Drona and Karna fought fiercely! | Drona-Parva-Section-172 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 20)
பதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் கர்ணனிடம் கோபத்துடன் பேசிய துரியோதனன்; பாண்டவப் படையை மூர்க்கமாகத் தாக்கிய துரோணரும், கர்ணனும்; ஓடும் துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் கொல்லப்படும் தன் படையானது சிதறடிக்கப்படுவதைக் கண்டவனும், சொற்களை நன்கு அறிந்தவனுமான {பேசத்தெரிந்தவனுமான} உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடமும், போரில் வெல்வோர் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரிடமும் விரைவாகச் சென்று, கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1,2) “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்டு சினம் கொண்ட உங்கள் இருவராலேயே இந்தப் போர் {இந்த இரவுப் போர்} தொடங்கப்பட்டது.(3) உங்கள் இருவருக்கும் பாண்டவப்படைகளை வெல்லும் சக்தி முழுமையாக இருந்தும், அந்தப் படைகளால் என் படைகள் கொல்லப்படுகையில் நீங்கள் எந்த அக்கறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.(4) நீங்கள் இருவரும் இப்போது என்னைக் கைவிடுவதாக இருந்தால், அதைத் தொடக்கத்திலே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். கௌரவங்களை அளிப்பவர்களே, “நாங்கள் இருவரும் போரில் பாண்டு மகன்களை வெல்வோம்” என்ற இந்த வார்த்தைகளையே அப்போது நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். இந்த உங்கள் வார்த்தைகளைக் கேட்டே நான் இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தேன். (நீங்கள் வேறு மாதிரியாக என்னிடம் சொல்லியிருந்தால்), வீரப்போராளிகளை இந்த அளவுக்கு அழிக்கவல்லவையான பார்த்தர்களுடனான இந்தப் பகைமைகளை நான் ஒரு போதும் தூண்டியிருக்க மாட்டேன்.(5,6) நான் உங்கள் இருவராலும் கைவிடத் தகாதவன் என்றால், மனிதர்களில் காளையரே, பெரும் ஆற்றலைக் கொண்ட வீரர்களே, நீங்கள் உங்கள் உண்மையான அளவு ஆற்றலுடன் போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.(7)
உமது மகனின் {துரியோதனனின்} வார்த்தைக் குறடால் இப்படித் துளைக்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும் {துரோணரும், கர்ணனும்}, தடிகளால் விரட்டப்பட்ட இரு பாம்புகளைப் போல மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(8) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையானவர்களுமான அவ்விருவரும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} தலைமை தாங்கப்பட்ட பார்த்தர்களையும், இன்னும் பிறரையும் எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போலப் தங்கள் துருப்புகள் அனைத்துடன் ஒன்றுசேர்ந்த பார்த்தர்களும், தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்த அந்த இரு வீரர்களையும் எதிர்த்து சென்றனர்.(10)
அப்போது, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் வில்லாளியுமான துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, பத்து கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையை {சாத்யகியத்} துளைத்தார்.(11) கர்ணன் அவனைப் {சாத்யகியைப்} பத்து கணைகளாலும், உமது மகன் {துரியோதனன்} ஏழாலும், விருஷசேனன் பத்தாலும், சுபலனின் மகன் {சகுனி} ஏழாலும் {சாத்யகியைத்} துளைத்தனர்.(12) சிநியின் பேரனை {சாத்யகியைச்} சுற்றியிருந்த கௌரவர்களின் ஊடுருவப்பட முடியாத சுவரில், இவர்களும் நிலைகொண்டு அவனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் போரில் பாண்டவப்படையைக் கொன்றும் வரும் துரோணரைக் கண்ட சோமகர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவரைக் கணை மாரியால் துளைத்தனர்.(13) அப்போது துரோணர், இருளைத் தன் கதிர்களால் அழிக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் உயிரை எடுக்கத் தொடங்கினார்.(14)
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்படும்போது ஒருவரையொருவர் அழைத்த பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஆரவாரத்தை நாங்கள் கேட்டோம். சிலர் தங்கள் மகன்களைக் கைவிட்டும், சிலர் தந்தைகளை, சிலர் சகோதரர்களை, சில மாமன்களை, சிலர் தங்கள் சகோதரியின் மகன்களை, சிலர் நண்பர்களை, சிலர் தங்கள் உற்றார் உறவினரைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடினர்.(15-17) மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை இழந்து துரோணரை எதிர்த்து ஓடினர். உண்மையில், அப்போது பாண்டவப்படையில் வேறு உலகத்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் பலராக இருந்தனர்.(18) அந்தச் சிறப்புமிக்க வீரரால் {துரோணரால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டவப் படையினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரவில் பீமசேனன், அர்ஜுனன், கிருஷ்ணன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதிஷ்டிரன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடர்மிக்கத் தங்கள் தீப்பந்தங்களைச் சுற்றிலும் எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர்.(19,20)
