Battlefield on the night! | Drona-Parva-Section-153 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 02)
பதிவின் சுருக்கம் : துரோணர் செய்த போர் குறித்துச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; இரவு நேரப் போர்க்களத்தை வர்ணித்த சஞ்சயன்; பாண்டவத் தலைவர்கள் அனைவரையும் இயல்புக்கு மீறிய துணிவுடன் எதிர்கொண்ட துரோணர்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு, பெரும் பலம் கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும் ஆசானுமான அந்த வீரத் துரோணர், கோபத்துடன் பாண்டவப் படைக்குள் ஊடுருவியபடி களத்தில் தன் தேரில் திரிந்து கொண்டிருந்த போது, அவரது பாதையைப் பாண்டவர்கள் எவ்வாறு தடுத்தனர்?(1, 2) அந்தப் பயங்கரப் போரில் ஆசானுடைய {துரோணருடைய} தேரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்? எதிரியை அவர் {துரோணர்} கடுமையாகக் கொன்ற போது, அவரது இடது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்?(3) போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தில், அவரைத் தொடர்ந்து சென்ற துணிவுமிக்கப் போர்வீரர்கள் யாவர்? அந்தத் தேர்வீரருக்கு முன்பு நின்றவர்கள் யாவர்?(4) வெல்லப்படாத பெரும் வில்லாளியும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவருமான அவர், தன் தேரில் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடியே பாண்டவப்படைக்குள் நுழைந்த போது, பருவகாலமற்ற மிதமிஞ்சிய குளிரை அவரது எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். குளிர்கால வெடிப்புகளுக்கு வெளிப்பட்ட பசுவைப் போல அவர்கள் நடுங்கியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.(5, 6) பரவும் காட்டுத் தீயைப் போலப் பாஞ்சாலர்களின் துருப்புகள் அனைத்தையும் எரித்தவரும், தேர்வீரர்களில் காளையுமான அவர் {துரோணர்} தன் மரணத்தை எப்படிச் சந்தித்தார்?” என்று கேட்டான்.(7]
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலைப் பொழுதில் சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனையும், பெரும் வில்லாளியான அந்தச் சாத்யகியையும் சந்தித்த பிறகு, அந்த இருவரும் துரோணரை நோக்கிச் சென்றனர்.(8) அப்போது யுதிஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் ஒரு தனிப் படைப்பிரிவுடன், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போல, நுண்ணறிவு கொண்ட நகுலன், வெல்லப்பட முடியாத சகாதேவன், தன் சொந்தப் படைப்பிரிவுடன் கூடிய திருஷ்டத்யும்னன், விராடன், ஒரு பெரும்படையுடன் கூடிய சால்வர்களின் ஆட்சியாளன் ஆகியோர் போரில் துரோணரை எதிர்த்துச் சென்றனர். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்டவனும், திருஷ்டத்யும்னனின் தந்தையுமான மன்னன் துருபதனும், துரோணரை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் தங்கள் படைகளுடன் சேர்ந்து பெரும் பிரகாசம் கொண்ட துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(10, 12) திறனுடன் தாக்குபவர்களும், பலம் நிறைந்தவர்களுமான ஆறாயிரம் பிரபத்ரகப் பாஞ்சாலர்களும், சிகண்டியைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(13) மனிதர்களில் முதன்மையான பிறரும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(14)
ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, வீரமிக்க அந்தப் போர்வீரர்கள் போரிடச் சென்ற போது, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் அந்த இரவானது மிகுந்த இருளடைந்தது.(15) அந்த இருண்ட நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைவிட்ட போர் வீரர்கள் பலராவர்.(16) அந்த இரவில், பல யானைகள், குதிரைகள், மற்றும் காலாட்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். கும்மிருட்டான அவ்விரவில் ஒளிரும் வாய்களுடன் கூடிய நரிகள் பெரும் அச்சத்தைத் தூண்டும் வகையில் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. கௌரவர்களின் கொடிமரங்களை அடைந்த ஆந்தைகள் {கோட்டான்கள்} அங்கிருந்து அலறி அச்சங்களை {ஆபத்துகளை} முன்னறிவித்தன. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் ஒரு கடும் ஆரவாரம் எழுந்தது.(17-19) பேரிகைகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் உரத்த ஒலியுடன் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், குதிரைலாடங்களின் தடவொலிகள் ஆகியவையும் கலந்த அந்த ஆரவாரம் எங்கும் பரவியது.(20)
பிறகு, அந்த மாலை {இரவு} வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், சிருஞ்சயர்கள் அனைவருக்கும் இடையில் கடும்போரொன்று நடைபெற்றது.(21) உலகமே இருளில் மூழ்கியிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை.(22) போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியால் ஆகாயம் மறைக்கப்பட்டது. மனிதன், குதிரை மற்றும் யானைகளின் குருதிகள் ஒன்றாகக் கலந்தன.(23) அப்போது பூமியின் புழுதி மறைந்து போனது. நாங்கள் அனைவரும் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக ஆனோம். மலையில் மூங்கில் காடு ஒன்று எரியும் ஒலியைப் போல, ஆயுத மோதல்களின் பயங்கர ஒலிகள் அந்த இரவு பொழுதில் கேட்கப்பட்டன.(24) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே} மிருதங்கங்கள், அனகங்கள், வல்லகிகள், படகங்கள் [1] ஆகியவற்றின் ஒலிகளோடு, (மனிதர்களின்) கூச்சல்களும், (குதிரைகளின்) கனைப்பொலிகளும் கலந்து எங்கும் பயங்கரக் குழப்பத்தை உண்டாக்கின.(25)
[1] பல்வேறு வகைகளிலும், அளவுகளிலுமான பேரிகைகள். எ.கா. மேளம், மத்தளம், முரசு, துந்துபி முதலியன.
