Falsehood may become the truth! | Karna-Parva-Section-69 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தன் சப்தத்தை நினைத்துக் கோபமடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனைக் கொல்வதற்காக வாளை உருவியது; அர்ஜுனனை அதட்டி நிந்தித்த கிருஷ்ணன்; பொய்ம்மையும் வாய்மைக்கு இணையாக ஆகும் சந்தர்ப்பங்களை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; தன் சபதத்துக்குப் பங்கம் நேராதவாறு ஆலோசனைகளைக் கிருஷ்ணனிடம் வேண்டிய அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன ஆலோசனை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் பாரதக் குலத்தின் காளையை {யுதிஷ்டிரனைக்} கொல்வதற்காகத் தன் வாளை உருவினான்.(1) (மனித) இதயத்தின் செயல்பாடுகளை நன்கறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனது {அர்ஜுனனின்} கோபத்தைக் கண்டு, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ ஏன் உன் வாளை உருவுகிறாய்?(2) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ போரிடக் கூடிய எவரும் இங்கு இருப்பதாக நான் காணவில்லையே. நுண்ணறிவு கொண்ட பீமசேனரால், இப்போது தார்தராஷ்டிரர்கள் தாக்கப்படுகிறார்களே.(3) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} காண்தற்காகவே நீ போரில் இருந்து {இங்கு} வந்தாய். மன்னரையும் நீ கண்டுவிட்டாய். உண்மையில், யுதிஷ்டிரர் நலமாகவே இருக்கிறார்.(4) புலிக்கு இணையான ஆற்றலுடன் கூடிய இந்த மன்னர்களில் புலியைக் கண்டு நீ மகிழ்ச்சியுற வேண்டிய இந்நேரத்தில் ஏன் இந்த மடமை?(5) ஓ! குந்தியின் மகனே, நீ கொல்லத்தக்க மனிதர் எவரையும் நான் இங்குக் காணவில்லையே. பிறகு ஏன் {யாரை} நீ தாக்க விரும்புகிறாய்? உன் மனத்தில் உள்ள இந்த மாயைதான் யாது?(6) உறுதிமிக்க அந்த வாளை ஏன் இவ்வளவு வேகமாக எடுக்கிறாய்? ஓ! குந்தியின் மகனே, நான் உன்னைக் கேட்கிறேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்டவனே, கோபத்துடன் அந்த வாளைப் பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.(7)
கிருஷ்ணனால் இவ்வாறு கேட்கப்பட்ட அர்ஜுனன், யுதிஷ்டிரனின் மீது தன் கண்களைச் செலுத்தி, கோபக்காரப் பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்},(8) “ எந்த மனிதன் என்னிடம், “உன் காண்டீவத்தை வேறொருவனுக்குக் கொடு” என்று சொல்கிறானோ அவனது தலையை நான் அறுப்பேன். இதுவே என் கமுக்கமான நோன்பாகும் {இரகசிய விரதமாகும்}.(9) ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, உன் முன்னிலையிலேயே அந்த வார்த்தைகள் இந்த மன்னரால் பேசப்பட்டன. அவற்றை மன்னிக்க நான் துணியமாட்டேன்.(10) அறத்திலிருந்து சிறு வீழ்ச்சியை அடைவதற்கும் அஞ்சும் இந்த மன்னரை அதற்காகவே நான் கொல்லப்போகிறேன். இந்த மனிதர்களில் சிறந்தவரைக் {யுதிஷ்டிரரைக்} கொன்று என் நோன்பை நான் காக்கப் போகிறேன்.(11) ஓ! யதுக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, அதற்காகவே நான் என் வாளை உருவினேன். யுதிஷ்டிரரைக் கொன்று, உண்மைக்கான {சத்தியத்திற்கான} என் கடனையே நான் செலுத்தப் போகிறேன்.(12) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அதனால் நான் என் துயரையும், நோயையும் போக்கிக் கொள்வேன். இவ்வாறு எழுந்திருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்ததாக எதை நீ நினைக்கிறாய் என்றே நான் உன்னைக் கேட்கிறேன்?(13) ஓ! ஐயா, இவ்வண்டத்தின் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவன் நீயே. நீ எனக்கு என்ன சொல்வாயோ, அதையே நான் செய்யப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(14)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்], பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ச்சீ… ச்சீ…” என்று சொல்லி மீண்டும் அவனிடம்,(16) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கோபப்படக்கூடாத நேரத்தில் நீ கோபம் கொள்வதால், ஓ! மனிதர்களில் புலியே, பெரியோருக்காக நீ காத்திருந்ததில்லை என்பதை நான் இப்போது அறிகிறேன். