Know one's self by means of one's own self! | Udyoga Parva - Section 34 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 34) {விதுர நீதி - 5}
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் மனதில் என்ன ஓடுகிறது என்றும் இருவருக்கும் நன்மை எதுவோ அதைச் சொல்லுமாறும் திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்பது; ஒப்பந்தங்களை மதித்து அறம் பொருள் ஆகியவற்றை அறிந்து செயல்படுபவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான் என்று விதுரன் சொல்வது; புலன்களிடம் தோற்கும் மனிதன் அனைத்திலும் தோற்பதைச் சொல்வது; புலன்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைப்பது; தன்னையே அடக்கமுடியாதவனால் எதிரிகளை வீழ்த்த முடியாது என்று சொல்வது; பாவிகளோடு தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படும் இயற்கை நீதியை எடுத்துச் சொல்வது; பேச்சைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் சொல்வது; தோல்வியடைய விதிக்கப்பட்டவனே புலன்களில் மயக்கம் கொள்வான் என்றும், அதனால் அவன் வீழ்வான் என்றும் சொல்வது; யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனின் புகழைப் பாதுகாக்கும்பொருட்டே துன்பத்தை அனுபவித்தான் என்றும், அவனே மூவுலகங்களையும் ஆளும் தகுதி படைத்தவன் என்று விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “உறக்கமற்று, துயரத்தால் எரிந்து கொண்டிருக்கும் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எனக்குச் சொல். ஏனென்றால், நம்மில் நீ ஒருவனே, ஓ! குழந்தாய் {விதுரா}, அறம் மற்றும் பொருளை அறிந்திருக்கிறாய். ஓ! விதுரா, ஞானத்துடன் எனக்கு ஆலோசனை கூறுவாயாக. ஓ! மேன்மையான இதயம் கொண்டவனே {விதுரா}, எதிர்காலத் தீமைகளை அறிந்து கொண்டு, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} நன்மையானவை என்றும், குருக்களின் நன்மையை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை என்றும் நீ கருதுவதைச் சொல்வாயாக. எனது முந்தைய குற்றத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். பதட்டம் நிறைந்த இதயத்துடன் நான் உன்னைக் கேட்கிறேன், ஓ! கற்றவனே {விதுரா}, அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} மனதில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சரியாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
{செயல்கள்}
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவனின் தோல்வியை {அவமானத்தை} விரும்பாத ஒருவன், கேட்கப்படாத போதும், தனது வார்த்தைகள் நன்மையானவையாகவோ தீமையானவையாகவோ, வெறுப்புடனோ, இனியுடனோ இருக்குமேயானாலும் கூட உண்மையைச் சொல்ல வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் குருக்களுக்கு நன்மை எதுவோ அதையே சொல்வேன். எது நன்மை என்றும், எது அறநெறி சார்ந்தவை என்றும் இரண்டையும் நான் சொல்வேன். நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீதியற்ற முறையற்ற வெற்றியின் வழிகளில் உமது இதயத்தை நிலைநிறுத்தாதீர். நியாயமான, முறையான வழிவகைகளில் தனது நோக்கத்தின் பயன்பாடு நிற்கவில்லையென்றால், அதன் வெற்றியைக் குறித்து ஒரு புத்திசாலி மனிதன் வருந்தக்கூடாது. ஒருவன் ஒரு செயலில் ஈடுபடும் முன்னர், செயலைச் செய்பவரின் திறன், செயலின் இயல்பு, அதன் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்துச் செயல்களும் இவற்றையே சார்ந்திருக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டே ஒருவன் செயல்பட வேண்டும். திடீர் உந்துதலால் {ஆர்வக் கோளாறால்} எதையும் செய்யக்கூடாது.
