The outrage of Aswatthama! | Drona-Parva-Section-201a | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : பீமனை வாருண ஆயுதத்தால் மறைத்த அர்ஜுனன்; தங்கள் தேரில் இருந்து இறங்கிய அர்ஜுனனும், கிருஷ்ணனும், பீமனை வலுக்கட்டாயமாக அவனது தேரில் இருந்து இறக்கி, அவனை ஆயுதங்களைக் கைவிடச் செய்தது; நாராயணாயுதம் தணிக்கப்பட்டது; மீண்டும் அதே ஆயுதத்தை ஏவச்சொன்ன துரியோதனன்; துரியோதனனிடம் தன் இயலாமையைத் தெரிவித்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் செய்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை வீழ்த்திய சாத்யகி; சாத்யகியை எதிர்த்து விரைந்த கௌரவர்கள்; மீண்டும் வந்த அஸ்வத்தாமன் சாத்யகியை மயக்கமடையச் செய்தது; அஸ்வத்தாமனால் பெரிதும் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவ்வாயுதத்தால் {நாராயணாஸ்திரத்தால்} பீமசேனன் சூழப்பட்டிருப்பதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதன் சக்தியைக் கலங்கடிப்பதற்காக அவனை வாருண ஆயுதத்தால் மறைத்தான்.(1) அர்ஜுனனுடைய கரநளினத்தின் விளைவாலும், பீமனை மறைத்திருந்த {அவ்வாயுதத்தின்} கடும் சக்தியாலும், பின்னவன் {பீமன்} வாருண ஆயுதத்தால் மறைக்கப்பட்டிருப்பதை எவராலும் காணமுடியவில்லை.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்தால் சூழப்பட்ட பீமன், தன் குதிரைகள், சாரதி மற்றும் தேரோடு சேர்த்து நெருப்பில் கலந்த சுடர்மிக்கத் தழல்களைப் போலக் காணப்பட முடியாதவனாக ஆனான்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரவின் நெருக்கத்தில், அஸ்த மலையை நோக்கி ஓடும் அனைத்து ஒளிக்கோள்களையும் {நட்சத்திரங்களையும்} போல (அஸ்வத்தாமனின்) கடுங்கணைகள் அனைத்தும் பீமசேனனின் தேரை நோக்கிச் சென்றன.(4) உண்மையில், துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படி மறைக்கப்பட்ட பீமசேனனும், அவனது தேர், குதிரைகள் ஆகியவையும், அவனது {பீமனின்} சாரதியும் காட்டுத்தீக்கு மத்தியில் இருப்பதைப் போலத் தெரிந்தனர்.(5)
பிரளயத்தின் போது அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்களோடு கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் யுக நெருப்பு இறுதியில் படைப்பாளனின் வாயை அடைவதைப் போலவே, துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதமும் பீமசேனனின் உடலுக்குள் நுழையத் தொடங்கியது.(6) சூரியனுக்குள் ஊடுருவும் நெருப்பை ஒருவனால் காண முடியாததைப் போலவே எவராலும் பீமனின் உடலுக்குள் ஊடுருவும் அந்தச் சக்தியைக் காண முடியவில்லை.(7) பெரும் பிரகாசம் கொண்டவர்களான அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய அந்த இரு வீரர்களும், பீமனைச் சுற்றிலும் ஆக்கிரமிக்கும் அந்த ஆயுதத்தையும், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சக்தியிலும், வலிமையிலும் பெருகுவதையும், பின்னவன் {அஸ்வத்தாமன்} எந்த எதிராளியும் அற்றவனாக இருப்பதையும்(8), பாண்டவப் படையின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டதையும், யுதிஷ்டிரனின் தலைமையிலான அந்தப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் எதிரியிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டதையும் கண்டு, தங்கள் தேர்களில் இருந்து வேகமாகக் கீழே இறங்கி பீமனை நோக்கி ஓடினார்கள்.(8-10)