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறநெறியின் தனிச்சிறப்புகளை அறிந்த எவனும், ஓ! பாண்டுவின் மகனே, அவற்றை அறிந்தவனான நீ இன்று செயல்பட்ட விதத்தில், நடந்து கொள்ள மாட்டான்.(17) ஓ! பார்த்தா, வெளிப்படையாக முறையாகத் தெரிந்தாலும், சாத்திரங்களால் கண்டிக்கப்பட்டவையும், செய்யக்கூடாதவையுமான செயல்களைச் செய்பவன் மனிதர்களில் இழிந்தவனாவான்[1].(18) சீடர்களால் காத்திருக்கப்படும் {பணிசெய்யப்படும்} கல்விமான்கள், அறநெறியின் ஆணைகளைப் பின்பற்றி அறிவித்த தங்கள் கருத்துகளின் தீர்மானங்களை நீ அறிய மாட்டாய்[2].(19) அந்தத் தீர்மானங்களை அறியாத மனிதன், ஓ! பார்த்தா, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் வேற்றுமையை உணர முடியாமல் குழம்பிப் போய்ப் புத்தி மயங்குகிறான்.(20) என்ன செய்யப்பட வேண்டும், என்ன செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்வது எளிதல்ல. சாத்திரங்களின் உதவியாலேயே அனைத்தையும் உறுதி செய்து கொள்ள முடியும். எனினும், நீ சாத்திரங்களை அறியவில்லையே.(21)
[1] “அகார்யாணாம் கிரியாணாம் Akaaryaanaam Kriyaanaam என்பது, செய்யக்கூடாத செயல்கள் என்று பொருள்படும். கார்யாணாம் அகிரியாணாம் Kaaryaanaam Akriyaanaam என்பது (சாத்திரங்களால்) கண்டிக்கப்பட்டாலும் முறையாகத் தோன்றும் செயல்கள் என்று பொருள்படும். அதாவது, நோன்பைக் காத்துக் கொள்ள அண்ணனைக் கொல்வதைப் போல” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “பார்த்த! எவன் அகார்யங்களைச் செய்தல் அவ்வாறே கார்யங்களைச் செய்யாமை இவற்றினுடைய ஸம்பந்தத்தை அறிகிறானில்லையோ அவன் மனிதர்களுள் அதமன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “எவன் முறையற்றதும், மிகவும் வெறுக்கப்படுவதுமான செயலைச் செய்கிறானோ அவன் மனிதர்களில் வெறுக்கத்தக்கவனாவான்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஓ! பார்த்தா, மனிதர்களில் இழிந்தோரே, செய்யக்கூடாத பணிகளைச் செய்வார்கள்” என்றிருக்கிறது.[2] “சமாஸவிஸ்தாரவித் Samaasavistaaravit என்பதை, ஒரு பொருளை விபரமாகவும், மொத்தமாகவும் அறிந்தவன், அல்லது ஒரு கல்விமான், அல்லது ஒரு பெரும் அனுபவசாலி என்று கொள்ளலாம். உபஸ்திதாஸ் Upasthitaas என்பது சீடர்களால் காத்திருக்கப்படுவது {பணி செய்யப்படுவது} என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. கதயேயுஸ் Kathayeyus என்பது பேசுவது, அல்லது கற்பிப்பது என்ற பொருளைத் தரும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாத்திரங்களை உணர்ந்தவனாக (உன்னை நீ நம்பிக்கொள்வதால்), அறியாமையால் ஏவப்படும் நீ, அறநெறியை (இவ்வாறு) நோற்கவிரும்புகிறாய் (எனத் தெரிகிறது). அறத்தை அறிந்தவனாக உன்னை நீ நம்புகிறாய். ஆனால், ஓ! பார்த்தா, உயிர்வாழும் உயிரினங்களைக் கொல்வது பாவம் என்பதை நீ அறியவில்லை.(22) விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் தவிர்ப்பது {விலங்குகளிடம் அஹிம்சையே} உயர்ந்த அறம் என நான் நினைக்கிறேன். ஒருவன் பொய்ம்மையும் பேசலாம், ஆனால் ஒருபோதும் கொலை செய்யக் கூடாது.(23) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பிறகு ஒரு சாதாரண மனிதனைப் போல, நீ எப்படி அறநெறியறிந்தவரும், மன்னருமான உன் அண்ணனைக் கொல்ல விரும்பலாம்?(24) போரில் ஈடுபடாத ஒரு மனிதனையோ, ஓர் எதிரியையோ, போரில் புறமுதுகிடுபவனையோ, தப்பி ஓடுபவனையோ, பாதுகாப்பை வேண்டுபவனையோ, கரங்கூப்பியவனையோ, சரணடைந்தவனையோ, தேரற்றவனையோ கொல்வதை நேர்மையாளர்கள் ஒரு போதும் மெச்சுவதில்லை. இந்தத் தன்மைகள் அனைத்தும் உனக்கு மூத்தவரிடம் {யுதிஷ்டிரரிடம்} இருக்கின்றன[3].(25,26)
[3] வேறொரு பதிப்பில், “யுத்தஞ்செய்யாதவனும், குருவாக இருப்பவனும், அவ்வாறே சத்துருவாக இராதவனும், புறங்காட்டி ஓடுகிறவனும், சரணமடைகின்றவனும், கைகளைக் குவித்துக் கீழ்ப்படிந்தவனும், அவ்வாறே அஜாக்கிரதையாயிருப்பவனுமான மனிதனுடைய வதமானது ஸாதுக்களால் புகழப்படுகிறதில்லை” என்றிருக்கிறது.