ஞானமுள்ளவன், தனது சொந்த திறனையும், செயலின் இயல்பையும், வெற்றியினால் உண்டாகும் விளைவுகளையும் முழுதும் கருத்தில் கொண்டே செயல்படவோ, செயல்படாமலோ இருக்க வேண்டும். நாட்டைப் பொறுத்தவரை அதன் விகிதாச்சாரம், அளவு, ஆதாயம், இழப்பு, கருவூலம், மக்கள் தொகை, தண்டை ஆகியவற்றை அறியாத மன்னன் தனது நாட்டை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதே வேளையில், மறுபுறம், ஒப்பந்தங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை அறிந்து, அறம் மற்றும் பொருளின் அறிவை அறிந்தவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான்.
கோள்களால் பாதிக்கப்படும் நட்சத்திரங்களைப் போல, இவ்வுலகம் புலன்களால் பாதிக்கப்படுகிறது. கட்டுத்தப்படாத அவை தங்களுக்குரிய பொருட்களின் மீது செலுத்தப்படும்போது இவ்வுலகம் பாதிப்படைகிறது. வளர்பிறை நாட்களில் இருக்கும் நிலவைப் போல, இயற்கையான நிலையில் உள்ள தங்கள் ஐம்புலன்களால் வீழ்த்தப்படும் மனிதனின் துயரங்கள் அதிகரிக்கவே செய்யும். அவை எப்போதும் அவனைப் பல்வேறு செயல்பாடுகளை நோக்கி இட்டுச் செல்லும்.
{புலனடக்கம்}
கோள்களால் பாதிக்கப்படும் நட்சத்திரங்களைப் போல, இவ்வுலகம் புலன்களால் பாதிக்கப்படுகிறது. கட்டுத்தப்படாத அவை தங்களுக்குரிய பொருட்களின் மீது செலுத்தப்படும்போது இவ்வுலகம் பாதிப்படைகிறது. வளர்பிறை நாட்களில் இருக்கும் நிலவைப் போல, இயற்கையான நிலையில் உள்ள தங்கள் ஐம்புலன்களால் வீழ்த்தப்படும் மனிதனின் துயரங்கள் அதிகரிக்கவே செய்யும். அவை எப்போதும் அவனைப் பல்வேறு செயல்பாடுகளை நோக்கி இட்டுச் செல்லும்.
தனது சுயத்தைக் {தன்னைக்} கட்டுப்படுத்தாத ஒருவன் தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவனோ, தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்தாது தனது பகைவர்களை வீழ்த்துபவனோ, கடைசியில் வலிமையை இழந்து போக நேரும். எனவே, முதலில் தன்னையே எதிரி என்று நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன், கடைசியின் தனது ஆலோசகர்களையோ, எதிரிகளையோ வெல்வதில் தோல்வியுற மாட்டான். தனது புலன்களை வெல்பவனுக்கோ, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்துபவனுக்கோ, குற்றமிழைப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் திறன் பெற்றவனுக்கோ, நீதியுடன் செயல்படுபவனுக்கோ, பொறுமையால் அருளப்பட்டவனுக்கோ பெரும் செழுமை காத்திருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனின் உடல் அந்த ஒருவனின் தேராகும்; அதற்குள் இருக்கும் ஆன்மாவே அதன் ஓட்டுநராகும்; புலன்கள் அதன் குதிரைகளாகும். அந்த நன்கு பழக்கப்பட்ட அந்த அற்புதமான குதிரைகளால் இழுக்கப்படும் ஞானி, தனது வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக நடத்தி, நிம்மதியாகக் கண் விழிக்கிறான். அடக்கப்படாத, கட்டுப்படுத்த இயலாத குதிரைகள், நிபுணத்துவம் இல்லாத ஓட்டுநரால் செலுத்தப்பட்டு, பயணத்தின் வழியில் அழிவடைய நேர்கிறது; எனவே அடக்கப்படாத ஒருவனின் புலன்கள் அழிவுக்கே வழிகோலுகின்றன. அனுபவமற்ற மனிதன் ஒருவன், இந்த அடக்கப்படாத புலன்களால் வழிநடத்தப்பட்டு, நன்மையில் இருந்து தீமையையும், தீமையில் இருந்து நன்மையையும் பெற்று மகிழ்ச்சியைத் துயரம் எனக் குழப்பிக் கொள்கிறான்.
