதர்மம்}, அறத்தின் தன்மைகளை மேற்கொள்ளும்போது, அறமே மொத்தமாகத் தீமையாகப் பட்டுவிடும். {மறமாகத் தெரியும்} அறம் தன்னுடைய சுய உருவில் தோன்றும்போது, கற்றறிந்தவர்களே அதைத் தங்கள் புத்தியினால் கண்டறிவார்கள்.
நித்தியமானதும், முழுமையானதுமான அறம், மறம் ஆகிய இரண்டும், துன்ப {ஆபத்து} காலங்களில் தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் எந்த வகையைச் சார்ந்தவனோ, அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளையே அவன் வழுவாமல் பின்பற்ற வேண்டும். ஆனால், ஓ! சஞ்சயரே, துன்ப {ஆபத்து} காலங்களில் கடமைகள் வேறு வகைப்பட்டன என்பதை அறிந்து கொள்ளும். தனது வாழ்வாதாரங்கள் மொத்தமாகப் போன பிறகு, அனைத்தையும் இழந்த ஒரு மனிதன், தன் வகைக்குண்டான அங்கீகரிக்கப்பட்ட கடைமைகளை நிறைவேற்றுவதற்காக, வேறு வழிகளையே நிச்சயம் விரும்ப வேண்டும். தனது வாழ்வாதாரங்களை இழக்காத மனிதன், துயரத்தில் இருக்கும் மனிதன் ஆகிய இருவரும், ஓ! சஞ்சயா, தங்கள் நிலைகளை மாற்றிச் செயல்பட்டால், அவர்கள் நிச்சயம் பழிக்கப்படுவார்கள். {போதுமான செல்வத்தை வைத்துக் கொண்டு ஆபத்து கால அறத்தைப் பயில்வதும், ஆபத்தில் இருந்து கொண்டு செல்வநிலைக்கு ஏற்பட்ட அறத்தைக் கடைப்பிடிக்காதவனும், என இந்த இருவருமே நிந்திக்கத்தக்கவர்கள்}.
தங்களுக்கு அங்கீகரிக்கப்படாத செயல்களைக் கூட, தற்கொலையை {self-destruction = [சுய அழிப்பு]} விரும்பாத அந்தணர்களுக்குப் பரிகாரமாக படைப்பாளனே {பிரம்மனே} விதித்திருக்கிறான். தங்கள் வகைக்கு விதிக்கப்படாத காரியங்களையும், ஆபத்து காலங்களில், மக்கள் செய்யலாம் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. ஓ சஞ்சயரே, வழக்கமான காலங்களில் தங்கள் வகைக்குரிய செயல்களைச் செய்பவர்களைக் கருதுவது போலவே, ஆபத்து காலங்களில் தங்கள் வகைக்கு விதிக்கப்படாத செயல்களைச் செய்பவர்களையும் நீர் கருத வேண்டும். வழக்கமான காலங்களில்கூட மாறாக நடப்பவர்களையும், ஆபத்து காலங்களில் {தங்கள்} விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் {மட்டும்} பின்பற்றுபவர்களையும் நீர் நிந்திக்க வேண்டும்.
இதைப் போலவே, தங்கள் மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மனிதர்கள், தங்களை {சுயத்தைக்} குறித்த அறிவை {தன்னறிவை} அறிய முயலும் போது, சிறந்தவர்களுக்காக {அந்தணர்களுக்காக} விதிக்கப்பட்ட அப்பயிற்சிகள், அவர்களுக்கும் {அந்தணர்கள் அல்லாதோருக்கும்} சமமாகவே விதிக்கப்படுகிறது. எனினும், சுயத்தை அறியும் அறிவை அடைய {தன்னறிவைப் பெற – நான் யார் என்பதை அறிய} முயற்சிக்காத அந்தணரல்லாதோர், தங்கள் வகைக்கு விதிக்கப்பட்ட பயிற்சிகளையே ஆபத்து காலங்களிலும் மற்ற காலங்களிலும் செய்ய வேண்டும். இந்த வழியையே நமது தந்தைமாரும், பாட்டன்மாரும், அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களும் பின்தொடர்ந்தார்கள். இதே கருத்தின்படியே, ஞானமடைய விரும்புவோரும் மற்றும் செயல்களைத் தவிர்ப்போரும், இதே நோக்கத்தையே கொண்டு தங்களைப், புராதன நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களாகக் கருதிக் கொள்கின்றனர் {regard themselves as orthodox}.
எனவே, வேறு வழியேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓ! சஞ்சயரே, இந்தப் பூமியில் என்ன செல்வமெல்லாம் உள்ளதோ, தேவர்களிடம் என்னவெல்லாம் உள்ளதோ, அவற்றையோ, அல்லது அவர்களாலும் அடைய முடியாத பிரஜாபதியின் உலகத்தையோ, சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அநீதியான வழிகளில் அடைய நான் முயற்சிக்க மாட்டேன்.
அறத்தின் கனிகளைக் கொடுப்பவனும், புத்திசாலியும், மதிநுட்பமுடையவனும், அந்தணர்களுக்காகக் காத்திருந்தவனும், அனைத்தையும் அறிந்தவனும், பல்வேறு வலிமைமிக்க மன்னர்களுக்கு ஆலோசனைகள் வழங்குபவனுமான கிருஷ்ணன் இதோ இருக்கிறான். எனவே, அமைதிக்கான அனைத்து ஆலோசனைகளைத் தவிர்த்து, நான் போரிட நேர்ந்தால், நான் என் சாதிக்குரிய கடைமைகளைக் கைவிட்டவன் என்று நிந்திக்கப்படுவேனா என்பதை அந்தக் கொண்டாடப்படும் கிருஷ்ணனே சொல்லட்டும். கிருஷ்ணனே இருதரப்பு நன்மையையும் நாடுபவனாக இருக்கிறான்.
இந்தச் சாத்யகி, சேதிகள், அந்தகர்கள், விருஷ்ணிகள், போஜர்கள், குகுரர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் கிருஷ்ணனின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் எதிரிகளைக் கொன்று, நண்பர்களை மகிழ்விக்கின்றனர். உக்கிரசேனர் தலைமையைக் கொண்ட விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள், கிருஷ்ணனால் வழிநடத்தப்பட்டு, இந்திரனைப் போன்றோராகி, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, பெரும் பலசாலிகளாக, மகிழ்ச்சிமிக்கவர்களாக இருக்கிறார்கள். வெப்ப காலம் முடிந்ததும், பூமியின் உயிரினங்கள் மேல் எப்படி மேகங்கள் {மழையைப்} பொழியுமோ, அப்படி, காசியின் மன்னனான அந்தப் பப்ரு மேல் கிருஷ்ணன் அருள்மாரி பொழிந்தான். அவன் {பப்ரு}, தனது அண்ணனாக விருப்பங்களுக்கு பலனளிக்கும் கிருஷ்ணனை அடைந்து, உயர்ந்த வளத்தை அடைந்துவிட்டான். ஓ! அய்யா? அவ்வளவு பெரியவனாவான் கிருஷ்ணன். அனைத்து செயல்களின் நன்மை தீமையைத் தீர்மானிக்கும் பெரும் நீதிமானாக அவனை நீர் அறிய வேண்டும். கிருஷ்ணன் எங்களுக்கு அன்பானவனும், மனிதர்களில் மிகவும் ஒப்பற்றவனுமாவான். கிருஷ்ணன் சொல்வதை நான் எப்போதும் அலட்சியப்படுத்துவதில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.