Sanjaya, rebuked by Krishna! | Udyoga Parva - Section 29 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 29)
பதிவின் சுருக்கம் : இருதரப்பும் வளம்பெறவே தான் விரும்புவதாகக் கிருஷ்ணன் சொல்வது; பாண்டவர்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள் என்றும், கௌரவர்கள் எவ்வளவு பேராசையுடன் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக் காட்டியது; இப்படியெல்லாம் இருந்தும் யுதிஷ்டிரனை எப்படி நிந்திப்பீர் எனச் சஞ்சயனைக் கிருஷ்ணன் கண்டிப்பது; இந்திரன், பிருஹஸ்பதி ஆகியோர் எப்படிச் சிரமப்பட்டுத் தங்கள் நிலையை அடைந்தார்கள் என்பதைச் சொல்வது; தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் போரும் அறமே என நிறுவுவது; இந்தச் சச்சரவைத் தீர்த்து வைக்கத் தானே தனிப்பட்ட முறையில் கௌரவர்களைப் பார்க்கப்போவதாகச் சொல்வது; அமைதியேற்படவில்லையெனில் கௌரவர்களின் மரணம் நிச்சயம் என்று சொன்னது; இவை அத்தனையையும் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்குமாறு சஞ்சயனிடம் கிருஷ்ணன் சொன்னது...
கிருஷ்ணன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அழிந்து போகக் கூடாதெனவும், அவர்கள் வளம்பெற்று, தங்கள் விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். அதே போல, பல மகன்களையுடைய மன்னர் திருதராஷ்டிரரும் வளம்பெற வேண்டும் எனவே விரும்புகிறேன். அதைவிட அதிகமாக, ஓ! சஞ்சயரே, அமைதியைத் தவிர வேறு எதுவும் மன்னர் திருதராஷ்டிரருக்கு தகுந்ததில்லை என நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இதுவே பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} முறையானது எனவும் நான் கருதுகிறேன்.
மிக அரிய குணமாகிய அமைதியான மனநிலையையே இக்காரியத்தில் பாண்டவர்கள் {இதுவரை} வெளிக்காட்டியிருக்கிறார்கள். எனினும், திருதராஷ்டிரரும், அவரது மகன்களும் இவ்வளவு பேராசை கொண்டோராக இருக்கும்போது, ஏன் பகை மிக வேகமாக வளராது என்பதற்கான காரணம் ஒன்றையும் நான் காணவில்லை. ஓ! சஞ்சயரே, சரி, தவறுக்குள் இருக்கும் நுண்ணிய ஒழுகலாறுகளை {நுட்பமான ஏற்புகளை} என்னை விடவோ, யுதிஷ்டிரரைவிடவோ அறிவீர் என்பது போல நீர் பாசாங்கு செய்ய முடியாது. {என்னை விடவோ, யுதிஷ்டிரரை விடவோ நீர் அதிகம் அறிவீர் என்பதாக நடிக்காதீர்}. எனில் {நீர் ஞானம் கொண்டவராக இருப்பின்}, தன் கடமையில் கவனமாக, ஆரம்பத்திலிருந்தே தன் குடும்பத்துக்கான நன்மையை மிகச்சிந்தித்து, (அறநெறி ஆய்வுகள்} தடை செய்பவற்றை ஏற்று நடந்து வரும் யுதிஷ்டிரரின் நடத்தையைக் குறித்து, நீர் ஏன் நிந்திக்கிறீர்?
