The trick of Duryodhana! | Udyoga Parva - Section 8 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 8)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு ஆதரவாகத் தனது படைகளைக் கொண்டு வந்து கொண்டிருந்த சல்லியனை, துரியோதனன் ஆடம்பரமாக வரவேற்பது; யுதிஷ்டிரனே தன்னை வரவேற்கிறான் என்று நினைத்து சல்லியன் உபசரிப்பை ஏற்று மகிழ்வது; சல்லியன் வெகுமதி அளிக்க முன்வந்த போது துரியோதனன் வெளிப்பட்டது; துரியோதனன் சல்லியனிடம் வரம் கேட்டது; சல்லியன் துரியோதனன் பக்கம் நிற்பதாக வாக்களித்தது; சல்லியன் யுதிஷ்டிரனைச் சந்தித்தது; அர்ஜுனனுடன் போரிடும் போதும் கர்ணனை உற்சாகமிழக்கச் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரன் சல்லியனிடம் கோரியது; அதைச் செய்வதாகச் சல்லியன் வாக்களித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, தூதுவர்களிடம் இருந்து செய்தியை அறிந்த சல்லியன், பெரும் அளவிலான துருப்புகளையும், போரில் வலிமைமிக்கவர்களான தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களிடம் வந்து கொண்டிருந்தான். அவனது {சல்லியனது} முகாம், ஒன்றரை யோஜனை அளவு கொண்ட பகுதியை நிரப்பியது. அந்த மனிதர்களில் சிறந்தவனுக்கு {சல்லியனுக்குச்} சொந்தமான படை அவ்வளவு பெரியதாக இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் பராக்கிரமமும், வீரமும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணி படைக்கு அவன் {சல்லியன்} தலைவனாக இருந்தான். பல்வேறு விதமான கொடிகளையும், விற்களையும், ஆபரணங்களையும், தேர்களையும், விலங்குகளையும், பல வண்ணங்களிலான கேடயங்களையும் கொண்ட வீரர்கள் அவனது படையில் இருந்தனர். அவர்கள் {அந்தப் படைவீரர்கள்} அனைவரும் அற்புத மாலைகளையும், பல்வேறு ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தார்கள். தாங்கள் சார்ந்த நிலத்திற்குரிய வகையில் உடுத்தி, அலங்கரித்திருந்த க்ஷத்திரியர்களில் முதன்மையான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர்கள் அவனது துருப்புகளுக்குத் தலைவர்களாக இருந்தனர். அவன் {சல்லியன்} தனது துருப்புகளை இளைப்பாரச் செய்து, மெதுவாக அணிவகுத்த படி பாண்டவர்களின் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். பூமியின் உயிரினங்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்தன. அவனது {சல்லியனின்} துருப்புகளின் நடையால் பூமி நடுங்கியது.
பரந்த மனம் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {சல்லியன்} புறப்பட்டு வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட மன்னன் துரியோதனன், அவனை{சல்லியனை} நோக்கி விரைந்து, அவனுக்கு உரிய மரியாதைகள் செய்தான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவனை {சல்லியனை} வரவேற்பதற்காக, பல்வேறு அழகிய இடங்களில், அழகாக அலங்கரிக்கப்பட்ட கேளிக்கைத்தலங்களைக் கட்டச் செய்தான். {அந்த} விருந்தினர்களை உபசரிப்பதில் பல கலைஞர்களை ஈடுபடுத்தினான். மாலைகள், இறைச்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பானங்கள் மற்றும் தின்பண்டங்கள், இதயத்திற்கு உற்சாகமூட்டும் வகையில் பல வடிவங்களிலான கிணறுகள், பல்வேறு உருவங்களிலான தண்ணீர்ப்பந்தல்கள், உணவு வகைகள், விரிந்த அறைகள் ஆகியவற்றை அந்த அரங்குகள் கொண்டிருந்தன.
