Who is a Brahmana! | Udyoga Parva - Section 42b | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 2)
பதிவின் சுருக்கம் : அறம் மற்றும் செயல்பாடுகளின் திறன் குறித்துத் திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் வினவுவது; அறப்பயிற்சி மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டுமே மனிதனுக்கு வெற்றியைத் தரும் என்று சனத்சுஜாதர் சொல்வது; மண்ணுலகச் செழிப்பு மற்றும் விண்ணுலகச் செழிப்பு ஆகியவற்றைச் சனத்சுஜாதர் சொல்வது ...
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “இவ்வுலகில், சிலர் அறம் பயில்கிறார்கள், சிலர் செயல் அல்லது கர்மத்தைத் துறக்கிறார்கள் (சந்நியாச யோகம் என்று அழைக்கப்படுவதை மேற்கொள்கிறார்கள்). (அறம் பயில்வோரை மதித்து) நான் கேட்கிறேன். தீமையை அழிக்கும் திறன் அறத்திற்கு இருக்கிறதா? அல்லது தீமையால் அது {அறம்} அழிவுக்குள்ளாகிறதா?”
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “அறத்தின் கனிகள் {பலன்கள்}, (முற்றான) செயலின்மை ஆகிய இரண்டும் அந்த வகையில் (விடுதலை பெறும் வகையில்) பயனுடையதே. உண்மையில், {இந்த} இரண்டும் விடுதலையை அடைவதற்கு உறுதியான வழிமுறைகளே. எனினும், அறிவுள்ள ஒருவன் {ஞானி}, அறிவால் (செயலின்மையால்) வெற்றியை அடைகிறான். மறுபுறம், ஒரு பொருள்முதல்வாதி (செயலால்) தகுதியை {புண்ணியத்தை} அடைந்து, அதன் விளைவால் விடுதலையை அடைகிறான். (அவனது நாட்டத்தின் போக்கில்) அவன் பாவத்துக்கும் ஆட்படுகிறான். நிலையற்றவையான அறம் மற்றும் மறம் {தீமை} ஆகிய இரண்டின் கனிகளையும் {பலன்களையும்} அடையும் செயல்பாடுள்ள ஒரு மனிதன் {செயலாற்றுபவன்}, (அறவோன் மற்றும் பாவி ஆகியோருக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டுக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதால்), தனது முந்தைய அறங்கள் மற்றும் மறங்களின் விளைவால், மீண்டும் செயலுக்கு அடிமையாகிறான். எனினும், செயல்புரியும் ஒரு மனிதன் அறிவுடையவனாக இருந்தால், அவன் தனது பாவங்களை அறச்செயல்கள் மூலம் அழிக்கிறான். எனவே, அறம் வலிமையானதே. எனவே, செயல்பாடுள்ள மனிதனும் வெற்றியடைகிறான்” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “அறம் பயிலும் இருபிறப்பாளர்கள் {துவிஜர்கள்}, தங்கள் சொந்த அறச் செயல்களின் கனிகளால் {பலன்களால்} அடையத்தக்க அழிவற்ற உலகங்களை, அதனதன் படிநிலைகளின்படி {தரவரிசைப்படி} எனக்குச் சொல்லும். அதே போன்ற பிற உலகங்களையும் எனக்குச் சொல்லும். ஓ! கற்ற அய்யா {மேதையே} {வித்வானே}, (மனிதர்களின் இதயத்தால் இயல்பாக விரும்பப்படுவதும், எவ்வளவுதான் தலையிட்டாலும் பாவத்தைத் தருகின்ற) செயல்பாடுகளைக் {கர்மாவை} குறித்து நான் கேட்க விரும்பவில்லை!” என்றான் {திருதராஷ்டிரன்}
{தெய்வீக செழிப்பு}
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “பலமிக்கவர்கள் தங்கள் பலத்தில் பெருமை கொள்வதைப் போல, தங்கள் யோகப் பயிற்சிகளில் பெருமை கொள்ளும் இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, இங்கிருந்து விடைபெற்றுப் பிரம்மலோகத்தில் ஒளிர்கிறார்கள். வேள்விகளையும், வேதச் சடங்குகளையும் பெருமையுடன் செய்யும் இருபிறப்பாளர்கள், அதன் பலனாக அறிவை அடைந்து, அந்தச் செயலின் விளைவால் இந்த உலகத்தில் இருந்து விடுதலையடைந்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருக்கும் உலகத்திற்குச் செல்கிறார்கள். மேலும் வேதமறிந்தவர்களில் சிலர், (வேதங்களால் விதிக்கப்பட்ட) வேள்விளையும் சடங்குகளையும் செய்வது கட்டாயம் (அவற்றைச் செய்யாமல் விடுவது பாவம்) என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அக வளர்ச்சிக்கு முயல்பவர்கள், வெளிப்புற வடிவங்களில் ஒன்றியிருப்பவர்கள், (அறத்தின் நிமித்தமாகவே இந்தச் சடங்குகளைச் செய்கிறார்கள், குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக இவற்றை அவர்கள் செய்வதில்லை என்பதால்), {இவர்களுக்குச் சில மரியாதைகள் அளிக்கப்பட வேண்டுமென்றாலும்} இவர்கள் மிக உயர்வாகக் கருதப்பட வேண்டியவர்கள் அல்ல.
