The declaration of Prahlada! | Udyoga Parva - Section 35a | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 35) {விதுர நீதி - 6}
பதிவின் சுருக்கம் : விதுரன் திருதராஷ்டிரனிடம், கேசினியை மணந்து கொள்ள விரும்பிய விரோசனன் மற்றும் சூதன்வானுக்குள் நடந்த சர்ச்சை குறித்த பழங்கதையைச் சொன்னது; கேசினி தன் தலைவனைச் சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்க விரும்பியது; விரோசனன் கேசினியிடம் சென்றது; விரோசனனிடம் கேள்வி கேட்ட கேசினி; அடுத்த நாள் சூதன்வான் வந்தது; யார் பெரியவர் என்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட சர்ச்சை; சர்ச்சையைத் தீர்க்க அவ்விருவரும் பிரஹலாதனிடம் சென்றது; சூதன்வானே வென்றான் எனப் பிரஹலாதன் அறிவித்தது; சூதன்வான் விரோசனனுக்கு உயிரைக் கொடுத்தது ...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “ஓ! பெரும் அறிவுடையவனே, அறத்திற்கும் பொருளுக்கும் ஏற்புடைய இத்தகு வார்த்தைகளை எனக்கு மீண்டும் சொல்வாயாக. அவற்றைக் கேட்கும் தாகம் எனக்கு அடங்கவில்லை. நீ சொல்வது அழகாக இருக்கிறது” என்றான்.
{பழங்காலக் கதை - சூதன்வானுக்கும் விரோசனனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல்}
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும், அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே. அனைத்து உயிரினங்களிடமும் அன்புகாட்டுவது முன்னதைவிட {புனித இடங்களில் நீராடுவதைவிட} ஒருவேளை விஞ்சியதாக இருக்கலாம். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவீராக. அதனால், இவ்வுலகில் பெரும் புகழை வெல்வீர், இதன்பிறகு {இவ்வுலகத்திற்குப் பிறகு} நீர் சொர்க்கத்தை அடைவீர்.
ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ, ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப்படுத்தப்படுகிறான். இது தொடர்பாக, கேசினியின் {Kesini}கரங்களைத் திருமணத்திற்காகக் கேட்ட விரோசனன் மற்றும் சூதன்வான் {Virochana and Sudhanwan} ஆகிய இருவருக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடலைக் குறித்த ஒரு பழங்கதை மேற்கோள் காட்டப்படுகிறது.
ஒரு காலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற அழகுடன் கூடிய கன்னிகை ஒருத்தி, கேசினி என்ற பெயரில் இருந்தாள். ஒரு நல்ல கணவனை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட அவள் {கேசினி}, தன்வரிப்பில் {சுயம்வரத்தில்} தனது தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தாள்.
*திதியின் மகன்களில் {அசுரர்களில்} ஒருவனான விரோசனன் அந்தக் கன்னிகையை {கேசினியை} அடைய விரும்பி, அந்த இடத்திற்குச் சென்றான். தைத்தியர்களின் தலைவனைக் {விரோசனனைக்} கண்ட கேசினி, அவனிடம் {விரோசனனிடம்}, “ஓ! விரோசனரே, அந்தணர்கள் மேன்மையானவர்களா? திதியின் மகன்கள் {அசுரர்கள்} மேன்மையானவர்களா? சூதன்வான் ஏன் மஞ்சத்தில் அமரக்கூடாது?” என்று கேட்டாள்.
*குறிப்பு:
அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65
பிரம்மனுக்கு ஆறு {6} ஆன்மிக மகன்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அவர்கள் மரிச்சி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர் ஆவர்.
மரிச்சியின் மகன் காசியபர் ஆவார். காசியபரிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின.
