The Rudrathandava of Bhimasena! | Drona-Parva-Section-154 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 03)
பதிவின் சுருக்கம் : சிபியைக் கொன்ற துரோணர்; கலிங்கர்களின் இளவரசன், துருவன், ஜயராதன் ஆகியோரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்களான துர்மதன், துஷ்கர்ணன் ஆகியோரைத் துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்ற பீமன்; குரு படையை விரட்டியடித்த பீமசேனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவரும், அளவிலா சக்தி கொண்டவரும், (ஜெயத்ரதன் கொலையைப்} பொறுத்துக் கொள்ள முடியாதவருமான துரோணர், கோபத்துடன் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நுழைந்த போது நீங்கள் யாவரும் என்ன நினைத்தீர்கள்?(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்?(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான்? சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான்?(3, 4)
வரமளிக்கும் வீரரும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவருமான அவரை {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? ஓ! சூதா {சஞ்சயா}, போரில் ஈடுபடும்போது, அந்த வீரருக்கு {துரோணருக்குப்} பின்னால் நின்ற வீரர்கள் யாவர்? போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார்?(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ! சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்?(7)
அந்த இரவில் ஒன்றாகச் சேர்ந்திருந்த துருப்புகள் அனைத்தும், ஒன்று சேர்ந்திருந்த பெரும் தேர்வீரர்கள் அனைவரும், (துரோணரால்) தனித்தனியாகக் கலங்கடிக்கப்பட்ட போது, உங்களில் புத்திசாலியான எந்த மனிதர்கள் அங்கே இருந்தனர்?(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்?(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ! சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய்?” என்றான் {திருதராஷ்டிரன்}.(12)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்து வந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பூமியின் தலைவர்கள் அனைவரும் இறந்தோரின் உலகத்திற்குள் (அவரால்) அனுப்பப்பட்டனர்.(15) அப்போது பெரும் ஆற்றலைக் கொண்டவனான மன்னன் சிபி, சினத்தால் நிறைந்து, (பகைவர் தரப்பு போராளிகளை) இப்படிக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(16)
[1] கங்குலியின் பதிப்பில் world of spirits என்றும், மன்மதநாதத்தரின் பதிப்பில் region of the departed spirits என்றும் இருக்கிறது. வேறொரு பதிப்பில், “பிரேதலோகத்திற்கு அனுப்பி வைத்தார்” என்றிருக்கிறது.
பாண்டவர்களின் அந்தப் பெரும் தேர்வீரன் {சிபி} முன்னேறுவதைக் கண்ட துரோணர், முழுவதும் இரும்பாலான பத்து கணைகளால் அவனைத் துளைத்தார்.(17) எனினும் சிபி, கங்க இறகுகளாலமைந்த சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளால் பதிலுக்குத் துரோணரைத் துளைத்தான். மேலும் சிரித்துக் கொண்டேயிருந்த அவன் {சிபி}, ஒரு பல்லத்தால், துரோணருடைய தேரின் சாரதியையும் வீழ்த்தினான்.(18) பிறகு துரோணர் சிறப்புமிக்க அந்தச் சிபியின் குதிரைகளைக் கொன்று, அவனது தேரின் சாரதியையும் கொன்று, தலைக்கவசத்துடன் கூடிய சிபியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினார்.(19) பிறகு துரியோதனன், துரோணரின் தேருக்கு ஒரு சாரதியை விரைவாக அனுப்பினான். அவரது குதிரைகளின் கடிவாளங்களைப் புதிய மனிதன் ஏற்றதும், துரோணர் தம் எதிரிகளை எதிர்த்து மீண்டும் விரைந்தார்.(20)
கலிங்கத்துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனுடைய [2] மகன், பீமசேனனால் தன் தந்தை கொல்லப்பட்டதால் சினத்தால் நிறைந்து பின்னவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(21) ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {சுருதாயுஷின் மகன்}, ஏழால் {எழு கணைகளால்} மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான். மேலும் அவன் (பீமனுடைய தேரின் சாரதியான) விசோகனை மூன்று கணைகளாலும், பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தை ஒன்றாலும் தாக்கினான்.(22) அப்போது சினத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து, எதிரியின் தேருக்குக் குதித்து, கலிங்கர்களின் அந்தக் கோபக்கார வீரனை {சுருதாயுஷின் மகனைத்} தன் கை முட்டிகளை மட்டுமே கொண்டு கொன்றான்.(23) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் {பீமனால்}, அவனது கை முட்டிகளை மட்டுமே கொண்டு இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனியாகக் கீழே பூமியில் விழுந்தன.(24)
[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீஷ்ம பர்வம் பகுதி 54ல் விவரிக்கப்படும் இரண்டாம் நாள் போரில் பீமனால் கொல்லப்பட்டான். இப்போது நடப்பது பதினான்காம் நாளின் இரவு நேரப் போராகும்.
