Monday, April 10, 2017

கிருஷ்ணா, துன்பக்கடலில் நீயே படகாவாய்! - கர்ண பர்வம் பகுதி – 70

Krishna, thou art a raft in an ocean of distress! | Karna-Parva-Section-70 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடைய ஆலோசனையின் பேரில் யுதிஷ்டிரனை ஒருமையில் பேசி அவமதித்த அர்ஜுனன்; பீமனைப் புகழ்ந்து, யுதிஷ்டிரனைச் சூதுக்கு அடிமை என நிந்தித்த அர்ஜுனன்; அண்ணனை அவமதித்த குற்ற உணர்வால் தற்கொலை செய்து கொள்ள வாளை உருவிய அர்ஜுனன்; அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன், தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமமானது என்று சொன்னது; தற்புகழ்ச்சி செய்த அர்ஜுனன்; யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரிய அர்ஜுனன்; மனம் நொந்து தன்னையே நிந்தித்துக் கொண்ட யுதிஷ்டிரன், காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உண்மையைச் சொன்ன கிருஷ்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு ஜனார்த்தனனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட பிருதையின் மகனான அர்ஜுனன், தன் நண்பனின் அவ்வாலோசனைகளைப் பாராட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், முன்னெப்போதும் பயன்படுத்தாத கடும் மொழியில் பேசினான்.(1)


அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போர்க்களத்தில் இருந்து முழுமையாக இரண்டு மைல் தொலைவில்[1] நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நீ என்னை இவ்வாறு நிந்தியாதே. எனினும், உலகின் முதன்மையான வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் பீமன் என்னை நிந்திக்கலாம்.(2) போரில் சரியான நேரத்தில் தன் எதிரிகளைப் பீடித்து, பூமியின் துணிச்சல்மிக்கத் தலைவர்கள் பலரையும், முதன்மையான தேர்வீரர்களையும், பெரும் யானைகளையும், குதிரைவீரர்கள் பலரையும், எண்ணற்ற துணிச்சல்மிக்கப் போராளிகளையும் கொன்ற அவர் {பீமர்},(3) அதற்கும் மேலாக ஆயிரம் யானைகளையும், பத்தாயிரம் காம்போஜ மலைவாசிகளையும் கொன்று, எண்ணற்ற சிறு விலங்குகளைக் கொன்ற சிங்கத்தைப் போலப் போரில் சிங்க முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்.(4) அந்த வீரர், உன்னால் அடையவே முடியாத அடைதற்கரிய கடும் அருஞ்செயல்களைச் செய்திருக்கிறார். கையில் கதாயுதத்துடன், தன் தேரிலிருந்து கீழே குதித்து, போரில் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அவர் அழித்திருக்கிறார்.(5) தன் முதன்மையான வாளைக் கொண்டும் அவர், பல குதிரைவீரர்கள், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை அழித்திருக்கிறார். தேர்களின் உடைந்த உறுப்புகளையும், தன் வில்லையும் கொண்டு அவர் எதிரிகளை எரித்து வருகிறார். இந்திரனின் ஆற்றலோடு கூடிய அவர், தன் காலாலும், வெறும் கரங்களாலும் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று வருகிறார்.(6)

[1] வேறொரு பதிப்பிலும் பிபேக் திப்ராயின் பதிப்பிலும் ஒரு குரோச தூரம் என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

