Ignorance is death! | Udyoga Parva - Section 42a | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 2)
பதிவின் சுருக்கம் : மரணம் குறித்த இரு கருத்துகளில் எது உண்மை எனத் திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் கேட்பது; அறியாமையே மரணம் என்றும், ஆத்மாவின் தத்துவங்கள் குறித்தும் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு உரைப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார் “பிறகு, விதுரனின் வார்த்தைகளைப் பாராட்டிய சிறப்புமிக்கவனும், புத்திமானுமான மன்னன் திருதராஷ்டிரன், அறிவுகள் அனைத்திலும் உயர்ந்ததை {ஆத்ம ஸ்வரூபத்தை} அடைய விரும்பி சனத்சுஜாதரிடம் தனிமையில் பேசினான்”
மன்னன் {திருதராஷ்டிரன்}, முனிவரிடம் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சனத்சுஜாதரே, மரணம் இல்லை என்ற கருத்தை நீர் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே தேவர்களும், அசுரர்களும் தவம் பயில்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பின், இந்த இரு கருத்துகளில் எதுதான் உண்மை?” என்று கேட்டான்.
{அறியாமையே மரணம்}
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “சில குறிப்பிட்ட செயல்கள் {கர்மங்கள்} மரணத்தை நிவர்த்திசெய்ய வல்லைவை என்று சிலர் சொல்கிறார்கள்; பிறர் மரணம் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்; எது உண்மை என நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, இதுகுறித்து நான் சொல்கிறேன் கேள். அதனால் உனது ஐயங்கள் அகலும். ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, இவை இரண்டுமே உண்மைதான் என அறிந்து கொள்வாயாக. அறியாமையின் விளைவே மரணம் எனக் கற்றோர் கருதுகின்றனர். நானோ, அறியாமையே மரணம் என்றும், அறியாமையின்மையே (அறிவே {ஞானமே}) இறவா {அமர} நிலை என்றும் சொல்கிறேன்.
அறியாமையினாலேயே அசுரர்கள் தோல்விக்கும் மரணத்துக்கும் ஆட்படுகிறார்கள். அறியாமையின்மையினாலேயே {அறிவாலேயே} தேவர்கள் பிரம்மனின் {பிரம்மத்தின்} இயல்பை அடைகிறார்கள். புலியைப் போல, மரணம் உயிரினங்களை விழுங்குவதில்லை; அதன் {மரணத்தின்} உருவம் அறியமுடியாததாக இருக்கிறது. இஃது ஒருபுறமிருக்க, சிலர் யமனே மரணம் எனக் கற்பனை செய்கிறார்கள். எனினும், இது {இந்த எண்ணம்} பலமற்ற {பலவீனமான} மனதினால் விளைவதே.
பிரம்மம் அல்லது தன்னறிவின் {சுய அறிவின்} நோக்கம், அழியா நிலையை {இறவா நிலையை} அடைவதே. நல்லவர்களுக்கு அருளின் ஊற்றுக்கண்ணாகவும், பாவிகளுக்குத் துன்பத்தின் ஊற்றுக்கண்ணாகவும் திகழும் பித்ருக்களின் உலகை, அந்தத் (கற்பனையான) தேவன் (யமன்) ஆட்சி செய்கிறான். அவனது {யமனின்} கட்டளையின் பேரில் கோபம், அறியாமை, பேராசை ஆகியவற்றின் உருவத்தை ஏற்று வரும் மரணம், மனிதர்கள் மத்தியில் ஏற்படுகிறது {அதனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது}.
செருக்கில் தத்தளிக்கும் மனிதர்கள் அநீதியான பாதையிலேயே எப்போதும் நடக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இருப்பவன் எவனும் தனது உண்மையான இயல்பை அடைவதில் {ஆத்ம தரிசனத்தைப் பெறுவதில்} வெற்றி பெறுவதில்லை. புரிந்து கொள்ளும் தன்மை மறைக்கப்பட்டு {மோகம் கொண்டு}, ஆசைகளில் தத்தளித்து, தங்கள் உடல்களைத் துறக்கும் அவர்கள், மீண்டும் மீண்டும் நரகத்திற்குள்ளேயே விழுகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் புலன்களால் தொடரப்படுகிறார்கள். {அவர்களது புலன்கள், தங்கள் செயல்களை ஒட்டியே சுற்றிக் கொண்டிருக்கின்றன}. இதற்காகவே, அறியாமை மரணம் என்ற பெயரைப் பெறுகிறது.
