“As we killed Abhimanyu!” said Karna! | Drona-Parva-Section-170 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 18)
பதிவின் சுருக்கம் : துரோணரை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட திருஷ்டத்யும்னன்; துருமசேனனைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் காக்க விரைந்த சாத்யகி; விருஷசேனனை மயக்கமடையச் செய்த சாத்யகி; அர்ஜுனனின் நாணொலியையும், தேரொலியையும் கேட்டுக் கலங்கிய கர்ணன்; திருஷ்டத்யும்னனையும், சாத்யகியையும் கொல்ல துரியோதனனுடன் சேர்ந்து ஆலோசித்த கர்ணன்; சாத்யகி மற்றும் திருஷ்டத்யும்னனை அர்ஜுனன் காக்க முடியாதபடி அவனை எதிர்த்துச் செல்லுமாறு சகுனியிடம் சொன்ன துரியோதனன்; பெரும்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கர்ணன் முதலானோர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அவனைச் {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(3) ஆசான்களில் முதன்மையானவரான துரோணர் இப்படித் தாக்கப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், தீர்மானத்துடன் போரில் ஈடுபட்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரைக் காத்தனர்.(4) பிறகு, அந்த இரவில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட கடலெனும் இரு துருப்புகளும், சூறாவளியால் மூர்க்கமாகத் தாக்கப்படுபவையும், மிகவும் கலங்கடிக்கப்படும் உயிரினங்களுடன் கூடியவையுமான பயங்கரமான இரண்டு கடல்களைப் போலத் தெரிந்தன.(5)
அப்போது அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்க மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(9)
பகைவீரர்களைக் கொல்பவனும், பெருமழகுடன் கூடியவனுமான அந்தப் போர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உறுதிமிக்க வில்லைத் தன் காதுவரை இழுத்து, துரோணரின் உயிரை எடுக்கவல்ல ஒரு பயங்கரக் கணையை ஏவினான்.(10) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் வலிமைமிக்க அந்த இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} இப்படி ஏவப்பட்ட அந்தக் கணையானது, உதயச் சூரியனைப் போல மொத்தப்படைக்கும் ஒளியூட்டியது.(11) அந்தப் பயங்கரக் கணையைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படிப் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, நஞ்சற்ற பாம்பொன்றைப் போலப் பூமியில் வேகமாக விழுந்தது.(14)
அந்தப் போரில், நேரான தன் கணைகளால் திருஷ்டத்யும்னனின் கணைகளை வெட்டிய கர்ணன், பிறகு, கூரிய கணைகள் பலவற்றால் திருஷ்டத்யும்னனையும் துளைத்தான்.(15) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஐந்தாலும், துரோணர் ஐந்தாலும், சல்லியன் ஒன்பதாலும், துச்சாசனன் மூன்றாலும் அவனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர்.(16) துரியோதனன் இருபது கணைகளாலும், சகுனி ஐந்தாலும் அவனை {திருதஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும், அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} வேகமாகத் துளைத்தனர்.(17) இப்படியே அவன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரைக் காக்க முயன்ற அந்த ஏழுவீரர்களாலும் அந்தப் போரில் துளைக்கப்பட்டான். எனினும் அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(18) உண்மையில் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் துரோணர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் உமது மகன் {துரியோதனன்} ஆகியோரை வேகமாகத் துளைத்தான்.(19) அந்த வில்லாளியால் {திருஷ்டத்யும்னனால்} இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து போரிட்டு, உரக்க முழங்கியபடியே மீண்டும் அம்மோதலில் திருஷ்டத்யும்னனைத் துளைத்தனர்.(20)
அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துருமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த கணை ஒன்றால் அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(21) அந்த இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய அவன் {துருமசேனன்}, “நில், நிற்பாயாக” என்றான். பிறகு திருஷ்டத்யும்னன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், ஏவப்படுபவரின் உயிரையே எடுக்கவல்லவையுமான மூன்று நேரான கணைகளால் அம்மோதலில் துருமசேனனைப் பதிலுக்குத் துளைத்தான்.(22) பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரகாசமான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட துருமசேனனின் தலையை மற்றொரு பல்லத்தால் பின்னவனின் {துருமசேனனின்} உடலில் இருந்து வெட்டினான்.(23) (சினத்தால்) (கீழ்) உதடு கடிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தத் தலையானது, பலமான காற்றின் செயல்பாட்டால், குலையில் இருந்து உதிர்ந்து விழும் பழுத்த பனம்பழத்தைப் போலத் தரையில் விழுந்தது.(24)