தக்ஷனுக்கு (பிராஜாபதிகளில் ஒருவர்) நற்பேறு பெற்ற பதிமூன்று {13} மகள்கள் இருந்தனர். {காசியபரே இந்த தக்ஷனின் 13 மகள்களுக்கும் கணவராவார்.} அந்த தக்ஷனின் மகள்களின் பெயர்கள் பின்வருமாறு: அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிராதா, விஸ்வா*, வினதை, கபிலா, முனி மற்றும் கத்ரு ஆவர். {Aditi, Diti, Danu, Kala, Danayu, Sinhika, Krodha, Pradha, Viswa, Vinata, Kapila, Muni, and Kadru}
{2} திதிக்கு ஹிரண்ய கசிபு என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்த சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் போற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். எல்லோருக்கும் மூத்தவனின் பெயர் பிரஹலாதன், அடுத்தவன் ஸாஹ்ரதன், மூன்றாமவன் அனுராதா, அவனுக்கு அடுத்தவர்கள் சிபியும், வஷ்கலாவும் ஆவர். ஓ பரதா {ஜனமேஜயா}, பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனா, கும்பா மற்றும் நிகும்பா ஆவர். விரோசனாவுக்கு பெரும் சக்தி கொண்ட வாலி என்ற மகன் இருந்தான். அந்த வாலியின் மைந்தன், வனா என்பவன் பெரும் அசுரன் என்று அறியப்பட்டான். பெரும் நற்பேறு அருளப்பட்டு அவன் ருத்ரனை வழிபட்டு வந்தான். அதனால் அவன் மஹாகாலன் என்ற பெயராலும் அறியப்பட்டான்..........
விரோசனன் {கேசினியிடம்}, “பிரஜாபதியிடம் இருந்து எழுந்த {அசுரர்களாகிய} நாங்களே சிறந்தவர்கள். ஓ! கேசினி, நாங்களே அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்கள், இவ்வுலகு எங்களுடையது என்பதில் ஐயமில்லை. தேவர்கள் யார்? பிராமணர்கள் யார்?” என்று கேட்டான். அதற்குக் கேசினி {விரோசனரிடம்}, “ஓ! விரோசனரே, நாம் இவ்விடத்திலேயே இருப்போமாக. நாளை இங்கே சூதன்வான் வருவார். நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண என்னை அனுமதிப்பீராக” என்றாள். அதற்கு விரோசனன் {கேசினியிடம்}, “ஓ இனியவளே, அச்சமுடைய பெண்ணே {கேசினி}, நீ சொல்வதை நான் செய்வேன். காலையில் நானும் சூதன்வானும் சந்திப்பதை நீ காண்பாய்” என்றான்
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இரவு கடந்து, சூரிய வட்டில் எழுந்ததும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கேசினியுடன் விரோசனன் காத்திருந்த அந்த இடத்திற்கு, ஓ! தலைவா, சூதன்வான் வந்தான். அங்கே பிரஹலாதன் மகனையும் {விரோசனனையும்}, கேசினியையும் கண்டான். அந்த அந்தணன் {சூதன்வான்} அங்கே வந்ததைக் கண்ட கேசினி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்து, கால் கழுவ நீரும், ஆர்க்கியாவும் கொடுத்தாள்.
விரோசனனால் (தனது இருக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி) கேட்கப்பட்ட சூதன்வான், அவனிடம் {விரோசனனிடம்} “ஓ! பிரஹலாதன் மகனே {விரோசனா}, நான் உனது அற்புதமான தங்க இருக்கையைத் தொட்டாலும், உனக்குச் சமமாக என்னைக் கருதிக் கொண்டு, உன்னுடன் அதில் அமர மாட்டேன்” என்றான். அதற்கு விரோசனன் “ஒரு பலகைத் துண்டு, ஒரு விலங்கின் தோல், புல்லாலோ வைக்கோலாலோ ஆன பாய், ஆகியவை மட்டுமே, ஓ! சூதன்வான், உமக்குப் பொருத்தமானவை. எனினும், ஒரே இருக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகுதி உமக்கில்லை” என்றான்.
அதற்குச் சூதன்வான் {விரோசனனிடம்}, “தந்தை மற்றும் மகன், ஒரே வயதும், சமமான கல்வியும் கொண்ட பிராமணர்கள், இரு க்ஷத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு சூத்திரர்கள் ஆகியோர் ஓர் இருக்கையில் ஒன்றாக அமரலாம். இவர்களைத் தவிர வேறு யாரும் ஒன்றாக அமரக்கூடாது. நான் அமர்ந்ததைவிடத் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, உன் தந்தை {பிரஹலாதன்} எனக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். நீயோ எல்லா ஆடம்பரங்களுடனும் வீட்டில் வளர்க்கப்பட்ட குழந்தை என்பதால், எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.
