Sanjaya warned Yudhishthira! | Udyoga Parva - Section 27 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 27)
பதிவின் சுருக்கம் : நற்குணம் மிக்க யுதிஷ்டிரன் போரைக் குறித்துச் சிந்திக்கக் கூடாது என்றும், சொத்துக்காகப் போர் செய்வதைவிட பிச்சையெடுத்து வாழலாம் என்றும் சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று விட்டு அதன் மூலம் கிட்டும் இன்பத்தால் மறுமைக்கு ஆகக்கூடியது என்ன என்று கேட்பது; போரிடுவதென்றால், காட்டுக்கு அனுப்பிய போதே போரிட்டிருக்க வேண்டும் என்றும், காலந்தாழ்ந்து இப்போது போரிடுவது முறையானது அல்ல என்றும் சொல்வது; நல்வினையும் தீவினையும் இவ்வாழ்வுக்குப் பிறகும் நம்மைத் தொடர்ந்து வருவதால் அறச்சார்புடன் நடந்து கொண்டு போரைத் தவிர்ப்பதே நல்லது என்றும் சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, உனது நீதிமிக்க நடத்தையை இவ்வுலகம் கேள்விப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, நானும் அப்படியே காண்கிறேன். பெரும் கெடுபேறில் முடிவடையக்கூடிய இந்த வாழ்வு நிலையற்றதாகும்; இதைக் கருதி நீ அழிந்து போகலாகாது. போரில்லாமல் உனது பங்கைக் குருக்கள் கொடுக்கவில்லையெனினும், ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, அரசாட்சியை போரின் மூலம் அடைவதைவிட, அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளின் நாட்டில் நீ பிச்சை எடுத்து வாழ்வதே மிகவும் சிறந்தது என நான் நினைக்கிறேன். குறுகிய காலமே உள்ள இந்த மனித வாழ்வு, நிலையான துன்பத்திற்கும், நிலையற்ற தன்மைக்கும், பெரும் பழிக்கும் வழிவகுப்பதென்பதாலும், நல்ல பெயருக்கு {இணையாக} ஒருபோதும் ஒப்பிடப்படாதது என்பதாலும், ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பாவத்தை நீ ஒருபோதும் புரிந்திடாதே.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, மரணத்துக்குட்பட்ட மனிதர்கள் கடைப்பிடிக்கும் ஆசைகள், அறம்சார்ந்த வாழ்வுக்கு தடைகளாகும். எனவே, புத்தியுள்ள ஒரு மனிதன், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, இவையனைத்தையும் {ஆசைகளை} முன்பே கொன்று, அதன் மூலம் இவ்வுலகில் கறைபடியாப் புகழைப் பெற வேண்டும். செல்வத்தின் மீது கொண்ட தாகம், இந்த உலகில் விலங்கைப் {கட்டுகளைப்} போன்றதே ஆகும். அதை {செல்வத்தை} நாடுவோரின் அறம் அதனால் பாதிக்கப்படுகிறது. அறத்தை மட்டுமே நாடுபவன் புத்திமானாவான்; ஓ! அய்யா {யுதிஷ்டிரா}, ஆசைகள் அதிகரித்தால், ஒரு மனிதன் உலகியல் சார்ந்த தன் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வாழ்வின் அனைத்து கவலைகளுக்கும் மேலாக அறத்தை ஏற்கும் ஒரு மனிதன், சூரியனைப் போல பெரும் பிரகாசத்துடன் ஒளிர்கிறான்.
அறமற்ற தீய ஆன்மாக் கொண்ட மனிதன், இந்த முழு உலகத்தையே அடைந்தாலும், அவன் அழிவை அடைகிறான். நீ வேதங்களைக் கற்று, அந்தணத் துறவியின் வாழ்வை வாழ்ந்து, வேள்விச் சடங்குகளைச் செய்து, அந்தணர்களுக்கு தானங்களை அளித்திருக்கிறாய். (உயிரினங்களால் அடையத்தக்க) உயர்ந்த நிலையை நினைவு கூர்ந்து, இன்பத்தை அடையும் நோக்கில், பல ஆண்டுகளாக உன் ஆத்மாவை அதற்காக அர்ப்பணித்திருக்கிறாய்.