அறம் பொருள் ஆகியவற்றைக் கைவிட்டவன், புலன்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, செழிப்பு, வாழ்வு, செல்வம் மனைவி ஆகியவற்றைத் தாமதமில்லாமல் இழக்கிறான். புலன்களுக்கல்லாமல் செல்வங்களுக்கு மட்டுமே தலைவனாக இருப்பவன், புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகத் தனது செல்வங்களை நிச்சயமாக இழக்கிறான். ஒருவன் தன்னைத் தன்னால் அறிய வேண்டும். {சுயத்தைச் சுயத்தால் அறியவேண்டும்}. தானே தனக்கு நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், ஒருவன் தனது மனம், அறிவு மற்றும் புலனங்களைக் கட்டுப்படுத்தி, தன்னால் தன்னை அறிய வேண்டும். தானே தனக்கு நண்பனும், எதிரியும் ஆனதால், தன்னால் தன்னை வென்ற மனிதன், தன்னைத் தன் நண்பனாகக் கொள்கிறான்.
{ஆசையும் கோபமும்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல, ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும். அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன், தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான். மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன், பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.
{தீயோருடன் நட்பு}
ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.
அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்த தவறி, ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான். கபடமற்ற தன்மை, எளிமை, தூய்மை, மனநிறைவு, இனிமையான பேச்சு, தற்கட்டுபாடு {சுய கட்டுப்பாடு}, உண்மை, உறுதி ஆகியன எப்போதும் தீயவர்களின் குணங்களாகாது. தன்னறிவு {சுயஞானம்}, உறுதி, பொறுமை, அறத்தில் அர்ப்பணிப்பு, ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது, ஈகை ஆகியவை ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.
தவறான நிந்தனைகள் {போலிக் குற்றச்சாட்டுகள்}, தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர். இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர். தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்; குற்றவியல் சட்டத்திலும், பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.
{பேச்சு [உரை]}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது. பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல. நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும். கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம், ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.
குறிப்பு--------------------------------------------------------------------
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
திருக்குறள் > அறத்துப்பால் > அடக்கமுடைமை
--------------------------------------------------------------------------------
கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம், ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது. வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.
{தோல்வி விதிக்கப்படும்போது}
தேவர்களால் தோல்வி விதிக்கப்பட்ட ஒருவன் புலன்களில் மயக்கம் கொள்வதாலேயே, கீழான காரியங்கள் செய்வதில் விழுகிறான். அறிவு மங்கிப் போய், அழிவின் விளிம்பில் இருக்கும் போது சரியாகத் தெரியும் தவறு, அவனது இதயத்தை உறுதியாக அடிக்கும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் அதைத் தெளிவாகக் காணவில்லை. பாண்டவர்களிடம் கொண்ட பகைமையின் விளைவால், அறிவை மூடும் அந்த மேகம் {புலன்மயக்கம்} இப்போது உமது மகன்களைப் பீடித்திருக்கிறது.
அனைத்து நற்குறிகளையும் பெற்று, மூவுலகங்களையும் ஆளும் தகுதி பெற்ற யுதிஷ்டிரன் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறான். ஓ! திருதராஷ்டிரரே, உமது மகன்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, உமது வாரிசுகள் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன் பூமியை ஆளும்படி செய்வீராக. சக்தி, ஞானம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு, அறம் பொருள் ஆகியவற்றின் உண்மைகளை அறிந்து, நீதிமிக்க மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், ஓ! மன்னர்கள் மன்னா {திருதராஷ்டிரரே}, உம்முடைய புகழைப் பாதுகாக்கும்பொருட்டே, இரக்கம் மற்றும் கருணையால் பெரும் துன்பத்தை அனுபவித்தான்” என்றான் {விதுரன்}.