Bhima against Narayana weapon! | Drona-Parva-Section-200 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய அஸ்வத்தாமன்; நாராயண ஆயுதத்தை அழைத்த அஸ்வத்தாமன்; பாண்டவப் படை கலக்கமடைந்தது; அலட்சியமாக நிற்கும் அர்ஜுனனைக் கண்ட யுதிஷ்டிரன் தன் துருப்புகளைத் தப்பி ஓடத் தூண்டுவது; பாண்டவர்களிடம் துரோணர் கொண்ட நட்பு குறித்துச் சொன்ன யுதிஷ்டிரன்; நாராயணாயுதத்தைத் தணிக்க ஆயுதங்களைக் கீழே வீசி பணியுமாறு பாண்டவப் போராளிகளைத் தூண்டிய கிருஷ்ணன்; பீமன் மட்டுமே அஸ்வத்தாமனின் ஆயுதத்தை எதிர்ப்பது; காண்டீவத்தைக் கைவிட வேண்டாம் என்று அர்ஜுனனைத் தூண்டிய பீமன்; நாராயணாயுதத்தின் சக்தியில் சிக்கிய பீமன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, யுக முடிவின் அந்தகனைப் போலப் பேரழிவை ஏற்படுத்த தொடங்கினான்.(1) தன் எதிரிகளை, அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கொன்ற அஸ்வத்தாமன், விரைவிலேயே இறந்தோராலான ஒரு மலைக்குவியலை அங்கே உண்டாக்கினான். தேர்களின் கொடிமரங்கள் அதன் மரங்களாகவும், ஆயுதங்கள் அதன் கூரிய சிகரங்களாகவும் ஆகின. உயிரற்ற யானைகள் அதன் பெரும்பாறைகளாகின; குதிரைகள் அதன் கிம்புருஷர்கள் ஆகின; விற்கள் அதன் கொடிகளாகவும், செடிகளாகவும் ஆகின. அதன் ஊனுண்ணும் விலங்குகளாக அமைந்த இறகு படைத்தவை {பறவைகள்} அனைத்தின் கூக்குரல்களையும் அஃது எதிரொலித்துக் கொண்டிருந்தது. அங்கே நடந்து கொண்டிருந்த ஆவிகள் {பூதங்கள்} அதன் யக்ஷர்கள் ஆகின[1].(2,3)
[1] “கிம்புருஷர்கள், பாதி மனிதன், பாதிக் குதிரைகளாலான தொன்மக்கதை விலங்குகளாகும்.
இந்து நம்பிக்கையின்படி கிம்புருஷர்கள் இல்லாத மலை ஏதும் கிடையாது. யக்ஷர்கள் என்போர், அடைவதற்கரிதான மலைகள் மற்றும் குன்றுகளில் வாழ்ந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “கொடிமரங்களாகிற மரங்களையுடையதும், சஸ்திரங்களாகிற கொடுமுடிகளுள்ளதும், கொல்லப்பட்ட யானைகளாகிற பெருங்கற்களோடு கூடியதும், குதிரைகளாகிற கிம்புருஷர்களால் நான்கு புறத்திலும் வியாபிக்கப்பட்டதும், விற்களாகி கொடிகளால் சூழப்பட்டதும், மாம்ஸத்தைப் புசிக்கும் பக்ஷிகளினுடைய சப்தங்களால் எதிரொலிக்கின்றதும், பூதகணங்களாலும், யக்ஷகணங்களாலும் வியாபிக்கப்பட்டதுமான தேகபர்வதத்தைச் சத்துருக்களைப் பல்லங்களால் கொன்று விருத்தி செய்தார்” என்றிருக்கிறது. கங்குலி ஆவி என்று குறிப்பிட்டிருப்பது இங்கே பூதகணங்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
அப்போது உரக்க முழங்கிய அஸ்வத்தாமன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} கேட்கும் வகையில் தன் சபதத்தை மீண்டும் சொன்னான்,(4) “குந்தியின் மகனான யுதிஷ்டிரன், அறமெனும் வெளிப்புற ஆடையை {போர்வையை} மட்டுமே ஏற்று, (நியாயமாகப்) போரிட்டுக் கொண்டிருந்த ஆசானைத்{துரோணரைத்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்ததால்,(5) அவன் {யுதிஷ்டிரன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் அவனது படையை முறியடித்து அழிக்கப் போகிறேன். விரைந்து சென்று அவனது {யுதிஷ்டிரனின்} துருப்புகள் அனைத்தையும் சிதைக்கும் நான், பிறகு பாவம் நிறைந்த பாஞ்சாலர்களின் இளவரசனையும் {திருஷ்டத்யும்னனையும்} கொல்வேன்.(6) உண்மையில், என்னோடு மோதப்போகும் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், உன் துருப்புகளை அணிதிரட்டுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(7)