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பே இந்த நோன்பு மடமையின் காரணமாக {குழந்தைத்தனமாக} உன்னால் பின்பற்றப்பட்டது. அந்நோன்பின் விளைவாகவும், மடமையினாலும், பாவம் நிறைந்த இந்தச் செயலை நீ செய்யத் துணிகிறாய்.(27) புரிந்து கொள்ளக் கடினமானதும், மிக நுட்பமானதுமான அறநெறியின் பாதையைத் தீர்மானிக்காமல், மதிப்பிற்குரிய உன் மூத்தவரை நோக்கி நீ ஏன் விரைகிறாய்?(28) ஓ! பாண்டுவின் மகனே, பீஷ்மராலும், நீதிமானான யுதிஷ்டிரராலும், க்ஷத்ரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்பட்ட விதுரராலும், பெரும்புகழைப் பெற்ற குந்தியினாலும் அறிவிக்கப்பட்டதும், அறநெறியுடன் தொடர்புடையதுமான இந்தப் புதிரை {தர்மரகசியத்தை} நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்[4]. நான் அந்தப் புதிர் குறித்த அனைத்து விவரங்களையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! தனஞ்சயா, கேட்பாயாக.(29,30)
[4] வேறொரு பதிப்பில், “பாண்டவ, இந்தத் தர்மரஹஸ்யத்தை உனக்குச் சொல்லுகிறேன். பரதர்களில் சிறந்தவனே, எதனை உனக்குப் பீஷ்மராவது, அரசரான யுதிஷ்டிரராவது, ஜத்தாவான விதுரராவதும், புகழ்பெற்றவளான காந்தாரியாவது, குந்தியாவது, கீர்த்திமதியான திரௌபதியாவது உரைப்பார்களோ அதனை உனக்கு உரைக்கப்போகிறேன்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் சொல்லப்பட்டதைப் போலவே மேற்கண்டோரால் ஏற்கனவே சொல்லப்பட்டதாகவே சொல்லப்படுகிறது.
உண்மையை {சத்தியத்தை} உரைப்பவன் நேர்மையாளன். உண்மையைத் தவிர உயர்வானது ஏதுமில்லை. எனினும், உள்ளபடியே உண்மையானது, அதன் முக்கிய இயல்புகளைப் பொறுத்தவரை புரிந்து கொள்ள மிகக் கடினமானதாகும் என்பதைக் காண்பாயாக.(31) பொய்ம்மையே உண்மையாகவும், உண்மையே பொய்ம்மையாகவும் உள்ள இடத்தில், உண்மையும் சொல்லக்கூடாததாகலாம்; பொய்ம்மையும் சொல்லக்கூடியதாகலாம்[5].(32) ஆபத்தான வாழ்வுச் சூழலிலும், திருமணத்திலும் பொய்ம்மை சொல்லத்தக்கதாகிறது. ஒருவன் தன் சொத்துகள் அனைத்தையும் இழக்கக்கூடிய சூழ்நிலையிலும் பொய்ம்மை சொல்லத்தக்கதாகிறது.(33) திருமணத்தின் போதோ, பெண்ணுடன் இன்பமாக இருப்பதற்காகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுங்காலத்திலோ, ஒருவனது மொத்த சொத்தும் பறிபோகும் நிலையிலோ, ஒரு பிராமணனுக்காகவோ பொய்ம்மை சொல்லப்படலாம். இந்த ஐவகைப் பொய்மைகள் பாவமற்றவையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(34) இந்தச் சந்தர்ப்பங்களில் பொய்மையே உண்மையாகவும், உண்மையே பொய்மையாகவும் ஆகிறது.(35)
[5] பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின். (குறள் 292)வேறொரு பதிப்பில், “எந்த இடத்தில் பொய் மெய்யின் பயனைத் தருமோ, மெய் பொய்யின் பயனைத் தருமோ அந்த இடத்தில் மெய்யானது சொல்லத்தகாததாக இருக்கும், பொய்யானது சொல்லத்தக்கதாக இருக்கும்” என்று இருக்கிறது.
உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாமல் உண்மையை {சத்தியத்தைப்} பயில்பவன் மூடனாவான். உண்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள வேற்றுமையை உணரக் கூடியவனே அறநெறியை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(36) கண்பார்வை இல்லாத விலங்கைக் கொன்றதால் பலாகன் அடைந்ததைப் போல, ஒரு விவேகியும்கூட ஒரு கொடுஞ்செயலைச் செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைவான் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?(37) ஆறுகளுக்கு மத்தியில் (வாழும்) கௌசிகன் அடைந்ததைப் போல, அறியாமை கொண்ட மூடனொருவனும் தகுதியை {புண்ணியத்தை} அடையும் விருப்பத்தால், பெரும்பாவத்தையே ஈட்டுவான் என்பதிலும் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?” என்றான் {கிருஷ்ணன்}.(38)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ புனிதமானவனே, பலாகனைக் குறித்தும், ஆறுகளுக்கு மத்தியில் (வாழும்) கௌசிகனைக் குறித்தும் உள்ள இந்த எடுத்துக்காட்டுகள் அடங்கிய கதையை நான் புரிந்து கொள்ளும் வகையில் எனக்கு உரைப்பாயாக” என்று கேட்டான்.(39)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பாரதா, விலங்குகளை வேட்டையாடும் குறிப்பிட்ட ஒருவன் {வேடன்}, பலாகன் என்ற பெயரில் இருந்தான். விருப்பத்தினால் அல்லாமல், தன் மகன்கள் மற்றும் மனைவியரின் வாழ்வுக்காக மட்டுமே அவன் விலங்குகளைக் கொன்று வந்தான்.(40) தன் வகைக்குண்டான கடமைகளில் அர்ப்பணிப்போடும், எப்போதும் உண்மை பேசிக் கொண்டும், தீய நோக்கம் ஏதும் இல்லாமலும் இருந்த அவன், தன்னை நம்பியிருந்த தன் பெற்றோரையும், பிறரையும் ஆதரித்து வந்தான்.(41) ஒரு நாள், விடாமுயற்சியுடனும், கவனத்துடனும் விலங்குகளைத் தேடியும், ஒன்றையும் அவனால் காண முடியவில்லை. இறுதியில், கண்களின் குறைக்கு ஈடு செய்யும் வகையில் நுகர்வுணர்ச்சி கொண்ட {மூக்கையே கண்ணாகக் கொண்ட} ஊனுண்ணும் விலங்கு ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.(42) அதைப்போன்ற விலங்கொன்றை அவன் அதுவரை கண்டதில்லை என்றாலும், அதை உடனே கொன்றான். பார்வையற்ற அந்த விலங்கைக் கொன்றதும், வானத்தில் இருந்து (அந்த வேடனின் தலைமீது) மலர்மாரி பொழிந்தது.(43) அந்த விலங்குகளை வேட்டையாடுபவனை {வேடனைச்} சொர்க்கத்திற்குக் கொண்டு செல்வதற்காக, மிக இனிமையானதும், அப்சரஸ்களின் பாடல்களையும், அவர்களுடைய இசைக்கருவிகளின் இசையையும் எதிரொலித்துக் கொண்டிருந்ததுமான தெய்வீகத் தேர் ஒன்று அங்கே வந்தது.(44) ஊனுண்ணும் அவ்விலங்கு, தவத்துறவுகளை மேற்கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்த ஒரு வரத்தை அடைந்ததது. அதன் காரணமாகத் தான்தோன்றியால் {பிரம்மனால்} அது குருடாக்கப்பட்டது.(43) உயிரினங்கள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்திருந்த அவ்விலங்கைக் கொன்றதால், பலாகன் சொர்க்கத்திற்குச் சென்றான். {எனவே} அறத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாகும்.(46)
சாத்திரங்களில் அதிக அறிவற்றவனும், கௌசிகன் என்ற பெயரைக் கொண்டவனுமான தவசி ஒருவன் இருந்தான்[6]. கிராமத்தை விட்டு மிகத் தொலைவில்லாததும், பல ஆறுகள் சந்திக்கும் புள்ளியுமான ஓர் இடத்தில் அவன் வாழ்ந்து வந்தான்.(47) “நான் எப்போதும் உண்மையையே பேசுவேன்” என்று சொல்லி ஒரு சபதத்தை அவன் செய்திருந்தான். ஓ! தனஞ்சயா, பிறகு அவன் உண்மை பேசுபவன் எனக் கொண்டாடப்படலானான்.(48) அந்த நேரத்தில், சில குறிப்பிட்ட மனிதர்கள், கள்வர்கள் மீது கொண்ட அச்சத்தால் (கௌசிகன் வசித்து வந்த) வனத்திற்குள் நுழைந்தனர். சினத்தால் நிறைந்த கள்வர்கள், அவர்களைக் கவனமாகத் தேடியபடியே அங்கே வந்தனர்.