செயல்பாடுகளின் கனிகளை {பலன்களை} விரும்பும் மனிதர்கள், அந்தக் கனிகளை {பலன்களை} அனுபவிக்கும் நேரம் வரும்போது தங்கள் உடல்களை விட்டு விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். எனவே, அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடியாது. உருவம் கொண்ட உயிரினங்கள், பிரம்மத்தின் அறிவை அடையும் திறன் இன்மையாலும், உலகளாவிய இன்பங்களில் தாங்கள் கொள்ளும் தொடர்புகளாலும் மறுபிறவி எனும் சுழற்சியில் மேலாகவும், கீழாகவும், சுற்றியே உலவி கொண்டிருக்கும் கடமைக்கு ஆட்படுகின்றனர.
உண்மையற்றதை {பொய்மையை} நோக்கி நாட்டங்கொள்ளும் மனிதனின் இயற்கையான உந்துதலே, புலன்கள் தவறானவற்றை அடைய காரணமாக அமைந்து வழிகாட்டுகிறது. உண்மையற்ற பொருட்களில் தொடர்ந்து நாட்டங்கொள்வதால் பாதிப்படையும் ஆன்மா, எப்போதும் தான் ஈடுபட்டவைகளை {ஈடுபட்ட செயல்களை மட்டுமே} நினைவு கூர்ந்து, தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகளாவிய இன்பங்களை மட்டுமே வழிபடுகிறது.
{மூன்று}
இன்பங்களில் விருப்பமே {ஆசையே} முதலில் மனிதர்களைக் கொல்கிறது. இச்சையும் {காமமும்}, சினமும் {கோபமும்} விரைவில் அதன் பின்னேயே தொடர்ந்து வருகின்றன. இன்பங்களில் விருப்பம், காமம், கோபம் ஆகிய மூன்றும் மூடர்களை மரணத்திற்கு வழிநடத்துகின்றன. எனினும், தங்கள் ஆன்மாக்களை வென்றவர்கள், தன்னடக்கத்தில் வென்று, மரணத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.
தனது குறிக்கோளின் மீது கொண்ட ஆசையால் உற்சாகமடைந்து, தான் பாதிக்காத வகையில் தனது ஆன்மாவை வென்றவன், தன்னறிவின் {சுயஞானத்தின்} உதவியால் இவற்றை {ஆசை, காமம், கோபம் ஆகியவற்றை} மதிப்பில்லாதவை எனக் கருதி இவையாவையும் வெல்கிறான்.
இம்முறையில் தனது விருப்பங்களை அடக்கியவனான கற்ற மனிதன் ஒருவனை, யமனின் உருவத்தை ஏற்று வரும் அறியாமையால் விழுங்க முடியாது. தனது விருப்பங்களைப் பின்தொடரும் மனிதன், தனது விருப்பங்களுடன் சேர்த்தே அழிக்கப்படுகிறான். எனினும், ஆசையையைத் துறக்க முடிந்தவனால் நிச்சயமாக அனைத்துவிதமான துன்பங்களை விரட்டிவிட முடியும்.
உண்மையில் ஆசையே அறியாமை. அனைத்து உயிரினங்களுக்கும் அதுவே இருளும் நரகமுமாகும். அதில் {அறியாமையில்} தத்தளிக்கும் உயிரினங்கள் தங்கள் அறிவை இழக்கின்றன. தெருவில் போதையில் நடக்கும் மனிதர்கள் மேடு பள்ளங்களில் விழுவதைப் போல, ஆசையால் பீடிக்கப்பட்ட மனிதர்கள், இன்பங்களில் ஏமாந்து தவறான வழியை அடைந்து அழிவை நோக்கி ஓடுகிறார்கள். ஆசையால் குழப்பப்படவோ, தவறாக வழிநடத்தப்படவோ முடியாத ஆன்மாவைக் கொண்ட மனிதனை மரணத்தால் என்ன செய்துவிட முடியும்? வைக்கோலாலான புலியைப் போல மரணம் அவனுக்குப் பயத்தை {எப்போதும்} அளிப்பதில்லை.