மழைக்காலத்தில் ஓர் இடத்தில் உள்ள புல்லையும் நாணலையும் போல, ஓர் அந்தணனுக்குத் தேவையான உணவும், நீரும் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கே (சொற்பமான வழிமுறைகளையே கொண்ட இல்லறவாசிகளை வேதனைப்படுத்தாமல்) ஒரு யோகி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் அவன் பசி மற்றும் தாகத்தால் தனது சுயத்தை ஒடுக்காமல் இருக்க வேண்டும்.
ஒருவனின் மேன்மையைத் தெளிவு படுத்தும் இடத்தில், மற்றவனின் வெறுப்பைச் சம்பாதிக்கும் சிரமமும், ஆபத்தும் ஒருவனுக்கு இருந்தால், தனது மேன்மையை அறிவிக்காதவனே அறிவிப்பனை விடச் சிறந்தவனாவான். அடுத்தவன் தனது மேன்மையை வெளிப்படுத்தும்போது, அதைக் கண்டு துன்புறாதவன் அளிக்கும் உணவும், அந்தணர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்காமல் உண்ணாதவன் அளிக்கும் உணவும் நீதிமிக்கவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது. எப்படி ஒரு நாய் பல சமயங்களில் தன் சொந்த வெளியேற்றங்களையே {கழிவுகளை} உண்கிறதோ, அதே போல அந்த யோகியர், தங்கள் முக்கிய நிலையை வெளிப்படுத்தாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் சொந்த வாந்தியையே {Vomit} உண்கின்றனர்.
{அந்தணன்}
இரத்த உறவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு, தான் செய்யும் அறப் பயிற்சிகளை அவர்கள் {உறவுகள் கூட} எப்போதும் அறியாதிருக்க விரும்புபவனையே அந்தணன் என்று ஞானியர் அறிகிறார்கள். நிலையற்ற, குணங்களற்ற, மாற்றமற்ற, எந்த வகையான இருமையுமற்ற தனியனான பரமாத்மாவை அறிவதை விட ஓர் அந்தணன் வேறு எதை அறிய வேண்டும்? இத்தகு பயிற்சிகளின் விளைவாக ஒரு க்ஷத்திரியன் பரமாத்மாவை அறிந்து கொண்டு, தன்னைத் {அந்தப் பரமாத்மாவைத்} தனது சொந்த ஆன்மாவிலேயே காணலாம். ஆத்மா நடிப்பதாகவும் சுயத்தில் அதை உணர்வதாகவும் கருதி, ஆன்மாவிடமிருந்து அதன் குணங்களை அபகரிக்கும் ஒரு திருடன் என்ன பாவங்களைத்தான் செய்யமாட்டான்? {ஒரு விதமாக இருக்கும் ஆத்மாவை, மற்றொரு விதத்தில் இருப்பதாக அறிந்து, அந்த ஆத்மாவை அதன் குணங்களிடமிருந்து அபகரிக்கும் ஒரு திருடனால் எந்தப் பாவம் செய்யப்பட்டத்தகாது?}.