விரோசனன் {சூதன்வானிடம்}, “அசுரர்கள் மத்தியில் இருக்கும் எல்லாத் தங்கத்தையும், பசுக்களையும், குதிரைகளையும், பிற வகைச் செல்வங்களையும் நான் பந்தயமாக வைக்கிறேன். ஓ! சூதன்வான், இந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிக்க வல்லவர்களிடம் சென்று நாம் கேட்போம். வாரும்” என்றான். அதற்குச் சூதன்வான், “உனது தங்கம், பசுக்கள், வீரர்கள் ஆகியவற்றை விடு, ஓ! விரோசனா, நமது உயிர்களை இழக்கும்படி {பந்தயம் வைத்து}, இக்கேள்விக்குத் தகுந்த பதிலளிக்க வல்லோரிடம் கேட்போம்” என்றான். விரோசனன், “நமது உயிர்களைப் பிணை வைத்து, நாம் எவ்விடம் செல்வோம்? தேவர்கள் முன்னிலையிலோ, மனிதர்களில் எவர் மத்தியிலோ நான் நிற்க மாட்டேன்” என்றான். அதற்குச் சூதன்வான் {விரோசனனிடம்}, “நமது உயிர்களைப் பிணையாக வைக்கும் நாம், உனது தந்தையை {பிரகலாதனை} அணுகுவோம். பிரஹலாதன், தன் மகனுக்காகக் கூடப் பொய்மையை ஒருபோதும் சொல்ல மாட்டான்” என்றான் {சூதன்வான்}.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப்பட்ட பிணையை ஏற்றுக் கொண்ட விரோசனன் மற்றும் சூதன்வான் ஆகிய இருவரும் கோபத்தால் உந்தப்பட்டு, பிரஹலாதன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட பிரஹலாதன், “முன்பு ஒருபோதும் சேர்ந்து காணப்படாதவர்கள், இப்போது கோபம்கொண்ட இரு பாம்புகள் போல ஒரே சாலையில் ஒன்றாக வருகின்றனரே” என்று நினைத்து, “எப்போதும் சேராத நீங்கள், இப்போது சேர்ந்துவிட்டீர்களா? ஓ! விரோசனா, நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கும் சூதன்வானுக்கும் இடையில் நட்பேற்பட்டதா?” என்று கேட்டான் {பிரகலாதன்}.
அதற்கு விரோசனன் {பிரகலாதனிடம்}, “எனக்கும் சூதன்வானுக்கும் இடையில் எந்த நட்பும் கிடையாது. மறுபுறம் நாங்கள் எங்கள் உயிர்களைப் பிணையாக வைத்துள்ளோம். ஓ! அசுரர்களின் தலைவரே {தந்தையே}, நான் உம்மை ஒரு கேள்வி கேட்பேன், அதற்குப் பொய்யாகப் பதிலளிக்காதீர்!” என்றான். அதற்குப் பிரஹலாதன் {சூதன்வானிடம்}, “நீரும், தேனும், தயிர்க்கடைசலும் சூதன்வானுக்குக் கொண்டுவரப்படட்டும். ஓ! அந்தணா, நீ எங்களது வழிபாட்டுக்குத் தகுந்தவன். பருத்த ஒரு வெண்பசு உனக்குத் தயாராக இருக்கிறது” என்றான் {பிரகலாதன்}.
அதற்குச் சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “நீர், தேன் மற்றும் தயிர்க்கடைசல் ஆகியவை, இங்கே வரும் வழியிலேயே எனக்கு வழங்கப்பட்டன. நான் உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். பிரஹலாதா, அதற்கு உண்மையான பதிலளிப்பாயாக! பிராமணர்கள் மேன்மையானவர்களா? விரோசனன் {அசுரன்} மேன்மையானவனா?” என்று கேட்டான். அதற்குப் பிரஹலாதன், “ஓ! அந்தணா, இவன் எனது ஒரே மகன். நீயும் இங்கே இருக்கிறாய். {பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும், நான் அறிந்தவர்களும், எனது அன்பிற்குரியவர்களுமான நீங்கள் இருவரும் இங்கே இருக்கும்போது, என்னால் எப்படிப் பதிலளிக்க முடியும்?} நீங்கள் இருவரும் சர்ச்சை செய்து வரும் இந்தக் கேள்விக்கு, என்னைப் போன்றோர் எவ்வாறு பதிலளிக்க முடியும்?” என்று கேட்டான்.
சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “உன்னிடம் இருக்கும் உன் பசுக்களையும் பிற விலைமதிப்பற்ற செல்வங்களையும் உனது மகனுக்குக் கொடு. ஆனால், ஓ! ஞானம் கொண்டவனே {பிரகலாதா}, இருவர் சர்ச்சை செய்து வரும்போது, அதில் உண்மையைத் தீர்மானிக்க வேண்டியவன் நீயே” என்றான். அதற்குப் பிரஹலாதன், “ஓ! சூதன்வான், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையில்லாமல் பொய்யைச் சொல்லி, தனது நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் எப்படிப்பட்ட பாதிப்படைவான்? நான் இதை உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.
அதற்குச் சூதன்வான் {பிரகலாதனிடம்}, “இரவு நேரத்தில், தன் சக்காளத்தின் கரங்களில் துயிலும் தனது கணவனைக் காணும் ஒரு {கணவனைப் பிரிந்த} மனைவி ஏங்குவதைப் போலவும், பகடையில் தோற்ற ஒரு மனிதனைப் போலவும், சுமக்க முடியாத பெரும் துன்பச் சுமையால் கீழே விழுபவன் போலவும், நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் பாதிக்கப்படுவான். அப்படிப்பட்ட மனிதன், {நகரத்தின் வாயில்களைக் கடந்து} உள்ளே செல்ல தடை செய்யப்பட்டு நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பட்டினியுடன் தங்க வேண்டியிருக்கும். போலி சாட்சிகளைக் கொடுப்பவன், உண்மையில், எதிரிகளையே எப்போதும் கண்டடையும்படி விதிக்கப்படுகிறான்.
ஒரு விலங்கின் காரணமாகப் பொய் பேசுபவனது தலைமுறையினரில் ஏறுமுக வரிசையில் ஐந்து மூதாதையர் வானரசில் {சொர்க்கத்தில்} இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். ஒரு பசுவின் காரணமாகப் பொய் பேசுபவனது பத்து மூதாதையர் சொர்க்கத்தில் இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். ஒரு குதிரையின் காரணமாகப் பொய் சொன்னால் நூறு பேரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும், ஒரு மனிதனின் காரணமாகப் பொய் சொன்னால், தனக்கு முன் ஏறு வரிசையில் ஆயிரம் மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும் காரணமாக {அப்பொய்யைச் சொன்னவன்} இருப்பான். தங்கத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால், தனது குலத்தில் பிறந்த, பிறக்காத அனைத்து உறுப்பினர்களும் அழிவுக்குள்ளாகிறார்கள். நிலத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் {ஒருவனுடைய} அனைத்தையும் அவன் பாழாக்கிக் கொள்கிறான். எனவே, நிலத்திற்காக ஒருபோதும் பொய் பேசாதே” என்றான் {சூதன்வான்}.
பிரஹலாதன் {தன் மகன் விரோசனனிடம்}, “ஓ! விரோசனா, அங்கிரஸ் என்னைக் காட்டிலும் மேன்மையானவர், அதே போல, சூதன்வான் உன்னைக் காட்டிலும் மேன்மையானவன். சூதன்வானின் தாய் உன் தாயைக் காட்டிலும் மேன்மையானவள். எனவே, ஓ! விரோசனா, நீ சூதன்வானால் வீழ்த்தப்பட்டாய். இந்தச் சூதன்வானே இப்போது உனது உயிருக்குத் தலைவனாவான் {எஜமானன் ஆவான்}. ஆனால், ஓ! சூதன்வான், நீ விரோசனனுக்கு அவனது உயிரைக் கொடுக்க வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்” என்றான் {பிரஹலாதன்}.
அதற்குச் சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “ஓ! பிரஹலாதா, அறத்தைத் தேர்ந்தெடுத்து, மோகத்தால் நீ பொய் சொல்லாதிருந்ததால், நான் உன் அன்பிற்குரிய மகனின் {விரோசனனின்} உயிரை அவனுக்கு அளிக்கிறேன். ஓ! பிரஹலாதா, என்னால் உனக்கு மீட்டளிக்கப்பட்ட உனது மகன் இதோ இருக்கிறான். எனினும், அவன், கன்னிகை கேசினியின் முன்னிலையில் எனது காலைக் கழுவ வேண்டும்” என்றான் {சூதன்வான்}.