Satyaki and Dhristadyumna pacified! | Drona-Parva-Section-199 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னன் பேச்சைக் கேட்டுப் பாண்டவர்கள் என்ன சொன்னார்கள் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; திருஷ்டத்யும்னனுக்குச் சாத்யகியின் கோபம் நிறைந்த பதில்; பூரிஸ்ரவஸ் கொலையைக் குறித்துச் சொல்லி சாத்யகியை இகழ்ந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் கொல்ல விரைந்த சாத்யகி; சாத்யகியைப் பிடித்துக் கொண்ட பீமன்; நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்த சகாதேவன்; பெரும் முயற்சிக்குப் பிறகு அமைதியை மீட்ட கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவர் வேதங்களை அதன் அங்கங்களோடு முறையாகக் கற்றவரோ, எவரிடம் ஆயுத அறிவியல் முழுமையும், பணிவும் குடி கொண்டிருந்ததோ, எவரது அருளால் பல முதன்மையான மனிதர்கள், தேவர்களும் அடைய முடியாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்தனரோ, அந்தச் சிறப்புமிக்க மனிதரும், பெரும் முனிவர் ஒருவரின் {பரத்வாஜரின்} மகனுமான துரோணர், ஐயோ, இழிந்தவனும், தீயவனும், குறுகிய மனம் கொண்டவனும், குருவைக் கொன்ற பாவியுமான அந்தத் திருஷ்டத்யும்னனால் அனைவரின் முன்னிலையிலும் அவமதிக்கப்படும்போது, தன் கோபத்தை வெளிக்காட்ட அங்கே எந்த க்ஷத்திரியனும் இல்லையா? க்ஷத்திரிய வகைக்கு ஐயோ! கோபத்திற்கு ஐயோ!(1-4) ஓ! சஞ்சயா, துரோணரின் படுகொலையைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களும், உலகில் உள்ள பிற அரச வில்லாளிகள் அனைவரும் அந்தப் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான்.(5)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குரூரச் செயலைச் செய்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும் முற்றிலும் அமைதியாக இருந்தனர்.(6) எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது சாய்ந்த பார்வைகளை வீசிய அர்ஜுனன், “ச்சீ… ச்சீ…” என்று அவனை {திருஷ்டத்யும்னனை} நிந்தித்து, கண்களில் கண்ணீர் வடிப்பவனாகவும், பெருமூச்சு விடுபவனாகவும் காணப்பட்டான்.(7) யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் - சகாதேவன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் நாணமடைந்து நின்றனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாத்யகி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(8) “இத்தகு தீய பேச்சுகளைப் பேசும் இந்த இழிந்த பாவியைத் தாமதமில்லாமல் கொல்லத்தக்க எந்த மனிதனும் இங்கே இல்லையா?(9) சண்டாளர்களில் ஒருவனைக் கண்டிக்கும் பிராமணர்களைப் போலவே, உனது பாவச் செயலுக்காகப் பாண்டவர்கள் அனைவரும் உன்னைக் கண்டிக்கின்றனர்.(10) இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்து, நேர்மையான மனிதர்கள் அனைவரின் கண்டிப்புகளையும் பெற்ற நீ, இத்தகைய மதிப்புமிக்க ஒரு சபையில் {பேசுவதற்கு} உன் உதடுகளை {வாயைத்} திறக்க வெட்கமாக இல்லையா?(11)
ஓ! வெறுக்கத்தக்க பாவியே {திருஷ்டத்யும்னனே}, நீ உன் ஆசானைக் கொல்ல முற்படுகையில் உனது நாவும், தலையும் ஏன் நூறு துண்டுகளாகச் சிதறவில்லை? அந்தப் பாவச்செயலால் நீ ஏன் வீழவில்லை?(12) இத்தகைய ஒரு பாவச் செயலைச் செய்துவிட்டு, இந்த மனிதர்களுக்கு மத்தியில் உன்னையே புகழ்ந்து கொள்ளும் நீ, பார்த்தர்கள், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரால் நிந்திக்கத்தக்கவனாகிறாய்.