அஸ்வத்தாமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, சிங்க முழக்கத்தின் பேரொலியால் தன் துருப்புகளின் அச்சத்தை விலக்கி அவர்களை அணிதிரட்டினான்.(8) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது குரு மற்றும் பாண்டவப் படைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட மோதலானது அலைகள் நிறைந்த பெருங்கடல்கள் இரண்டின் மோதலைப் போலப் பயங்கரமாக இருந்தது.(9) அச்சத்திலிருந்த கௌரவர்கள், துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} தங்கள் அச்சங்கள் விலகப்பெற்றனர். துரோணரின் படுகொலையால் பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் சீற்றத்துடன் இருந்தனர்.(10) வெற்றி மீதான உறுதியான நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, சினத்தால் நிறைந்து, மிகவும் உற்சாகமாக இருந்த அந்தப் போர்வீரர்களுக்கு மத்தியில் போர்க்களத்தில் நடந்த அந்த மோதலின் வன்முறையானது மிகப் பெரியதாக இருந்தது.(11) மலையுடன் மோதும் மற்றொரு மலையைப் போலவோ, பெருங்கடலுக்கு எதிரான மற்றொரு பெருங்கடலைப் போலவோ, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலான அந்த மோதல் இருந்தது.(12) மகிழ்ச்சியால் நிறைந்தவர்களான குரு மற்றும் பாண்டவப் போர்வீரர்கள் ஆயிரக்கணக்கான சங்குகளை முழக்கி, பத்தாயிரம் கணக்கான பேரிகைகளையும் இசைத்தனர்.(13) அந்தத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்து எழுந்ததும், மலைப்படையச் செய்வதும், பேரொலியுடன் கூடியதுமான அந்த ஆரவாரமானது, (பழங்காலத்தில் தேவர்களும், தானவர்களும்) பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட ஆரவாரத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(14)
அப்போது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் குறிபார்த்து, நாராயணம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை அழைத்தான்.(15) பிறகு, நெருப்பு வாய்களைக் கொண்ட பாம்புகளுக்கு ஒப்பாகச் சுடர்மிக்க வாய்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான கணைகள் ஆகாயத்தில் தோன்றி, பாண்டவர்களைத் தொடர்ந்து கலக்கமடையச் செய்தது.(16) அந்தப் பயங்கரப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் கதிர்களைப் போலவே அந்தக் கணைகள், திசைகளின் புள்ளிகள் அனைத்தையும், ஆகாயத்தையும், துருப்புகளையும் ஒரு கணத்தில் சூழ்ந்து கொண்டன.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெளிவான ஆகாயத்தின் பிரகாசமான ஒளிக்கோள்களைப் போல அங்கே எண்ணற்ற இரும்புக் குண்டுகளும் (உருக்குமயமான உருண்டைகளும்} தோன்றின.(18) நான்கு சக்கரங்களைக் கொண்ட சிலவும், இரண்டு சக்கரங்களைக் கொண்ட சிலவும் எனச் சதாக்னிகளும் {சதக்னிகளும்}, எண்ணற்ற கதாயுதங்களும், கத்தி போன்ற கூர்முனைகளைக் கொண்ட சக்கரங்களும், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அங்கே தோன்றின.(19)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதங்களால் அடர்த்தியாக நிறைந்திருந்த ஆகாயத்தைக் கண்ட பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் மிகவும் கலக்கமடைந்தனர்.(20) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, எங்கெல்லாம் பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனரோ அங்கெல்லாம் அவ்வாயுதமானது மிகப் பலமுடையதாக இருந்தது.