The arrival of Sanatsujata! | Udyoga Parva - Section 41 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 1)
பதிவின் சுருக்கம் : அறம் குறித்து மேலும் சொல்லுமாறு கேட்ட திருதராஷ்டிரனிடம், தான் சூத்திரன் என்பதால் இதற்கு மேல் சொல்ல முடியாதென்றும், அந்தணரான சனத்சுஜாதர் அவனது சந்தேகங்களைப் போக்குவார் என்றும் சொல்வது; விதுரன் தன்னை நினைப்பதை அறிந்த சனத்சுஜாதர் அங்கே வந்தது; திருதராஷ்டிரனின் சந்தேகத்தைப் போக்குவதே அவருக்குத் தகும் என விதுரன் சனத்சுஜாதரிடம் தெரிவித்தது...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “இன்னும் உன்னால் சொல்லப்பட வேண்டியது ஏதேனும் இருந்தால், ஓ! விதுரா, நான் கேட்கத் தயாராக இருக்கிறேன் சொல். இந்தச் சொற்பொழிவு, உண்மையில் அழகாகத்தான் இருக்கிறது” என்றான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! திருதராஷ்டிரரே, ஓ! பாரதக் குலத்தவரே, பழமையானவரும், இறப்பற்றவரும், நிலைத்த {நித்திய} பிரம்மச்சர்ய வாழ்வை வாழ்பவரும், அறிவாளிகளில் முதன்மையானவரும், “மரணம் என்பது இல்லை” என்று சொன்னவருமான சனத்சுஜாதர் {Sanatsujata}, வெளிப்படுத்தியும், வெளிப்படுத்தாமலும் உமது மனதில் நீர் கொண்டிருக்கும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துவார்” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “அந்த இறப்பற்ற முனிவர் {சனத்சுஜாதர்} என்னிடம் என்ன சொல்வார் என்பதை நீ அறிவாயா? ஓ! விதுரா, உண்மையில் அந்த அளவுக்கு ஞானம் {அறிவு} உன்னிடம் இருந்தால் அதை நீ எனக்குச் சொல்லலாமே?” என்று கேட்டான்.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “நான் சூத்திர வகையில் பிறந்தவன். எனவே, நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகமாகச் சொல்ல என்னைத் துணிய வைக்காதீர். எனினும், பிரம்மச்சர்ய வாழ்வை மேற்கொள்ளும் அந்த முனிவரின் புரிதல் முடிவிலியானது என்றே என்னால் கருதப்படுகிறது. பிறப்பாலோ, ஆழமான புதிர்களைக்கூட {எளிதாக} உரையாடும் தகுதியாலோ பிராமணனான ஒருவரால் தேவர்களின் நிந்தனை நேர்வதில்லை. இதற்காக மட்டுமே இது குறித்து நான் உம்மிடம் உரையாடவில்லை {உமது சந்தேகத்திற்கு விடை எனக்குத் தெரியும். ஆனால், நான் சூத்திரன் என்பதால் அதைச் சொல்லத் துணியவில்லை}” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! விதுரா, இந்த எனது உடலுடன் நான் எவ்வாறு அந்த இறப்பற்ற பழமையானவரைச் {சனத்சுஜாதரைச்-Sanatsujata} சந்திக்க இயலும்? அதை எனக்குச் சொல்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, விதுரன் அந்தக் கடும்நோன்புகள் கொண்ட முனிவரை {சனத்சுஜாதரைக்} குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான். தான் நினைக்கப்படுவதை அறிந்த அந்த முனிவர் {சனத்சுஜாதர்-Sanatsujata}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே தன்னை வெளிப்படுத்தினார். பிறகு, விதிமுறைகள் பரிந்துரைக்கும் சடங்குகளைச் செய்து, விதுரன் அவரை வரவேற்றான்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அந்த முனிவர் வசதியாக அமர்ந்ததும், விதுரன் அவரிடம் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சிறப்பு மிக்கவரே, என்னால் விளக்க முடியாத சந்தேகமொன்று திருதராஷ்டிரரின் மனதில் இருக்கிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்துவதே உமக்குத் தகும். உமது உரையாடலைக் கேட்கும் இந்த மனிதர்களின் தலைவர் {திருதராஷ்டிரர்}, தனது சோகங்களைக் கடந்து, ஆதாயம் மற்றும் இழப்பு, ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, முதுமை மற்றும் மரணம், அச்சம் மற்றும் பொறாமை, பசி மற்றும் தாகம், செருக்கு மற்றும் செழிப்பு, வெறுப்பு, உறக்கம், இச்சை {காமம்} மற்றும் கோபம், குறைவு மற்றும் அதிகரிப்பு ஆகிய அனைத்தையும் தாங்கிக் கொள்ளுமாறு செய்வீராக” என்றான் {விதுரன்}.