அபரிமிதமான மகிழ்ச்சிக்கும், வாழ்வின் இன்பங்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தவப்பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தாமல் இருக்கும் ஒருவன், மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இருக்க வேண்டும். அவனது பலமான உள்ளுணர்வு, இன்பம் பெறுவதை நோக்கியே அவனைத் தூண்டிவிடும். அவனது செல்வம் அவனைவிட்டுப் போன பிறகு, அவனது இன்பங்கள் அவனைக் கைவிட்டுவிடும். அதே போல, அடக்கமான வாழ்வு வாழாது, அறத்தின் பாதையைக் கைவிட்டு, பாவமிழைக்கும் ஒருவன், வரப்போகும் உலகத்தின் இருப்பில் {மறுமை உள்ளது என்ற} நம்பிக்கைக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட அந்த மனிதன், தான் இறந்த பிறகு, (நிறைய) வேதனைகளையே பெறுவான்.
நன்மையோ, தீமையோ, எதுவாக இருந்தாலும், எக்காரியத்தாலும் ஒருவனது செயல்கள் வரப்போகும் உலகத்தில் {மறுமையில்} அழிவடைவதில்லை. நல்லதும், தீயதுமான செயல்கள், அதைச் செய்பவனைத் (அடுத்த உலகத்திற்கான அவனது பயணத்தில்) தொடர்ந்தே செல்கின்றன; அது அவர்களது பாதையில் தொடர்ந்து செல்லும் என்பது நிச்சயம். அறச் சடங்குகளில், (அவற்றை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு) அந்தணர்களுக்கு மரியாதையுடனும் பெருங்கொடையுடனும் அளிக்கப்படும் சுவை மிக்க உணவுக்கு ஒப்பாக, (இவ்வாழ்வில்) உனது வேலை அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த உடல் நிலைத்திருக்கும் வரையே அனைத்து செயல்களும் செய்யப்படுகின்றன. இறப்புக்குப் பின் செய்ய வேண்டியது எதுவுமில்லை. நீதிமான்களால் போற்றப்படும் பலமிக்க {உயர்ந்த} செயல்களையே நீ செய்திருக்கிறாய். அது வரப்போகும் உலகில் {மறுமையில்} உனக்கு நன்மையைச் செய்யும். அங்கே (அடுத்த உலகில்) மரணம், முதுமை, அச்சம், பசி, தாகம், மனதிற்கு ஏற்பில்லாதவை ஆகியவற்றில் இருந்து ஒருவன் விடுபடுகிறான்; ஒருவனது புலன்களுக்கு இன்பத்தை அளிக்கவேண்டியன்றி, அவ்விடத்தில் செய்யத்தக்கது எதுவுமில்லை. ஓ! மனிதரின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, நமது செயல்களின் விளைவு இவ்வகையிலேயே இருக்க வேண்டும். எனவே, ஆசையின்பாற்பட்ட இனியும் இவ்வுலகில் எதையும் செய்யாதே.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டு, அதன் மூலம் உண்மையையும் {சத்தியத்தையும்}, புகழையும், கபடற்றத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் விட்டுவிடாதே. ராஜசூய, அஸ்வமேத வேள்விகளைச் செய்த நீ, பாவத்தைத் தன்னகத்தே கொண்ட எந்தச் செயலின் அருகிலும் நெருங்கிவிடாதே. பிருதையின் மகன்களே, அறத்தின் நிமித்தமாக ஆண்டாண்டுகளாக இத்தகு துன்பத்துடன் நீங்கள் காடுகளில் வசித்ததெல்லாம் {வசித்ததற்கான பயனெல்லாம்}, இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு, இப்போது வெறுப்புக்கு வழிகொடுத்து, இந்தப் பாவகரச் செயலைச் செய்தால், வீணாகப் போகும். இந்தப் படைகளெல்லாம் அப்போதும் உங்கள் முழு கட்டுப்பாட்டிலேயே இருந்தன; இந்தப் படைகள் அனைத்தையும் பிரிந்து நீங்கள் வன வாசம் சென்றது எல்லாம் வீணாகப் போகும். {இப்படிச் செய்வதாயிருந்தால் நீ வனம் சென்றிருக்க வேண்டாமே}.