(49) உண்மையைப் பேசுபவனான கௌசிகனிடம் வந்த அவர்கள், “ஓ புனிதமானவரே, சற்று முன்னர் எந்தப் பாதையின் வழியாக மக்கள் கூட்டம் சென்றது? உண்மையின் பெயரால் கேட்கும் எங்களுக்குப் பதிலளிப்பீராக. அவர்களை நீர் கண்டிருந்தால், எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டனர்.(50) இவ்வாறு உண்மையின் பெயரில் கேட்கப்பட்ட கௌசிகனும், “மரங்கள், கொடிகள் மற்றும் செடிகள் நிறைந்த இந்த வனத்திற்குள்தான் அம்மனிதர்கள் நுழைந்தனர்” என்று உண்மையை அவர்களிடம் சொன்னான்.(51) இவ்வாறே, ஓ! பார்த்தா, அந்தக் கௌசிகன் அவர்களுக்குத் தகவலை அளித்தான். பிறகு அந்தக் கொடூர மனிதர்கள், தாங்கள் தேடி வந்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் அனைவரையும் கொன்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(52) சிறுமதி கொண்டவனும், அறநெறிகளின் தனித்துவ வேறுபாடுகளை அறியாதவனுமான மூடனொருவன், தன் ஐயங்களுக்கான தீர்வை முதியோரிடம் கேட்காமல் நரகத்தில் வீழ்வதைப் போலவே, அறநெறியின் நுட்பங்களை அறியாத கௌசிகனும், தான் பேசிய வார்த்தைகளில் இருந்த அந்தப் பெரும்பாவத்தின் விளைவால் பயங்கரமான நரகத்தில் வீழ்ந்தான்.(53,54)
[6] தபஸ்வி நவஹுஸ்ருதஸ் tapaswi navahuchrutas என்ற உரையையே நான் இங்கே பயன்படுத்ததியிருக்கிறேன். நீலகண்டரால் கவனிக்கப்பட்ட மற்றொரு உரையானது தபஸ்வினோசஹுஸ்ருதஸ் tapaswino-cahuchrutas என்றிருக்கிறது. அதன் பொருள் தவசிகளில் முதன்மையானவன் என்பதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “தவஞ்செய்பவர்களுள் சிறந்தவனும், அநேக சாஸ்திரங்களைக் கற்றறிந்தவனுமான கௌசிகன் என்கிற ஒரு பிராம்மணன் இருந்தான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “சாத்திரங்களை அதிகம் படிக்காதவனும், கௌசிகன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பிராமணத் தவசி இருந்தான்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “கௌசிகன் என்ற பெயரில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் தவசியாகவும், பெரும் கல்விமானாகவும் இருந்தான்” என்றிருக்கிறது.
பாவத்திலிருந்து அறத்தை வேறுபடுத்திப் பார்க்க சில அறிகுறிகள் இருக்க வேண்டும். உயர்ந்ததும், அடைய முடியாததுமான ஞானத்தை, சிலவேளைகளில் அறிவுப்பயிற்சியின் {பகுத்தறிவின்} மூலம் நாம் அடைக்கூடும்.(55) ஒருபுறம் சாத்திரங்கள் அறத்தைக் குறிக்கின்றன என்று பலர் சொல்கின்றனர். நான் இதில் முரண்படவில்லை. எனினும், சாத்திரங்கள் அனைத்து வழக்குகளிலும் {அறக்குறிப்புகளை} வழங்குவதிலை.(56) உயிரினங்களின் வளர்ச்சிக்காக அறநெறி குறித்த கட்டளைகளே {அவற்றில்} அறிவிக்கப்பட்டிருக்கின்றன.(57) தீங்கிழையாமை {அஹிம்சை} அறநெறியுடன் தொடர்புடையது என்பது உறுதியானதே. அறநெறி குறித்த கட்டளைகள் {சாத்திரங்கள்} உயிரினங்களைத் தீங்கிழையாதனவாக மாற்றவே உண்டாக்கப்பட்டன.(58) அந்த அறநெறியானது அனைவராலும் தூக்கி நிறுத்தப்படுவதனாலேயே {உயர்த்தப்படுவதனாலேயே} அது தர்மம் {அறம்} என்று அழைக்கப்படுகிறது[7]. உண்மையில், அறநெறியே உயிரினங்களைத் தூக்கிநிறுத்துகிறது {உயர்த்துகிறது}. எனவே, (உயிரினங்களைத்) தூக்கி நிறுத்தவதற்காகக் கணிக்கப்படுவதே அறநெறி என்பதில் ஐயமில்லை.(59) சாத்திரங்கள் மௌனமாக {ஒன்றும் சொல்லாமல்} இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அறிவின் துணையில்லாத கட்டளைகளின் படி செயல்பட்டு அறத்தை அடையவோ, முக்தியை அடையவோ நம்புவோருடன், எச்சந்தர்ப்பத்திலும் ஒருவன், எத்தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.