Arjuna selected Krishna! | Udyoga Parva - Section 7 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 7)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனிடம், போருக்கு ஆதரவு கேட்டு துரியோதனனும் அர்ஜுனனும் துவாரகைக்குச் செல்வது; துரியோதனன் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனின் தலைமாட்டில் அமர்ந்தது; அர்ஜுனன் கரங்கூப்பி நின்றது; விழித்தெழுந்த கிருஷ்ணன் அர்ஜுனனை முதலில் பார்ப்பது; தனது படை ஒருபுறமும், ஆயுதம் ஏந்தாத தான் ஒரு புறமும் என இருவருக்கும் உதவுவதாகக் கிருஷ்ணன் சொல்வது; வயதில் இளையவனான அர்ஜுனன், முதல் வாய்ப்பைப் பெற்றுக் கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தது; மகிழ்ச்சியடைந்த துரியோதனன் நாராயணச் சேனையைப் பெற்றுக் கொண்டு பலராமனிடம் சென்றது; எத்தரப்புக்கும் தான் போரிடுவதில்லை என்று பலராமன் சொல்வது; தன்னைத் தேர்ந்தெடுத்த காரணத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கேட்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனை அடைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} புரோகிதரை அனுப்பிய பிறகு, அவர்கள் {பாண்டவர் தரப்பு} பல்வேறு நாட்டு மன்னர்களிடம் தூதுவர்களை அனுப்பினார்கள். பிற இடங்களுக்குத் தூதுவர்களை அனுப்பிய பிறகு, குரு வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகைக்குத் தானே புறப்பட்டுச் சென்றான். நூற்றுக்கணக்கான விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள் ஆகியோருடன் மதுவின் வழித்தோன்றல்களான கிருஷ்ணனும், பலதேவனும் சென்ற பிறகு, திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது இரகசிய ஒற்றர்களை அனுப்பி, பாண்டவர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்டான்.
கிருஷ்ணன் சென்றுவிட்டான் என்பதை அறிந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தன்னுடன் சிறு எண்ணிக்கையிலான துருப்புகளை அழைத்துக் கொண்டு, காற்றின் வேகம் கொண்ட நல்ல குதிரைகளில் துவாரகா நகரத்திற்குச் சென்றான். குந்தி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அதே நாளில், அந்த அழகிய நகரமான ஆனர்த்த நிலத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தான். மனிதர்களில் புலிகளான குரு குலத்தின் அந்த இரு கொழுந்துகளும் {துரியோதனனும், அர்ஜுனனும்} அங்கே வந்து, துயிலில் இருக்கும் கிருஷ்ணனைக் கண்டு, படுத்திருந்த அவன் அருகே சென்றனர்.
கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அறைக்குள் நுழைந்த துரியோதனன், அந்தப் படுக்கையின் தலைமாட்டில் இருந்த அழகிய இருக்கையில் அமர்ந்து கொண்டான். கிரீடம் அணிந்தவனும், பரந்த மனப்பான்மை கொண்டவனுமான அர்ஜுனன், அவனுக்குப் {துரியோதனனுக்குப்} பின் நுழைந்தான். பிறகு, கரங்கள் கூப்பி, தலைவணங்கியபடி {அந்தப்} படுக்கையின் பின்புறம் நின்றான். {And stood at the back of the bed}. விருஷ்ணி வழித்தோன்றலான கிருஷ்ணன் விழித்த போது, முதலில் அர்ஜுனன் மீது தனது கண்களைச் செலுத்தினான். அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, அவர்களது பாதுகாப்பான பயணம் குறித்து விசாரித்து, முறையான வாழ்த்துகளைத் தெரிவித்த பிறகு, அவர்களது வருகையின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டான்.