ஓர் அந்தணன் முயற்சி அற்றவனாக இருக்க வேண்டும், பரிசுகளை ஏற்கக்கூடாது, நீதிமான்களின் மதிப்பை வெல்ல வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும், வேதங்களை அறிந்திருந்தாலும் அறியாதவன் போல இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவனால் அறிவை {ஞானத்தை} அடைந்து பிரம்மத்தை அறிய முடியும். மண்ணுலக {மனித} செல்வத்தில் ஏழையாகவும், விண்ணுலக {தெய்வீக} செல்வம் மற்றும் வேள்விகளில் செல்வந்தனாகவும் இருப்பவர்கள் வெல்லப்பட முடியாதவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் ஆகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிரம்மத்தின் உருவம் {உடல்=சரீரம்} என்றே அவர்கள் கருதப்பட வேண்டும். (வேள்விகளைச் செய்வோர்) விரும்பும் அனைத்து வகையான பொருட்களையும் அளிக்கும் தேவர்களைச் சந்திப்பதில், (வேள்விகள் செய்வதால்) வென்றவனேயானாலும், பிரம்மத்தை அறிந்தவனுக்கு அவன் இணையாக முடியாது. ஏனெனில், வேள்விகளைச் செய்பவனோ முயற்சிக்கு ஆளாகிறான். (அதே வேளையில் பிரம்மத்தை அறிந்தவன் அத்தகு முயற்சிகள் ஏதுமில்லாமலே அவனை {அந்த தெய்வத்தை} அடைகிறானே). செயல்பாடுகள் அற்ற ஒருவன் தெய்வங்களால் மதிக்கப்பட்டால், அவனே உண்மையில் மதிப்படைந்தவனாகச் சொல்லப்படுகிறான். பிறரால் மதிக்கப்பட்டவன், தானே மதிக்கப்பட்டதாக எப்போதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் பிறரால் மதிக்கப்படாத போதும் வருந்தக்கூடாது.
தங்கள் கண் இமைகளைத் திறந்து மூடுவதைப் போலவே, மக்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றவாறு செயல்படுகிறார்கள்; கற்றோர் மட்டுமே பிறருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மதிப்பைப் {மரியாதையைப்} பெற்ற ஒருவன் இப்படியே {அதை} நினைத்துக் கொள்ள வேண்டும்.
பாவம் செய்பவர்களும், ஏமாற்றுத்தனமுள்ளவர்களுமாக இருக்கும் இவ்வுலகத்தின் மூடர்கள், மரியாதைக்குத் தகுந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை; மறுபுறம், அத்தகு மனிதர்களுக்கு அவர்கள் அவமரியாதையே செய்கிறார்கள். உலகின் மதிப்பும் தவமும் (மௌனப் பயிற்சிகளும்) ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியாது. மரியாதைக்குரியவர்களுக்கே இவ்வுலகம் என்றும், அதே வேளையில் தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்களுக்குப் பிற உலகம் என்றும் அறிவாயாக. ஓ க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, இவ்வுலகத்தில், மகிழ்ச்சி (உலகின் மதிப்பு) மண்ணுலகச் செழிப்பில் வசிக்கிறது. எனினும், பிந்தையது {மண்ணுலகச் செழிப்பு}, {தெய்வீக அருளை அடையத்} தடையாகும். மறுபுறம், உண்மையான ஞானமில்லாதவனால் தெய்வீகச் செழிப்பை அடையவே முடியாது. இந்த வகைச் செழிப்பை அடைய, காக்க கடினமான பல்வேறு வகையான வாயில்கள் இருக்கின்றன என்று நீதிமான்கள் சொல்கின்றனர். அவை {வாயில்கள்}, உண்மை, நேர்மை, பணிவு, தற்கட்டுப்பாடு, மனத்தூய்மை, நடத்தை, (வேத) அறிவு ஆகியனவாகும். இந்த ஆறும் மாயை அறியாமை ஆகியவற்றை அழிக்கவல்லவையாகும்” என்றார் {சனத்சுஜாதர்}.