Arjuna reproached by Bhima and Dhristadyumna! | Drona-Parva-Section-198 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : துரோணரின் கொலைக்கு நியாயம் கற்பித்த பீமசேனன், அர்ஜுனனைக் கண்டித்தது; தானே அஸ்வத்தாமனைக் கொல்லப்போவதாகச் சொன்ன பீமன்; திருஷ்டத்யும்னன் தன் நடத்தை நீதியானதே என்று சொல்லி, அர்ஜுனனை நிந்தித்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த தேர்வீரர்களில் எவரும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஒரு வார்த்தையும் பேசாதிருந்தனர்.(1) அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து குந்தியின் மகனான அர்ஜுனனை இவ்வார்த்தைகளால் நிந்தித்தான்:(2) “காடுகளில் வாழும் துறவியைப் போலவோ, கடும் நோன்புகளை நோற்று, புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் கொண்ட ஒரு பிராமணரைப் போலவோ அறநெறிகளின் உண்மைகளை நீ போதிக்கிறாய்.(3) பிறரைக் காயங்களில் இருந்தும், தீங்குகளில் இருந்தும் காப்பதாலேயே ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான். அத்தகைய ஒருவன் காயங்களில் இருந்தும், தீங்குகளில் இருந்தும் தன்னையே காத்துக் கொள்ள வேண்டும். நல்லோரான மூவரிடம் (தேவர்கள், பிராமணர்கள், ஆசான்கள் ஆகியோரிடம்) பொறுமையைக் கடைப்பிடிக்கும் ஒரு க்ஷத்திரியன், தன் கடமைகளைச் செய்வதால் விரைவிலேயே இந்தப் பூமியையும், அறத்தையும், புகழையும், செழிப்பையும் வெல்கிறான்[1].(4)
[1] “பொருளைத் தெளிவாக்கவே மூலத்தை நான் விரித்துக் கூறியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “துன்பத்தில் இருந்து காப்பாற்றுகிறவனும், யுத்தத்தினால் ஜீவிக்கிறவனும், மாதர்களிடத்திலும், சாதுக்களிடத்திலும் பொறுமையுள்ளவனுமான க்ஷத்திரியன் சீக்கிரமாகப் பூமியையும், தர்மத்தையும், கீர்த்தியையும், ஐஸ்வர்யங்களையும் பெறுகிறான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “தீங்குகளில் இருந்து பிறரையும், காயங்கள் மற்றும் தீங்குகளில் இருந்து தன்னையும் பாதுகாத்துக் கொண்டு, பெண்களிடமும், நல்லோரிடமும் பொறுமையைக் காட்டும் ஒரு க்ஷத்திரியன், விரைவில் பூமியையும் (ஆட்சியையும்), அறத்தகுதியையும், புகழையும், செழிப்பையும் அடைகிறான்” என்றிருக்கிறது.
ஓ! குலத்தைத் தாங்குபவனே {அர்ஜுனனே}, ஒரு க்ஷத்திரியனின் அனைத்துக் குணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். எனவே அறியாமை கொண்ட ஒருவனைப் போல நீ பேசுவது அழகாயில்லை.(5) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனனே}, உனது ஆற்றல், சச்சியின் தலைவனான சக்ரனை {இந்திரனைப்} போன்றதாகும் {இந்திரனின் ஆற்றலுக்கு ஒப்பானதாகும்}. கரைகளை ஒருபோதும் தாண்டாத பெருங்கடலைப் போலவே நீ ஒருபோதும் அறநெறிகளின் எல்லைகளைத் தாண்டாதவனாக இருக்கிறாய்.(6) பதிமூன்று வருடங்களாக நீ கொண்ட கோபத்தைக் கைவிட்டு, அறத்தை நாடும் உன்னைக் கண்டு எவன் தான் உன்னை வழிபடமாட்டான்?(7) ஓ! ஐயா {அர்ஜுனா}, நற்பேறாலேயே உன் இதயம் இன்று அறத்தைப் பின்பற்றித் தொடர்ந்து செல்கிறது. ஓ! மங்காப் புகழ் கொண்டவனே, நற்பேறாலேயே உன் புத்தி கருணை கொள்கிறது.(8) எனினும், அறத்தின் பாதையை நீ பின்பற்றியவனாக இருந்தாலும் கூட, மிக அநீதியாகவே உன்னிடம் இருந்து உனது அரசு பறிக்கப்பட்டது. உன் மனைவி திரௌபதியைச் சபைக்கு இழுத்து வந்து, உனது எதிரிகள் அவளை அவமதித்தனர்.(9) மரப்பட்டைகள் மற்றும் விலங்குகளின் தோலை உடுக்கச் செய்து நாம் அனைவரும் காடுகளுக்கு நாடு கடத்தப்பட்டோம். அந்தப் பரிதாப நிலைக்கு நாம் தகுந்தவர்களல்ல என்றாலும், பதிமூன்று {13} வருடங்கள் அதைச் சகிக்க நம் எதிரிகளால் நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.(10)