பெரும் வலிமையைக் கொண்டவரும், குபேரன், அல்லது யமனுக்கு ஒப்பானவருமான அவர் {பீமர்}, தன் பலத்தை வெளிப்படுத்தி, பகைவரின் படையை அழித்து வருகிறார். அந்தப் பீமசேனருக்கு என்னை நிந்திக்க உரிமையுண்டு, ஆனால் எப்போதும் நண்பர்களால் பாதுகாக்கப்படும் உனக்குக் {உரிமை} கிடையாது.(7) முதன்மையான தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைக் கலங்கடிக்கும் பீமர், இப்போதும் தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் தனியொருவராகவே இருக்கிறார். அந்த எதிரிகளைத் தண்டிப்பவருக்கு என்னை நிந்திக்கும் உரிமையுண்டு.(8) இப்போது கலிங்கர்கள், வங்கர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், மகதர்கள், எப்போதும் மதங்கொண்டவையாக, நீலமேகத் திரள்களைப் போன்றவையாக இருக்கும் பகைவரின் பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும் கொன்று வரும் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {பீமர்} என்னை நிந்திக்கத் தகுந்தவர்.(9) தகுந்த தேரில் சென்று, சரியான நேரத்தில் தன் வில்லை அசைத்து, தன் (மற்றொரு) கரத்தில் கணைகளைக் கொண்டிருக்கும் அந்த வீரர், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலப் பெரும்போரில் கணைமாரியைப் பொழிந்து வருகிறார்.(10) இன்றைய போரில் மத்தகங்கள் பிளக்கப்பட்டு, தந்த முனைகள் வெட்டப்பட்ட எண்ணூறு யானைகள், பீமரின் கணைகளால் கொல்லப்படுவதை நான் கண்டேன். அந்த எதிரிகளைக் கொல்பவர் என்னிடம் கடுஞ்சொற்களைப் பேசத் தகுந்தவரே[2].(11)

[2] வேறொரு பதிப்பில், இதற்குப் பிறகு இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, “அந்தப் பீமனால் நான் நிந்திக்கப்படத்தக்கவனாக இருக்கிறேன். உன்னாலே ஒருபொழுதும் சொல்லப்படத்தக்கவனல்லேன். எந்த எந்த யுத்தத்தில் மஹாரதர்கள் உன்னுடைய படையை இப்பொழுது இஷ்டப்படி பிளக்கிறார்களோ அந்த அந்த யுத்ததில் மஹாத்மாவான பீமன் சத்துருக்களுடைய கூட்டங்களைத் திடமாக அடித்தான். அந்தப் பீமனால் நான் சொல்லப்படத்தக்கவனாக இருக்கிறேன். நான் உன்னால் ஒருபொழுதும் சொல்லப்படத்தக்கவனல்லன். குந்தீபுத்ர, இந்த ஸமயத்தில் குரூரமாகச் சொல்லாதே, சொல்லாதே நீ எல்லா உலகத்தாராலும் இகழப்படத்தக்கவனாவது போல எம்மைப் போன்றவன் உன்னால் நிந்திக்கப்படத்தக்கவனாகான். மன்னவ, இவ்வாறு என்னைச் சொல்லுகின்ற உன்னுடைய நாவானது இப்பொழுது ஏன் நூறு துணுக்காகச் சிதறிப் போகாமலிருக்கிறது? ஆ! ஆ! நீ இப்பொழுது இங்கு இஷ்டப்படி சொல்லிய இந்த வார்த்தை மிகக் கொடுமையானது. உத்தமர்களான க்ஷத்திரியர்களுக்கு உரியதாகப் பெரும்பான்மையாகச் சொல்லப்படும் பலமானது உன்னால் கொள்ளப்படவில்லை. பாரத! நீ வலிமையற்றவன், கொடியன். நான் எப்படி ஸ்வபாவமுள்ளவனென்பதை நீயே அறிகிறாய். வேந்தே, நகுலனால் யுத்தத்தில் எதிர்க்கப்பட்டு யானைகளாலும், குதிரைவீரர்களாலும் போர்புரிகின்ற வீரர்கள் விரைவாகக் கொல்லப்பட்டார்கள். யுத்தத்தில் பிராணனில் ஆசையை விட்டுப் போர்புரிவதில் விருப்பமுள்ளவனும், பகைவர்களை அடக்குகிறவனுமான அந்த நகுலன் என்னை நிந்திப்பதற்குத் தகுந்தவன். பகைப்படையை நொறுக்கிக் கொண்டு போர்புரிகின்ற ஸஹதேவனால் எவராலும் செய்யமுடியாத காரியம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் வந்த பலசாலியான ஸஹதேவன் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கும் உனக்குமுள்ள வேறுபாட்டைப் பார். த்ருஷ்டத்யும்னன், ஸாத்யகி, த்ரௌபதிபுத்திரர்கள், யுதாமன்யு, உத்தமௌஜஸ், சிகண்டி இவர்கள் இப்பொழுது யுத்தத்தில் நன்றாகப் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை நிந்திப்பதற்குத் தகுந்தவர்கள். நீ தகுதியுள்ளவனில்லை. உன் மூலமாகவும் இந்த வைரம் நம்மால் அடையப்பட்டது. அவ்வாறு அதிகோரமான துயரமும் அடையப்பட்டது. சூதாட்டத்தில் அஜாக்கிரதையுள்ள உன்னால் அடிக்கடி இது செய்யப்பட்டது. அவ்வாறிருக்க எந்தக் காரணத்தினால் இத்தருணத்தில் நீ நிந்திக்கிறாய்? அரசனே! நீயே எப்பொழுதும் அஜாக்கிரதையுள்ளவன்; நீயே மூடன்; பரதகுலத்தில் பிறந்தவர்களுள் துஷ்டன். உன்னை அடைந்து இந்த ராஜ்யம் போய்விட்டது. பாண்டவர்களும் மஹத்தான அடிமைத்தொழிலை அடைந்தார்கள். வீர! உன்னாலேயே எங்களுக்கு வனவாஸதுக்கமானது உண்டுபண்ணப்பட்டது, ராஜ்யநாசமும், கோரமான அபிமன்யுவின் வதமும் உண்டுபண்ணப்பட்டன. உன்னை இவ்வாறு மிக்கக் கொடுந்தன்மையுள்ளவனென்று அறிந்திருந்தும் யாது காரணம் பற்றி இப்பொழுது என்னை நிந்திக்கிறாய். அரசனே! உனக்கு லஜ்ஜை இருக்குமாகில் வெட்கமடைவாயாக. நன்றி மறந்தவனான நீ பேசாமலிருந்து கொண்டு எல்லாவற்றையும் பார். பீமன் நித்யம் யுத்தம் செய்கிறான், நித்யம் அடிக்கடி (பகைவர்களுடைய) கர்வத்தைப் பிளக்கிறான். வேந்தனே! யுத்தத்தில் தனக்குச் சக்தியில்லாத மனிதன் எப்பொழுதும் பொறுமையையே பாராட்ட வேண்டும்” என்றிருக்கிறது.