மீண்டும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் துளைத்த அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, போர் முறைகள் அனைத்தையும் அறிந்த போர்வீரனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} வில்லைச் சில பல்லங்களால் அறுத்தான்.(25) கடுஞ்சிங்கம் ஒன்று தன் வால் அறுபட்டத்தைப் பொறுத்துக் கொள்ளாததைப் போல, கர்ணனால் தன் வில் அறுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(26) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், சினத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைக் கணை மேகங்களால் மறைத்தான்.(27) சினத்தால் தூண்டப்பட்ட கர்ணனைக் கண்டவர்களும், தேர்வீரர்களில் காளையருமான அந்த ஆறு வீரர்கள், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கொல்லும் விருப்பத்தால் விரைவாக அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(28) உமது தரப்பின் முதன்மையான ஆறு தேர்வீரர்களுக்கு முன்பு நிற்கும் பின்னவனை {திருஷ்டத்யும்னனைக்} கண்ட துருப்புகள் அனைத்தும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவன் காலனின் கோரப் பற்களுக்கிடையில் விழுந்துவிட்டதாகவே கருதினர்.(29)
அதே வேளையில் தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சாத்யகி, தன் கணைகளை இறைத்தபடியே வீரத் திருஷ்டத்யும்னன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.(30) சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத போர்வீரன் வருவதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவனைப் பத்து கணைகளால் துளைத்தான்.(31) பிறகு சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, “ஓடாமல் என் முன்னே நிற்பாயாக” என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) பலிக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததற்கு ஒப்பாக இருந்தது.(33) க்ஷத்திரியர்களில் காளையான அந்தச் சாத்யகி, தன் தேரின் சடசடப்பொலியால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டே, தாமரைக் கண் கொண்ட கர்ணனை (பல கணைகளால்) துளைத்தான்.(34)
அந்த வலிமைமிக்கச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்ட உமது மகன்கள் அனைவரும் சாத்யகியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் துளைத்தனர்.(38)
அவர்கள் அனைவரின் ஆயுதங்களையும், கர்ணனின் ஆயுதங்களையும் தடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனனை {கர்ணனின் மகனை} வேகமாக நடுமார்பில் துளைத்தான்.(39) அந்தக் கணையால் துளைக்கப்பட்டவனும், பெரும் காந்தி கொண்டவனுமான வீர விருஷசேனன், தன் வில்லை விட்டுவிட்டு வேகமாகத் தன் தேரில் விழுந்தான்.(40) வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன் கொல்லப்பட்டதாக நம்பிய கர்ணன், தன் மகன் இறந்த துயரால் எரிந்து, பெரும் பலத்துடன் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான்.(41) இப்படிக் கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் யுயுதானன் {சாத்யகி}, பெரும் வேகத்துடன், பல கணைகளால் கர்ணனை மீண்டும் மீண்டும் துளைத்தான்.(42) மீண்டும் கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை ஐந்தாலும் துளைத்த அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தந்தை, மகன் ஆகிய இருவரின் தோலுறைகளையும், விற்களையும் அறுத்தான்.(43) பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும், எதிரிகளை அச்சத்தால் தூண்டவல்ல வேறு இரண்டு விற்களுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் யுயுதானனை {சாத்யகியைத்} துளைக்கத் தொடங்கினர்.(44)
வீரர்களுக்கு இப்படி அழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அவனது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது பெரிய படையைக் கலங்கடித்துவிடுவான். நம் துருப்புகளில் பல ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கின்றன. எவரும் போரில் நிற்கவில்லை {நிலைக்க முடியவில்லை}.(49) உண்மையில், காற்றால் கலைக்கப்படும் மேகத்திரள்களைப் போல நமது படையும் கலைக்கப்படுகிறது. அர்ஜுனனோடு மோதும் நமது படை, கடலில் படகு பிளப்பதைப் போலப் பிளக்கிறது.(50)
ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் விளைவால் போர்க்களத்தில் இருந்து ஓடவோ, கீழே விழவோ செய்யும் முதன்மையான வீரர்களின் உரத்த ஓலங்கள் கேட்கப்படுகின்றன.(51) ஓ! தேர்வீரர்களில் புலியே {துரியோதனா}, ஆகாயத்தில் கேட்கப்படும் இடி முழக்கத்தைப் போல, இந்த நள்ளிரவில், அர்ஜுனனின் தேர் அருகில் துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியைக் கேட்பாயாக.(52) அர்ஜுனனின் தேர் அருகே (பீடிக்கப்படும் போராளிகளால்) எழுப்பப்படும் உரத்த ஓலங்களையும், மகத்தான சிங்க முழக்கங்களையும், பல்வேறு பிற ஒலிகளையும் கேட்பாயாக.(53)
எனினும் இங்கே, நம் மத்தியில் சாத்வத குலத்தில் முதன்மையான இந்தச் சாத்யகி இருக்கிறான். இந்த நமது நோக்குப் பொருளை {சாத்யகியைத்} தாக்கி வீழ்த்த முடியுமேயானால், நம் எதிரிகளை அனைவரையும் நம்மால் வெல்ல முடியும்.(54) அதேபோலப் பாஞ்சால மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரிடம் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் {திருஷ்டத்யும்னன்}, தேர்வீரர்களில் முதன்மையான பல வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கிறான்.(55) நம்மால் சாத்யகியையும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனையும் கொல்ல முடிந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, வெற்றி நமதே என்பதில் ஐயமிருக்காது.(56)
சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்த விருஷ்ணி குலமகனையும் {சாத்யகியையும்}, இந்தப் பிருஷதன் மகனையும் {திருஷ்டத்யும்னனையும்} சூழ்ந்து கொண்டு, வீரர்களான இவ்விருரையும் நாம் கொல்ல முயல்வோம் [1].(57) சாத்யகி, குருக்களில் காளையர் பலருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து, ஓ! பாரதா {துரியோதனா}, சவ்யசச்சின் {அர்ஜுனன்}, நம் முன் துரோணரின் இந்தப் படைப்பிரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(58) பலரால் சூழப்பட்ட சாத்யகியைப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்க முடியாதவாறு, அங்கே {அர்ஜுனன் வரும் வழியில்} நமது முதன்மையான தேர்வீரர்களைப் பெருமளவில் அனுப்ப வேண்டும்.(59) மதுகுலத்தின் சாத்யகியை விரைவில் யமனுலகு அனுப்ப, இந்தப் பெரும் வீரர்கள், பெரும் பலத்துடன் கணை மேகங்களை ஏவட்டும்” என்றான் கர்ணன்.(60)
[1] வேறொரு பதிப்பில், “அபிமன்யுவைச் சூழ்ந்தது போலச் சூரர்களும், மகாரதர்களுமான அந்த விருஷ்ணி வீரனையும், பார்ஷதனையும் சூழ்ந்து கொண்டு கொல்வதற்கு நாம் முயற்சி செய்வோம்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “முறையே விருஷ்ணி மற்றும் பிருஷத குலங்களின் வழித்தோன்றல்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான இவ்விரு வீரர்களையும், சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே, கூரான ஆயுதங்களால் துளைத்து அவர்களைக் கொல்ல முயல்வோம்” என்றிருக்கிறது.
இதையே கர்ணனின் கருத்தாக உறுதிசெய்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, விஷ்ணுவிடம் பேசும் இந்திரனைப் போல அந்தப் போரில் சுபலனின் மகனிடம் {சகனியிடம்},(61) “பின்வாங்காத பத்தாயிரம் யானைகள் மற்றும் பத்தாயிரம் தேர்களுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வீராக.(62) துச்சாசனன், துர்விசாஹன், சுபாகு, துஷ்பிரதர்ஷணன் ஆகியோர் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினர் சூழ உம்மைப் பின்தொடர்வார்கள்.(63) ஓ! அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ! அம்மானே, பாவகனின் {அக்னியின்} மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே நீர் குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(65)
இப்படிச் சொல்லி உமது மகனால் தூண்டப்பட்ட சகுனி, கவசம் தரித்துக் கொண்டு, பெரும்படையாலும், உமது மகன்களாலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டுவின் மகன்களை எரிப்பதற்காகப் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். அப்போது உமது படைக்கும், எதிரிக்கும் இடையில் ஒரு பெரும்போர் தொடங்கியது.(66,67) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துணிவுமிக்கத் திருஷ்டத்யும்னனுடனும், பாஞ்சாலர்களுடனும் அற்புதமானதும், கடுமையானதுமான ஒரு போரைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.(70)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 170-ல் வரும் மொத்த சுலோகங்கள்-70
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 170-ல் வரும் மொத்த சுலோகங்கள்-70
ஆங்கிலத்தில் | In English |