எனவே, ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, அறியாமையான ஆசையின் இருப்பு அழிக்கப்பட வேண்டுமானால், மிகச் சிறிய ஆசையாகவே இருந்தாலும், எந்த ஆசையும் மனதால் நினைக்கப்படவோ, தொடரப்படவோ கூடாது. கோபம், பேராசை ஆகியவற்றைக் கொண்டு, உனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறியாமையில் நிறைந்தால் அதுவே மரணமாகும். மரணம் இப்படியே உண்டாகிறது என்பதை அறிந்தவன், அறிவைச் சார்ந்திருந்து, மரண அச்சத்தை ஊக்குவிப்பதில்லை. உண்மையில், மரணத்திற்கு ஆட்படும் உடல் அழிக்கப்படுவது போலவே, அறிவுக்கு {ஞானத்திற்கு} ஆட்படும் மரணமும் அழிகிறது.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “வேண்டுதல்கள் மற்றும் வேள்விகளால் மறுபிறப்பாள வர்க்கத்தினர் {பிராமண ஜாதியினர்} அடையத்தக்கவையும், விடுவிக்கும் திறன்பெற்றவையுமான மிகப்புனிதமான, அழிவற்ற பகுதிகளை {உலகங்களை} வேதங்கள் தீர்மானித்திருக்கின்றன. இதை அறிந்தும், ஒரு கற்ற மனிதர் (அறச்) செயல்களைச் செய்வதில்லையே [1]” என்று கேட்டான்.
[1] //திருதராஷ்டிரனின் கேள்வி மிக எளிமையானதே. அறிவையும், அதன் திறனையும் முனிவர் மெச்சிப் பேசியதும், “அறிவுக்கு இத்தகு திறன் இருக்குமாயின், கர்மங்களின் அதாவது செயல்களின் மதிப்புதான் என்ன? அதாவது வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வேண்டுதல்கள் {துதிகள்} மற்றும் வேள்விகளின் மதிப்புதான் என்ன?” என்று கேட்கிறான். {மூலத்தில் சொல்லப்பட்டுள்ள} இஜ்யாயம் {Ijyayam} என்பது இஜ்யத்தின் {Ijya} செயல்வடிவும் ஆகும். அது வேள்விகள், அறச் சடங்குகள், விழாக்கள் என்று பொருள் படும். {மூலத்தில் சொல்லப்பட்டுள்ள} பரார்த்தம் {Parartham} என்பதை நீலகண்டர் மோட்சபிரபகத்வம் என்பதாக, அதாவது விடுதலையை நோக்கிச் செல்லும் திறன் என்பதாக விளக்குகிறார். இங்கே குறிப்பிடத்தக்கது என்னவென்றால், விடுதலையைப் பற்றிய இந்து சிந்தனை {Hindu Idea}, நினைவில் அனுபவிக்கும் பேரின்பம் {அருள்} அல்ல. {நினைவால் அனுபவிக்கப்படும் பேரின்பம் விடுதலையைக் கொடுக்கும் என்பது ஓர் இந்துவின் சிந்தனையாக இருக்காது}. மாறாக, அது {இந்து சிந்தனை}, மறுபிறப்பு மற்றும் கர்மங்களின் {செயல்களின்} கடமைகளில் இருந்து பெறும் விடுதலையே பேரின்பம் என்கிறது. இது போன்று, வெறும் கர்மமே {செயலே}, வலி மற்றும் துன்பத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது என்றும், பரமாத்மாவோ {பரப்பிரம்மமோ}, செயல்கள், அல்லது பண்புகள் இல்லாமல் இருக்கிறான் என்கிறது. பிற தத்துவ அமைப்புகளில் பிற வகை முக்திகள் பேசப்பட்டாலும், கர்மத்தில் இருந்து விடுதலையே இந்தக் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விடுதலையின் பொருள் உருவமாகத் திகழ்கிறது.// என்கிறார் கங்குலி.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மையில், அறிவு இல்லாதவன் {ஞானம் இல்லாதவன்}, நீ குறிப்பிடும் பாதையிலேயே செல்கிறான். அங்கேதான் பேரின்பமும் விடுதலையும் இருக்கின்றன என்று வேதங்களும் சொல்கின்றன. ஆனால், தனது மனித உடலையே தானாகக் {சுயம் என்று} கருதும் ஒருவன், ஆசையைக் கைவிடுவதில் வென்றால், உடனே விடுதலையை {பிரம்மத்தை} அடைகிறான். எனினும், விடுதலைக்கு முயலும் ஒருவன், ஆசையைக் கைவிடாதிருந்தால், செயலுக்காகப் (பரிந்துரைக்கப்பட்ட) பாதையில் சென்று, தான் ஒரு முறை கடந்து சென்ற வழித்தடங்களின் வழியே திரும்பும் வாய்ப்புகளை அழிப்பதில் கவனம் கொள்ள வேண்டும்” என்றார் {சனத்சுஜாதர்} [2]
