The Trio that routed the Kaurava host! | Drona-Parva-Section-171 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 19)
பதிவின் சுருக்கம் : துரியோதனனைப் புறமுதுகிடச் செய்த சாத்யகி; தன்னுடன் மோதிய எதிரிகளை முறியடித்த சாத்யகி; சகுனியைத் தேரிழக்கச் செய்த அர்ஜுனன்; கௌரவப் படையை கொன்றழித்த அர்ஜுனன்; துரோணரின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன், துரோணரைத் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய திருஷ்டத்யும்னன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, எளிதில் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களும், உமது படையைச் சேர்ந்தவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும், ({சாத்யகியின்} சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாமல் யுயுதானனின் {சாத்யகியின்} தேரை எதிர்த்து கோபத்துடன் சென்றனர்.(1) அவர்கள், {ஆயுதங்களால்} நன்கு தரிக்கப்பட்டவையும், தங்கம் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் ஏறி, குதிரைப் படை மற்றும் யானைப்படை ஆகியவற்றின் துணையுடன் சென்று அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(2) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த வீரனை {சாத்யகியை} அறைகூவியழைத்து சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(3) மதுகுலத்தோனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பிய அந்தப் பெரும் வீரர்கள், வெல்லப்படமுடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் மீது தங்கள் கூர்முனை கணைகளைப் பொழிந்தனர்.(4)
தன்னை நோக்கி இப்படி வேகமாக வந்து கொண்டிருந்த அவர்களைக் கண்டவனும், எதிரிப்படைகளைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} பல கணைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஏவினான்.(5) வீரனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகி, நேரான தன் கடுங்கணைகளால் பலரின் தலைகளைத் துண்டித்தான்.(6) மேலும் அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பல யானைகளின் துதிக்கைகளையும், பல குதிரைகளின் கழுத்துகளையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்கள் பலரின் கரங்கள் ஆகியவற்றையும் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டினான்.(7) விழுந்து கிடந்த வெண்சாமரங்கள் மற்றும் வெண்குடைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர்க்களம், ஓ! பாரதரே, கிட்டத்தட்ட நிறைந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தைப் போல விளங்கியது.(8) யுயுதானனால் {சாத்யகியால்} போரில் இப்படிக் கொல்லப்பட்ட படையின் ஓலமானது, {நரகத்தில்) பிசாசுகளின் அலறலைப் போலப் பேரொலியாக இருந்தது.(9) அந்த ஆரவாரப் பேரொலியால் பூமி நிறைந்ததால், அந்த இரவானது மேலும் கொடூரமானதாகவும், மேலும் பயங்கரமானதாகவும் ஆனது.(10)
தன் படையானது, யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, பிளக்கப்படுவதைக் கண்டும், அந்த நள்ளிரவில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும்,(11) வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, தன் தேரோட்டியிடம் மீண்டும் மீண்டும், "இந்த ஆரவாரம் எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக" என்றான்.(12) பிறகு, உறுதிமிக்க வில்லாளியும், களைப்பினை அறியாதவனும், கரங்களில் பெரும் நளினம் கொண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மன்னன் துரியோதனன், யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்.(13) மாதவன் {சாத்யகி}, தன் வில்லை முழுமையாக வளைத்து, குருதி குடிக்கும் கணைகள் பனிரெண்டால் துரியோதனனைத் துளைத்தான்.(14) இப்படி யுயுதானனின் கணைகளால் முதலில் பீடிக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பத்துக் கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(15) அதே வேளையில் பாஞ்சாலர்களுக்கும், உமது துருப்புகள் அனைத்திற்கும் இடையில் நடந்த போர் மிக அற்புமாகக் காட்சியளித்தது.(16)
அப்போது, சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனை} எண்பது {80} கணைகளால் மார்பில் துளைத்தான்.(17) பிறகு அவன் வேறு பிற கணைகளால் துரியோதனனின் குதிரைகளை யமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {சாத்யகி}, விரைவாகத் தனது எதிராளியின் {துரியோதனனின்} சாரதியைத் தேரில் இருந்து வீழ்த்தினான்.(18) உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டே சாத்யகியின் தேரை நோக்கி பல கூரிய கணைகளை ஏவினான்.(19) எனினும், பெருங்கர நளினத்தை வெளிப்படுத்திய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனால் ஏவப்பட்ட அந்த ஐம்பது கணைகளையும் வெட்டினான்.(20) பிறகு மாதவன் {சாத்யகி}, அம்மோதலில் திடீரென ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} உறுதிமிக்க வில்லை, அதன் கைப்பிடியில் அறுத்தான்.(21) தன் தேர், வில் ஆகியவற்றை இழந்தவனும், பலமிக்க மனிதர்களின் ஆட்சியாளனுமான அவன் {துரியோதனன்}, கிருதவர்மனின் பிரகாசமிக்கத் தேரில் விரைவாக ஏறினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பின்வாங்கியதும், அந்த நள்ளிரவில் சிநியின் பேரன் {சாத்யகி}, உமது படையைப் பீடித்து முறியடித்தான்.(23)