அந்த அரங்குகளை அடைந்ததும், தெய்வத்துக்குக் காத்திருப்பது போலத் துரியோதனனின் பணியாட்கள் பல இடங்களில் அவனுக்காக {சல்லியனுக்காகக்} காத்திருந்தனர். தேவர்களின் ஓய்விடம் போன்ற பிரகாசமிக்க மற்றொரு கேளிக்கையில்லத்தைச் சல்லியன் அடைந்தான். மனிதர்களைவிட மேம்பட்ட உயிரினங்கள் அனுபவிக்கத்தக்க வசதியான தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களால் வரவேற்கப்பட்ட அவன் {சல்லியன்}, தன்னைத் தேவர்கள் தலைவனைவிட {இந்திரனை விட} மேம்பட்டவனாக நினைத்துக் கொண்டான். {அல்லது} இந்திரனே தனக்கு ஒப்பானவன் என்றும் நினைத்துக் கொண்டான். பிறகு, க்ஷத்திரியர்களின் முதன்மையான அவன் {சல்லியன்}, {அங்கிருந்த} பணியாட்களிடம், “இந்த உற்சாகத் தலங்களை ஏற்பாடு செய்த யுதிஷ்டிரனின் ஆட்கள் எங்கே? இவற்றைச் செய்த அம்மனிதர்கள் என் முன் அழைத்து வரப்படட்டும். நான் அவர்களை வெகுமதியடைத்தக்கவர்களாகக் கருதுகிறேன். நான் அவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்! குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அது மகிழ்ச்சியை அளிக்கட்டும்” என்றான்.
ஆச்சரியமடைந்த பணியாட்கள், காரியங்கள் அனைத்தையும் துரியோதனனுக்குத் தெரிவித்தார்கள். மிகவும் மகிழ்ந்திருந்த சல்லியன், தனது உயிரையும் தரச் சித்தமாக இருந்த போது, அதுவரை மறைந்திருந்த துரியோதனன், முன்னே வந்து, தன்னைத் தனது தாய்மாமன் {சல்லியன்} முன்பு வெளிக்காட்டிக் கொண்டான். மத்ரர்கள் மன்னன் {சல்லியன்} அவனைக் கண்டு, தன்னை வரவேற்பதில் அனைத்துச் சிரமங்களையும் எடுத்துக் கொண்டவன் துரியோதனனே என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு சல்லியன் துரியோதனனை அணைத்துக் கொண்டு, “நீ விரும்பும் எதையாவது ஏற்றுக் கொள்” என்றான்.
அதற்குத் துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ! மங்கலமானவரே {சல்லியரே}, உமது சொல் உண்மையாகட்டும். எனக்கு ஒரு வரத்தைத் தாரும். எனது படைகள் அனைத்திற்கும் நீர் தலைவராக வேண்டும் என்று நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைக்கேட்ட சல்லியன், “அப்படியே ஆகட்டும்! வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான். அதற்குக் காந்தாரியின் மகன் {துரியோதனன்}, “{அனைத்தும்} செய்யப்பட்டுவிட்டது” என்று மீண்டும் மீண்டும் சொன்னான். சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ உனது நகரத்திற்குச் செல். எதிரிகளை அடக்குபவனான யுதிஷ்டிரனைச் சந்திக்க நான் புறப்படுகிறேன். ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, நான் விரைந்து திரும்புவேன். மனிதர்களில் சிறந்தவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரனை நான் எல்லாவகையிலும் அவசியம் பார்க்க வேண்டும்” என்றான்.
இதைப் பொறுத்துக் கொண்ட துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ மன்னா, ஓ பூமியின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டவனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்த பிறகு, விரைந்து திரும்பி வாரும். ஓ! மன்னர்களுக்கு மன்னா {சல்லியரே}, நான் உம்மையே முழுதும் நம்பியிருக்கிறேன். நீர் எனக்கு அளித்திருக்கும் வரத்தை நினைவுகூரும்” என்றான். அதற்குச் சல்லியன் {துரியோதனனிடம்}, “உனக்கு நன்மையே விளையட்டும்! நான் விரைந்து திரும்பி வருவேன். ஓ! மனிதர்களின் காவலா {துரியோதனா}, நீ உனது நகரத்திற்குச் செல்” என்று பதிலுரைத்தான். பிறகு சல்லியன், துரியோதனன் ஆகிய அந்த இரு மன்னர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.