[2] //போஜ-மோக்ஷாக்ய-பிரயோஜனா சமன்யம் {Bhoja-mokshakhya-prayojana samanyam.} என்பதை “ஆம், உண்மையில் கர்மம் அல்லது செயல் விடுதலை நிலைக்கே வழிவகுக்கிறது. நீ சொல்லும் பகுதிகளில் பேரின்பமும் விடுதலையும் (அர்த்தஜாதம்) (Arthajata) இருக்கின்றன” என்று முனிவர் {சனத்சுஜாதர்} பதில் சொல்வதாக விளக்குகிறார் நீலகண்டர். இரண்டாவது வரியின் கட்டுமானம் நீளமாக இருக்கிறது பராத்மா அனிஹா (சன்) பரம் அயாதி; (அநயாத-து) மர்கேன மர்கன் நிஹத்ய பரம் (பிரயாதி). {Paratma aniha (san) param ayati; (anyatha-tu) margena margan nihatya param (prayati)}. ஒருவன் தனது உடலையே தானாகக் {சுயமாகக்} கருதுவதைப் பராத்மா என்கிறார் நீலகண்டர். அடுத்தடுத்த சுலோகங்களில் முனிவர் {சனத்சுஜாதர்}, தேஹின் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இது தொடர்பாகவே பார்த்தால் தேஹாபிமானின் என்ற சொல்லுடனும் இது பொருந்தும். முனிவரின் {சனத்சுஜாதரின்} பதில், “தனது ஆசையைக் கைவிடுவதால், ஒரு பொருள் முதல்வாதி {Materialist} {பௌதீகவாதி} பரமாத்மா என்ற நிலையை அடைகிறான்” என்கிறது. அதாவது விடுதலையை அடைகிறான். ஆசையைக் கைவிட்டால் செயல்பாடுகள் மற்றும் பண்புகள் ஆகிய இரண்டும் தொலைந்து போகும் என்பதாகவே இங்குப் பொருளை உணர முடிகிறது. எனவே, அது போன்ற ஓர் ஆன்மாவின் நிலை, செயல்பாடற்ற அமைதியை அடைந்து, பண்புகளையும் இழந்த நிலையே ஆகும். அதுவே பரமாத்மாவின் சரியான இயல்பும் ஆகும். மேலும், ஆசையை விடாமல் கோரப்படும் விடுதலை. அதாவது (வேண்டுதல்கள் மற்றும் வேள்விகள் போன்ற) செயல்களின் உதவியால், ஒவ்வொரு பாதையாகக் கைவிட்டு {அந்த விடுதலை} அடையப்பட வேண்டியிருக்கும். அஃதாவது அவ்வழியில் முயல்பவன், பரிந்துரைக்கப்பட்ட, விதிக்கப்பட்ட உறுதியான பாதையில் சென்று தான் கடக்கும் பாதையை மீண்டும் கடக்க நேராமல் கவனமாகச் செல்ல வேண்டும். அடுத்தச் சுலோகத்தில் விளக்கப்பட்டுள்ளது போல, செயல், பேரின்பம் மற்றும் விடுதலையுடைய பகுதிகளுக்கு அது வழிவகுக்கும் என்பது உண்மையே, ஆனால், அந்த நிலை மறையும் நிலை கொண்டது. தகுதி {புண்ணியம்} தீர்ந்ததும், அதன்விளைவாக அடையப்பட்ட நிலை அழிந்து போகும். அப்படி வீழும் மனிதன் மீண்டும் அச்செயலையே செய்ய வேண்டியிருக்கும். எனவே, நிலைத்த விடுதலையைப் பெற வேண்டுமாயின், மறுதொடக்கமாக வரும் செயல்களின் கடமைகளை அவன் துறக்க வேண்டும். அதாவது. தான் கடந்து சென்ற பாதையின் பகுதிகளை மீண்டும் கடக்க நேராமல் இருக்கக் கவனம் கொள்ள வேண்டும்.// என்கிறார் கங்குலி.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிறப்பற்ற பழமையானவனைத் {பரமாத்மாவைத் (அ) பரம்பொருளைத்} தூண்டுவது யார்? அனைத்திற்குள்ளும் தானே நுழைந்திருப்பதன் விளைவால் (ஆசையில்லாமல் இருக்கும் அவன்) அனைத்திலும் தானாக இருக்கும் இந்த அண்டத்தில், அவனின் {பரமாத்மாவின்} செயல் என்றோ, அல்லது அவனது மகிழ்ச்சி என்றோ என்ன இருக்க முடியும்? ஓ! கற்ற தவசியே {சனத்சுஜாதரே}, இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக?” என்று கேட்டான். [3]