ஓ! பாவமற்றவனே {அர்ஜுனனே}, கோப வெளிப்பாட்டையே கோரும் இந்தச் சூழ்நிலைகள் அனைத்தையும் நீ மன்னித்துவிட்டாய்{அல்லவா?}. ஒரு க்ஷத்திரியனின் கடமைகளுக்குக் கட்டுப்பட்ட நீ இவற்றை அமைதியாகத் தாங்கிக் கொண்டாய் {அல்லவா?}.(11) நீதியற்ற இச்செயல்கள் அனைத்தையும் நினைவுகூரும் நான் அவற்றுக்குப் பழிவாங்கவே இங்கு வந்திருக்கிறேன். (நீ ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாய்?) நம் அரசை நம்மிடம் இருந்து கொள்ளையிட்ட அந்த இழிந்த பாதகர்களை நானே கொல்லப் போகிறேன்.(12) “போரிடச் செல்லும் நாம், நம் சிறப்பான திறன்களைக் கிட்டத்தட்ட முழுமையான அளவுக்கு வெளிப்படுத்தி முயல்வோம்” என்ற இவ்வார்த்தைகளை முன்பு நீ சொன்னாய்.(13) இப்போதோ நீ அறத்தை நாடுகிறாய். எனவே, நீ முன்பு சொன்ன வார்த்தைகள் பொய்யாகிவிட்டன. ஏற்கனவே நாம் அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளோம். எனினும், ஓ! எதிரிகளை நசுக்குபவனே, காயம்பட்ட மனிதர்களின் புண்களில் அமிலத்தை ஊற்றுவதைப் போல, இந்த உனது வார்த்தைகளால் எங்கள் இதயங்களின் மையத்தையே அறுக்கிறாய்.(14) உன் வார்த்தை ஈட்டிகளால் பீடிக்கப்பட்டு என் இதயம் பிளந்து கொண்டிருக்கிறது.(15)
நீ அறவோனாயிருப்பினும், மெச்சத்தகுந்தவர்களான எங்கள் அனைவரையோ, உன்னையோ நீ மெச்சாததால், அநீதியானது எதனாலானது என்பதை உண்மையில் நீ அறியாதவனாக இருக்கிறாய்.(16) கேசவனே {கிருஷ்ணனே} இங்கிருக்கும்போது, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன்னில் பதினாறு {1/16} பங்குக்கும் ஈடாகாத போர்வீரரான துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நீ புகழ்ந்து கொண்டிருக்கிறாய்.(17) உன் குற்றங்களை அறிக்கையிடும் {ஒப்புக் கொள்ளும்} நீ ஏன் வெட்கத்தை உணராமல் இருக்கிறாய்? தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், கனமானதும், பயங்கரமானதுமான என் கதாயுதத்தைச் சுழற்றி பூமியைக் கிழித்துப் போடவோ, மலைகளையே பிளக்கவோ என்னால் முடியும். ஒரு சூறாவளியைப் போலவே, மலைகளைப் போலத் தெரியும் பெரும் மரங்களை முறிக்க என்னால் முடியும்.(18,19) தேவர்களைத் தங்கள் தலைமையில் கொண்டு, ஒன்றாகச் சேர்ந்து வரும் தேவர்களையும், அவர்களுடன் சேர்த்து ராட்சசர்கள் அனைவரையும், அசுரர்களையும், உரகர்களையும், மனிதர்களையும் என் கணைகளைக் கொண்டு முறியடிக்க என்னால் முடியும்.(20)
ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, உன் அண்ணனான என்னை அப்படியே அறிந்து கொண்டும், ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவனே, துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} குறித்த அச்சத்தை ஊக்குவிப்பது உனக்குத் தகாது.(21) அல்லது, ஓ! பீபத்சுவே {அர்ஜுனா}, இந்த மனிதர்களில் காளையருடன் நீ இங்கேயே நில். என் கதாயுதத்துடன் தனியனாக, ஆதரவற்றவனாகச் செல்லும் நான் பெரும்போரில் இவனை {அஸ்வத்தாமனை} வீழ்த்துவேன்” என்றான் {பீமன்}.(22)
