Sanjaya, in the assembly hall! | Udyoga Parva - Section 47 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 7){யானசந்தி பர்வம் -1}
பதிவின் சுருக்கம் : சனத்சுஜாதருடனும், விதுரனுடனும் இரவெல்லாம் உரையாடிய திருதராஷ்டிரன் காலையில் சபைக்கு வந்தது; பல மன்னர்களும், இளவரசர்களும் அந்தச் சபையில் கூடியது; அந்தச் சபா மண்டபத்தின் அழகு குறித்த வர்ணனை; சஞ்சயன் வருகையை வாயில் காவலன் அறிவிப்பது; சபையில் நுழைந்த சஞ்சயன் அந்தச் சபையோருக்குப் பாண்டவர்கள் சொல்லியனுப்பியபடி வணக்கங்களைச் சொன்னது; திருதராஷ்டிரன் சொல்லியனுப்பியதைத் தான் எவ்வாறு பாண்டவர்களிடம் எடுத்துரைத்தான் என்பதைச் சொல்ல ஆரம்பிப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார் “இப்படிச் சனத்சுஜாதரிடமும், கற்றவனான விதுரனிடமும் உரையாடியபடி அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} அந்த இரவைக் கழித்தான். இரவு கடந்ததும் (திரும்பி வந்திருக்கும்) சூதனை {சஞ்சயனைக்} காண, அனைத்து இளவரசர்களும், தலைவர்களும் மகிழ்ச்சியான இதயங்களுடன் அந்தச் சபா மண்டபத்திற்குள் நுழைந்தனர். அறமும் பொருளும் {தர்மார்த்தங்கள்} நிரம்பிய பார்த்தனின் {அர்ஜுனனின்} செய்தியைக் கேட்கும் ஆவலுடன் அந்த அழகிய சபைக்கு அனைத்து மன்னர்களும் திருதராஷ்டிரனின் தலைமையில் சென்றனர்.
கறைபடியாத வெண்மையுடன், அகன்றிருந்த அது {சபா மண்டபம்}, தங்கத் தரையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சந்திரனைப் போன்ற பிரகாசத்துடனும், அதீத அழகுடனும் இருந்த அதில் {சபா மண்டபத்தில்} சந்தன நீர் தெளிக்கப்பட்டிருந்தது. அதில் தங்கத்தாலும், மரத்தாலும், பளிங்காலும், தந்தத்தாலும் ஆன அற்புத இருக்கைகள் பரந்திருந்தன. அனைத்து இருக்கைகளிலும் அற்புதமான விரிப்புகள் போர்த்தப்பட்டிருந்தன.
பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், கிருதவர்மன், ஜயத்ரதன், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், பேரறிஞனான விதுரன், பெரும் தேர் வீரனான யுயுத்சு ஆகிய வீர மன்னர்கள் அனைவரும் கூட்டாக, ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் தலைமையை ஏற்று, அந்தப் பெரும் அழகுடைய சபைக்குள் நுழைந்தனர். துச்சாசனன், சித்திரசேனன், சுபலனின் மகனான சகுனி, துர்முகன், துஸ்ஸகன், கர்ணன், உலூகன் [1], விவிம்சதி ஆகியோர் குருக்களில் கோபக்கார மன்னனான துரியோதனனைத் தலைமையாகக் கொண்டு, ஓ !ஏகாதிபதி {ஜனமேஜயா}, சக்ரனை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலச் சபைக்குள் நுழைந்தனர்.
[1] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.
இரும்புக் கதாயுதங்கள் போன்ற கரங்களையுடைய வீரர்களால் நிறைந்த அந்தச் சபை, சிங்கங்கள் நிறைந்த மலைக்குகையைப் போலக் காணப்பட்டது. பெரும்பலமும், சக்தியும் சூரியனைப் போன்ற பிரகாசமும் மிக்க இந்த வில்லாளிகள் அனைவரும் சபைக்குள் நுழைந்ததும், அந்த அழகிய இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். அந்த மன்னர்கள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, “பாண்டவர்களிடம் அனுப்பப்பட்ட தேர் இங்கே வந்து கொண்டிருக்கிறது. நன்கு பழக்கப்பட்ட சிந்து இன குதிரைகளின் துணையால் நமது தூதர் {சஞ்சயன்} விரைவாகத் திரும்பி வருகிறார்” என்று அந்தச் சூத மகனின் {சஞ்சயனின்} வருகையை வாயில் காவலன் அறிவித்தான்.
காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சஞ்சயன், வேகமாக அந்த இடத்தை அடைந்து, தேரைவிட்டு இறங்கி, உயர்ஆன்ம மன்னர்கள் நிறைந்த அந்தச் சபைக்குள் நுழைந்தான். பிறகு அந்தச் சூதன் {சஞ்சயன்}, “கௌரவர்களே, பாண்டவர்களிடம் சென்ற நான், வந்து விட்டேன் என்பதை அறிவீர்களாக. ஒவ்வொருவர் வயதுக்குத் தக்கப்படி அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளைப் பாண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். தங்கள் பதில் மரியாதைகளைத் தெரிவித்த பிருதையின் மகன்கள் {குந்தியின் பாண்டவர்கள்}, வயது முதிர்ந்தோரையும், தங்கள் வயதுக்கு இணையானோரையும், இளையோரையும், அவர் அவர்களுக்குத் தக்கப்படி தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். மன்னர்களே, நான் இந்த இடத்தை விட்டு சென்ற பிறகு, முன்பே திருதராஷ்டிரர் சொல்லி அனுப்பிய படி, பாண்டவர்களிடம் என்ன சொன்னேன் என்பதைக் கேளுங்கள்” என்றான் {சஞ்சயன்}.