முதன்மையான பிராமணரின் பலம் பேச்சில் இருக்கிறது, க்ஷத்திரியனின் பலம் அவனது கரங்களில் இருக்கிறது. ஓ! பாரதா, நீ சொற்களில் பலமானவனாகவும், வன்னெஞ்சம் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ உன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறாய்.(12) நான் என் ஆன்மாவாலும், வாழ்வாலும், மகன்களாலும், மனைவியராலும் உனக்கு எப்போதும் நன்மையையே செய்கிறேன். இவையாவும் இருந்தபோதிலும், நீ இத்தகு வார்த்தை ஈட்டிகளால் இன்னும் என்னைத் துளைப்பதால், நாங்கள் உன்னிடம் இருந்து எந்த இன்பத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.(13) திரௌபதியின் படுக்கையில் கிடக்கும் நீ, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உன் நிமித்தம் நான் கொன்று கொண்டிருந்தாலும் என்னை அவமதிக்கவே செய்கிறாய். ஓ! பாரதா, எந்தக் கவலையற்றவனாகவும், கொடூரனாகவும் நீ இருக்கிறாய். நான் உன்னிடம் இருந்து எந்த மகிழ்ச்சியையும் எப்போதும் அடைந்ததில்லை.(14) ஓ! மனிதர்களின் தலைவா, உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்போடு இருந்த அந்தப் பீஷ்மர், உனக்கு நன்மை செய்வதற்காகவே போரில் தன் மரணத்திற்கான வழிகளை உன்னிடம் சொல்லி, வீரனும், உயர்ஆன்மா கொண்டவனும், துருபதன் மகனும், என்னால் பாதுகாகப்பட்டவனுமான சிகண்டியால் கொல்லப்பட்டார்.(15)