அப்போது மாயசக்தியைக் கைக்கொண்ட அந்த வலிமைமிக்க மனிதர்கள் இருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, அஸ்வத்தாமனுடைய ஆயுதத்தின் வலிமையால் உண்டான அந்தச் சக்திக்குள் பாய்ந்தனர்.(11) அவர்கள், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டதாலும், வாருண ஆயுத சக்தியின் விளைவாலும், அவர்கள் கொண்டிருந்த இயல்பான சக்தியின் விளைவாலும் அவ்வாயுதத்தின் நெருப்பு அவர்களை எரிக்கவில்லை.(12) பிறகு நரனும், நாராயணனும், அந்த நாராயண ஆயுதத்தைத் தணிப்பதற்காகப் பீமனையும், அவனது ஆயுதங்கள் அனைத்தையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்தனர்.(13) இப்படி அவர்களால் இழுக்கப்பட்டவனும், குந்தியின் மகனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பீமன்} உரக்க முழங்கத் தொடங்கினான். அதன்பேரில் பயங்கரமானதும், வெல்லப்பட முடியாததுமான அந்தத் துரோண மகனின் ஆயுதம் (வலிமையிலும், சக்தியிலும்) பெருகத் தொடங்கியது.(14)
அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} பீமனிடம், “ஓ! பாண்டுவின் மகனே, ஓ !குந்தியின் மகனே {பீமரே}, எங்களால் தடுக்கப்பட்டாலும், எவ்வாறு நீர் போரில் இருந்து விலகாமல் இருக்கிறீர்?(15) குருக்களைப் போரில் இப்போது வெல்ல முடியுமெனில், நாங்களும், இந்த மனிதர்களில் முதன்மையானோர் அனைவரும் நிச்சயமாகப் போரைத் தொடர்ந்திருப்போம்.(16) உமது படையின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் தேர்களில் இருந்து கீழே இறங்கிவிட்டதைப் பாரும். ஓ! குந்தியின் மகனே {பீமனே}, இக்காரணத்திற்காகவே நீர் உமது தேரில் இருந்து இறங்க வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(17)
இவ்வார்த்தைகளைச் சொன்ன கிருஷ்ணன் பீமனை அவனது தேரில் இருந்து கீழே கொண்டு வந்தான். பின்னவனோ {பீமனோ}, சினத்தால் குருதியெனச் சிவந்த கண்களுடன் ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(18) எனினும், தேரில் இருந்து கீழே இறக்கப்பட்டு, அவனது ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்யப்பட்டதும், எதிரிகளை எரிப்பதான அந்த நாராயண ஆயுதம் தணிவை அடைந்தது.(19)
இவ்வார்த்தைகளைச் சொன்ன கிருஷ்ணன் பீமனை அவனது தேரில் இருந்து கீழே கொண்டு வந்தான். பின்னவனோ {பீமனோ}, சினத்தால் குருதியெனச் சிவந்த கண்களுடன் ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(18) எனினும், தேரில் இருந்து கீழே இறக்கப்பட்டு, அவனது ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்யப்பட்டதும், எதிரிகளை எரிப்பதான அந்த நாராயண ஆயுதம் தணிவை அடைந்தது.(19)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வழியில் அவ்வாயுதத்தின் {நாராயணாஸ்த்திரத்தில்} தாங்கிக் கொள்ளப்பட முடியாத சக்தி முடக்கப்பட்டபோது, முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவடைந்தன.(20) இனிய தென்றல் வீசத் தொடங்கியது; பறவைகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் அமைதியடைந்தன. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, குதிரைகளும், யானைகளும், மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(21) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} உண்மையில் அவ்வாயுதத்தின் பயங்கரமான சக்தியானது தணிக்கப்பட்ட போது, பெரும் நுண்ணறிவு கொண்ட பீமன் காலை சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(22) பாண்டவப் படையில் எஞ்சியோரும், நாராயணாயுதம் தணிவடைந்ததைக் கண்டு, உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} அழிவை உண்டாக்குவதற்காக மீண்டும் களத்தில் தயாராக நின்றனர்.(23)
அவ்வாயுதம் {நாராயணாஸ்திரம்} கலங்கடிக்கப்பட்டு, பாண்டவப் படை அணிவகுத்து நின்ற போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் அந்தத் துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்},(24) “ஓ! அஸ்வத்தாமரே, வெற்றியடையும் விருப்பத்துடன் மீண்டும் பாஞ்சாலர்கள் அணிவகுத்து நிற்பதால், மீண்டும் விரைவாக அவ்வாயுதத்தைப் பயன்படுத்துவீராக” என்றான்.