Who is Arya? | Udyoga Parva - Section 33d | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33 ) {விதுர நீதி - 4}
பதிவின் சுருக்கம் : பத்தானவை குறித்து விதுரன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; யாரைச் செழிப்பு அடையும்? மனிதர்களுக்கு அதிகாரியாகக் கருதப்படுபவன் யார்? எந்த மன்னனை செழிப்பு வந்து அடையும்? எவன் ஞானி? எவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? எங்கும் புகழப்படுபவன் எவன்? அனைவராலும் எப்போதும் விரும்பப்படுபவன் எவன்? ஆரியர்களால் கருதப்படும் ஆரியர்களில் சிறந்தவன் எவன்? தேவர்கள் எவனுக்குச் செழிப்பைத் தருவார்கள்? கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை எவை? எவனிடம் துயரங்கள் விலகி நிற்கின்றன? என்பது யாவற்றையும், பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிடுவதே சிறந்தது என்றும் விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல்வது....
{பத்தானவை}
{விதுரன் சொன்னான்} “ஓ! திருதராஷ்டிரரே, 1.போதையில் இருப்பவன், 2.கவனம் குறைந்தவன், 3.உளறுபவன், 4.களைப்பாக இருப்பவன், 5.கோபம் கொண்டவன், 6.பசியோடு இருப்பவன், 7.அவசரப்படுபவன், 8.பேராசை கொண்டவன், 9.பயம் கொண்டவன், 10.காமம் கொண்டவன் ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள். இது தொடர்பாக, சுயோதனனுக்கும் {சூதந்வாவுக்கும்} அசுரர்கள் தலைவனுக்கும் (பிரஹலாதனுக்கும்) இடையில், பிந்தையவனின் {பிரஹலாதனின்} மகன் சம்பந்தமாக நடந்த பழங்கதை ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது.
காமத்தையும், கோபத்தையும் துறந்து, தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து, பாகுபாட்டை அறிந்து, கல்வி கற்று, சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களுக்கும் அதிகாரியாகக் கருதப்படுகிறான். பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும், தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும், கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதை அறிந்தவனுமான மன்னனையே செழிப்பு அடைகிறது.
பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும், எதிரியைப் பொறுத்தமட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்; தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்; சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்துபவனும் ஞானியாவான். ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும், தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும், துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமே நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன். அவனது எதிரிகள் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும், பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும், அடுத்தவன் மனைவியை சீரழிக்காதவனும், ஆணவத்தைக் காட்டாதவனும், திருடாதவனும், நன்றிமறக்காதவனும், குடியில் ஈடுபடாதவனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். செருக்குடன் மனித நாட்டத்தின் மூன்று நோக்கங்களை அடைய முயலாதவனும் கேட்கப்படும்போது உண்மையைச் சொல்பவனும், நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும், அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும் ஞானி என்று கணிக்கப்படுகிறான்.
பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும், அனைவரிடமும் அன்பாக இருபவனும், பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும், ஆணவமாகப் பேசாதவனும், சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படுகிறான். கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும், பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும், தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும் அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான். {அடங்கிய} பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும், துயரத்தில் இருக்கும்போதும், முறையற்ற செயலைச் செய்யாதவனும், நன்னடத்தையுள்ளவன் {ஆரியர்களில் சிறந்தவன்} என்று மரியாதைக்குரியவர்களால் {ஆரியர்களால்} [1] கருதப்படுகிறான்.
[1] இந்த குறிப்பிட்ட வரியில் வரும் நன்னடத்தையுள்ளவன் என்பதை வேறு பதிப்பில் ஆரியன் என்று இட்டிருந்தார்கள். மூலத்தில் இந்த வரி எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் காண http://sacred-texts.com/hin/mbs/mbs05033.htm என்ற பக்கத்துக்குச் சென்றேன். இந்த வரி 93-ம் ஸ்லோகமாக வருகிறது என நினைக்கிறேன்.அது பின்வருமாறு :93 na vairam uddīpayati praśāntaṃ; na darmam ārohati nāstam etina durgato 'smīti karoti manyuṃ; tam ārya śīlaṃ param āhur agryam
தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும், அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும், கொடையளித்துவிட்டு அதற்காகவருந்தாதவனும், நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான். பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும், பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும், பல்வேறு வகைகளிலான மனிதர்களின் பயன்பாடுகளை {சாதி தர்மங்களை} அறிய விரும்புபவனும், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட ஏறுமுகம் பெறுவது {அதிக மகிழ்ச்சியடைவது} நிச்சயம்.
செருக்கு, மடமை, {மரியாதையில்லாத} துடுக்குத்தனம், பாவச்செயல்கள், மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, நடத்தையில் கோணல், பலருடன் பகைமை, குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான். தன்னடக்கம், தூய்மை, நல்ல சடங்குகள், தேவர்களை வழிபடுதல், பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சடங்குகள் ஆகியவற்றைத் தினமும் பயிலும் மனிதனுக்கு தேவர்களே செழிப்பை அளிக்கின்றனர்.
தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் மண உறவு கொள்பவனும், தன் முன் மேம்பட்ட தகுதியுடைவயர்களை அமர்த்துபவனும், சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனின் செயல்கள், கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை ஆகும்.
தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்துவிட்டு மிதமாக உண்பவனும், அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும், யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் கொடுப்பவனும் {தானம் அளிப்பவனும்}, தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
எவனுடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ {கமுக்கமாக பாதுகாக்கப்பட்டு}, நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான். அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும், உண்மையுள்ளவனும், மென்மையானவனும், ஈகை குணம் கொண்டவனும், தூய மனம் கொண்டவனும், அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல, தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான்.
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான். தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான்.
(அந்தண) சாபத்தால் எரிக்கப்பட்ட மன்னன் பாண்டு, ஐந்து இந்திரர்களைப் போன்ற மகன்களைக் காட்டில் பெற்றெடுத்தார். ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, நீரே அவர்களை வளர்த்து, அனைத்தையும் கற்பித்தீர். அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்படிபவர்கள் ஆவர். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} நியாயமாகச் சேர வேண்டிய பங்கான நாட்டைக் கொடுத்து, இன்பத்தில் நிறைந்து, உமது மகன்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீராக. பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் தேவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெறுவீர்” என்றான் {விதுரன்}.
உத்யோக பர்வம் பகுதி 33 நிறைவு