(21) காட்டுத்தீயால் எரிக்கப்பட்டவர்களைப் போல, நாராயணாயுதத்தால் கொல்லப்பட்ட பாண்டவத் துருப்புகள், அந்தப் போர்க்களமெங்கிலும் மிகவும் பீடிக்கப்பட்டன.(22) உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கோடையில் உலர்ந்த புற்குவியலை {வைக்கோலை} எரிக்கும் நெருப்பைப் போலவே, அவ்வாயுதம் பாண்டுக்களின் படையை எரித்தது.(23) அனைத்துப் பக்கங்களிலும் நிறையும் அவ்வாயுத்தையும், பெரும் எண்ணிக்கையிலான தன் துருப்பினர் அழிக்கப்படுவதையும் கண்ட, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே} பேரச்சத்தை அடைந்தான்.(24)
உணர்வுகளை இழந்து ஓட முற்படும் தன் படையையும், அலட்சியமாக நின்று கொண்டிருக்கும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்} கண்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(25) “ஓ! திருஷ்டத்யும்னா, உன் பாஞ்சாலத் துருப்புகளுடன் ஓடுவாயாக. ஓ! சாத்யகி, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் சூழ நீயும் ஓடுவாயாக.(26) அற ஆன்மா கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தன் பாதுகாப்புக்கான வழியை அவனே தேடிக் கொள்வான். முழு உலகத்திற்கும் அறிவுரை வழங்கத்தக்கவன் அவன். என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குச் {கிருஷ்ணனுக்குச்} சொல்லும் தேவை என்ன இருக்கிறது?(27) இனியும் நாம் போரிடக்கூடாது. துருப்புகள் அனைத்திற்கும் நான் இதையே சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை, என் தம்பியர் அனைவருடன் நான் ஈமச்சிதையில் ஏறுவேன் {அக்னிப்பிரவேசம் செய்வேன்}.(28) மருண்டோரால் கடக்க முடியாத பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய பெருங்கடல்களை இப்போரில் கடந்த நான், எஞ்சியிருக்கும் என் தொண்டர்களுடன், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} எனும் மாட்டுக் குளம்படி நீரில் மூழ்கப் போகிறேனா?(29) எங்களுடன் எப்போதும் நட்புறவு பாராட்டி வந்த ஆசானை {துரோணரைப்} போரில் நான் கொன்றதால், மன்னன் துரியோதனனின் விருப்பங்கள் இன்று வெற்றியால் மகுடம் சூட்டப்படட்டும்.(30)
போரறியா பிள்ளையான சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைப்} பாதுகாக்காமல், பெரும் எண்ணிக்கையிலான தீய போர்வீரர்களால் எவர் அவனைக் {அபிமன்யுவைக்} கொல்லச் செய்தாரோ அந்த ஆசான்,(31) சபைக்கு இழுத்து வரப்பட்டுத் துயரில் இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அடிமை செய்ய முயல்கையில் உண்மையைப் பேசக் கேட்டுக் கொண்டபோது, பதிலளிக்காமல் தன் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} எவர் அலட்சியமாக அமர்ந்திருந்தாரோ அந்த ஆசான் {துரோணர்},(32) பிற போர்வீரர்கள் அனைவரும் களைத்ததும், பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்ல துரியோதனன் விரும்பிய போது, காயம்பட முடியாதபடி அவனுக்குக் {துரியோதனனுக்குக்} கவசம் பூட்டி, ஜெயத்ரதனின் பாதுகாவலனாக அவனை {துரியோதனனை} எவர் நியமித்தாரோ அந்த ஆசான் {துரோணர்},(33) எவர் பிரம்மாயுதத்தை நன்கு அறிருந்தவராயிருந்தும், என் வெற்றிக்காக முயன்றவனான சத்யஜித் தலைமையிலான பாஞ்சாலர்களைப் பூண்டோடு ஒழிக்க எந்த மனவுறுத்தலும் கொள்ளவில்லையோ அந்த ஆசான்,(34) நாங்கள் எங்கள் நாட்டில் இருந்து நியாயமற்ற வகையில் நாடுகடத்தப்பட்ட போது, அனுமதி கொடுக்க வேண்டாம் என்று எங்கள் நண்பர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும், எங்களைக் காட்டுக்குச் செல்லுமாறு எவர் சாதாரணமாகச் சொன்னாரோ அந்த ஆசான் {துரோணர்} கொல்லப்பட்டார்[2].(35) ஐயோ, அந்த எங்கள் பெரும் நண்பர் கொல்லப்பட்டுவிட்டார். அவர் நிமித்தமாக, நான் என் நண்பர்களோடு சேர்ந்து என் உயிரை விடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(36)