(13) மிகக்கொடிய அட்டூழியத்தைச் செய்துவிட்டு, அதற்கு மேலும் நீ, ஆசானிடம் இத்தகைய வெறுப்புணர்வை காட்டுகிறாயே. இதற்காக நீ எங்கள் கரங்களால் கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஒரு கணம் உன்னை உயிரோடு விட்டுவைப்பதால் கூடப் பயனேதும் கிடையாது.(14) ஓ! இழிந்தவனே {திருஷ்டத்யும்னனே}, அறம் சார்ந்த ஆசானின் தலைமயிரைப் பற்றிக் கொல்பவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?(15) ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, உன்னைப் பெற்றதால், உனக்கு முன்னோர்களில் ஏழு தலைமுறையினரும், உனது வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரும் புகழை இழந்து நரகத்தில் மூழ்கிவிட்டார்கள்.(16)
மனிதர்களில் காளையான இந்தப் பார்த்தரை {அர்ஜுனரைப்} பீஷ்மரின் கொலைக்காக நீ குற்றம் சுமத்துகிறாய். எனினும், சிறப்பு மிக்கவரான பின்னவரே {பீஷ்மரே}, தமது மரணத்தைச் சாதித்துக் கொண்டார்.(17) உண்மையைச் சொன்னால், பாவிகள் அனைவரிலும் முதன்மையான உன் உடன் பிறந்த சகோதரனே (சிகண்டியே) பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாவான். பாஞ்சால மன்னரின் மகன்களை விடப் பாவம் நிறைந்தவர்கள் இந்த உலகில் வேறு எவரும் இல்லை.(18) பீஷ்மரின் மரணத்திற்காகவே உன் தந்தை {துருபதன்} சிகண்டியைப் பெற்றார். அர்ஜுனரைப் பொறுத்தவரை, அவர் {அர்ஜுனர்} சிகண்டியைப் பாதுகாத்தார், அதே வேளையில் சிகண்டியே சிறப்புமிக்கப் பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தான்.(19) நேர்மையானவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட்ட உன்னையும், உனது சகோதரனையும் {சிகண்டியையும்} தங்களுக்கு மத்தியில் கொண்ட பாஞ்சாலர்களும், நேர்மையில் இருந்து விழுந்து, அற்பத்தனத்தின் கறைபடிந்து, நண்பர்களையும், ஆசான்களையும் வெறுப்பவர்களாக ஆகிவிட்டனர்.(20)
மீண்டும் என் முன்னிலையில் நீ பேசினால், வஜ்ரத்தைப் போன்ற பலமான என் கதாயுதத்தால் உன் தலையை நொறுக்கிவிடுவேன்.(21) பிராமணக் கொலைக்கு {பிரம்மஹத்திக்குச்} சற்றும் குறையாத குற்றத்தைச் செய்தவனும், பிராமணரைக் கொன்றவனுமான உன்னைக் கண்டு, தங்களைத் தூய்மை படுத்திக் கொள்வதற்காக மக்கள் சூரியனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.(22) ஓ! தீய நடத்தை கொண்டவனே {திருஷ்டத்யும்னனே}, பாஞ்சாலர்களில் இழிந்தவனே, முதலில் என் ஆசானைப் {அர்ஜுனரைப்} பழிப்பதற்கும், பிறகு என் ஆசானின் ஆசானைப் {துரோணரைப்} பழிப்பதற்கும் நீ வெட்கப்படவில்லையா?[1](23) நில், நிற்பாயாக. இந்த என் கதாயுதத்தின் ஓர் அடியைப் பொறுத்துக் கொள்வாயாக. நான் உன் தாக்குதல்கள் பலவற்றைப் பொறுத்துக் கொள்கிறேன்” என்றான் {சாத்யகி}.(24) அந்தச் சாத்வத வீரனால் {சாத்யகியால்} இப்படி நிந்திக்கப்பட்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கோபக்கார சாத்யகியிடம் இந்தக் கடுஞ்சொற்களைச் சிரித்துக் கொண்டே சொன்னான்.(25)
[1] “வங்க உரையைப் பொருள் கொள்ளக் கடினமாக இருக்கிறது. நான், குரோர்குருஞ்சா புயோபி Gurorguruncha bhuyopi என்று உள்ள பம்பாய் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். அதன் பொருள், “ஆசானின் ஆசான்” என்பதாகும். உண்மையில் அர்ஜுனன் சாத்யகியின் ஆசானாவான், எனவே, துரோணர் பின்னவனுடைய {சாத்யகியுடைய} ஆசானின் ஆசானாவார்” என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “என் முன்னிலையிலேயே என்னுடைய குருவையும், என் குருவுக்குக் குருவையும் மறுபடியும் நிந்திப்பவனான நீ வெட்கமடையவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்டவை போலவே இருக்கிறது.