இப்படிச் சல்லியனை வரவேற்ற துரியோதனன், தனது நகரத்திற்குத் திரும்பினான். சல்லியனும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைக் குந்தியின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} தெரிவிக்கச் சென்றான். உபப்லாவியத்தை அடைந்ததும், அம்முகாமுக்குள் நுழைந்த சல்லியன், அங்கே பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் கண்டான். வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்தச் சல்லியன் பாண்டவர்களைச் சந்தித்ததும், தனது பாதங்களைக் கழுவிக்கொள்ள நீரையும், ஒரு பசுவுடன் கூடிய சடங்கு நிமித்தமான கொடைகளையும் வழக்கம் போல ஏற்றுக் கொண்டான். பிறகு, எதிரிகளைக் கொல்பவனான, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை முதலில் விசாரித்து, பிறகு பெருமகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் தனது தங்கையின் {மாத்ரியின்} மகன்களான அந்த இரட்டையர்கள் இருவர் {நகுலன், சகாதேவன்} ஆகியோரைத் தழுவி கொண்டான்.
அனைவரும் அமர்ந்ததும், சல்லியன், குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னர்களில் புலியே, ஓ! குரு குலத்திற்கு மகிழ்ச்சியளிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னிடம் அனைத்தும் நலமாயிருக்கிறதா? ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே, நற்பேறாலேயே வனவாசத்தின் குறித்த காலத்தை நீ கழித்தாய். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த உனது தம்பிகளுடனும், இந்த உன்னதமான மங்கையுடனும் காட்டில் வசிப்பது மிகக் கடினமானக் காரியமே. மறைந்திருந்த காலத்தில் நீ வசித்த நிலை கடினமானதும் மோசமானதும் ஆகும். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அரியணையில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டவனுக்குக் கடுங்காலமே காத்திருக்கும் என்றாலும், அந்தப் பணியையும் முடித்தாய். {அப்போது}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா} உனக்கு என்ன மகிழ்ச்சி இருந்திருக்கும்!
ஓ! எதிரிகளை வாட்டுபவனே, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} உனக்குச் செய்யப்பட்ட பெருந்தீங்குகளுக்குப் பதிலாக, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ உனது எதிரிகளைக் கொன்று அதற்கேற்ப {நீ அனுபவித்த துன்பத்திற்குச் சமமாக} நீ மகிழ்ச்சியை அடைவாய். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உலகத்தின் வழிகளை நீ அறிந்திருக்கிறாய். எனவே, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நீ உனது செயல்பாடுகளில் தீமையால் எப்போதும் வழிநடத்தப்பட மாட்டாய். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பழமையான அரச முனிகளின் வழியில் நீ நடப்பாயாக! எனது மகனே, யுதிஷ்டிரா, தாராளம், தன்னல மறுப்பு {சுயத் தியாகம்}, உண்மை {சத்தியம்} ஆகியவற்றின் வழியில் சீராக {உறுதியாகச்} செல்வாயாக!
ஓ! மன்னா, யுதிஷ்டிரா, கருணை, தற்கட்டுப்பாடு, உண்மை, உலகளாவிய பரிவு ஆகியனவும், இவ்வுலகில் அற்புதமான அனைத்தும் உன்னில் காணக் கிடைக்கின்றன. மிதமானவனாக, வாரிவழங்குபவனாக, அறம்சார்ந்தவனாக, தாராளவாதியாக இருக்கும் நீ, அறத்தையே உயர்ந்த நன்மையாகக் கருதுகிறாய். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மத்தியில் புழங்கும் அறத்தின் விதிகள் பல இருக்கின்றன. அவை அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஓ! எனது மகனே, ஓ எதிரிகளை வாட்டுபவனே {யுதிஷ்டிரா}. உண்மையில் இவ்வுலகம் சார்ந்த அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கடின காலத்தில் இருந்து வெளியே வந்திருக்கும் நீ பேறுபெற்றவனாவாய். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, அறச்சார்பு மிகுந்த ஆன்மாவும், நேர்மையின் புதையலுமான நீ, உனது தொண்டர்களுடன் விடுபட்டிருப்பதைக் காணும் நானும் நற்பேறு பெற்றவனே” என்றான் {சல்லியன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அம்மன்னன் {சல்லியன்}, துரியோதனனுடனான தனது சந்திப்பையும், தனது உறுதிமொழியையும், தான் {அவனுக்கு} அளித்த வரம் ஆகியவற்றையும் விரிவாகப் பேசினான். அதற்கு யுதிஷ்டிரன், “ஓ! வீரமிக்க மன்னரே {சல்லியரே}, இதயம் மகிழ்ந்த நீர், துரியோதனனுக்கு உறுதியளித்து நன்றே செய்திருக்கிறீர். உமக்கு நன்மையே விளையட்டும். ஓ! பூமியின் ஆட்சியாளரே {சல்லியரே}, நான் உம்மிடம் ஒன்றை மட்டும் செய்யச் சொல்கிறேன். ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அது செய்வதற்குத் தகாதது என்றாலும், முழுவதும் எனக்காக மட்டுமே நீர் அதைச் செய்ய வேண்டும்.