பீமன் முடித்ததும், பாஞ்சால மன்னனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, கோபத்துடன் முழங்கிக் கொண்டிருக்கும் விஷ்ணுவிடம் பேசிய (தைத்திய தலைவன்) ஹிரண்யகசிபுவைப் போல[2] பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைப் பேசினான்:(23) “ஓ! பீபத்சு {அர்ஜுனரே}, வேள்விகளில் துணைபுரிதல் {யாகம் செய்வித்தல்}, கல்வி கற்பித்தல் {அத்யயனம் செய்வித்தல்}, தானம் செய்தல், வேள்விகள் செய்தல், தானம் பெறுதல், கல்வி {அத்யயனம்} ஆகிய இந்த ஆறையும் பிராமணர்களின் கடமைகளாகத் தவசிகள் விதித்திருக்கின்றனர். என்னால் கொல்லப்பட்ட அந்தத் துரோணர் இந்த ஆறில் எதற்கு அர்ப்பணிப்போடு இருந்தார்? ஓ! பார்த்தரே, பிறகு ஏன் என்னை இப்படி நிந்திக்கிறீர்?(24,25)
[2] “வங்கப் பதிப்புகளில் 23ம் சுலோகத்தின் முதல் வரி, பம்பாயப் பதிப்பின் இந்தச் சுலோகத்தின் இண்டாம் வரியில் வருகிறது. எனினும், இவ்விரு பதிப்புகளிலுமே ஒரு தவறு இருப்பதாகத் தெரிகிறது. விஷ்ணு ஹிரண்யகசிபுவைக் கொன்ற போது, பின்னவனை அவன் பேசவிடவில்லை. ஓர் எழுத்து வேறுபட்டாலும் இந்த வரியின் பொருள் பீமனின் பேச்சுக்குப் பொருந்துவதாகவே அமையும், எனினும் அந்த ஒப்பீடு இங்கு எழும் பொருளுக்கு எதிரானதாகவே அமையும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “பாஞ்சால குமாரனான திருஷ்டத்யும்னன், மிக்கக் கோபங்கொண்டு கர்ஜிக்கின்ற ஹரியை நோக்கி ஹிரண்யகசிபு சொல்லியது போல, கோபங்கொண்டு கர்ஜிக்கின்ற பார்த்தனை நோக்கி” என்று இருக்கிறது. மன்மநாததத்தரின் பதிப்பிலும் இதே பொருளிலேயே இச்சுலோக விளக்கம் அமைந்திருக்கிறது.
தமது {பிராமண} வகைக்கான கடமைகளில் இருந்து விழுந்து, க்ஷத்திரிய வகைக்கான கடமைகளைப் பயின்று, தீய செயல்களைச் செய்த அவர் {துரோணர்}, மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஆயுதங்களால் நம்மைக் கொன்று வந்தார்.(26) தம்மைப் பிராமணர் என்று கூறிவந்த அவர் {துரோணர்} தடுக்கப்பட முடியாத மாயைகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாயையாலேயே {வஞ்சகத்தாலேயே} அவர் இன்று கொல்லப்பட்டிருக்கிறார். ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, இதில் முறையற்றது என என்ன இருக்கிறது?(27) என்னால் துரோணர் இவ்வாறு தண்டிக்கப்பட்டதால், சினத்தால் அவரது மகன் {அஸ்வத்தாமன்} இப்படி உரக்க முழங்குகிறானென்றால், அதனால் நீர் என்ன இழக்கிறீர்?(28) இப்படி முழங்கும் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} போருக்குக் கௌரவர்களைத் தூண்டி, தம்மால் அவர்களைக் காக்க இயலாமல் அவர்களைக் கொலையாக்கினால் அதை நான் ஆச்சரியமாக நினைக்க மாட்டேன்.(29) அறநெறிகளை அறிந்தவர் நீர். பிறகு ஏன் நான் என் ஆசானைக் கொன்றவன் எனச் சொல்கிறீர்? இதற்காகவே நான் (வேள்வித்) தீயில் இருந்து உதித்துப் பாஞ்சாலர்களின் மன்னனுக்கு {துருபதனுக்கு} மகனாகப் பிறந்தேன்.(30)
ஓ! தனஞ்சயரே {அர்ஜுனரே}, முறையானதும் முறையற்றதுமான அனைத்துச் செயல்களையும் கொண்ட போரில் ஈடுபடும்போது, அவரைப் பிராமணர் என்றோ, க்ஷத்திரியர் என்றோ எவ்வாறு நீர் அழைப்பீர்?(31) ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {அர்ஜுனரே}, கோபத்தில் உணர்வுகளை இழந்து, ஆயுதத்தை அறியாதோர் மீது பிரம்மாயுதத்தை ஏவிக் கொல்வதை வழக்கமாகக் கொண்ட அவர் {துரோணர்}, நமது சக்திக்குட்பட்ட எவ்வழியிலாவது ஏன் கொல்லப்படக்கூடாது?(32) நீதியற்றவர்கள் நஞ்சுக்கு நிகரானவர்கள் என்று நீதிமான்கள் சொல்கின்றனர். ஓ! அறநெறிகளின் உண்மைகளை நன்கு அறிந்தவரே, ஓ! அர்ஜுனரே, என்னை ஏன் நீர் நிந்திக்கிறீர்?(33)