அதே வேளையில் சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களாலும், பல்லாயிரம் யானைகளாலும், பல்லாயிரம் குதிரைகளாலும் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு, தீர்மானத்துடன் போரிடத் தொடங்கினான். அவர்களில் பலர் அர்ஜுனனை நோக்கி பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களை ஏவினர்.(24,25) உண்மையில் அந்த க்ஷத்திரியர்கள் நிச்சயம் மரணமடைய {மரணமடைவோம் என்ற தீர்மானத்தோடே} அர்ஜுனனோடு போரிட்டனர். எனினும் சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தடுத்து, இறுதியில் அந்த எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தான். சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளைக் கொல்பவனான அந்த அர்ஜுனனை இருபது கணைகளால ஆழத் துளைத்தான். மேலும் அவன் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பெருந்தேரின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(26-28) பிறகு அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் இருபது கணைகளால் சகுனியைத் துளைத்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வில்லாளிகளில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(29) தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் சக்தியைதக் கொண்ட அற்புதக் கணைகளால் உமது படையின் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான்.(30)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்ட கணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான (இறந்தோரின்) உடல்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, மலர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) உண்மையில், கிரீடங்களாலும், அழகிய மூக்குகளாலும், அழகிய காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், சினத்தால் (கீழ்) உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தவையும், கண்களை அகல விரித்தவையும், சூடாமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், உயிரோடு இருந்தபோது, ரத்தினங்களால் மகுடம் சூட்டப்பட்டவையும், இனிய வார்த்தைகளைப் பேசியவையுமான க்ஷத்திரியர்களின் தலைகளால் விரவிக் கிடந்த அந்தப் பூமியானது, சம்பக {சம்பங்கி} மலர்கள் பரவிய குன்றுகளால் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(32,33) அந்தக் கடும் சாதனையை அடைந்து, ஐந்து நேரான கணைகளால் சகுனியை மீண்டும் துளைத்தவனும், கடும் ஆற்றல் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் உலூகனை மீண்டும் ஒருகணையால் தாக்கினான்.(34) அவனது {உலூகனது} தந்தையான சுபலனின் மகன் {சகுனியின்} முன்னிலையிலேயே இப்படி உலூகனைத் துளைத்த அர்ஜுனன், சிங்க முழக்கம் செய்து, அதனால் {அவ்வொலியால்} உலகத்தையே நிறைத்தான். பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, சகுனியின் வில்லை அறுத்தான்.(36)
பிறகு அவன் {அர்ஜுனன்}, அவனது {சகுனியின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பினான். பிறகு அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து குதித்து,(37) விரைவாகச் சென்று {தன் மகனான} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அந்தத் தந்தையும், மகனும் ஒரே தேரில் சென்று,(38) மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அந்த இரு போர்வீரர்களையும் துளைத்து,(39) பீடித்து உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான். காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்படும் வலிமைமிக்க மேகத் திரள் ஒன்றைப் போல,(40) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படை அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்பட்டது. உண்மையில் அந்தப் படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் இப்படிக் கொல்லப்பட்டு,(41) (அவர்களது) தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. தாங்கள் ஏறிச்சென்ற விலங்குகளைப் பலர் கைவிட்டனர், பிறரோ, தங்கள் விலங்குகளை அதிக வேகத்தில் தூண்டி,(42) கடுமையான அந்த இருண்ட நேரத்தில், அச்சத்தால் தூண்டப்பட்டுப் போரில் இருந்து பின்வாங்கினர். இப்படி உமது போர்வீர்ரர்களை வென்ற வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} மகிழ்ச்சிகரமாகத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(43)
திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்ரரே}, மூன்று கணைகளால் துரோணரைத் துளைத்து, கூரிய கணை ஒன்றால் பின்னவருடைய வில்லின் நாணையும் விரைவாக அறுத்தான்.(44) க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான அந்த வீரத் துரோணர், அந்த வில்லைப் பூமியில் தூக்கி வீசிவிட்டு, பெரும் உறுதியும், பலமும் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார்.(45) திருஷ்டத்யும்னனை ஐந்து கணைகளால் துளைத்த துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தார்.(46) தன் கணைகளால் துரோணரைத் தடுத்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், அசுரப் படையை அழிக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல அந்தக் கௌரவப் படையை அழிக்கத் தொடங்கினான்.(47)
உமது மகனின் {துரியோதனின்} படை கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குருதியையே ஓடையாகக் கொண்ட ஒரு பயங்கர ஆறு அங்கே பாயத் தொடங்கியது.(48) மேலும் அது, இரண்டு படைகளுக்கும் இடையில் மனிதர்களையும், குதிரைகளையும், யானைகளையும் சுமந்து சென்றபடி ஓடிக் கொண்டிருந்தது.(49) அது {அந்த ஆறு}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதிகளை நோக்கிப் பாயும் வைதரணீக்கு ஒப்பானதாக இருந்தது. உமது படையைக் கலங்கடித்து அதை முறியடித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வீரத் திருஷ்டத்யும்னன், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போலச் சுடர்விட்டெரிந்தான்.(50) பிறகு திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் தங்கள் பெரிய சங்குகளை முழக்கினர், அதே போலவே, இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), யுயுதானனும் {சாத்யகியும்}, பாண்டுவின் மகனான விருகோதரனும் {பீமனும்} {தங்கள் சங்குகளை} முழக்கினார்கள்.(51) உமது தரப்பைச் சேர்ந்தவர்களும், பெரும் சக்தியையுடையவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களை வென்ற கடும் போர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, கர்ணன், வீரத் துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் சிங்க முழக்கம் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(52,53)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 171-ல் வரும் மொத்த சுலோகங்கள்-53
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 171-ல் வரும் மொத்த சுலோகங்கள்-53
ஆங்கிலத்தில் | In English |