இக்காரியத்தைப் பொறுத்தவரை, அந்தணர்கள் பல்வேறு வகையான கருத்துகளோடு இருந்துள்ளனர். சிலர், இவ்வுலகத்தில் வெற்றி {முக்தி} என்பது செய்யும் வேலையைப் பொருத்தே அடையப்படுகிறது என்கிறனர். {கர்மமே முக்தியை அளிக்கும் என்று சிலர் சொல்கின்றனர்}. சிலர், செயல் தவிர்த்து ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஞானத்தால் முக்தி {வீடுபேறு} அடையப்படுகிறது என்றும் தீர்மானிக்கின்றனர். {கர்மத்தைத் தவிர்த்து, ஞானத்தால் முக்தியை அடைய வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர்}. உண்ணும் பொருட்களின் அறிவை ஒருவன் பெற்றிருந்தாலும் கூட, உண்ணாதவரை அவனுக்குப் பசி அடங்குவதில்லை என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். செயலின் கனியே {பலனே}, காணத்தக்க விளக்கத்தை {சாட்சியம்} அளிக்கின்றன. எனவே, செயலாற்றுவதற்கு உதவும் ஞானக்கிளைகளே {ஞான வகைகளே} பலனளிக்கின்றன! பிறவகை அல்ல {செயலற்று இருக்கச் சொல்லும் ஞானக்கிளைகள் அப்படிப் பலனளிப்பதில்லை}. தாகம் கொண்ட மனிதன் தண்ணீரைக் குடிக்கிறான், அச்செயலால் அவனது தாகம் தணிகிறது. செயலாலேயே விளைவு உண்டாகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. அதில்தான் செயலின் ஆற்றல் இருக்கிறது. செயலைவிட வேறு எதுவும் சிறந்தது என்று எவனாவது நினைத்தால், அவனது செயலும் சொற்களுமே பொருளற்றவை {அர்த்தமற்றவை} என்றே நான் கருதுவேன்.
மறு உலகத்தில், செயலின் அறத்தாலேயே {செயலின் ஒழுக்கத்தாலேயே} தேவர்கள் மலர்ச்சியுடன் இருக்கிறார்கள். செயலின் அறத்தாலேயே {தன்மையாலேயே} காற்று வீசுகிறது. செயலின் அறத்தாலேயே உறக்கமற்ற சூரியன், தினமும் எழுந்து, பகல் இரவுக்குக் காரணமாகிறான், சோமன் {சந்திரன்}, மாதங்களையும், அழுவங்களையும் {பக்ஷங்களையும் {Fortnights}}, விண்மீன் கூட்டங்களையும் கடக்கிறான். செயலின் அறத்தாலேயே, தன்னைத் தூண்டிக் கொள்ளும் நெருப்பு {அக்னி}, மனிதர்களுக்கு நன்மையைச் செய்கிறது. உறக்கமற்ற பூமாதேவி, இந்தப் பெரும் சுமையைத் தன் சக்தியால் தாங்கிக் கொள்கிறாள். உறக்கமற்ற ஆறுகள் {நதிகள்}, அனைத்து உயிர்களுக்கும் மனநிறைவை அளித்தபடி, நீரைச் சுமந்து வேகமாக ஓடுகின்றன.
{செயலின் அறத்தாலேயே} பெரும் சக்தி படைத்த உறக்கமற்ற இந்திரன், திசைப்புள்ளிகளும், சொர்க்கமும் ஒலிக்கும்படி மழையைப் பொழிகிறான். தேவர்களில் பெரியவனாக விரும்பிய அவன் {இந்திரன்}, புனிதமான அந்தணன் மேற்கொள்ளும் கடும் தவ வாழ்வை மேற்கொண்டான். இன்பத்தையும், இதயத்துக்கு ஏற்புடைய அனைத்தையும் இந்திரன் கைவிட்டான். கடுமையான உழைப்புடன் அறம், உண்மை, தற்கட்டுப்பாடு, பொறுமை, பாகுபாடின்மை, மனிதநேயம் ஆகியவற்றை அவன் கடைப்பிடித்தான். செயலின் காரணமாகவே, அவன் (அனைவரை விடவும்) உயர்ந்த நிலையை அடைந்தான். மேற்கண்ட வழியில் வாழ்வைத் தொடர்ந்த இந்திரன், தேவர்களின் உயர்ந்த ஆட்சியுரிமையையும் அடைந்தான்.
தற்கட்டுப்பாட்டுடன் கருத்தூன்றிய பிருஹஸ்பதி, ஓர் அந்தணர் வாழும் தவ வாழ்வைச் சரியான முறையில் வாழ்ந்தார். இன்பத்தைக் கைவிட்ட அவர், தனது புலன்களை அடக்கி, தேவர்களின் ஆசான் என்ற நிலையை அதன் காரணமாகவே அடைந்தார். அதே போலவே, ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், மன்னன் யமன், குபேரன், கந்தர்வர்கள், யக்ஷர்கள், தேவலோகக் கன்னியர், விண்மீன் கூட்டத்தினர் ஆகியோர் செயலின் அறத்தாலேயே தற்போதை நிலையை மறு உலகத்தில் அடைந்தனர்.