பிறகு கிருஷ்ணனிடம் துரியோதனன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் “நடைபெறவிருக்கும் போரில் உனது உதவியை எனக்கு அளிப்பதே உனக்குத் தகும். அர்ஜுனனும் நானும் உனக்குச் சமமான நண்பர்களாகவே இருக்கிறோம். ஓ! மதுவின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, ஒரே உறவுமுறையையே நீ எங்கள் இருவரிடமும் கொண்டிருக்கிறாய். இன்று, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா-கிருஷ்ணா}, உன்னிடம் முதலில் வந்தது நானே. நல்ல மனம் கொண்டவர்கள், தங்களிடம் முதலில் வருபவரின் காரணத்தையே எடுத்துக் கொள்கின்றனர். இதுவே முன்னோரின் நடைமுறையாகும். ஓ! கிருஷ்ணா, நீயே உலகத்தில் உள்ள நல்ல மனம் கொண்டோர் அனைவரை விடவும் மிக உயரத்தில் இருந்து, எப்போதும் மதிக்கப்பட்டு வருகிறாய். நல்ல மனம் கொண்ட மனிதர்கள் நோற்ற நடத்தைவிதிகளையே பின்பற்றுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் {துரியோதனன்}.
அதற்குக் கிருஷ்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, நீயே முதலில் வந்தாய் என்பதில் நான் ஐயங்கொள்ளவில்லை. ஆனால், ஓ! மன்னா {துரியோதனா}, குந்தியின் மகனான தனஞ்சயனே {அர்ஜுனனே} என்னால் முதலில் பார்க்கப்பட்டான். முதலில் வருகை தந்த உன்னையும், முதலில் காணப்பட்ட அர்ஜுனனையும் நான் கருத்தில் கொள்வதால், சந்தேகமில்லாமல், ஓ! சுயோதனா {துரியோதனா}, எனது உதவியை {உங்கள்} இருவருக்கும் அளிப்பேன். ஆனால், வயதில் இளையோருக்கே முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, குந்தியின் மகனான தனஞ்சயனே {அர்ஜுனனே}, முதல் வாய்ப்பைப் பெறத் தகுந்தவன். அடர்ந்த {நெருக்கமான} போர்க்களத்தில் போரிட வல்லவர்களும், பலத்தில் எனக்குப் போட்டியானவர்களும், நாராயணர்கள் என்று அறியப்படுபவர்களும், எண்ணிக்கையில் பத்துக் கோடியாக {10,00,00,000} இருப்பவர்களுமான மாட்டு மந்தையாளர்கள் {கோபாலர்கள்} நிரம்பிய பெரும் அமைப்பு {படை} ஒன்று இருக்கிறது. போரில் வெல்லப்பட முடியாத அப்படைவீரர்கள், உங்களில் ஒருவருக்கு அனுப்பப்படுவார்கள். போர்க்களத்தில் போரிடுவதில்லை என்ற தீர்மானத்துடன், ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு தனியாளாக இருக்கும் நான் மற்றொருவனிடம் செல்வேன். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்விரண்டில் உனக்கு வேண்டுமென எதை நீ மெச்சுகிறாயோ, அதை முதலில் நீயே தேர்ந்தெடுக்கலாம். விதிப்படி, முதல் வாய்ப்பைப்பெற நீயே தகுந்தவன்” என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரிகளைக் கொல்பவனும், க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரிலும் மேலானவனும், தன்விருப்பத்தின் பேரில் மனிதர்கள் மத்தியில் பிறந்தவனும், நாராயணனேயானவனும், படைக்கப்படாதவனுமான போர்க்களத்தில் போரிடாத கேசவனைத் {கிருஷ்ணனைத்} தேர்ந்தெடுத்தான். துரியோதனன் {நாராயணர்கள் அடங்கிய} அந்த முழுப் படையையும் தேர்ந்தெடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, ஆயிரமாயிரம் எண்ணிக்கையிலான அந்தத் துருப்புகளை அடைந்த அவன் {துரியோதனன்}, தன் தரப்பில் கிருஷ்ணன் இல்லை என்பதை அறிந்தாலும், மிகவும் மகிழ்ந்தான். பயங்கரப் பராக்கிரமம் மிக்கப் படையை அடைந்த துரியோதனன், பெரும் பலமிக்க ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சென்று, தனது வருகைக்கான நோக்கத்தை விளக்கினான்.