[2] “35ம் சுலோகத்தின் இரண்டாம் வரியில் நான் பம்பாய்ப் பதிப்பைப் பின்பற்றியிருக்கிறேன். இதை நீலகண்டர் சரியாகவே விளக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொருபதிப்பில், “அதர்மமாக ராஜ்யத்தைவிட்டுத் துரத்தப்படும் எங்களுக்கு அக்காலத்தில் எவர் எங்களைச் சேர்ந்தவர்களால் தடுக்கப்பட்டும் வனம் செல்ல அனுமதி கொடுத்தாரோ” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “உண்மையில், இந்த ஆசான், காடுகளுக்கு நாங்கள் நாடுகடத்தப்பட்டபோது, எங்கள் நண்பர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டும் {நாங்கள் காடு செல்வதற்கான} தன் அனுமதியை மறுக்கவில்லை” என்று இருக்கிறது.
குந்தியின் மகனான யுதிஷ்டிரன் இதைச் சொன்னதும், தசார்ஹகுலத்தோன் (கேசவன் {கிருஷ்ணன்}), தன் கர அசைவால் துருப்புகளை வேகமாகத் தடுத்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(37) “அனைவரும் வேகமாக உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, உங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்குங்கள். இவ்வாயுதத்தைக் கலங்கடிக்க அந்தச் சிறப்புமிக்கவனால் (நாராயணனால்) விதிக்கப்பட்ட வழிமுறை இதுவே.(38) உங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களில் இருந்து அனைவரும் பூமியில் இறங்குங்கள். நீங்கள் ஆயுதமற்றவராகப் பூமியில் நின்றால், இவ்வாயுதம் உங்களைக் கொல்லாது.(39) எங்கெல்லாம் இவ்வாயுதத்தின் சக்தியைத் தணிக்க நீங்கள் போரிடுவீர்களோ, அங்கெல்லாம் கௌரவர்களே உங்களைவிடப் பலமிக்கவர்களாக இருப்பார்கள்.(40) எனினும், எந்த மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை வீசிவிட்டுத் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்குவார்களோ, அவர்களை இவ்வாயுதம் கொல்லாது.(41) எனினும், எவர் கற்பனையிலாவது எதிர்த்து மோதுவார்களோ, அவர்கள் பூமிக்கடியில் ஆழமான {பாதாளத்தில்} புகலிடத்தைத் தேடினாலும் அவர்கள் அனைவரையும் இவ்வாயுதம் கொல்லும்” என்றான் {கிருஷ்ணன்}.(42)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவப் படையின் போர்வீரர்கள், தங்கள் ஆயுதங்களை வீசிவிட்டு, போர்விருப்பம் அனைத்தையும் தங்கள் இதயங்களில் இருந்து விரட்டினர்.(43) அப்போது பாண்டுவின் மகனான பீமசேனன், போர்வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவருக்கும் உற்சாகத்தையூட்டும் வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “யாரும் ஆயுதங்களை எறிய வேண்டாம். துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இந்த ஆயுதத்தை நான் என் கணைகளால் எதிர்ப்பேன்.(45) துரோணர் மகனின் இந்த ஆயுதத்தைத் தணித்துவிட்டுத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த எனது கனமான கதாயுதத்துடன் அந்தகனைப் போலவே இந்தப் போரில் நான் திரிவேன்.(46) சூரியனுக்கு நிகரான எந்த ஒளிக்கோளும் ஆகாயத்தில் இல்லாததைப் போல, என் ஆற்றலுக்கு நிகராக இங்கே எந்த மனிதனும் இல்லை.