சூதாடும் தீய பழக்கத்திற்கு நீ அடிமையாக இருப்பதால், அரசுரிமையை மீட்கும் உமது நினைப்பு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை. இழிந்தோர் மட்டுமே அடிமையாகும் தீய செயலைச் செய்த நீ, இப்போது எங்கள் உதவியால் உன் எதிரிகளை வெல்ல விரும்புகிறாய்.(16) பகடையின் எண்ணற்ற களங்கங்களையும், பெரும் பாவம் நிறைந்த தன்மையையும் நீ சகாதேவன் சொல்லக் கேட்டாய். எனினும், தீயோரால் வழிபடப்படும் பகடையை உன்னால் கைவிட முடியவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் அனைவரும் நரகத்திற்குள் வீழ்ந்தோம்.(17) நீ பகடையில் சூதாடிக் கொண்டிருந்ததால் நாங்கள் எந்த மகிழ்ச்சியையும் எப்போதும் அடைந்ததில்லை. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீயே இந்தப் பேரிடர் அனைத்தையும் உண்டாக்கிவிட்டு, என்னிடம் சுடுஞ்சொற்களால் பேசுகிறாய்.(18) எங்களால் கொல்லப்பட்ட பகைவரின் துருப்பினர், உடல்கள் சிதைக்கப்பட்டு, உரத்த ஓலங்களையிட்டபடியே களத்தில் கிடக்கின்றனர். நீ செய்த அந்தக் கொடுஞ்செயலாலேயே கௌரவர்கள் குற்றவாளிகளாகி அழிக்கப்பட்டு வருகின்றனர்.(19) இருதரப்பைச் சேர்ந்த பெரும் போர்வீரர்களாலும் போரில் ஒப்பற்ற அருஞ்செயல்கள் செய்யப்பட்ட பிறகு, வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு நாட்டினர், தாக்கப்பட்டு, காயடையச் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றனர்.(20) நீயே சூதாடினாய். உன்னாலேயே நாங்கள் எங்கள் அரசை இழந்தோம். ஓ! மன்னா, எங்களது பேரில் உன்னிடமிருந்தே எழுந்தது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது பேச்செனும் கொடூர அங்குசத்தால் மீண்டும் தாக்கி எங்கள் கோபத்தைத் தூண்டாதே” என்றான் {அர்ஜுனன்}”.(21)

சஞ்சயன் சொன்னான், “தன் அண்ணனிடம் இந்தக் கடுமையான, மிகக் கசப்பான வார்த்தைகளைப் பேசி, அதனால் ஒரு சிறு பாவத்தை இழைத்த பிறகு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் அமைதியைக் கொண்டவனும், அறத்திலிருந்து வீழ்வது குறித்த அச்சத்தோடு எப்போதும் செயல்படுபவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மிகவும் உற்சாகத்தை இழந்து போனான்.(22) தேவர்கள் தலைவனின் மகன் {அர்ஜுனன்}, பின்னிரக்கத்தால் நிறைந்து, கடுமூச்சு விட்டுக் கொண்டே தன் வாளை உருவினான். இதைக் கண்ட கிருஷ்ணன், “இஃது என்ன? வானத்தைப் போல நீலமாக இருக்கும் உன் வாளையே ஏன் மீண்டும் உறையில் இருந்து உருவுகிறாய்?(23) உன் நோக்கம் நிறைவேற ஆலோசனை வழங்குவதற்காக உன் பதில் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் கிருஷ்ணன்.

அந்த முதன்மையான மனிதனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன், கேசவனிடம் பெரும் சோகத்துடன்,(24) “இந்தத் தீய செயலைச் செய்த நான், என் பலத்தை வெளிப்படுத்தி என்னையே கொல்ல {தற்கொலை செய்து கொள்ளப்} போகிறேன்” என்றான்.

