The speech of Arjuna! | Udyoga Parva - Section 48a | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் என்ன சொல்லியனுப்பினான் என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; யுதிஷ்டிரன் அனுமதியின் பேரில், கிருஷ்ணனின் முன்னிலையில் அர்ஜுனன் பேசியதை சஞ்சயன் சொல்ல ஆரம்பித்தது? நாட்டைத் திருப்பிக் கொடாவிட்டால் போர் உறுதி என்றும், யுதிஷ்டிரன், பீமசேனன், நகுலன் சகாதேவன் ஆகியோரின் வீரத்தை நேரில் பார்க்கும்போது, நேரப்போகும் போரைக் குறித்துத் துரியோதனன் வருந்துவான் என்று அர்ஜுனன் சொன்னதாகச் சஞ்சயன் சொல்வது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, அழிவிலா வலிமை கொண்டவனும், போர் வீரர்களின் தலைவனும், தீயோரின் உயிரை அழிப்பவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதை என் பிள்ளை {துரியோதனன்} மற்றும் இந்த மன்னர்கள் முன்னிலையில் சொல்லும்படி நான் உன்னைக் கேட்கிறேன்” என்றான்.
அதற்குச் சஞ்சயன், “போர் செய்யும் ஆவலில் இருக்கும் உயர் ஆன்ம {மகாத்மாவான} அர்ஜுனன், கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கையில், யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் சொன்ன வார்த்தைகளைத் துரியோதனன் கேட்கட்டும். (போரிட) அஞ்சாதவனும், தனது கரங்களின் வலிமையை உணர்ந்தவனும், போரிட ஆவலுள்ள வீரனுமான கிரீடி {அர்ஜுனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் என்னிடம் இப்படியே பேசினான்.
“ஓ, சூதரே {சஞ்சயரே}, எப்போதும் எனக்கு எதிராகப் போரிட விரும்புபவனும், சிறுமதி கொண்டவனும், வாழ்நாள் எண்ணப்பட்டவனும், தீய பேச்சுடையவனும், தீய ஆன்மா கொண்டவனுமான சூத மகன் {கர்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், குருக்கள் அனைவரின் முன்னிலையில், பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடக் கூடியிருக்கும் மன்னர்கள் கூடுகைக் கேட்டுக் கொண்டிருக்கையில், திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} இவற்றைச் சொல்வீராக. நான் இப்போது சொல்லும் அனைத்து வார்த்தைகளையும், ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய அம்மன்னன் {துரியோதனன்} நன்றாகக் கேட்கும்படி சொல்வீராக” என்று {அர்ஜுனன்} சொன்னான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வஜ்ரத்தைத் தாங்கிய தங்கள் தலைவனின் {இந்திரனின்} வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கும் தேவர்களைப் போலவே, பாண்டவர்களும், ஸ்ரீன்ஜயர்களும் {ஸ்ருஞ்சயர்களும்}, கிரீடியால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்டனர். காண்டீவம் தாங்குபவனும், போரிடும் ஆவலுள்ளவனும், தாமரை மலரைப் போலக் கண்கள் சிவந்தவனுமான அர்ஜுனன் பேசிய வார்த்தைகளே இவையே!
“அஜமீட குலத்தைச் சேர்ந்தவரான மன்னன் யுதிஷ்டிரருக்கு, திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, அவருடைய நாட்டைத் திரும்ப ஒப்படைக்கவில்லையென்றால், ஏதோ சில பாவச் செயல்களுக்கான விளைவுகளை (உண்மையில்) திருதராஷ்டிரர் மகன்கள் இன்னும் அறுவடை செய்யவில்லை என்றே பொருள்.
ஏனெனில், சொர்க்கத்தையும் பூமியையும் எரிக்கவல்லவர்களான பீமசேனர், அர்ஜுனன், அசுவினிகள் {நகுல சகாதேவர்கள்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சினியின் மகன் {சாத்யகி}, மற்றும் தவறிழைக்காத கரங்கள் கொண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, இந்திரனைப் போன்ற யுதிஷ்டிரர் ஆகியோருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்தில் அவர்களுடன் போரை விரும்புவது அத்தகையே நிலையையே {செய்த பாவங்களை அறுவடை செய்யும் நிலையையே} கொடுக்கும்.
திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} போரை விரும்பினால், பாண்டவர்களின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறியதாவே ஆகும். எனவே, பாண்டுவின் மகன்களுக்கு அமைதியை முன்மொழியாதீர். விரும்பினால் {அவர்களைப்} போரிடச் செய்யும்.
நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருந்த நாட்களில் அறம்சார்ந்த பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர், காட்டில் துயரப் படுக்கையில் கிடந்தார்; ஓ!, இப்போது, அதைவிட வலிமிகுந்த படுக்கையில் வெறும்பூமியில் {வெறுந்தரையில்} துரியோதனன் கிடக்கட்டும். உயிரிழந்து, தனது கடைசிப் படுக்கையாக அவன் {துரியோதனன்}அதில் {படுக்கையில்} கிடக்கட்டும்.
அநீதிமிக்கத் தீயவனான துரியோதனனால் ஆளப்படும் மனிதர்களை, அடக்கம், அறிவு, தவம், சுயக்கட்டுப்பாடு, வீரம் மற்றும் அறத்தால் கட்டுப்படுத்தப்பட்டும் வலிமை ஆகியவற்றைக் கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தம் பக்கத்திற்கு வென்றெடுப்பாராக.
ஏராளமாக ஏமாற்றப்பட்டாலும், பணிவு, நீதி, தவம், சுயக்கட்டுப்பாடு மற்றும் அறத்தால் கட்டுப்படுத்தப்படும் வீரம் ஆகியவற்றைக் கைக்கொண்டு எப்போதும் உண்மையே பேசும் எங்கள் மன்னன் {யுதிஷ்டிரர்}, அந்தப் பெரும் தவறுகளைப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு, அவை யாவையும் மன்னித்தார்.
முறையான கட்டுப்பாட்டுக்குள் ஆன்மாவை வைத்திருக்கும் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரர்}, ஆண்டாண்டு காலாமாகத் திரண்டிருக்கும் தனது பயங்கரமான கோபத்தை எப்போது கௌரவர்கள் மேல் எரிச்சலுடன் செலுத்துவோரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
கோபத்தால் அழற்சியடையும் யுதிஷ்டிரர், சுற்றி இருக்கும் உலர்ந்த புற்களை வெப்பகாலத்தில் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பு போல, திருதராஷ்டிரர் கூட்டத்தைத் தனது கண் பார்வையாலேயே எரித்துவிடுவார். தேரில் இருந்துகொண்டு, கைகளில் கதாயுதத்துடன் தனது கோபத்தின் நஞ்சை உமிழும், பயங்கர உந்துவேகம் கொண்ட கோபக்கார பாண்டவரான பீமசேனரைத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, அப்போது துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான்.
எப்போதும் படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், கவசம் பூண்டவரும், பகை வீரர்களைச் சாய்கும்போது தன் தொண்டர்களாலேயே காணப்படாதவரும், எதிரியின் அணிகளுக்கு யமனைப் போல அழிவை உண்டாக்குபவருமான பீமசேனரை உண்மையில் எப்போது காண்பானோ, அப்போது பெரும் வீணனான துரியோதனன் எனது வார்த்தைகளை நினைவு கூர்வான். மலைச்சிகரங்களைப் போல இருக்கும் யானைகள், உடைந்த மிடாக்களில் {cask = பீப்பாய்} இருந்து பாயும் நீரைப் போல, தலைகள் உடைந்து இரத்தம் பாயும்படி பீமசேனரால் சாய்க்கப்படுவதை எப்போது பார்ப்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பயங்கர முகத்தோற்றதோடும், கைகளில் கதாயுதத்தோடும், பசுக்கூட்டத்தின் மீது விழும் பெரும் சிங்கத்தைப் போல, திருதராஷ்டிர மகன்கள் மீது உக்கிரமாய் விழும் பீமர், எப்போது அவர்களைக் கொல்வாரோ, அப்போது துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான்.