(47) இமய மலைகளையே தள்ளவல்லவையும், வலிமைமிக்க இரண்டு யானைகளின் துதிக்கைகளைப் போன்றவையுமான இந்த என் இரு கரங்களைப் பாரீர்.(48) பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்டவன் இங்கே நான் ஒருவனே. சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியில் அறியப்படும் சக்ரனை {இந்திரனைப்} போல இங்கே நான் நிகரில்லாதவனாவேன்.(49) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} சுடர்மிக்கப் பிரகாசமான ஆயுதத்தைக் கலங்கடிப்பதில் ஈடுபடும் என் இரு கரங்கள் மற்றும் என் பரந்த மார்பின் சக்தியை இன்று உலகம் காணட்டும்.(50) நாராயண ஆயுதத்தை எதிர்க்கவல்லவர் எவரும் இல்லையெனில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் இன்று அதை எதிர்த்து மோதுவேன்.(51) ஓ! அர்ஜுனா, ஓ! பீபத்சு, நீ காண்டீவத்தைக் கீழே வைக்கக்கூடாது. பிறகு சந்திரனின் களங்கம் உன்னையும் அண்டும்” என்றான் {பீமன்}.(52)
பீமனால் இப்படிச் சொல்லப்பட்டதும், அர்ஜுனன், “ஓ! பீமரே, என் காண்டீவமானது, நாராயணாயுதம், பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பது என் பெரும் நோன்பாகும்” என்றான்.(53) அர்ஜுனனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான பீமன், சூரியப் பிரகாசமும், மேக முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலியும் கொண்ட தன் தேரில் ஏறி, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தான்.(54) பெரும் சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, அதீதமான தன் கரநளினத்தின் விளைவால், கண்ணிமைப்பதற்குள்ளாக ஆயுதங்களின் மழையால் அஸ்வத்தாமனை மறைத்தான்.(55) விரைந்துவரும் பீமனைக் கண்டு நகைத்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையும், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டவையுமான கணைகளால் அவனை {பீமனை} மறைத்தான்.(56) நெருப்பைக் கக்கியவையும், சுடர்மிக்க வாய்களைக் கொண்ட பாம்புகளைப் போன்றவையுமான அந்தக் கணைகளால் சூழப்பட்டு, தங்கப் பொறிகளால் மறைக்கப்பட்ட பீமசேனனின் வடிவமானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மாலைவேளையில் நெருப்பால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது.(57,58)
பீமசேனனுக்கு எதிராகத் திருப்பப்பட்ட துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்த ஆயுதமானது, ஓ! மன்னா, காற்றின் துணையோடு கூடிய காட்டுத் தீயைப் போலச் சக்தியிலும், பலத்திலும் அதிகரித்தது.(59) பயங்கர சக்தி கொண்ட அந்த ஆயுதம் {நாராயணன் ஆயுதம்} இவ்வாறு வலிமையில் பெருகுவதைக் கண்டு, பீமனைத் தவிரப் பாண்டவப் படையின் போராளிகள் அனைவரின் இதயங்களிலும் பீதி நுழைந்தது.(60) பிறகு தங்கள் ஆயுதங்களைப் பூமியில் வீசிய அவர்கள் அனைவரும் தங்கள் தேர்கள் மற்றும் குதிரைகளில் இருந்து கீழே இறங்கினர்.(61) அவர்கள் ஆயுதங்களை எறிந்துவிட்டுத் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிய பிறகு, பெரும் சக்தி கொண்ட அவ்வாயுதம் {நாராயணன் ஆயுதம்}, பீமனின் தலையில் விழுந்தது.(62) அவ்வாயுதத்தின் சக்திக்கு ஆட்பட்ட பீமசேனனைக் கண்டு அனைத்து உயிரினங்களும், குறிப்பாகப் பாண்டவர்கள் அனைவரும், “ஓ” என்றும், ”ஐயோ” என்றும் கதறினர்” என்றான் {சஞ்சயன்}.(63)
-----------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 200-ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |