The manliness of Satyaki! | Drona-Parva-Section-155a | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : சாத்யகியிடம் சோமதத்தனின் பேச்சு; சாத்யகியின் ஆண்மைநிறைந்த மறுமொழி; சோமதத்தனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மயங்கி விழுந்த சோமதத்தனைச் சுமந்து சென்ற அவனது தேரோட்டி; சாத்யகியைக் கொல்ல விரைந்த துரோணர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிராயத்தில் அமர்ந்திருந்த {பிராயோபவேசம் செய்த} தன் மகன் (பூரிஸ்ரவஸ்) சாத்யகியால் கொல்லப்பட்ட பிறகு, சினத்தால் நிறைந்த சோமதத்தன் சாத்யகியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! சாத்வதா {சாத்யகி}, உயர் ஆன்ம தேவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளைக் கைவிட்டுக் கள்வர்களின் நடைமுறையை ஏன் நீ கைக்கொண்டாய்?(2) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனும், விவேகியுமான ஒருவன், போரில் இருந்து திரும்புபவனையோ {பின்வாங்குபவனையோ}, ஆதரவற்றவனையோ, தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டவனையோ, இடத்தை வேண்டுபவனையோ போரில் தாக்குவானா?(3) உண்மையில், ஓ! சாத்யகி, விருஷ்ணிகளில் வலிமையும் சக்தியும் கொண்ட பிரத்யும்னனும், நீயும் பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்.(4) அப்படியிருக்கையில் பிராயத்தில் அமர்ந்தவனும், பார்த்தனால் {அர்ஜுனனால்} தன் கரம் வெட்டப்பட்டவனுமான ஒருவனிடம் பாவம் நிறைந்த கொடூரமாக ஏன் நீ நடந்து கொண்டாய்?(5)
ஓ! தீய நடத்தை கொண்டவனே, உனது அந்தச் செயலின் விளைவை இப்போது போரில் பெறுவாயாக. ஓ! இழிந்தவனே {சாத்யகி}, என் ஆற்றலை வெளிப்படுத்தும் நான், சிறகு படைத்த கணையொன்றால் உன் தலையை இன்று வெட்டப் போகிறேன்.(6) ஓ! சாத்வதா {சாத்யகி}, என்னிரு மகன்கள் மீதும், எனக்குப் பிடித்த எதன் மீதும், என் புண்ணியச் செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன், ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே {சாத்யகி}, இன்றிரவு கடப்பதற்குள், பிருதையின் {குந்தியின்} மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்} உன்னைக் காக்கவில்லையெனில், வீரத்தில் செருக்குக் கொண்ட உன்னை, உன் மகன்கள், தம்பி ஆகியோரோடு சேர்த்துக் கொல்லாதிருந்தால் நான் பயங்கர நரகத்திற்குள் மூழ்குவேனாக” என்றான் {சோமதத்தன்}.(7,8) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கவனுமான சோமதத்தன், சினத்தால் நிறைந்து தன் சங்கை உரக்க முழங்கி சிங்க முழக்கம் செய்தான்.(9)
அப்போது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிங்கம் போன்ற பற்களையும், பெரும் பலத்தையும் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, சோமதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(10) “ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, உம்மோடு போரிட்டாலும், பிறரோடு போரிட்டாலும், என் இதயத்தில் கிஞ்சிற்றும் நான் அச்சத்தை உணர்வதில்லை.(11) ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, துருப்புகள் அனைத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீர் என்னோடு போரிட்டாலும், உம்மால் எந்த வலியையும் நான் அடையமாட்டேன்.(12) நான் எப்போதும் க்ஷத்திரிய நடைமுறைகளேயே பயில்பவனாவேன். எனவே, போர்மணம் கொண்ட வார்த்தைகள், அல்லது நல்லோரை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றால் மட்டுமே உம்மால் என்னை அச்சுறுத்த முடியாது.(13) நீர் இன்று என்னோடு போரிட விரும்பினால், ஓ! மன்னா {சோமதத்தரே}, கூரிய கணைகளால் கொடூரமாக என்னைத் தாக்குவீராக, நானும் உம்மைத் தாக்குவேன்.(14) ஓ! மன்னா {சோமதத்தரே}, உமது மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். சலனும், விருஷசேனனும் என்னால் நசுக்கப்பட்டனர் [1].(15) உமது மகன்களுடனும், சொந்தங்களுடனும் கூடிய உம்மையும்கூட இன்று நான் கொல்வேன். ஓ! கௌரவரே {சோமதத்தரே}, பெரும் பலங்கொண்டவர் நீரென்பதால், போரில் உறுதியோடு இருப்பீராக.(16)
[1] வேறொரு பதிப்பில், "வீரனும், மகாரதனுமான உனது புத்திரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். பிராதாவினுடைய (பிரிவின்) துக்கத்தால் பீடிக்கப்பட்ட சலனும் கொல்லப்பட்டான்" என்று இருக்கிறது. விருஷசேனன் பற்றிய குறிப்பேதும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் “வீரர்களான சலனும் விருஷசேனனும் கொல்லப்பட்டனர்" என்று இருக்கிறது.
கொடை, புலனடக்கம், இதயத் தூய்மை, கருணை, பணிவு, நுண்ணறிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றையும், அழிவில்லாத அனைத்தையும் கொண்டவரும், முரசை {முரசு} கொடியில் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரரின் சக்தியால் நீர் ஏற்கனவே கொல்லப்பட்டவரே. நீர் கர்ணனோடும், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்} சேர்ந்து அழிவையே அடைவீர்.(17, 18) கிருஷ்ணனின் பாதங்களின் மீதும், என் நற்செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சினத்தால் நிறையும் நான் உம்மையும் உமது மகன்களையும் என் கணைகளால் போரில் கொல்வேன்.(19) போரைவிட்டு ஓடிவிட்டால் மட்டுமே நீர் பாதுகாப்பாக இருக்கலாம்" என்றான் (சாத்யகி). கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரோடொருவர் இப்படிப் பேசிக் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானோர் {சோமதத்தனும், சாத்யகியும்}, தங்கள் கணைகளை ஒருவரின் மீதொருவர் ஏவத் தொடங்கினர்.(20)
அப்போது துரியோதனன், ஆயிரம் தேர்களுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும் வந்து சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான். சினத்தால் நிறைந்த சகுனியும், அனைத்து ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட தன் மகன்கள், பேரர்கள் மற்றும் தன் சகோதரர்கள் சூழ (அதையே செய்தான் {சோமதத்தனைச் சூழ்ந்து}) நின்றான்.(21, 22) வயதால் இளமையுடையவனும், வஜ்ரத்தைப் போன்ற உடலைக் கொண்டவனும், ஞானம் கொண்டவனுமான உமது மைத்துனன் {சகுனி} முதன்மையான தீரம் கொண்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} குதிரைகளைத் தன்னிடம் கொண்டிருந்தான். அவற்றுடனேயே அவன் {சகுனி}, வலிமைமிக்க வில்லாளியான சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான்.(23, 24) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சோமதத்தன் (கணை மேகங்களால்) சாத்யகியை மறைத்தான். நேரான கணைகளின் மேகங்களால் இப்படி மறைக்கப்பட்ட சாத்யகியைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஒரு பெரும் படையின் துணையுடனும் சினத்துடனும் அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(25) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட அந்தப் பெரும் படைகள் இரண்டிலும் எழுந்த பேரோலியானது, பயங்கரச் சூறாவளியால் சீற்றத்துடன் தாக்கப்பட்டும் பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தது.
அப்போது சோமதத்தன் ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.(26, 27) பதிலுக்குச் சாத்யகி, ஒன்பது கணைகளாலேயே குரு போர்வீரர்களில் முதன்மையான அவனை {சோமதத்தனைத்} துளைத்தான். வலிமைமிக்கவனும், உறுதிமிக்கவனுமான அந்த வில்லாளியால் (சாத்யகியால்) ஆழத் துளைக்கப்பட்ட சோமதத்தன், மயக்கத்தால் உணர்வுகளை இழந்து தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(28) அவன் {சோமதத்தன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, பெரும் தேர்வீரனான அந்தச் சோமதத்தனைப் போரில் இருந்து வெளியே பெரும் வேகத்துடன் சுமந்து சென்றான்.(29) யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்ட சோமதத்தன் தனது உணர்வுகளை இழந்ததைக் கண்ட துரோணர், அந்த யது வீரனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் பெரும் வேகத்துடன் விரைந்து சென்றார்.(30) ஆசான் {துரோணர்} முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவ வீரர்கள் பலர், யது குலத்தைத் தழைக்க வைப்பவனான அந்தச் சிறப்புமிக்கவனை {சாத்யகியைக்} காக்கும் விருப்பத்தால் அவனைச் சூழ்ந்து கொண்டனர்" {என்றான் சஞ்சயன்}.31
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155அ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-31
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155அ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-31
ஆங்கிலத்தில் | In English |