[3] //திருதராஷ்டிரனின் இந்தக் கேள்வி, முன்னர்க் கேட்கப்பட்டதற்குத் தொடர்பில்லாமல் இருப்பது வெளிப்படை. எனினும், அந்த முனிவர் {சனத்சுஜாதர்} சொன்ன கடைசிப் பதிலுக்குத் துணையாக இந்தக் கேள்வி தொடரப்படுவதால், அதன் தொடர்பு நெருக்கமானதே. “ஒரு குறிப்பிட்ட செயல்முறை (அஃதாவது ஆசையைத் துறக்கும் செயல்) மூலம் சாதாரண ஆன்மா பரமாத்மா நிலையை அடைகிறது” என்று முனிவர் {சனத்சுஜாதர்} சொன்னதும், திருதராஷ்டிரன் மாற்றுக் கருத்தாக, “பரமாத்மாவே சாதாரண ஆன்மாவாகிறான்” என்பதை முன்வைக்கிறான். (நியாயப் பள்ளியின் {குறிப்பிட்ட நியாயசாஸ்திரங்களை நம்புபவர்களின்} சொற்றொடர்களில் நீலகண்டர் இதைச் சேர்க்கிறார்). வேறுபட்ட பொருட்கள், ஒரே இயல்பைக் கொண்டு, ஒரே தன்மையடையாமல், தன்னிடம் இல்லாத ஒன்றாக ஆக முடியாதல்லவா? இந்த நியாயத்தைப் பொருத்திப் பார்த்தால், சாதாரண ஆன்மா பரமாத்மாவாக ஆகும்போது, அவை வேறுபட்டிருப்பதில்லை {ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாகவே இருக்கிறது}. எனவே, பரமாத்மாவே சாதாரண ஆத்மாவாகிறான். இந்த உணர்விலேயே திருதராஷ்டிரன் கேட்கிறான். “பரமாத்மாவே சாதாரண ஆன்மா ஆகிறானென்றால், பரமாத்மாவை அப்படிச் செய்யத் தூண்டுவது யார் {அல்லது எது}? பரமாத்மா அனைத்தினுள்ளும் ஊடுருவி நுழைந்திருப்பதால், இவையனைத்தும் (இந்தப் பிரபஞ்சம் அனைத்தும்), அந்த ஆன்மாவே என்றால், பின், ஆசைகளற்றுப் பரமாத்மாவாகும்போது, செயலுக்கான சாத்தியங்கள் எங்கே இருக்கின்றன? (செயல் அல்லது வேலை என்பது ஆசையின் விளைவுகளாக இருக்கின்றனவே?). இதற்கு, இந்த அண்டமே தெய்வத்தின் லீலை (விளையாட்டு அல்லது ஏதோ ஒரு தத்துவத்தைச் சார்ந்தது) என்று பதிலுரைத்தால், இப்படிக் குறிப்பிடப்படும் ஒவ்வொரு விளையாட்டுக்கும், மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஏதோ ஒரு நோக்கம் இருக்கும் அல்லவா? அப்போது தெய்வத்தின் மகிழ்ச்சி என்பது என்னவாக இருக்க முடியும்? தெய்வம் தான் ஆசையற்று இருப்பவனாயிற்றே?// என்கிறார் கங்குலி.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “இரு வேறுபட்ட உயிரினங்களை (இங்கு இருப்பது போல) முழுமையாக அடையாளம் காண்பதில் ஏற்படும் பெரும் தடைகள், நிலைகளின் இணைப்புகளால் உருவாகின்றன (அவற்றின் சாரம் என்ன என்பது நிலைமைகளற்றது). இந்தப் பார்வை {தரிசனம்}, பிறப்பற்ற பழைமையானவனின் {பரமாத்மாவின் / பரம்பொருளின்} மேலாதிக்கத்தைக் குறைத்துவிடாது. மனிதர்களைப் பொறுத்தவரை, அவர்களும் நிலைமைகளின் இணைப்புகளாலேயே உற்பத்தியாகிறார்கள். தோன்றும் இவையனைத்தும் அழிவற்ற பரமாத்மாவே அன்றி வேறில்லை.