திருஷ்டத்யும்னன் {சாத்யகியிடம்}, “ஓ! மதுகுலத்தோனே {சாத்யகியே} உன் வார்த்தைகளைக் கேட்டேன். ஆனாலும் உன்னை நான் பொறுத்துக் கொள்கிறேன். நியாயமற்ற பாவியான நீயே, நேர்மையான நீதிமான்களை நிந்திக்க விரும்புகிறாய்.(26) பொறுமையானது {மன்னிக்கும் தன்மையானது}, உலகத்தால் மெச்சப்படுகிறது. எனினும், பாவம் மன்னிக்கத் தகாததாகும். பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒருவனே {சாத்யகியே}, பொறுத்துக் கொள்பவர்களை {மன்னிக்கும் மனிதர்களை} பலமற்றவனாகக் கருதுகிறான்.(27) நடத்தையால் நீ இழிந்தவனாவாய். நீ பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனாவாய். மேலும் நீ அநீதியில் பிடிப்புள்ளவனாவாய். உன் கால் பெருவிரல் நுனியிலிருந்து முடிவரை நீ அனைத்து வகையிலும் நிந்திக்கத்தக்கவனே. {அப்படிப்பட்ட} நீயோ பிறரைப் பழிக்க {குற்றஞ்சுமத்த} விரும்புகிறாய்?(28) மீண்டும் மீண்டும் நீ தடுக்கப்பட்டாலும், பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரமற்றவனுமான பூரிஸ்ரவஸைக் கொன்ற உன் செயலைவிடப் பாவம் நிறைந்தது வேறு என்ன இருக்க முடியும்?(29) துரோணர், தமது படைகளை அணிவகுக்கச் செய்து, தெய்வீக ஆயுதங்களின் துணையுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமது ஆயுதங்களைக் கீழே வைத்ததும், நான் அவரைக் கொன்றேன். ஓ! அற்ப இதயம் கொண்டவனே, அந்தச் செயலில் முறையற்றது {பாவம்} என்ன இருக்கிறது?(30) ஓ! சாத்யகி, தவசியைப் போலப் பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், வேறு ஒருவரால் கரம் அறுக்கப்பட்டவனுமான அந்த எதிரி {பூரிஸ்ரவஸ்} களப்போரில் இருந்து விலகியபோது, அவனைக் கொன்ற ஒருவன், இத்தகைய செயலை எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?(31) உனது அந்த வீரப் பகைவன் {பூரிஸ்ரவஸ்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் காலால் உன்னை உதைத்து, பூமியில் வீசி எறிந்தான். அப்போது உன் ஆண்மையைக் காட்டி அவனை {பூரிஸ்ரவஸை} ஏன் நீ கொல்லவில்லை?(32) எனினும் பார்த்தர் {அர்ஜுனர்} துணிச்சல்மிக்கவனான சோமதத்தனின் அந்த வீரமகனை {பூரிஸ்ரவஸை} ஏற்கனவே வென்ற பிறகே நீ அவனை நியாயமற்ற முறையில் கொன்றாய்.(33)
எங்கெல்லாம் துரோணர், பாண்டவர்களின் படைகளை முறியடிக்க முயன்றாரோ அங்கல்லாம் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே நான் சென்றேன்.(34) இவ்வழியில் ஒரு சண்டாளனைப் போல நடந்து கொண்டவனும், நிந்திக்கப்படத்தக்கவனுமான நீ, இத்தகைய கடும் வார்த்தைகளால் என்னை நிந்திக்கிறாயா?(35) ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே, நீயே தீச்செயல்கள் செய்தவன்; நானல்ல. பாவம் நிறைந்த செயல்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. மீண்டும் என் மீது பழி சுமத்தாதே.(36) அமைதியாக இருப்பாயாக. இதன் பிறகு என்னிடம் எதையும் சொல்வது உனக்குத் தகாது. உதடுகளால் நான் சொல்லும் மறுமொழி இதுவே. வேறு எதையும் சொல்லாதே.(37) மடமையினால் மீண்டும் இத்தகைய கடும் வார்த்தைகளை நீ பேசினால், என் கணைகளால் உன்னை நான் யமலோகம் அனுப்புவேன்.(38) ஓ! மூடனே {சாத்யகியே}, அறத்தால் மட்டுமே ஒருவன் தன் எதிரிகளை வெல்ல முடியாது. குருக்களின் அநீதிகளையும் இப்போது கேட்பாயாக.(39)