சூரனின் அந்த வழித்தோன்றல் {பலராமன்}, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, தொடர்ந்து வரும் சொற்களைச் சொன்னான். அவன் {பலராமன் துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே, விராடனால் கொண்டாடப்பட்ட திருமணத் திருவிழாவில் நான் சொன்ன அனைத்தையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். ஓ! குருகுலத்துக்கு மகிழ்ச்சி அளிப்பவனே {துரியோதனா}, உன் நிமித்தமாக நான் கிருஷ்ணனிடம் முரண்பட்டு, அவனது {கிருஷ்ணனின்} கருத்துகளுக்கு எதிராகப் பேசினேன். இரு தரப்பிடமும் நாங்கள் கொண்ட உறவுமுறை சமமானது என்று நான் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டேன். ஆனால், நான் கூறிய கருத்துகள் எதையும் கிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னாலும். ஒரு கணம் கூடக் கிருஷ்ணனிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது. கிருஷ்ணனுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது என்பதைக் கண்டு நான் எடுத்திருக்கும் தீர்மானம் இதுதான். குந்தியின் மகன்களுக்காகவோ, உனக்காகவோ நான் போரிடமாட்டேன். ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் பாரதக் குலத்தில் பிறந்த நீ, உனக்கு விதிக்கப்பட்ட விதிகளின் படி {போர்க்குல {க்ஷத்திரிய} அறத்தின் படி} போரிடுவாயாக. செல்” என்றான் {பலராமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட துரியோதனன், போர்க்களத்தில் ஆயுதமாகக் கலப்பையைத் தாங்கும் வீரனை {பலராமனை} அணைத்துக் கொண்டான். தனது தரப்பில் இருந்து கிருஷ்ணன் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பதை அறிந்தும், ஏற்கனவே அர்ஜுனன் வீழ்ந்துவிட்டான் என்றே அவன் {துரியோதனன்} கருதினான். பிறகு திருதராஷ்டிரனின் அந்த அரச மகன் {துரியோதனன்}, கிருதவர்மனிடம் சென்றான். கிருதவர்மன் அவனுக்கு {துரியோதனனுக்கு} ஒரு அக்ஷௌஹிணி எண்ணிக்கையிலான படைத் துருப்புகளைக் கொடுத்தான். காணப் பயங்கரமான அந்தப் போர்ப்படை சூழ, தனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டியபடியே அந்தக் கௌரவன் {துரியோதனன்} அணிவகுத்துச் சென்றான்.
துரியோதனன் சென்ற பிறகு, மஞ்சள் ஆடை உடுத்தியிருக்கும் உலகத்தின் படைப்பாளனான கிருஷ்ணன், கிரீடியிடம் {அர்ஜுனனிடம்}, “போரிடவே மாட்டேன் என்ற என்னை நீ தேர்ந்தெடுத்ததற்கான காரணம் யாது?” என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், “அவர்கள் அனைவரையும் நீ கொல்வாய் என்பதில் எனக்குக் கேள்வியே கிடையாது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, அவர்கள் அனைவரையும் தனியனாகக் கொல்ல நானும் தகுந்தவனே. ஆனால் நீ இந்த உலகின் ஒப்பற்ற மனிதனாவாய்; இந்தப் புகழ் உன்னைத் தொடர்ந்தே வரும். நானும் கூடப் புகழுக்குத் தகுந்தவனே; எனவேதான், நீ என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டாய். நீ எனக்குத் தேரோட்டியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் எனக்கு விருப்பம் இருந்து வந்திருக்கிறது. எனவே, எனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
அதற்கு, வசுதேவனின் மகன் {கிருஷ்ணன்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன்னை என்னுடன் அளவிட்டுக் கொள்கிறாய் என்பது உனக்கு ஏற்றதாகவே இருக்கிறது. நான் உனது தேரோட்டியாகச் செயல்படுவேன்; உனது விருப்பம் நிறைவேறட்டும்” என்றான் {கிருஷ்ணன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனையும், தாசார்ஹ குலத் தொண்டர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு யுதிஷ்டிரனை மீண்டும் அடைந்தான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.