உலகம் இருளில் மூழ்கியிருந்ததால், எதையும் காண முடியவில்லை. கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்த விளக்குகளின் காரணமாக எதிரி ஓடுவதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.(21) எண்ணற்ற கணைகளை இறைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) “பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அவர்களை மீண்டும் அணிதிரட்டுவது இயலாததாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(25)
அந்தப் படை ஓடுவதைக் கண்ட கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் அந்தத் துருப்புகளிடம், “அச்சத்தால் ஓடாதீர். பாண்டவ வீரர்களே உங்கள் அச்சங்களை விலக்குங்கள்.(26) படைகள் அனைத்தையும் நல்ல முறையில் அணிவகுத்துக் கொண்டு, உயர்த்திய ஆயுதங்களுடன் துரோணரையும், சூதனின் மகனையும் {கர்ணனையும்} எதிர்த்து நிற்பதற்காக நாங்கள் இருவரும் இப்போது செல்கிறோம்” என்றனர்.(27) அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, முன்னேறிச் செல்லும் விருகோதரனை {பீமனைக்} கண்டு, மீண்டும் பாண்டுவின் மகனான அர்ஜுனனிடம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வது போல இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(28) “அதோ, போரில் மகிழ்ச்சி கொள்ளும் பீமர், சோமகர்கள் மற்றும் பாண்டவர்களால் சூழபட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரையும் கர்ணனையும் எதிர்த்து வருகிறார்.(29) உன் துருப்புகள் அனைத்தும் உறுதிகொள்ளும் பொருட்டு, ஓ !பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவராலும் {பீமராலும்}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு இப்போது போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்} [1].30 அப்போது மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மதுகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், துரோணரையும், கர்ணனையும் அடைந்து, போரின் முன்னணியில் தங்கள் நிலையை எடுத்துக் கொண்டனர்.”(31)
[1] “கல்கத்தா பதிப்பில் 30வது சுலோகத்தின் இரண்டாவது வரி வேறுமாதிரியாக உரைக்கப்பட்டிருக்கிறது. {இங்கு பம்பாய் பதிப்பையே கையாண்டிருக்கிறேன்}. அந்த இரண்டு அச்சுபதிப்புகளில் உள்ள சில வேறுபாடுகளின் விளைவாக, கல்கத்தா உரையின் 30வது சுலோகம் பாம்பாய் உரையில் 32வது சுலோகமாக உள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில், “பாண்டு நந்தன, எல்லாச் சைனிகளுக்கும் தேறுதலுண்டாகும்பொருட்டு இந்தப் பீமனோடும், மகாரதர்களான பாஞ்சாலர்களோடும் சேர்ந்து கொண்டு யுத்தம் செய்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 30வது சுலோகம், “உன் துருப்புகள் உறுதியடையும்பொருட்டு, ஓ பாண்டுவை மகிழச் செய்பவனே {அர்ஜுனா}, இவர்களாலும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்களாலும் ஆதரிக்கப்பட்டுப் போரிடச் செல்வாயாக” என்று இருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, யுதிஷ்டிரனின் அந்தப் பரந்த படையானது, போரில் துரோணரும், கர்ணனும் எந்த இடத்தில் தங்கள் எதிரிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தனரோ அங்கே மீண்டும் போரிடுவதற்காகத் திரும்பியது.(32) சந்திரன் உதிக்கும் வேளையில் பொங்கும் இரு கடல்களுக்கிடையில் நடப்பதைப் போல அந்த நள்ளிரவில் ஒரு கடும் மோதல் நடந்தது.(33) பிறகு உமது படையின் போர்வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த சுடர்மிக்க விளக்குகளை எறிந்துவிட்டு, அச்சமற்ற வகையில் வெறிகொண்டு பாண்டவர்களுடன் போரிட்டனர்.(34) இருட்டாலும், புழுதியாலும் உலகம் மறைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவில், போராளிகள், தாங்கள் சொன்ன பெயர்களால் வழிநடத்தப்பட்டே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(35) போரிடும் மன்னர்களால் சொல்லப்பட்ட பெயர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு சுயம்வரத்தில் நடப்பதைப் போலவே கேட்கப்பட்டன.(36)
திடீரெனப் போர்க்களமெங்கும் அமைதி பரவி, அஃது ஒருக்கணம் நீடித்தது. பிறகு வென்ற, வெல்லப்பட்ட கோபக்கார போராளிகளால் உண்டாக்கப்பட்ட உரத்த ஆரவாரம் மீண்டும் கேட்டது.(37) எங்கே சுடர்மிக்க விளக்குகள் தென்பட்டனவோ, ஓ! குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றிலும் இரவின் இருள் அடர்த்தியடைந்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)
-----------------------------------------------------------------------------------
துரோணப் பர்வம் பகுதி: 172-ல் உள்ள சுலோகங்கள்: 39
-----------------------------------------------------------------------------------
துரோணப் பர்வம் பகுதி: 172-ல் உள்ள சுலோகங்கள்: 39
ஆங்கிலத்தில் | In English |