கல்வி, தவம், செயல் (ஆகியவை இணைந்த) வாழ்வை வாழும் தவசிகள் மறு உலகில் ஒளிர்கின்றனர். ஓ! சஞ்சயரே, அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரில் சிறந்தோர் பின்பற்றும் விதி இஃது என்பதை அறிந்தும், ஞானமுள்ளோரில் ஒருவராக இருக்கும் நீர், குருக்களின் மகன்கள் சார்பாக ஏன் {போரைத் தவிர்க்க யுதிஷ்டிரனை நிந்திக்கும்} இந்த முயற்சியை மேற்கொள்கிறீர்?
யுதிஷ்டிரர் நிலையானவராக வேத கல்வியில் ஈடுபடுகிறார் என்பதை நீர் அறிவீராக. குதிரை வேள்வியையும், ராஜசூயத்தையும் செய்ய அவர்கள் விரும்புகிறார். அனைத்து வகை ஆயுதங்களையும், வில்லையும் எடுத்துக் கொண்டு, தேரில் ஏறி, கவசம் பூண்டு, குதிரைகளையும் யானைகளையும் செலுத்துகிறார். குரு மகன்களின் படுகொலையில் ஈடுபட வேண்டாத ஒரு செயல்வழியை இந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} கண்டால், அவர்கள் நிச்சயம் அதையே இப்போது கடைப்பிடிப்பார்கள். அப்போதுதான் அவர்களது அறம் காக்கப்படும், ஓர் அறத்தகுதிக்கான செயலும் அவர்களால் அடையப்படும். மனிதத்தன்மைகளால் குறிக்கப்படும் நடத்தையைப் பின்பற்றச் சொல்லி அவர்கள் பீமனை நிர்பந்திக்கவும் வேண்டிவரும்.
மறுபுறம், தங்கள் மூதாதையர் செய்ததையே செய்தால் {பாண்டவர்கள் போரிட்டால்}, தங்கள் கடமையைப் பெருமுயற்சியுடன் செய்து கொண்டிருக்கும்போது, தவிர்க்கமுடியாத விதியின் காரணமாக, மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும், அப்படிப்பட்ட மரணமும் அவர்களுக்குப் புகழையே கொடுக்கும். அமைதியை மட்டுமே அங்கீகரிப்பீர் என நீர் சொல்வீரானால், அறவிதிகளின் படி ஒரு மன்னன் போரிடுவது சரியானதா? போரிடாமல் இருப்பது சரியானதா? என்ற கேள்விக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர் என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயரே, நான்கு சாதிகளின் பிரிவுகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கடமைகளையும் நீர் கருத்தில் கொள்ள வேண்டும். பாண்டவர்கள் செயல்படப்போகும் வழிமுறையை நீர் கேட்க வேண்டும். பிறகு அவற்றை உம் விருப்பப்படி புகழவோ நிந்திக்கவோ செய்யலாம்.
ஓர் அந்தணன் கல்வி கற்க வேண்டும், தானங்கள் அளிக்க வேண்டும், பூமியில் உள்ள அனைத்துப் புனிதமான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும்; (பிறருக்கு) அவன் {அந்தணன்} கற்பிக்க வேண்டும், பிறரால் செய்யப்படும் வேள்விக்குப் புரோகிதராகச் செயல்படுதல் மற்றும் அதற்குத்தகுந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், அறிந்த மனிதர்களிடம் அவன் பரிசுகளை {தானம் [அ] பிச்சை]} ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போல, ஒரு க்ஷத்திரியன், மக்களை விதிகளின் படி பாதுகாக்க வேண்டும், தானமெனும் அறத்தைச் சுறுசுறுப்பாகப் பயில வேண்டும், வேதங்கள் முழுவதையும் கற்க வேண்டும், மனைவியைக் கொண்டு {மணந்து}, அறம்சார்ந்த இல்லற வாழ்வை வாழ வேண்டும். அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், புனிதமான அறங்களைப் பயில்பவனுமாக இருந்துவிட்டால், அவன் பரமாத்மாவை எளிதில் அடைகிறான்.