(25) உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அஸ்வத்தாமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உற்சாகமற்ற நிலையில் பெருமூச்சுவிட்டுக் கொண்டு அந்த மன்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(26) “ஓ! மன்னா {துரியோதனா}, அவ்வாயுதத்தை {நாராயணாஸ்திரத்தை} மீண்டும் கொண்டு வர முடியாது. அஃதை இருமுறை பயன்படுத்த முடியாது. அது மீண்டும் கொண்டுவரப்பட்டால், மீண்டும் அழைப்பவனை அஃது ஐயமில்லாமல் {உறுதியாகக்} கொன்றுவிடும்.(27) வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீ இப்போது கண்ட வழிமுறையின்படியே அதைக் கலங்கடித்துவிட்டான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, இதனாலேயே {இந்தக் காரணத்தாலேயே} போரில் எதிரியை அழிக்க முடியவில்லை. எனினும், தோல்வியும், மரணமும் ஒன்றே. இன்னும் சொல்லப் போனால், தோல்வியானது மரணத்தைவிட மோசமானதாகும் {சிறந்ததல்ல}. அதோ பார், எதிரிகள் வெல்லப்பட்டு, தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கப் பலவந்தப்படுத்தப்பட்டதால் உயிரை இழந்தவர்களைப் போலத் தெரிகின்றனர்” என்றான் {அஸ்வத்தாமன்}.(29)
அப்போது துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! ஆசான் மகனே, இவ்வாயுதத்தை இரண்டாம் முறை பயன்படுத்த முடியாதென்றால், ஓ! ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, தங்கள் ஆசானைக் கொன்றவர்களான அவர்கள் வேறு ஆயுதங்களால் கொல்லப்பட வேண்டும்.(30) தெய்வீக ஆயுதங்கள் அனைத்தும், அளவிலா சக்தி கொண்ட முக்கண்ணனும் (சிவனும்) உம்மில் இருக்கின்றனர். நீர் விரும்பினால், சினத்தில் இருக்கும் புரந்தரனும் {இந்திரனும்} உம்மிடம் இருந்து தப்ப மாட்டான்” என்றான் {துரியோதனன்}.(31)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வஞ்சகத்தின் துணையால் தூரோணர் கொல்லப்பட்டு, நாராயணாயுதமும் கலங்கடிக்கப்பட்ட பிறகு, துரியோதனனால் இப்படித் தூண்டப்பட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, நாராயணாயுதத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பார்த்தர்கள், தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையை ஏற்று மீண்டும் போரிட வருவதைக் கண்டு என்ன செய்தான்?” என்று கேட்டான்.(32,33)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்தவனும், தன் கொடியில் சிங்கவால் பொறியைக் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் நிறைந்து, அச்சங்கள் அனைத்தையும் விட்டு, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து விரைந்தான்.(34) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசனை நோக்கி விரைந்த அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {அஸ்வத்தாமன்}, இருபத்தைந்து குறுங்கணைகளால் அவனை {திருஷ்டத்யும்னனை} மிக மூர்க்கமாகத் துளைத்தான்.(35) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தத் திருஷ்டத்யும்னன், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பாக இருந்த அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} அறுபத்துநான்கு கணைகளால் துளைத்தான்.(36)
மேலும் அவன் {திருஷ்டத்யும்னனை}, கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச்சிறகுகளைக் கொண்டவையுமான இருபது கணைகளால் அஸ்வத்தாமனின் சாரதியையும், மேலும் நான்கு கூரிய கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான்.(37) மீண்டும் மீண்டும் துரோணர் மகனைத் துளைத்து, தன் சிங்க முழக்கங்களால் பூமியை நடுங்கச் செய்த திருஷ்டத்யும்னன், அந்தப் பயங்கரப் போரில் உலகின் உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் எடுப்பவனாகத் தெரிந்தான்.(38) பிறகு, மரணத்தையே தன் இலக்காகக் கொண்டவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், இலக்கில் துல்லியமானவனுமான அந்த வலிமைமிக்கப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மட்டுமே நோக்கி விரைந்தான்.(39) அளவிலா ஆன்மா கொண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அஸ்வத்தாமனின் தலைமீது கணை மாரியைப் பொழிந்தான்.(40)