போர் வீரர்களின் தலைமையில் தன் மகனுடன் இருக்கும் தங்கத் தேர் கொண்ட மத்ஸ்ய நிலத்தின் விராடன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோர் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிபவர்களாவர்; அவர்களே இப்போது உனக்குத் துணையாக இருக்கின்றனர். உன்னால் முன்பு வீழ்த்தப்பட்ட மன்னர்கள் அனைவரும், உங்கள் காரியத்தை முதலிலேயே ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். அனைவரும் அஞ்சக்கூடிய வலிமைமிக்க வளங்களுடனும், படையுடனும், அவர்களைத் தொடர்ந்து கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கொண்டுள்ள நீ, போர்க்களத்தில் உனது எதிரிகளில் முதன்மையானவர்களைக் {சகுனி முதலானோரைக்} கொன்றிருக்கலாமே. (அப்படிச் செய்திருந்தால்) நீ துரியோதனனின் கர்வத்தை அடக்கியிருக்கலாமே.
ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, உனது எதிரிகள் இவ்வளவு பலமாக வளர ஏன் அனுமதித்தாய்? உனது நண்பர்கள் பலவீனமடையவும் ஏன் செய்தாய்? ஆண்டாண்டு காலமாக வனத்தில் எதற்காக வசித்தாய்? சரியான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டு இப்போது ஏன் போரிட விரும்புகிறாய்? அறிவில்லாத, அநீதியான மனிதன் போரின் மூலம் செழிப்பை வெல்லலாம்; ஆனால் நீதிமானான அறிவுள்ள மனிதன், (நல்ல உள்ளுணர்வுக்கு எதிராகப்) போராடும் கர்வத்தைத் தவிர்த்து, வளமான பாதையில் இருந்து விழ மாட்டான்.
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது புத்தி அநீதியான பாதையை விரும்பாது. கோபத்தால், நீ ஒருபோதும் பாவச்செயலைச் செய்ததில்லை. நல்ல ஞானத்திற்கு எதிரான இந்தக் காரியத்தைச் செய்வதற்கான நோக்கமும் காரணமும் தான் என்ன? ஓ! வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, நோய்க்கு {பிரச்சனைக்கு} சம்பந்தமே இல்லையெனினும், கோபம் கசப்பான மருந்தேயாகும்; அது {கோபம்} தலைவலியை உண்டாக்குகிறது, நல்ல புகழைக் கெடுக்கிறது, ஒருவனை பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. அது நீதிமான்களாலேயே (கட்டுப்படுத்தப்படுகிறது) குடிக்கப்படுகிறது, நேர்மையற்றவர்களால் {அநீதியானவர்களால்} அல்ல. அதை {கோபத்தை} விழுங்கி {கட்டுப்படுத்தி} போரில் இருந்து விலகுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். பாவத்திற்கு வழிவகுக்கும் கோபத்தை எவன்தான் விரும்புவான்?
பீஷ்மர், தனது மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} கூடிய துரோணர், கிருபர், சோமதத்தனின் மகன், விகர்ணன், விவிம்சதி, கர்ணன், துரியோதனன் ஆகிய அனைவரையும் கொன்று விட்டு கிடைக்கும் இன்பங்களை விட, பொறுமையே உனக்கு மிகுந்த நன்மையைத் தரும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நீ பெறும் அருள் எத்தன்மை உடையதாக இருக்கும்? அதை எனக்குச் சொல்! கடலை எல்லையாகக் கொண்ட இந்த முழு உலகையும் வென்றாலும், முதுமை, மரணம், இன்பம், வலி, அருள், துன்பம் ஆகியவற்றில் இருந்து நீ விடுபட முடியாது.
இவையனைத்தையும் அறிந்தவனானதால், நீ {யுதிஷ்டிரா} போரில் ஈடுபடாதே. உன் ஆலோசகர்கள் விரும்புவதால், இந்த வழியை மேற்கொள்ள நீயும் விரும்புகிறாய் என்றால், (அனைத்தையும் {செல்வமனைத்தையும்}) அவர்களிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு. தேவர்களின் உலகத்திற்குச் செல்லும் இந்தப் பாதையில் இருந்து நீ விழுந்துவிடாதே!” என்றான் {சஞ்சயன்}.