கொடூரரான அந்தத் தேர்வீரரையே பற்றியிழுத்து நான் கொன்றேன். நிந்திக்கத்தக்க எதையும் நான் செய்யவில்லை. ஓ! பீபத்சுவே {அர்ஜுனரே}, என்னை ஏன் நீர் வாழ்த்தாமலிருக்கிறீர்?(34) ஓ! பார்த்தரே, சுடர்மிக்கச் சூரியனுக்கோ, கடும் நஞ்சுக்கோ, அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்புக்கோ ஒப்பான துரோணரின் அந்தத் தலையை நான் அறுத்தேன். மெச்சத்தக்க அந்தச் செயலை ஏன் நீர் மெச்சாமலிருக்கிறீர்?(35) போரில் என் சொந்தங்களையே அவர் கொன்றிருக்கிறார், வேறு எவரையும் அவர் கொல்லவில்லை. அவரது தலையை அறுத்ததால் மட்டுமே என் இதய நோய் தணியாது என நான் சொல்வேன்.(36) ஜெயத்ரதனின் தலையைப் போல அந்தத் தலையை நிஷாதர்களின் ஆட்சிப்பகுதிகளுக்குள் எறியாதது என் இதயத்தின் மையத்தையே பிளந்து கொண்டிருக்கிறது[3].(37) ஓ! அர்ஜுனரே, தன் எதிரிகளைக் கொல்லாதவன் பாவமிழைத்தவனானவான் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். கொல்வதோ, கொல்லப்படுவதோ க்ஷத்திரியனின் கடமையேயாகும்.(38)
[3] வேறொரு பதிப்பில், “ஜயத்ரதனுடைய தலைபோல அந்தத் துரோணருடைய தலையானது வேடர்கள் வசிக்கும் நாட்டில் என்னால் எறியப்படவில்லையென்பது என் மர்மஸ்தானத்தை அறுக்கிறது” என்றிருக்கிறது.
துரோணர் என் எதிரியாவார். உமது நண்பரான துணிச்சல்மிக்கப் பகதத்தரை நீர் கொன்றது போலவே, அவரும் {துரோணரும்} போரில் என்னால் நியாயமாகவே கொல்லப்பட்டார்.(39) போரில் உமது பாட்டனைக் {பீஷ்மரைக்} கொன்றுவிட்டு, அச்செய்கையை நீர் நியாயமானதாகக் கருதுகிறீர். என் இழிந்த எதிரியை {துரோணரை} நான் கொன்றதைப் பிறகு ஏன் நீர் நியாயமற்றதாகக் கருத வேண்டும்?(40) ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, (பலவீனமான உயிரினங்கள் தன் முதுகில் ஏற உதவி செய்வதற்காகத்) தன் உடலில் சாய்க்கப்பட்ட ஏணியுடன் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு யானைப் போல, நமது உறவின் விளைவால், நான் உம் முன்னிலையில் என் தலையை உயர்த்த முடியாதவனாக இருக்கிறேன். எனவே, என்னை நிந்திப்பது உமக்குத் தகாது.(41) ஓ! அர்ஜுனரே, திரௌபதி மற்றும் திரௌபதியின் பிள்ளைகளுக்காகவே உமது பேச்சில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் நான் மன்னிக்கிறேன்; வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல.(42) நான் ஆசானிடம் {துரோணரிடம்} கொண்ட பகைமையானது தந்தை மகன் வழி வந்தது என்பது நன்கு அறியப்பட்டதாகும். இவ்வுலகில் அனைவரும் இஃதை அறிவார்கள். பாண்டுவின் மகன்களே, நீங்கள் அஃதை அறியவில்லையா?(63) பாண்டு மகன்களின் மூத்தவர் {யுதிஷ்டிரர்} உண்மையற்ற பேச்சு கொண்டவரல்ல. ஓ! அர்ஜுனரே, நானும் பாவியல்ல. இழிந்த துரோணரே தமது சீடர்களை வெறுப்பவராகவே இருந்தார். {எனவே} போரிடுவீராக. வெற்றி உமதாகட்டும்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(44)
-----------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 198-ல் உள்ள சுலோகங்கள்: 44
-----------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 198-ல் உள்ள சுலோகங்கள்: 44
ஆங்கிலத்தில் | In English |