அப்போது அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிறகு படைத்த கணைகளால் அந்தக் கோபக்கார இளவரசனை மறைத்தான். மேலும் தன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, பின்னவனை {திருஷ்டத்யும்னனைப்} பத்து கணைகளால் துளைத்தான்.(41) பிறகு கத்தி போன்ற தலைகளைக் கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான இரண்டு கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனின் கொடிமரத்தையும் வில்லையும் அறுத்த அந்தத் துரோணர் மகன், பிறகு, பிற கணைகளாலும் தன் எதிரியைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(42) அந்தப் பயங்கரப் போரில் அஸ்வத்தாமன் தன் எதிராளியைக் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்களையும் அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(43) இதன் பேரில் அந்தக் கணைமாரியின் மூலம் சிதைக்கப்பட்ட பாஞ்சாலத் துருப்புகள், அச்சத்தாலும், பெருந்துன்பத்தாலும் தப்பி ஓடின.(44)
போரில் இருந்து திரும்பிய துருப்புகளையும், பெரிதாகப் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னனையும் கண்ட சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துத் தன் தேரைத் தூண்டினான்.(45) பிறகு அவன் {சாத்யகி}, எட்டு கூரிய கணைகளால் அஸ்வத்தாமனைப் பீடித்தான். மீண்டும் பல்வேறு வகைகளிலான இருபது கணைகளால் அந்தக் கோபக்காரப் போர்வீரனை {அஸ்வத்தாமனைத்} துளைத்த அவன்,(46) பிறகு அஸ்வத்தாமனின் சாரதியையும், அவனது நான்கு குதிரைகளையும், நான்கு கணைகளால் துளைத்தான். பெரும் முயற்சியோடு அற்புத கரநளினத்தை வெளிக்காட்டிய அவன் {சாத்யகி}, அஸ்வத்தாமனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான்.(47) பிறகு அந்தச் சாத்யகி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் தேருடன் சேர்த்து அதன் குதிரைகளையும் துண்டுகளாக வெட்டினான். பிறகு அவன் {சாத்யகி}, அந்தப் போரில் அஸ்வத்தாமனின் மார்பை முப்பது கணைகளால் ஆழத் துளைத்தான்.(48)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (சாத்யகியால்) இப்படிப் பீடிக்கப்பட்டவனும், கணைகளால் மறைக்கப்பட்டவனுமான வலிமைமிக்க அஸ்வத்தாமன், அப்போது என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(49) ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்} இந்தப் பரிதாப நிலையில் வீழ்ந்த போது, கிருபர், கர்ணன் மற்றும் பிறரின் துணையோடு கூடியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் {துரியோதனன்}, அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைத்} தன் கணைகளால் மறைக்கத் தொடங்கினான்.(50) அவர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் சாத்யகியை வேகமாகத் துளைக்கத் தொடங்கினர். துரியோதனன் இருபது கணைகளாலும், சரத்வானின் மகனான கிருபர் மூன்றாலும் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தனர். கிருதவர்மன் பத்தாலும், கர்ணன் ஐம்பதாலும் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தனர். துச்சாசனன் நூறு கணைகளாலும், விருஷசேனன் ஏழாலும் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தனர்.(51,52)