பார்த்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கேசவன், தனஞ்சயனிடம் இதைச் சொன்னான்,(25) “மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு நீ ஏன் இவ்வளவு மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறாய்? ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ இப்போது உன்னையே அழித்துக் கொள்ள விரும்புகிறாய். எனினும், ஓ! கிரீடி {ஆர்ஜுனா}, நீதிமான்களால் இஃது அங்கீகரிக்கப்படவில்லை.(26) ஓ! மனிதர்களில் வீரா, பாவத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நீ இன்று அற ஆன்மா கொண்ட இந்த உன் அண்ணனைக் கொன்றிருந்தால், அப்போது உன் நிலை எவ்வாறு இருந்திருக்கும், அப்போது நீ என்ன செய்திருப்பாய்?(27) ஓ! பாரதா, அறநெறியானது நுட்பமானதும், அறிந்து கொள்ள முடியாததுமாகும், குறிப்பாக அறியாமை கொண்டோரால் அறிந்து கொள்ள முடியாது. நான் உனக்குப் போதிப்பதைக் கேட்பாயாக. உன்னையே நீ அழித்துக் கொள்வதால், நீ உன் அண்ணனைக் கொன்றிருந்தால் அடையும் நரகத்தைவிட படுபயங்கரமான நரகத்தில் மூழ்கிப் போவாய்.(28) உன் சொந்த தகுதிகளை உன் சொற்களாலேயே இப்போது அறிவிப்பாயாக. ஓ! பார்த்தா, அப்போது நீ உன்னையே கொன்றிருப்பாய்” என்றான் {கிருஷ்ணன்}.(29)

இவ்வார்த்தைகளைப் பாராட்டி, “ஓ! கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன சக்ரனின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் வில்லைத் தாழ்த்தி, அறவோரில் முதன்மையான யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா, கேட்பீராக.(30) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பினாகையைத் தாங்கும் தெய்வத்தைத் தவிர, என்னைப் போன்ற வேறொரு வில்லாளி எவனும் கிடையாது. அந்தச் சிறப்புமிக்க தெய்வத்தாலேயே கூட நான் மதிக்கப்படுகிறேன். அசையும் மற்றும் அசையா உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தையே என்னால் ஒரு கணத்தில் அழித்துவிட முடியும்.(31) ஓ! மன்னா, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும், அவற்றில் ஆண்டுகொண்டிருந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டு, அவர்கள் அனைவரையும் உமது கட்டுக்குள் கொண்டுவந்தவன் நானே. (உம்மால் செய்யப்பட்ட) ராஜசூயம், தக்ஷிணையால் நிறைவடைந்ததும், உமக்குச் சொந்தமான தெய்வீகமான அரண்மனையும் என் ஆற்றலால் கொண்டு வரப்பட்டன.(32) என் கரங்களில் கூரிய கணைகளும், நாணேற்றப்பட்டுக் கணைபொருத்தப்பட்ட வில்லும் (அவற்றினால் உண்டான தழும்புகளும்) இருக்கின்றன. என் உள்ளங்கால் இரண்டிலும் கொடிகளுடன் கூடிய தேர்களின் குறிகள் இருக்கின்றன. என்னப்போன்ற ஒரு மனிதனைப் போரில் எவனாலும் வெல்ல முடியாது.(33)

வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகள் என்னால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, முறியடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. சம்சப்தகர்களில் சிறு பகுதி மட்டுமே உயிருடன் எஞ்சியிருக்கிறது. நான் மட்டுமே (பகைவரின்) மொத்த படையில் பாதியைக் கொன்றிருக்கிறேன்.(34) ஓ! மன்னா, தேவர்களின் படைக்கு ஒப்பான பாரதப் படையினர் என்னால் கொல்லப்பட்டு, களத்தில் கிடக்கின்றனர். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தோரை மட்டுமே நான் (உயர்ந்த) ஆயுதங்களைக் கொண்டு கொல்கிறேன். இதன் காரணமாகவே மூவுலகங்களும் சாம்பலாகாமல் இருக்கின்றன[3].(35) பயங்கரமானதும், வெற்றிகரமானதுமான என் தேரைச் செலுத்திக் கொண்டு, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்வதற்காகக் கிருஷ்ணனும் நானும் விரைவில் செல்லப் போகிறோம்.(36) இன்று அந்தச் சூதப் பெண்மணி {ராதை} மகனற்றவளாவாள், அல்லது கர்ணனால் குந்தி மகனற்றவளாவாள். போரில் என் கணைகளால் கர்ணனைக் கொல்லாமல் நான் என் கவசத்தைக் கழற்ற மாட்டேன் என்று உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(37)