சில காலத்திற்கு முன்பு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் (அவர்களால்) நியாயமற்ற வகையில் வஞ்சிக்கப்பட்டார். ஓ! சாத்யகி, திரௌபதியும் நியாயமற்ற வகையிலேயே தண்டிக்கப்பட்டாள்.(40) ஓ! மூடனே {சாத்யகியே}, கிருஷ்ணையுடன் {கரிய நிறம் கொண்ட திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், அவர்களிடம் இருந்த அனைத்தும் கொள்ளையடிக்கபட்டு, மிக நியாயமற்ற வகையில் நாடுகடத்தப்பட்டனர்.(41) நியாயமற்ற ஒரு செயலாலேயே மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} நம்மிடம் இருந்து எதிரியால் {அவர்களிடம்} இழுக்கப்பட்டான். நியாயமற்ற ஒரு செயலாலேயே சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} கொல்லப்பட்டான்.(42) இந்தத் தரப்பிலோ, நியாயமற்ற ஒரு செயலாலேயே குருக்களின் பாட்டன் பீஷ்மர் கொல்லப்பட்டார். பூரிஸ்ரவஸும் கூட, நியாயங்களை அறிந்தவனான உனது நியாயமற்ற ஒரு செயலாலேயே கொல்லப்பட்டான்.(43) இப்படியே இந்தப் போரில் எதிரிகளும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் செயல்பட்டுள்ளனர். துணிவு கொண்டோரும், அறநெறி அறிந்தோருமாகிய அவர்கள் அனைவரும், ஓ! சாத்வதா {சாத்யகி}, வெற்றியை ஈட்டுவதற்காக இவ்வாறே செயல்பட்டுள்ளனர்.(44) உயர்ந்த அறநெறியை உறுதி செய்வது மிகக் கடினமானதாகும். அதேபோல, ஒழுக்கக்கேட்டை {அறநெறியற்ற செயல்பாட்டை} புரிந்து கொள்வதும் மிகக் கடினமானதாகும். உன் தந்தைமாரின் வீட்டிற்குத் திரும்பாமல் இப்போது கௌரவர்களுடன் போரிடுவாயாக” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(45)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(திருஷ்டத்யும்னனின் உதடுகளில் இருந்து வெளி வந்த) கடுமை நிறைந்த இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்டவனும், அருளப்பட்டவனுமான சாத்யகி, {கோபத்தால்} தலையில் இருந்து உள்ளங்கால் வரை நடுங்கத் தொடங்கினான்.(46) சினத்தால் நிறைந்த அவனது கண்கள் தாமிர வண்ணத்தை ஏற்றன. தன் வில்லைத் தனது தேரில் வைத்த அவன் {சாத்யகி}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டான்.(47) பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்த அவன் {சாத்யகி}, பெரும் கோபத்தோடு, “நான் உன்னிடம் கடுமையாகப் பேச மாட்டேன். ஆனால், கொல்லத்தக்கவனான உன்னைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(48) வலிமைமிக்கச் சாத்யகி, கோபத்தாலும், பழிவாங்கும் விருப்பத்தாலும் தன்னையே போன்றவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி, யமனைப் போலச் செல்வதைக் கண்ட வலிமைமிக்கப் பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} தூண்டுதலின் பேரில், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துத் தன் கரங்களால் அவனைப் {சாத்யகியைப்} பிடித்துக் கொண்டான்.(49,50) பெரும் கோபத்தில் விரைந்தவனும், பெரும் பலம் கொண்டனுமான சாத்யகி, தன்னைப் பின்னே இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகனையும் {பீமனையும்} பலவந்தமாக இழுத்துக் கொண்டே ஐந்து எட்டுகள் முன்னேறினான்.(51) அப்போது தன் பாதத்தை உறுதியாக ஊன்றிய பீமன், ஆறாவது எட்டில் அந்தச் சினி குலத்துக் காளையை {சாத்யகியை} நிறுத்தினான்.(52)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து கீழே குதித்த சகாதேவன், பீமனின் வலிய கரங்களுக்குள், உறுதியாக அகப்பட்டிருந்த சாத்யகியிடம், இந்த இனிமையான வார்த்தைகளில்,(53) “ஓ! மனிதர்களில் புலியே {சாத்யகியே}, ஓ! மதுகுலத்தோனே {சாத்யகியே}, விருஷ்ணிகளோடு கூடிய அந்தகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரை விட, அன்புக்குரிய வேறு நண்பர்கள் எங்களுக்கு இல்லை.