ஒரு வைசியன் கல்வி பயில வேண்டும், வணிகம், உழவு {விவசாயம், கிருஷி} மற்றும் கால்நடை வளர்த்தல் மூலமாகச் செல்வத்தைத் திரட்டி, சுறுசுறுப்பாகப் பொருளீட்ட {சம்பாதிக்க} வேண்டும். அந்தணர்களும் க்ஷத்திரியர்களும் மகிழும் வண்ணம் செயல்பட்டு, நல்ல பணிகள் செய்யும், அறம் சார்ந்த இல்லறத்தானாக இருக்க வேண்டும்.
பழங்காலத்தில் இருந்து சூத்திரர்களுக்காகத் தீர்மானிக்கப்பட்ட கடமைகள் பின்வருபவை ஆகும். அவன் {சூத்திரன்} {அத்தியயனம் = வேதமோதல்} கல்லாமல், அந்தணர்களுக்குச் சேவை செய்து, அவர்களிடம் தங்களை ஒப்படைக்க வேண்டும். வேள்விகள் செய்ய அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது; சுறுசுறுப்பாகவும், தனக்கு நன்மையைச் செய்யும் அனைத்து வகைச் செயல்களையும் அவன் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
{பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய} இவர்கள் அனைவரையும் மன்னன் (முறையாக) கவனித்து, தங்களுக்குரிய கடமைகளை, ஒவ்வொரு சாதியையும் சரியாகச் செய்ய வைக்க வேண்டும். அவன் புலனின்பங்களுக்கு அடிமையாகக் கூடாது. தனது குடிமக்களைச் சமமான அளவில் பாகுபாடின்றி நடத்த வேண்டும். நீதிக்கு எதிரான எந்த விருப்பங்களுக்கும், ஒரு மன்னன் கீழ்ப்படியக்கூடாது. நன்கு அறியப்பட்டவனாக, அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டவனாக, தன்னைவிடப் புகழத்தக்க வகையில் ஒருவன் இருந்தால், அவனைக் காணும்படி, ஒரு மன்னன், தனது குடிமக்களிடம் சொல்ல வேண்டும்.
எனினும், ஒரு தீயவன் {தீய மன்னன்}, இதைப் புரிந்து கொள்ள மாட்டான். பலத்தில் வளர்ந்து, மனிதத்தன்மையற்று, மனிதத்தன்மையற்று, விதியின் கோபத்துக்கு இலக்காகி, பிறரின் செல்வங்களின் மீது தனது பேராசை கொண்ட கண்களைச் செலுத்துவான். அப்போதே ஆயுதங்கள், கவசங்கள், விற்களுக்கான தேவை ஏற்பட்டு, போர் நிகழ்த்தப்படுகிறது. கொள்ளைக்காரர்களைக் கொல்வதற்காக, இந்திரனே, இந்தத் தந்திரத்தை புதிதாகக் கண்டுபிடித்தான். கவசங்கள், ஆயுதங்கள், விற்கள் போன்ற தந்திரங்களையும் அவனே {இந்திரனே} கண்டுபிடித்தான். கொள்ளையர்களைக் கொல்வதால், அறத்தகுதியே அடையப்படுகிறது. விதியையும் அறத்தையும் மனதிற்கொள்ளாத நீதியற்ற குருக்களாலேயே {கௌரவர்களாலேயே}, துன்பம் தரும் பல தீங்குகளை இவர்கள் {பாண்டவர்கள்} அனுபவிக்க நேர்ந்தது. ஓ! சஞ்சயரே, இது சரியல்ல {நல்லதல்ல}.