கர்ணன் மற்றும் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் சகோதரன் ஆகியோரால், (இன்னும் பிறராலும்) பீமனின் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கூரிய கணைகளால் பீமசேனனைத் தாக்கத் தொடங்கினர்.(25) (தான் நின்று கொண்டிருந்த) எதிரியின் தேரைக் கைவிட்ட பீமன், துருவனின் {துருமனின்} [3] தேருக்குச் சென்று, இடைவிடாமல் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த இளவரசனைத் {துருமனைத்} தன் கை முட்டியால் அடித்து நசுக்கினான்.(26) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் இப்படித் தாக்கப்பட்ட துருவன் கீழே விழுந்தான். அவனைக் {துருமனைக்} கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்கொண்ட பீமசேனன், ஜெயராதனின் தேருக்குச் சென்று, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(27) முழங்கிக் கொண்டே தன் இடது கரத்தால் ஜெயராதனை இழுத்து வந்த அவன் {பீமன்}, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உள்ளங்கையின் ஒரே அறையால் அந்தப் போர் வீரனை {ஜெயராதனைக்} கொன்றான்.(28)
[3] இவன் கலிங்க இளவரசனின் சகோதரன் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவன் துருமன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் துருமனும், ஜெயராதனும் கர்ணனின் சகோதரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.
அப்போது கர்ணன் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியொன்றை அந்தப் பாண்டுவின் மகன் மீது வீசினான்.(29) எனினும் அந்தப் பாண்டவன் {பீமன்} சிரித்துக் கொண்டே தன் கரத்தால் அந்த ஈட்டியைப் பிடித்தான். வெல்லப்படாத விருகோதரன் {பீமன்}, அதே ஈட்டியை அந்தப் போரில் கர்ணன் மீதே திரும்ப வீசினான்.(30) அப்போது சகுனி, எண்ணெய் குடித்த கணையொன்றால் கர்ணனை நோக்கிச் சென்ற அந்த ஈட்டியை வெட்டினான். போரில் இந்த வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்தவனும், அற்புதமான ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் தேருக்கே திரும்பி வந்து, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தான்.(31)
சினத்துடன் கூடிய பீமன் யமனைப் போல (உமது துருப்புகளைக்) கொன்றபடியே அப்படி முன்னேறிச் செல்கையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்க வீரனை உமது மகன்கள் தடுக்க முயன்றனர்.(32) உண்மையில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {பீமனை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தனர்.(33) அப்போது பீமன், சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் தன் கணைகளால் துர்மதனின் சாரதியையும், குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(34) இதன் காரணமாகத் துர்மதன் வேகமாகத் துஷ்கர்ணனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது ஒரே தேரில் ஏறிச் சென்ற எதிரிகளை எரிப்பவர்களான அந்த இரு சகோதரர்களும், தைத்தியர்களில் முதன்மையான தாரகனை எதிர்த்து விரையும், நீர் நிலைகளின் தலைவன் {வருணன்} மற்றும் சூரியன் ஆகியோரைப் போலப் போரின் முன்னணியில் இருந்த பீமனை எதிர்த்து விரைந்தனர்.(35, 36)
அப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42)
[4] இந்தத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைச் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 58 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 34 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 136ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் 33 பேரைக் கொன்றிருக்கிறான். மேலதிக விவரங்களுக்குத் துரோண பர்வம் பகுதி 136ன் அடிக்குறிப்பு [1] மற்றும் [3] ஐ காண்க.
அப்போது, அந்த இரவில் (கௌரவப்) படைக்கு மத்தியில் பேரழிவு உண்டான போது, முழுதும் மலர்ந்த தாமரையைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன் {பீமன்}, மன்னர்களில் காளையர் பலரால் உயர்வாகப் புகழப்பட்டு யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தினான்.(43) அப்போது, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), துருபதன், விராடன், கைகேயர்கள் ஆகியோரும், யுதிஷ்டிரனும் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர். மேலும் அவர்கள் அனைவரும், அந்தகன் கொல்லப்பட்ட பிறகு மகாதேவனைப் புகழ்ந்த தேவர்களைப் போலவே விருகோதரனுக்குத் தங்கள் துதிகளைச் செலுத்தினர்.(44) பிறகு வருணனின் மகன்களுக்கு ஒப்பானவர்களான உமது மகன்கள் அனைவரும், சினத்தால் நிறைந்து, சிறப்புமிக்க ஆசானின் {துரோணரின்} துணையுடன், பெரும் எண்ணிக்கையிலான தேர்கள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து போரிடும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(45) அப்போது, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில், அனைத்தும் மேகத்தைப் போன்ற அடர்ந்த இருட்டில் மூழ்கியிருந்த போது, ஓநாய்கள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவற்றுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அச்சந்தரும் போரொன்று அந்தச் சிறப்புமிக்க வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.(46)
---------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 154-ல் வரும் மொத்த சுலோகங்கள்-46
---------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 154-ல் வரும் மொத்த சுலோகங்கள்-46
ஆங்கிலத்தில் | In English |