(54) அதே போல அந்தகர்களும், விருஷ்ணிகளும், குறிப்பாகக் கிருஷ்ணரும், எங்களைவிட அன்புக்குரிய வேறு நண்பர்களைக் கொண்டிருக்க முடியாது.(55) ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, அதே போலப் பாஞ்சாலர்கள், கடல்களுக்கு மத்தியில் உள்ள மொத்த உலகில் தேடினாலும், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் விட அன்புக்குரிய வேறு நண்பர்களை அவர்களால் காண முடியாது.(56) நீ இந்த இளவரசனுக்கு எப்படிப்பட்ட நண்பனோ; இவனும் உனக்கு அதே போன்ற நண்பனே. நாங்கள் உங்களுக்கு எவ்வாறோ, அவ்வாறே நீங்களும் எங்களுக்கு {நண்பர்களாக} இருக்கிறீர்கள்.(57) கடமைகள் அனைத்தையும் அறிந்த நீ, இப்போது நண்பர்களுக்கான கடமையை நினைவுகூர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} இலக்காகக் கொண்ட இந்த உனது கோபத்தை விடுவாயாக. ஓ! சிநி குலத்தில் முதன்மையானவனே {சாத்யகியே} அமைதியடைவாயாக.(58) பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்துக் கொள்வாயாக {மன்னிப்பாயாக}; அதே போலப் பிருஷதன் மகனும் உன்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். நாங்களும் பொறுமையைக் கடைப்பிடிப்போம். பொறுமையைவிடச் சிறந்தது வேறு எது இருக்கிறது?” என்று கேட்டான் {சகாதேவன்}.(59)
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரன் இவ்வாறு சகாதேவனால் தணிவடையச் செய்யப்படுகையில், பாஞ்சால மன்னனின் மகன் {திருஷ்டத்யும்னன்} சிரித்துக் கொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(60) “ஓ! பீமரே, போரில் தன் ஆற்றலில் செருக்குள்ள சிநியின் பேரனை {சாத்யகியை} விடுவீராக. ஓ! குந்தியின் மகனே {பீமரே}, அவனது {சாத்யகியின்} போராசையையும், சினத்தையும் என் கூரிய கணைகளால் தணித்து, அவனது உயிரை நான் எடுக்கும் வரை, மலைகளைத் தாக்கும் காற்றைப் போல அவன் {சாத்யகி} என்னிடம் வரட்டும்.(61,62) அதோ கௌரவர்கள் வருகிறார்கள். (சாத்யகியைக் கொன்ற பிறகு) பாண்டவர்களின் இந்தப் பெரும்பணியை நான் சாதிப்பேன்.(63) அல்லது, போரில் எதிரிகள் அனைவரையும் பல்குனர் {அர்ஜுனர்} தடுக்கட்டும். என்னைப் பொறுத்தவரை, நான் இவனது {சாத்யகியின்} தலையை வீழ்த்துவேன்.(64) போரில் கரமற்ற பூரிஸ்ரவஸைப் போல என்னை இவன் நினைத்துக் கொள்கிறான். அவனை விடுவீராக. ஒன்று நான் அவனைக் {சாத்யகியைக்} கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(65)
பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வலிமைமிக்கவனும், பீமனின் உறுதியான பிடிக்குள் இருந்தவனுமான சாத்யகி, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு {கோபத்தால்} நடுங்கத் தொடங்கினான்.(66) பெரும் வலிமையும், பலம் நிறைந்த கரங்களையும் கொண்ட அவர்கள் இருவரும், காளைகள் இரண்டைப் போல முழங்கத் தொடங்கினர். அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும் பெருமுயற்சி செய்து, அவ்வீரர்களை அமைதிப்படுத்துவதில் வென்றனர். சினத்தால் இரத்த சிவப்பாகக் கண்கள் சிவந்திருந்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரையும் அமைதிப்படுத்தியதும், (பாண்டவப் படையின்) க்ஷத்திரியர்களில் முக்கியமானோர் அனைவரும் எதிரிப்படையின் போர்வீரர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்” என்றான் {சஞ்சயன்}.(67,68)
----------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 199-ல் உள்ள சுலோகங்கள் : 68
துரோணபர்வம் பகுதி 199-ல் உள்ள சுலோகங்கள் : 68
ஆங்கிலத்தில் | In English |