[3] “இதன் பொருளானது, (மேன்மையான) ஆயுதங்களை அறியாத மனிதர்களை என்னிடமுள்ள (மேன்மையான) ஆயுதங்களால் கொல்ல விரும்பினால், இந்நேரத்திற்குள் அண்டத்தையே என்னால் எரித்திருக்க முடியும். எனினும், மேன்மையான ஆயுதங்களை அறியாதோரை எதிர்த்து எனது மேன்மையான ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்பதை விதியாகவே நான் கொண்டிருக்கிறேன் என்பதாகும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “அஸ்திரங்களை அறியாதவர்களை அஸ்திரங்களால் கொல்லுகிறதே இல்லை. அதனால், உலங்கங்களைச் சாம்பலாகச் செய்யவில்லை” என்றிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெற்றியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பார்த்தன், “தன் ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, தன் வில்லையும் கீழேவைத்து, வேகமாகத் தன் வாளை உறைக்குள் செலுத்தினான்.(38) வெட்கத்தால் தலைகுனிந்து நின்றவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கூப்பிய கரங்களுடன் யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா, என்னை மன்னித்து மகிழ்ச்சியடைவீராக. நான் என்ன சொன்னேன் என்பதைச் சற்று நேரம் கழித்து நீர் புரிந்து கொள்வீர். நான் உம்மை வணங்குகிறேன்” என்றான்.(39) எதிரிகள் அனைவரையும் தாங்கிக் கொள்ள இயன்ற அந்த அரசவீரனை {யுதிஷ்டிரனை} இவ்வாறு உற்சாகப்படுத்த முயன்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், அங்கேயே நின்று கொண்டு மீண்டும், “இந்தப் பணி தாமதமாகாது. அது விரைவில் நிறைவேற்றப்படும். கர்ணன் என்னை நோக்கி வருகிறான். நானும் அவனை எதிர்த்துச் செல்வேன்.(40) போரில் இருந்து பீமரைக் காக்கவும், சூதன் மகனைக் கொல்லவும் நான் என் முழு ஆன்மாவோடு செல்வேன். உமது நன்மைக்காகவே நான் என் உயிரைத் தாங்கியிருக்கிறேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, இதை உண்மையாக அறிவீராக” என்றான்.(41)

இவ்வாறு சொன்னவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவனுமான அர்ஜுனன், மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதங்களைத் தொட்டு, களத்திற்குச் செல்ல எழுந்தான்.(42) எனினும், தன் தம்பியான பல்குனனின் {அர்ஜுனனின்} அந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், (தான் அமர்ந்திருந்த) அந்தப் படுக்கையில் இருந்து எழுந்து, இதயம் நிறைந்த சோகத்துடன் பார்த்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(43) “ஓ! பார்த்தா, நான் தீயவனாகவே செயல்பட்டிருக்கிறேன். அதனாலேயே நீங்கள் பயங்கரப் பேரிடரில் அகப்பட்டீர்கள். எனவே, இன்று இந்த என் தலையைத் தாக்கி வீழ்த்துவாயாக. நான் மனிதர்களில் இழிந்தவனும், என் குலத்தை அழித்தவனுமாவேன்.(44) நான் இழிந்தவன். நான் தீய வழிகளுக்கு அடிமையாக இருக்கிறேன். மூட புத்தி கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் சோம்பேறியாகவும், கோழையாகவும் இருக்கிறேன். முதியோரை அவமதிப்பவனாக நான் இருக்கிறேன். நான் கொடூரன். என்னைப் போன்ற ஒரு கொடூரனுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனாக இருப்பதால் உன்னால் என்ன {நன்மையை} ஈட்ட முடியும்?(45) இழிந்தவனான நான், இன்றே காடுகளுக்குள் ஓயச் செல்கிறேன். நானில்லாமல் நீ மகிழ்ச்சியாக வாழ்வாயாக. உயர் ஆன்ம பீமசேனனே மன்னனாக இருப்பதற்குத் தகுந்தவன். பேடியான நான், அரசுரிமையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்?(46) கோபத்தால் தூண்டப்பட்ட உனது கடும்பேச்சைத் தாங்கிக் கொள்ள இயலாதவனாக நான் இருக்கிறேன். பீமனே மன்னனாகட்டும். ஓ! வீரா, இவ்வாறு அவமதிக்கப்பட்ட நான் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?” என்றான் {யுதிஷ்டிரன்}.(47)

இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் படுக்கையை விட்டு அகன்று, திடீரென எழுந்து, காட்டுக்குச் செல்ல விரும்பினான். அப்போது அவனை வணங்கிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, அவனிடம்,(48) “ஓ! மன்னா, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனான காண்டீவதாரி {அர்ஜுனன்}, காண்டீவத்தைக் குறித்துச் செய்திருந்த கொண்டாடப்படும் நோன்பானது நீர் அறிந்ததே.(49) எந்த மனிதன் அவனிடம், “உன் காண்டீவத்தை வேறொருவனுக்குக் கொடுப்பாயாக” என்று சொல்வானோ, அவன் அவனால் கொல்லப்படுவான். அதே வார்த்தைகளைத் தான் நீர் அவனிடம் சொன்னீர்.(50) எனவே, மெய்யுறுதி கொண்ட அந்த நோன்பைக் காப்பதற்காகவே, ஓ! பூமியின் தலைவரே, என்னுடைய ஆலோசனையின் பேரிலேயே பார்த்தன் இந்த அவமதிப்பை உமக்கு அளித்தான். மேன்மையானவர்களை அவமதிப்பது அவர்களின் மரணமே என்று சொல்லப்படுகிறது.(51) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன் காரணமாக, ஓ! மன்னா, உண்மையைக் காக்க என்னாலும், அர்ஜுனனாலும் இழைக்கப்பட்ட இந்த மீறலுக்காக உம்மைப் பணிபவனும், வேண்டிக் கொள்பவனுமான என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பெரும் மன்னா, நாங்கள் இருவரும் உமது கருணைக்காகப் பணிகிறோம்.(52,53) ராதையின் பொல்லாத மகனுடைய {கர்ணனுடைய} குருதியை இன்று பூமாதேவி குடிக்கப் போகிறாள். நான் உம்மிடம் உண்மையாக உறுதிகூறுகிறேன். சூதன் மகன் {கர்ணன்} இன்று கொல்லப்படுவான் என்பதை அறிவீராக. எவனுடைய கொலையை நீர் விரும்புகிறீரோ அவன் இன்று தன் உயிரை இழப்பான்” என்றான் {கிருஷ்ணன்}.(54)

கிருஷ்ணனின் இந்த வார்த்தகைகளைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைப்} பரபரப்புடன் எழுப்பி,(55) தன் கரங்களைக் கூப்பியபடியே அவசரமாக, “நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. மீறலுக்கான குற்றவுணர்வு என்னிடம் இருக்கிறது.(56) ஓ! கோவிந்தா, நான் இப்போது உன்னால் விழிப்படைந்தேன். ஓ! மாதவா, நான் உன்னால் காக்கப்பட்டேன். ஓ! அச்யுதா, பேரிடரில் இருந்து இன்று நாங்கள் உன்னால் காக்கப்பட்டோம்.(57) உன்னைத் தலைவனாக அடைந்த நானும், அர்ஜுனனும் மடமையால் மலைப்படைந்து {மயங்கி}, துன்பமெனும் பெருங்கடலில் இருந்து மீடக்கப்பட்டோம்.(58) உண்மையில், இன்று உன் நுண்ணறிவு என்ற படகை அடைந்த நாங்கள், எங்கள் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் துன்பம் மற்றும் துயரமாகிய பெருங்கடலைக் கடந்துவிட்டோம். ஓ! அச்யுதா, உன்னை அடைந்த நாங்கள் தலைவனற்றவர்களாக ஆக மாட்டோம்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(59)
-------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -70ல் உள்ள சுலோகங்கள் : 59

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்