எனினும் சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவில் அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரையும் தங்கள் தேர்களை இழந்து களத்திலிருந்து ஓடும்படி செய்தான்.(53) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அதே வேளையில் சுயநினைவு மீண்ட அஸ்வத்தாமன், கவலையால் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டப்படியே {அடுத்து} தான் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்கத் தொடங்கினான்.(54) எதிரிகளை எரிப்பவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மற்றொரு தேரில் ஏறிவந்து, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடியே சாத்யகியைத் தடுக்கத் தொடங்கினான்.(55) மீண்டும் போரிடத் தன்னை அணுகும் அஸ்வத்தாமனைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்யகி, மீண்டும் அவனைத் தேரற்றவனாக்கி, அவனைப் புறமுதுகிடச் செய்தான்.(56) அப்போது, ஓ! மன்னா சாத்யகியின் ஆற்றலைக் கண்ட பாண்டவர்கள் பெரும் பலத்துடன் தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(57)
இப்படி அஸ்வத்தாமனைத் தேரிழக்கச் செய்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகி, விருஷசேனனின் படைப்பிரிவைச் சார்ந்த வலிமைமிக்க மூவாயிரம் {3000} தேர்வீரர்களைக் கொன்றான்.(58) பிறகு அவன் {சாத்யகி}, கிருபரின் படைப்பிரிவைச் சார்ந்த பதினைந்தாயிரம் {15000} யானைகளையும், சகுனியின் ஐம்பதாயிரம் {50000} குதிரைகளையும் கொன்றான்.(59) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மற்றொரு தேரில் ஏறி வந்த துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, சாத்யகியைக் கொல்லும் விருப்பத்தோடு, பின்னவனை எதிர்த்து பெரும் சினத்துடன் விரைந்தான்.(60) அவன் {சாத்யகி} மீண்டும் வருவதைக் கண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, முன்பு தான் பயன்படுத்தியதை விடக் கடுமையானவையும், கூர்மையானவையுமான கணைகளால் அவனைத் துளைத்துச் சிதைத்தான்.(61)
யுயுதானனின் {சாத்யகியின்} பல்வேறு வடிவங்களிலான கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தத் துரோணரின் கோபக்கார மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே தன் எதிரியிடம்,(62) “ஓ! சிநியின் பேரா {சாத்யகி}, தன் ஆசானைக் கொன்றவனான திருஷ்டத்யும்னனிடம் நீ கொண்டுள்ள பாரபட்சத்தை நான் அறிவேன், என்றாலும், என்னால் தாக்கப்படும்போது அவனையோ, உன்னையோ உன்னால் காத்துக் கொள்ள முடியாது.(63) ஓ! சிநியின் பேரா, பாஞ்சாலர்கள் அனைவரையும் நான் கொல்லும் வரை அமைதியடையமாட்டேன் என்று உண்மையின் {சத்தியத்தின்} மீதும், என் தவத்துறவுகளின் மீதும் ஆணையாகக் கூறுகிறேன். (64) பாண்டவப் படைகளையும், விருஷ்ணிகளின் படைகளையும் நீ ஒருங்கிணைத்தாலும் கூட, நான் சோமகர்களைக் கொல்வேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(65)
இதைச் சொன்ன துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பழங்காலத்தில் அசுரன் விருத்திரன் மீது தன் வஜ்ரத்தை ஏவிய சக்ரனை {இந்திரனைப்} போலவே, சூரியப்பிரகாசத்தைக் கொண்டதும், நேரானதும், சிறப்பானதுமான கணை ஒன்றை சாத்யகியின் மீது ஏவினான்.(66) இப்படி அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, அவனது உடலைக் ஊடுருவிச் சென்று, துளைக்குள் நுழையும் சீற்றமிக்கப் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(67) தன் கவசம் துளைக்கப்பட்ட சாத்யகி, ஈட்டியால் ஆழத் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போலத் தன் காயத்தில் இருந்து வழிந்த குருதியில் குளித்தான். கணைபொருத்தப்பட்ட வில் அவனது {சாத்யகியின்} பிடியில் இருந்து தளர்ந்தது. குருதியால் முழுதும் மறைக்கப்பட்ட அவன் {சாத்யகி} பலமற்றவனாகத் தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். இதைக் கண்ட அவனது சாரதி, துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இருந்து அவனை {சாத்யகியை} விரைவாக அப்பால் கொண்டு சென்றான்" {என்றான் சஞ்சயன்}.(68,69)
-------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 201அ-ல் உள்ள சுலோகங்கள் : 69
-------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 201அ-ல் உள்ள சுலோகங்கள் : 69
ஆங்கிலத்தில் | In English |