இப்போது, தனது மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், பாண்டு மகனுக்குச் சொந்தமானவற்றைக் காரணமே இல்லாமல் அபகரித்துள்ளார். மன்னர்களால் நோற்கப்பட்ட மிகப்பழமையான விதியை {அனாதியான ராஜதர்மத்தை} அவர் எண்ணிப் பார்க்கவில்லை. குருக்கள் அனைவரும் கூட அதையே செய்கிறார்கள். ஓ! சஞ்சயரே, பிறர் காணாத வகையில் செல்வத்தைத் திருடும் திருடன் மற்றும் திறந்த பகல்வெளிச்சத்தில் வலுக்கட்டாயமாக அதையே {செல்வத்தை} அபகரிப்பவன் ஆகிய இருவரும் கண்டிக்கத்தக்கவர்களே! திருதராஷ்டிரர் மகன்களுக்கும், அவர்களுக்கும் {திருடனுக்கும், வலுக்கட்டாயமாக அபகரிப்பவனுக்கும்} இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கோபத்தினால் தூண்டப்பட்டு, தான் செய்ய நினைப்பதே நீதி எனப் பேராசையில் இருக்கும் அவன் கருதிக் கொள்கிறான்.
பாண்டவர்களின் பங்கு நிர்ணயிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. அவர்களது பங்கை அந்த மூடன் ஏன் அபகரிக்க வேண்டும்? பொருட்களின் நிலை இவ்வாறிருக்கையில், போரிட்டு மடிவது கூட எங்களுக்குப் புகழையே தரும். அந்நியனிடம் பெறும் அரசாட்சியை விட, தந்தை வழியில் கிடைக்கும் நாடே சிறந்தது. ஓ! சஞ்சயரே, காலத்தால் மதிக்கப்படும் இவ்விதிகளை, மன்னர்களின் சபைக்கு மத்தியில் நீர் குருக்களிடம் {கௌரவர்களிடம்} எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} கூட்டப்படும் மந்த புத்தி கொண்டவர்களும், ஏற்கனவே மரணத்தில் பிடியில் அகப்பட்டிருப்பவர்களுமான அந்த மூடர்களின் கூட்டத்தையே அப்படிச் {மன்னர்களின் சபை} சொன்னேன்.
சபா மண்டபத்தில் குருக்கள் நடந்து கொண்ட நடத்தையே, அவர்கள் செயல்கள் அனைத்திலும் மிகத் தீமையானதாகும். அதை மீண்டும் ஒரு முறை எண்ணிப்பாரும். புகழத்தக்க நடத்தை கொண்டவளும், புனித வாழ்வு வாழ்பவளும், துருபதன் மகளுமான பாண்டு மகன்களின் அன்பிற்கினிய மனைவி {திரௌபதி}, அழுது கொண்டிருந்த நிலையில்}, {கௌரவர்கள்} காமத்திற்கு அடிமையாகி, அவளைப் பிடித்தபோது, குருக்களின் தலைமையில் நின்ற பீஷ்மர் அதில் தலையிடவில்லையே. குருக்களில் கிழவர்களும் இளைஞர்களுமான அனைவரும் அங்கே இருந்தனர். அவளை {திரௌபதியைக்} கண்ணியக்குறைவாக நடத்தியதை அவர்கள் தடுத்திருந்தால், நான் திருதராஷ்டிரரின் நடத்தையில் மகிழ்ந்திருப்பேன். அவரது மகன்களின் இறுதி நன்மைக்காகவே அப்படி நடக்கவில்லை போலும்.
அவளது {திரௌபதியின்} மாமனார் {திருதராஷ்டிரன்} அமர்ந்திருந்த பொதுச்சபையின் மத்தியில் *கிருஷ்ணையை {திரௌபதியை} வன்முறையுடன் பற்றினான் துச்சாசனன். அங்கே {சபைக்கு} தூக்கிச் செல்லப்பட்டதும், இரக்கத்தை எதிர்பார்த்த அவள், விதுரரைத் தவிர வேறு யாரும் தன் பக்கத்தில் இல்லாததைக் கண்டாள். அறிவிலிக் கூட்டமாதலால், அங்கிருந்த மன்னர்கள் யாரும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. கடமை உணர்வு கொண்ட விதுரர் மட்டுமே எதிர்த்துப் பேசினார். நீதி நிறைந்த சொற்களைச் சிறு புத்தி படைத்த அந்த மனிதனுக்குச் (துரியோதனனுக்குச்} சொன்னார். ஓ! சஞ்சயரே, அப்போதெல்லாம் விதி எதுவென்றும், அறநெறி எதுவென்றும் நீர் சொல்லவில்லையே, இப்போது இங்கே வந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏன் பாடம் எடுக்கிறீர்?
*கிருஷ்ணை=கருப்பி / கருப்பானவள்
எனினும், அந்தச் சபைக்கு வந்த கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்கள் துன்பம் என்ற} பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, படகாக வந்து பாண்டவர்களையும் தன்னையும் காத்துக் கொண்டு அனைத்தையும் சரி செய்தாள். அந்தச் சபையில் கிருஷ்ணை நின்ற போது, அந்தத் தேரோட்டியின் மகன் {கர்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்} அவளது மாமனாருக்கு {திருதராஷ்டிரருக்கு} முன்னிலையிலேயே, “ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, உனக்கு வேறு புகலிடம் கிடையாது. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} வீட்டில் தாதியாக {பணிப்பெண்ணாக} இருப்பதே உனக்குச் சிறந்தது. உனது கணவர்கள் வெல்லப்பட்டார்கள். இனி அவர்கள் {உனக்குக் கணவர்கள்} இல்லை. இனிய ஆன்மா கொண்ட நீ, வேறு எவரையாவது கணவனாகத் தேர்ந்தெடுப்பாயாக” என்றான். நம்பிக்கை அத்தனையையும் அறுக்கும் வகையில், கர்ணனிடம் இருந்து வந்த இந்தக் கூரிய அம்பு போன்ற வார்த்தை, அந்தச் சபையின் மென்மையான பகுதிகளைத் தாக்கி, பயங்கரமாக்கியது. அது {கர்ணனின் அந்த வார்த்தைகள்} அர்ஜுனனுடைய இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.
பாண்டுவின் மகன்கள் கரிய மான்தோல்களை அணிய முற்பட்ட போது, துச்சாசனன், எரிச்சலூட்டும் இந்த வார்த்தைகளைப் பேசினான். “இவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் அலிகளைத் தவிர வேறில்லை; நெடுநாள் நரகத்தை அடைந்து, இவர்கள் அழிந்து போனார்கள்” என்றான். காந்தார நிலத்தின் மன்னன் சகுனி, பகடையாட்டத்தின்போது யுதிஷ்டிரனிடம் சூது நிறைந்த தந்திரமான வார்த்தைகளைச் சொன்னான், “உன்னிடம் இருக்கும் நகுலன் என்னால் வெல்லப்பட்டான். நீ வேறு என்ன வைத்திருக்கிறாய்? இப்போது நீ உனது மனைவியான திரௌபதியைப் பந்தயமாக வைப்பதே சிறந்தது” என்றான் அவன் {சகுனி}. ஓ! சஞ்சயரே, பகடையாட்டத்தின்போது சொல்லப்பட்ட இழிந்த வகையைச் சார்ந்த இந்தச் சொற்கள் அனைத்தையும் நீர் அறிவீர்.
நான் தனிப்பட்ட முறையில் குருக்களிடம் சென்று இந்தக் கடினமான காரியத்தை நேர் செய்ய விரும்புகிறேன். பெரும் அருள்களை விளைவாகத் தருவதும், அறத்தகுதியை வளர்ப்பதுமான இந்தச் செயல், பாண்டவ காரியத்திற்குத் தீங்கில்லாமல், குருக்களுடன் அமைதியைக் கொண்டு வந்ததாக ஆகட்டும். குருக்களும் மரண வலையில் இருந்து மீட்கப்பட்டதாக ஆகட்டும். மனிதாபிமானமற்ற அனைத்துப் போக்குகளில் இருந்தும் விடுபட்டு, அறிவு நிரம்பிய வார்த்தைகளையும், நீதியின் விதிகளுக்கடங்கிய ஞானத்தின் வார்த்தைகளையும் குருக்களிடம் நான் பேசும்போது, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, என் முன்னிலையில் அவற்றுக்குச் செவிசாய்ப்பான் என்று நான் நம்புகிறேன்.