அந்தக் களம் இருளில் மூழ்கியிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(26) அந்த இரவின் மதத்தையே {வெறியையே} அனைவரும் பூண்டு கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே எழும்பிய பூமியின் புழுதி இரத்த மழையால் தணிக்கப்பட்டது.(27) பிறகு தங்கக் கவசங்கள் மற்றும் போர்வீரர்களின் பிரகாசமான ஆபரணங்களின் விளைவால் அந்த இருள் அகன்றது. அப்போது தங்கத்தாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்ததும், ஈட்டிகளும் கொடிமரங்களும் நிறைந்ததுமான அந்தப் பாரதப் படை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் இரவு வானத்தைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தப் போர்க்களம் நரிகளின் ஊளைகளையும், காகங்களின் கரைதல்களையும், யானைகளின் பிளிறல்களையும், போர்வீரர்களின் கூக்குரல்கள் மற்றும் கதறல்களையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலிகள் யாவும் ஒன்றாகக் கலந்து மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது.(28-30) இந்திரனின் வஜ்ரத்தைப் போல அந்தப் பேராரவாரம் அனைத்துத் திசைப்புள்ளிகளையும் நிறைத்தது.
அந்த நடு இரவில், அந்தப் பாரதப் படையானது, போராளிகளின் அங்கதங்கள், காது குண்டலங்கள், மார்புக் கவசங்கள் மற்றும் ஆயுதங்களால் ஒளிர்வதாகத் தெரிந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்த இரவில் தெரிந்தன. வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள், கத்திகள், தண்டாயுதங்கள், வேல்கள், கோடரிகள் ஆகியன விழுகையில், திகைப்பூட்டும் நெருப்புக் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. முன்னோடியாக இருந்த துரியோதனனே அதன் (புயல் போன்ற படையின்) பலமான காற்றாக இருந்தான். தேர்களும் யானைகளும் அதன் உலர்மேகங்களாகின.(31-34) பேரிகைகள் மற்றும் பிற கருவிகளின் உரத்த ஒலிகள் அதன் பெருத்த இடிமுழக்கங்களாகின. கொடிமரங்களும், விற்களும் அதன் மின்னல் கீற்றுகளாகின. துரோணரும், பாண்டவர்களும் அதன் {அந்தப் புயல் போன்ற படையின்} பொழியும் மேகங்களாகினர். வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் அதன் இடிகளாகின.(35) கணைகள் அதன் மழைப்பொழிவாகின, (பிற வகைகளிலான) ஆயுதங்கள் அதன் வன்காற்றுகளாகின. மேலும் அங்கே வீசிய காற்றுகள் மிக வெப்பமாகவும், மிகக் குளிர்ந்ததாகவும் இருந்தன.
பயங்கரமானதும், அதிர்ச்சியளிப்பதும், கடுமையானதுமான அது {புயல் போன்ற அந்தப் பாரதப் படை} உயிரை அழிப்பதாக இருந்தது. {பாதுகாப்பான} உறைவிடமாகக் கொள்ள அதில் {அந்தப் படையில்} ஏதும் இல்லை.(36) மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், வீரர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், பயங்கரமான ஒலிகளை எதிரொலிப்பதுமான அந்தப் பயங்கர இரவில் போரை விரும்பிய போராளிகள் அச்சந்தரும் அந்தப் படைக்குள் {பாரதப் படைக்குள்} நுழைந்தனர்.(37) இரவில் அந்தக் கடுமையான, பயங்கரமான போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்து கோபத்துடன் விரைந்தனர்.(38) எனினும், சிறப்புமிக்கத் துரோணரை எதிர்த்துச் சென்ற அவர்கள் அனைவரும், ஒன்று புறமுதுகிடச்செய்யப்பட்டனர், அல்லது யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பபட்டனர்.(39) உண்மையில், அந்த இரவில், துரோணர் மட்டுமே தனியாகத் தன் கணைகளால், ஆயிரம் {1000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} தேர்களையும், பத்து லட்சம் {10,00,000} காலாட்படை வீரர்கள் மற்றும் குதிரைகளையும் துளைத்தார்" {என்றான் சஞ்சயன்}.(40, 41)
--------------------------------------------------------------------------------------------துரோண பர்வம் பகுதி – 153-ல் வரும் மொத்த சுலோகங்கள்-41
ஆங்கிலத்தில் | In English |