ஓ! வீரரே {சல்லியரே}, நான் உம்மிடம் விண்ணப்பிப்பதைக் கேளும். ஓ பெரும் மன்னா {சல்லியரே}, போர்க்களத்தில் நீர் கிருஷ்ணனுக்கு நிகரானவர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {சல்லியரே}, கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் தனிப்பட்ட மோதல் ஏற்படும்போது, நீரே கர்ணனின் தேரோட்டியாக இருப்பீர் என்பதில் எனக்கு ஐயமில்லை. அச்சந்தர்ப்பத்தில், நீர் எனக்கு நன்மையைச் செய்ய வீரும்பினால், அர்ஜுனனை நீர் காக்க வேண்டும். ஓ! மன்னா {சல்லியரே}, அதே போல, சூதனின் மகனான கர்ணன் உற்சாகமிழக்கும் வகையில் நீர் செயல்பட வேண்டும். {அப்படிச் செய்தால்} வெற்றியும் எங்களுடையதாகும். இது முறையற்றது என்பதில் சந்தேகமில்லை; ஆனால், ஓ! என் அம்மானே {மாமா}, அனைவருக்காகவும் நீர் அவற்றைச் செய்ய வேண்டும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} கேள். சூதனின் தீய மகன் {கர்ணன்} போரில் உற்சாகமிழக்கும்படி செய்ய நீ என்னிடம் சொல்கிறாய். அவன் {கர்ணன்} என்னைக் கிருஷ்ணனுக்குச் சமமானவனாகக் கருதுவதால், போர்க்களத்தில் நான் அவனது தேரோட்டியாக ஆவேன் என்பது உறுதி. ஓ! புலியைப் போன்ற குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, போரிட விரும்பி போர்க்களத்தில் இருக்கும் அவனிடம் {கர்ணனிடம்}, அவனது கர்வமும் வீரமும் அழிந்து எதிரியால் அவன் கொல்லப்படும் வகையில் முரண்பட்ட, தீங்கு நிறைந்த சொற்களை நான் அவனுக்குச் சொல்வேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். உன்னால் கேட்கப்பட்டதால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் இதைச் செய்யத் தீர்மானித்துவிட்டேன்.
எவற்றையெல்லாம் என்னால் வெளிக்கொணர முடியுமோ, அவற்றையெல்லாம் உனது நன்மைக்காகவே நான் செய்வேன். ஓ! சிறப்புமிக்கவனே {யுதிஷ்டிரா} பகடையாட்டத்தின் போது திரௌபதியுடன் சேர்ந்து நீ அனுபவித்த துன்பம், சூத மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட மனிதத் தன்மையற்ற வார்த்தைகள், அசுரன் ஜடன் மற்றும் கீசகனால் ஏற்பட்ட பெருந்துன்பம், பழங்காலத்து தமயந்தி போல, திரௌபதியால் அனுபவிக்கப்பட்ட பெருந்துன்பங்கள் ஆகியவை அனைத்தும், ஓ! வீரா, இன்பத்திலேயே முடியும். இவ்வுலகத்தில் விதியே வலியது என்பதால், நீ இதற்காகக் கவலைக் கொள்ளக் கூடாது. ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த மனம் கொண்ட மனிதர்கள் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஏன், தேவர்களே கூட, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கெடுபேறுகளால் துன்புற்றிருக்கின்றனர். உண்மையில், ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான உயர்ந்த மனம் கொண்ட இந்திரன் கூட, தனது மனைவியுடன் சேர்ந்து பெருந்துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது” என்றான் {சல்லியன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.