பெரும் ஆபத்திலும் பயமில்லாமல் போரிடுபவரும், ஆயுதங்களில் நிபுணரும், போரில் பகைவர் படையைக் கலங்கடிப்பவரும், தனது தேரில் தனியராக நின்று, எதிரியின் மேன்மைமிக்கத் தேர்க் கூட்டங்களையும், தரைப்படையினரையும் தனது கதாயுதத்தால் நசுக்குபவரும், இரும்பு போன்ற வலிமையான தனது சுருக்குகளால் எதிரிப்படையின் யானைகளைக் கைப்பற்றுபவருமான பீமர், துணிவுமிக்க வனவாசியொருவன் கோடரியால் காட்டை வெட்டிப்போடுவதைப் போல, திருதராஷ்டிரர்கள் கூட்டத்தை எப்போது வெட்டிப் போடுவாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
நெருப்பினால் எரிக்கப்பட்ட கூரைவீடுகள் நிறைந்த கிராமத்தைப் போலவும், மின்னலால் எரிக்கப்பட்ட விளைந்த பயிரைப் போலவும், தார்த்தராஷ்டிரக் கூட்டம் எரிக்கப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, பரந்த தனது பெரிய படை சிதறிப் போவதையும், அதன் தலைவர்கள் கொல்லப்படுவதையும், அச்சத்தால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடுவதையும், அனைத்து வீரர்களும் புழுதியில் சாய்க்கப்படுவதையும் பீமசேனரால் தீய்க்கப்படுவதையும் உண்மையில் எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
அற்புத சாதனைகள் கொண்ட போர்வீரனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், மிகச்சாதுர்யமாக நூற்றுக்கணகான கணைகளை அடிப்பவனுமான நகுலன், துரியோதனனின் தேர்வீரர்களை எப்போது சிதைப்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
வாழ்வின் அனைத்து வசதிகளையும் ஆடம்பரங்களையும் அனுபவித்துப் பழக்கப்பட்ட நகுலன், காடுகளில் நீண்ட காலம் தான் துன்பப்படுக்கையில் உறங்க நேர்ந்ததை நினைவுகூர்ந்து, கோபம் கொண்ட பாம்பைப் போல, தனது கோபமெனும் நஞ்சை எப்போது உமிழ்வானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஓ! சூதரே {சஞ்சயரே}, தங்கள் உயிர்களையே விடத் தயாராக இருக்கும் (கூட்டணியில் உள்ள) ஏகாதிபதிகள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரால் தூண்டப்பட்டால், தங்கள் பிரகாசமிக்கத் தேர்களில் (பகை) படைகளை எதிர்த்து, உக்கிரமாய் முன்னேறி வருவார்கள். இதைக் காணும்போது, திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஆயுதங்களை நன்கு அறிந்தவர்களும், வயதில் இளையோராக இருந்தாலும், செயல்களால் அப்படி இல்லாதவர்களுமான (திரௌபதியின்) {எங்கள்} ஐந்து வீர மகன்கள், உயிருக்கு அஞ்சாமல் விரைந்து வருவதை குரு இளவரசன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
படுகொலை புரியும் நோக்கோடு, ஒலியற்ற சக்கரங்கள் கொண்டதும், தடுக்கமுடியாததும், தங்க நட்சத்திரங்கள் கொண்டதும், நன்கு பழக்கப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படுவதுமான தனது தேரில் ஏறிவருபவனும், ஆயுதங்களில் திறன்கொண்ட போர்வீரனுமான சகாதேவன், அச்சுறுத்தும் பேரழிவுக்கு மத்தியில் தனது தேரில் அமர்ந்து வருவதையும், இடதுபுறமும், வலதுபுறமும் திரும்பி, அனைத்துப் புறங்களிலும் எதிரிகள் மேல் விழுவதையும் எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பணிவுள்ளவனே ஆனாலும் பலமிக்கவனும், போரில் திறம் பெற்றவனும், உண்மையுள்ளவனும், அறநெறிகளின் அனைத்து வழிகளையும் அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பும், இயற்கையான தூண்டலும் கொண்டவனுமான சகாதேவன், கடும் மோதலில் காந்தாரியின் மகன் {துரியோதனன்} மீது விழுந்து, அவனது தொண்டர்கள் அனைவரையும் உண்மையில் எப்போது நிர்மூலமாக்குவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்” {என்றான் அர்ஜுனன்}.