நான் வரும்போது, குருக்கள் எனக்கு உரிய மரியாதையை அளிப்பார்கள் என நான் நம்புகிறேன். இல்லையெனில், ஏற்கனவே தங்கள் தீயச் செயல்களின் மூலம் எரிக்கப்பட்டு வரும் திருதராஷ்டிரரின் தீய மகன்கள், போருக்குத் தயாராக இருக்கும் அர்ஜுனன் மற்றும் பீமரால் எரிக்கப்படுவார்கள் என்று நீர் நிம்மதியாக இருக்கலாம். பாண்டுவின் மகன்கள் ({பகடை} ஆட்டத்தில்) வீழ்த்தப்பட்ட போது, திருதராஷ்டிரரின் மகன்கள் அவர்களிடம் கடுமையான முரட்டு வார்த்தைகளைப் பேசினர். ஆனால், நேரம் வரும்போது, துரியோதனனின் அந்த வார்த்தைகளை அவனுக்கு நினைவு படுத்துவதில் பீமர் கவனம் கொள்வார் என்பதில் ஐயமில்லை.
துரியோதனன், தீய உணர்வுகளுள்ள ஒரு பெரிய மரமாவான்; கர்ணன் அதன் அடிமரமாக {மரத்தின் மையப்பெரும் பகுதியாக} இருக்கிறான்; சகுனி அதன் கிளைகளாக இருக்கிறான்; துச்சாசனன், ஏராளமான அதன் பூக்களாகவும், பழங்களாகவும் இருக்கிறான்; (அதே வேளையில்) ஞானமுள்ள மன்னரான திருதராஷ்டிரர் அதன் வேராக இருக்கிறார்.
யுதிஷ்டிரர் நீதி எனும் பெரிய மரமாக இருக்கிறார்; அர்ஜுனன் அதன் அடிமரமாக இருக்கிறான்; பீமர் அதன் கிளைகளாக இருக்கிறார்; மாத்ரியின் மகன்கள் ஏராளமான அதன் பூக்களாகவும், பழங்களாகவும் இருக்கின்றனர்; {கிருஷ்ணனாகிய} நானும், அறமும் {தர்மமும்}, அறம்சார்ந்த மனிதர்களும் அதன் வேர்களாக இருக்கிறோம்.
தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் ஒரு காடாக இருக்கிறார்; அதே வேளையில், ஓ! சஞ்சயரே, பாண்டுவின் மகன் புலிகளாக இருக்கின்றனர். ஓ!, புலிகளோடு கூடிய அந்தக் காட்டை வெட்டி விடாதீர்கள். அதே போல, காட்டில் இருந்து அந்தப் புலிகளும் விரட்டப்படாமல் இருக்கட்டும். காட்டை விட்டு வெளியிலிருக்கும் புலி எளிதாகக் கொல்லப்படும்; புலியில்லாத காடும், எளிதில் வெட்டப்பட்டுவிடும் {அழிக்கப்படும்}. எனவே, புலியே அந்தக் காட்டுக்குப் பாதுகாப்பு ஆகும். காடே புலியின் உறைவிடம் ஆகும். {புலி காட்டைப் பாதுகாக்க வேண்டும்; காடு புலியைப் பாதுகாக்க வேண்டும்}.
திருதராஷ்டிரர்கள் கொடிகளாக இருக்கின்றனர், அதே வேளையில், ஓ! சஞ்சயரே, பாண்டவர்களோ ஆச்சா {சால} மரங்களாக இருக்கின்றனர். ஒரு பெரிய மரத்தைச் சுற்றிப் படராமல் கொடியால் மலர்ச்சியடையவே {செழித்து வளரவே} முடியாது. எதிரிகளை அடக்குபவர்களான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போருக்குத் தயாராக இருப்பதைப் போலவே, உண்மையில், திருதராஷ்டிருக்காகக் காத்திருக்கவும் {அவருக்காகப் பணிவிடை செய்யவும்} தயாராக இருக்கிறார்கள். இனி, எது அவருக்குச் சரியெனப் படுகிறதோ அதையே மன்னர் திருதராஷ்டிரர் செய்யட்டும். அறம்சார்ந்தவர்களும், உயர்ந்த ஆன்மா கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போரிடத்தக்கவர்களாக இருந்தாலும், (தங்கள் சகோதரர்களிடம் {கௌரவர்களிடம்} இப்போதும் பொறுமையாகவே இருக்கிறார்கள். ஓ! கற்றவரே, இவை அனைத்தையும் (திருதராஷ்டிரருக்கு) உண்மையாகச் சொல்லும்" என்றான் {கிருஷ்ணன்}.