உண்மையில், உருமாற்றங்களுக்கு ஆட்படும் இந்த அண்டமே பரமாத்மாவால் படைக்கப்பட்டதுதான். அதன் சக்தி மற்றும் அதன் உடைமையாளர் ஆகியவற்றை அடையாளங்காண வேதங்கள் மற்றும் இன்னும் பிறவும் அதிகாரம் கொண்டிருக்கின்றன. [4]
உண்மையில், உருமாற்றங்களுக்கு ஆட்படும் இந்த அண்டமே பரமாத்மாவால் படைக்கப்பட்டதுதான். அதன் சக்தி மற்றும் அதன் உடைமையாளர் ஆகியவற்றை அடையாளங்காண வேதங்கள் மற்றும் இன்னும் பிறவும் அதிகாரம் கொண்டிருக்கின்றன. [4]
[4] வேறுபட்ட பொருட்களின் குறிப்பிட்ட அடையாளம் அல்லது முழுமையை ஏற்றுக் கொள்வதில் பெரும் தடை இருக்கிறது. அதாவது சாதாரண ஆத்மா மற்றும் பரமாத்மா ஆகியன வேறுபட்டிருப்பதால், அதன் அடையாளம் {என்ற அனுமானம்} ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உயிரினங்களைப் பொறுத்தவரை, அவை அநாதியோகத்தை {Anadi-Yoga} {அதாவது இடம், நேரம் போன்ற இன்னும் பிறவற்றின் நிலைகளோடு (நிலையுருவற்றுத் தன்னளவில் இருக்கும்) பரமாத்மாவுடன் இணைவதை} நோக்கி தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே, சாதாரண ஆன்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் இருக்கும் அடையாளம் முழுமையற்றதாகவும், குறிப்பிட்ட அடையாளம் அற்றதாகவுமே இருக்கிறது. இதன் விளைவாகவே, பரமாத்மா மேன்மையை இழப்பதில்லை. (இதற்கு எதிர் கோட்பாடு அந்த மேன்மையை அழிப்பதாகவே இருக்கும்).
பரமாத்மாவுக்கும் அண்டத்துக்குமான {பிரபஞ்சத்துக்குமான} தொடர்பு குறித்து இந்த {தத்துவ} பள்ளியின் சிந்தனையாளர்களுக்குப் பிடித்தமான இந்த ஒப்புமை, ஆகாசத்துடன் கடாக்ஷ்சம் கொள்ளும் இணைப்பில் இருந்து பெறப்பட்டதே. அஃதாவது, ஒரு பாத்திரத்தின் வரம்புகளின் மூலம் முழுமையான மற்றும் நிலையுருவற்ற வெளியின் {Space} எல்லை குறிக்கப்படுகிறது. ஒரு பெயரைக் கொண்டிருக்கும் இது {அந்த வெளி}, அந்தப் பாத்திரம் நகரும் போது, தானும் நகர்ந்து, அதற்குள் கட்டுப்பட்டு இருக்கிறது. அதே வேளையில், அந்தப் பாத்திரத்தில் இருக்கும் வெளி, வெளியே பரந்திருக்கும் வெளியின் ஒரு பகுதியாகிறது. வெளியில் இருக்கும் வெளியோ முழுமையாகவும், நிலையுருவற்றதாகவும், அசையாததாகவும், வரம்பற்றதாகவும் இருக்கிறது.