(60) (சாத்திரங்களோ, ஞானமோ எந்த ஒளியையும் பாய்ச்சாத சூழ்நிலைகளில்), பேசும் தேவை ஏற்படும்போது, ஒருவன் அமைதியுடன் இருக்க வேண்டும், அல்லது, அந்த அமைதியானது (தனக்கோ, பிறருக்கோ) ஆபத்தை உண்டாக்குமானால், பொய்ம்மை பேசுவதே சிறப்பானதாகும். உண்மையில், அந்தப் பொய்ம்மையே உண்மையாகும் {சத்தியமாகும்}.(61) குறிப்பிட்ட காரியங்களை நோக்கமாகக் கொண்டு, ஒரு சபதத்தைச் செய்த ஒருவன், அவற்றை {அக்காரியங்களைத்} தன் செயல்களால் காக்கவில்லையென்றால், அந்தச் சபதத்தின் கனியை அவன் அடைவானில்லை[8].(62) உயிருக்கு ஆபத்து நேரும் சந்தர்ப்பங்களிலோ, திருமணத்தின்போதோ, ஒருவனுடைய உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோர் மொத்தமாக அழிவடைய நேரும் என்ற அபாயம் இருக்கும்போதோ, கேலிக்காகவோ சொல்லப்படுவது பொய்மையாகக் கருதப்படமாட்டாது.(63)
[7] வேறொரு பதிப்பில், “எது அஹிம்ஸையோடு கூடினதோ அது தர்மமென்பது நிச்சயம். ஹிம்ஸை செய்யப்பட்டவர்களுடைய ஹிம்ஸையை நிவர்த்திப்பதின் பொருட்டுத் தர்மசாஸ்திரம் செய்யப்பட்டிருக்கிறது. தரிக்கிற சக்தியுள்ளதாய் இருப்பதனால் தர்மம் என்று சொல்லுகிறார்கள்” என்றிருக்கிறது.[8] “சுலோகங்கள் 60, 61, 62 ஆகியவை வியாசக்கூடங்கள் Vyaasakutas என்று அழைக்கப்படுகின்றன. நான் அவற்றை வெளிப்படுத்துவதில் நீலகண்டரையே பின்பற்றியிருக்கிறேன். சுலோகம் 60ல் உள்ள நியாயேனா Nyaayena என்ற சொல்லானது, “விவேகியானவன் பிறரை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும். அதுவே தெய்வத்திற்கு அளிக்கப்படும் வழிபாடாகும்” என்பது போன்ற சாத்திரங்களுடைய ஈர்ப்பின் துணையில்லாமல், மனித அறிவின் மூலமாக மட்டுமே, குறிப்பிடத்தக்க அளவுக்கு அறநெறி சார்ந்த தன்மையோடு கூடிய எண்ணற்ற கட்டளைகளை மறைமுகமாகச் சொல்கிறது. சுலோகம் 61ல் சொல்லப்பட்டுள்ள அறநெறியைப் பொறுத்தவரை, சர் வால்டர் ஸ்காட்டின் வுட் ஸ்டாக் என்ற புனைவில் உள்ளதைப் போல இருக்கிறது. எனினும், எந்த வாசகரும், அவரது கொள்கைகள் என்னவாக இருந்தாலும், தன் மன்னனின் பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்ட ஒருவனின் பொய்யை தூற்றவே செய்வார்கள். சுலோகம் 62ல், அர்ஜுனன் தன் நோன்பைக் காக்காமல் விடுவதால், அந்த நோன்பின் கனிகளை மட்டுமே இழப்பான், அவனது நோன்பானது நோக்கமற்றதாவும், வறட்டுப்பெருமையிலும், இறுமாப்பிலும் இருந்து வந்ததாகவும் இருப்பதால், அவனது இழப்பானது புறக்கணிக்கத்தக்கதாகும். எந்த விதத்தினாலும், தான் கொண்ட மூட நோன்பைக் காக்காததால் எந்தப் பாவமும் நேராது என்றே {சுலோகம் 62ல்} சொல்லப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறநெறியின் உண்மைகளை அறிந்தோர் இவற்றில் பாவத்தைக் காணமாட்டார்கள். {போலியான} ஓர் உறுதிமொழியால், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் தோழமையில் இருந்து ஒருவன் தப்பிக்கூடும் என்றால், அந்தப் பொய்மையானது ஐயமில்லாத உண்மையே என்பதால், அங்கே போலியாக உறதியளிப்பதே சிறந்ததாகும். தன் செல்வங்கள் கள்வர்களிடம் பறிபோவதை ஒருவனால் எவ்வழியிலாவது தவிர்க்க முடியுமென்றால், அதை {அந்தச் செல்வங்களை} அவன் அவர்களுக்கு {கள்வர்களுக்கு} ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(64,65) ஒருவனுடைய செல்வத்தைப் பாவிகளுக்குத் தானமளிப்பது, அந்தக் கொடையாளியையே பீடிக்கும் {துன்புறுத்தும்}. எனவே, நீதிக்காகப் பொய்மை பேசுவது பொய்மையாகாது.(66) அறநெறியையோ, அல்லதையோ உறுதி செய்து கொள்ளக்கூடிய குறிப்புகளை நான் உனக்கு முறையாக இப்போது அறிவித்துவிட்டேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவை யாவற்றையும் கேட்ட பிறகு, யுதிஷ்டிரர் உன்னால் கொல்லத்தக்கவரா என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(67)
அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, பெரும் ஞானத்தையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனாக நீ இருக்கிறாய். எங்கள் நன்மைக்காக நீ சொன்னது ஐயமற உண்மையே.(68) நீ எங்களுக்குத் தாயும், தந்தையும் போன்றவனாவாய். ஓ! கிருஷ்ணா, நீயே எங்களுக்குப் பெரும் புகலிடம். அதன் காரணமாகவே நீ எங்களுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறாய்.(69) ஓ! கிருஷ்ணா, மூவுலகிலும் நீ அறியாதன ஏதுமில்லை. எனவே, உயர்ந்த அறநெறியையும், அதன் விவரங்களையும் நீ அறிந்திருக்கிறாய்.(70) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் என்னால் கொல்லப்படத்தக்கவர் இல்லை என்றே நான் உறுதியாகக் கருதுகிறேன். எனினும், இதில், தற்போதைய என்னுடைய காரியத்தில் நான் என்ன செய்யலாம் என்பதை அருள்கூர்ந்து எனக்குச் சொல்வாயாக. நான் இப்போது அறிவிக்கப் போவதும், என் இதயத்தில் இருப்பதுமான மற்றொன்றையும் இப்போது கேட்பாயாக.(71) ஓ! தாசார்ஹ குலத்தோனே, என் நோன்பு என்ன என்பதை நீ அறிவாய். “ஓ! பார்த்தா, ஆயுதங்களிலும், சக்தியிலும் உன்னிலும் மேம்பட்ட ஒருவனுக்கு உன் காண்டீவத்தைக் கொடுப்பாயாக” என்ற இவ்வார்த்தைகளை எவன் என்னிடம் சொல்வானோ, அவனை என் வலிமையை வெளிப்படுத்தி நான் கொல்வேன். பீமர், தன்னை “தாடியற்றவனே”[9] என்று அழைப்பவனைக் கொல்வதைப்போலவே நானும் கொல்வேன். ஓ! வீரா, மன்னர், “உன் வில்லைக் கொடுப்பாயாக” என்ற அந்தச் சொற்களை உன் முன்னிலையிலேயே என்னிடம் மீண்டும் மீண்டும் சொன்னார்.(72,73) ஓ! கேசவா, நான் அவரைக் கொன்றால், ஒரு கணமும் என்னால் இவ்வுலகில் வாழ முடியாது. மடமையினாலும், மனநிலையை இழந்ததாலும், மன்னரைக் கொல்ல எண்ணி நான் பாவமிழைத்துவிட்டேன்.(74) ஓ! நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையானவனே, உலகமனைத்திலும் அறியப்பட்ட என் நோன்பு மெய்ப்பிக்கப்படும் அதேவேளையில் நானும், பாண்டுவின் மூத்த மகனும் {யுதிஷ்டிரரும்} உயிரோடு இருக்கத்தக்க ஆலோசனையை நீ எனக்கு வழங்குவாயாக” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(75)
[9] கங்குலியின் இரண்டாம்பதிப்பு கர்ண பர்வம் புத்தகத்தில் “beardless” என்ற சொல் இருக்கிறது. அதுவே இங்கே கையாளப்பட்டிருக்கிறது. Sacred texts வலைத்தளத்தில் உள்ள கங்குலியின் பதிப்பில் 'tularak' என்று இருக்கிறது. இரண்டாம் பதிப்பில் கங்குலி ஓர் அடிக்குறிப்பைத் தருகிறார். அது பின்வருமாறு, “இந்தச் சொல்லின் பொருளை நிந்தனை என்ற வகையில் அயல்நாட்டவர் புரிந்து கொள்வது கடினம். உண்மை என்னவென்றால், இந்திய இனங்களைச் சேர்ந்தோர், தாடியற்ற {மீசையற்ற} மனிதனைக் கிட்டத்தட்ட பெண்ணாகவே கருதுகின்றனர். ஆண்மையின் இணையுறுப்புகளாக மயிரானது அவர்களால் மிக உயர்வாகக் கருதப்படுகிறது. வங்கத்தில் கோசா என்ற சொல்லும் சம்ஸ்க்ருதத்தில் தூபரக Tuvaraka என்ற சொல்லும் நிந்தனைச் சொல்லாகவே இன்னும் கருதப்படுகிறது. ஆண்மையின் கௌரவத்தை அளிக்கும் மயிர்களற்ற ஒரு மனிதனைக் காலையில் விழிக்கும் எந்த மனிதனும் காணக்கூடாது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “பீமன், “தூபரக” என்று தன்னை அழைத்தவனைக் கொல்லுவது போல நான் பலாத்காரமாகக் கொல்வேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பீமரும் தன்னை, “ஆண்மைக் குறியீடுகளைத் தரும் மயிரற்றவனே” என்று அழைப்பவனைக் கொல்வதாகச் சபதம் செய்திருக்கிறார்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “பீமரும், தன்னை “ஆண்மையற்றவன் {அலி}” என்று அழைக்கும் எவனையும் கொல்வதாகச் சொல்லியிருக்கிறார்” என்றிருக்கிறது.
வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “மன்னர் {யுதிஷ்டிரர்} களைப்படைந்து, துயரத்தின் ஆளுகைக்குள் இருக்கிறார். அவர் போரில் கர்ணனின் எண்ணற்ற கணைகளால் சிதைக்கப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {அர்ஜுனா}, போரில் பின்வாங்கி வரும்போது, சூதன் மகனால் (அவனது {கர்ணனின்} கணைகளால்) அவர் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டார்.(76) இதன் காரணமாகத் துயரத்தில் இருந்த அவர் {யுதிஷ்டிரர்}, கோபத்தால் முறையற்ற அந்த வார்த்தைகளை உன்னிடம் பேசிவிட்டார். போரில் கர்ணனை நீ கொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வார்த்தைகளால் உன்னைத் தூண்டிவிட்டார்.(77) அந்தப் பொல்லாத கர்ணன், (உன்னைத் தவிர) இவ்வுலகில் உள்ள வேறு எவராலும் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறிவார். இதன் காரணமாகவே, ஓ! பார்த்தா, பெருங்கோபத்தில் இருந்த மன்னர் உன் முகத்துக்கு நேராகக் கடும் வார்த்தைகளைப் பேசினார்.(78) இன்றைய போர் விளையாட்டில், எப்போதும் விழிப்புடன் இருப்பவனும், எப்போதும் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவனுமான கர்ணனே பந்தயப் பொருளாவான். அந்தக் கர்ணன் கொல்லப்பட்டால், கௌரவர்கள் நிச்சயம் வீழ்ச்சியடைவார்கள். இதையே தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரரும்} நினைத்தார்.(79) இதற்காகவே தர்மனின் மகன் மரணத்திற்குத் தகுந்தவராகிவிட மாட்டார். ஓ! அர்ஜுனா, உன் நோன்பும் காக்கப்பட வேண்டும். யுதிஷ்டிரர் உயிரை இழக்காமலும், இருப்பினும் மரணத்தையே அடைந்தவராகவும் ஆக உனக்கு ஏற்புடைய வகையில் நான் சொல்லும் ஆலோசனைகளை இப்போது கேட்பாயாக.(80)
மரியாதைக்குத் தகுந்த ஒருவர், அந்த மரியாதையைத் தொடர்ந்து அடையும் வரை மனிதர்களின் உலகில் அவர் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. எனினும், அத்தகு மனிதர் ஒருவர் அவமதிப்பை அடையும்போது, அவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே சொல்லப்படுகிறார்.(81) இந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, உன்னாலும், பீமராலும், இரட்டையர்களாலும் {நகுலன் மற்றும் சகாதேவனாலும்}, வீரர்கள் அனைவராலும், இவ்வுலகில் பலகாலமாக மதிக்கப்படுவோர் அனைவராலும் எப்போதும் மதிக்கப்பட்டே வருகிறார்.(82) எனவே, ஓ! பார்த்தா, “மதிப்புக்குரியவரே” என்று வழக்கமாக உன்னால் அழைக்கப்படும் இந்த யுதிஷ்டிரரை இப்போது “நீ” என்று அழைப்பாயாக. ஓ! பாரதா, “நீ” என்று அழைக்கப்படும் மேன்மையான ஒருவர், உயிரை இழக்கவில்லையென்றாலும் கொல்லப்பட்டவரே ஆவார்.(83) ஓ! குந்தியின் மகனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் நீ இவ்வாறு நடந்து கொள்வாயாக. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, கண்டிக்கத்தக்க இந்நடத்தையைப் பின்பற்றுவாயாக.(84) திறன்தேர்வுகள்[10] அனைத்திலும் சிறந்த இந்தத் திறன்தேர்வை {சுருதியை} அதர்வன் மற்றும் அங்கிரஸ் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர். நன்மையை விரும்பும் மனிதர்கள், எந்தவகையான ஐயுணர்வுமின்றி இவ்வழியில் நடக்க வேண்டும்.(85)
[10] “சுருதி என்பதே இங்கே திறன்தேர்வு என்று உரைக்கப்பட்டிருக்கிறது. சுருதி என்பது, கேட்பவன் ஒருவனுக்குப் பிரம்மனால் அறிவிக்கப்பட்டதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மேன்மையான ஒருவர், உயிரையிழக்காமல் இருந்தாலும், “நீ” என்று அழைக்கப்பட்ட அந்த மதிப்புக்குரியவன் கொல்லப்பட்டவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது. கடமையை அறிந்தவனான நீ, நான் குறிப்பிட்ட முறையில் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் பேசுவாயாக.(86) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் கையால் நேரும் இந்த மரணத்தை, உன்னால் இழைக்கப்பட்ட குற்றமாக ஒருபோதும் மன்னர் யுதிஷ்டிரர் நினைக்கமாட்டார். இவ்வழியில் அவரிடம் பேசும் நீ, பிறகு அவரது பாதங்களை வழிபட்டு, இந்தப் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} மதிப்புமிக்க வார்த்தைகளைப் பேசி காயமடைந்த அவரது மரியாதைக்கு ஆறுதலளிப்பாயாக.(87) உன் அண்ணன் விவேகியாவார். எனவே, பாண்டுவின் அந்த அரசமகன் {யுதிஷ்டிரர்} உன்னிடம் ஒருபோதும் கோபப்படமாட்டார். பொய்ம்மையிலிருந்தும், உடன்பிறந்தவரைக் கொல்வதிலிருந்தும் விடுபடும் நீ, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு உற்சாகமாகச் சூதன் மகனான கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(88)
-------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -69ல் உள்ள சுலோகங்கள் : 88
ஆங்கிலத்தில் | In English |