Yudhishthira blessed Arjuna! | Karna-Parva-Section-71 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் உற்சாகமற்றிருப்பதைக் கண்டு அவனைத் தேற்றிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் பாதம்பணிந்து, மன்னிப்பைக் கோரிய அர்ஜுனன்; நெடுநேரம் அழுத சகோதரர்கள்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் பாதங்களில் வீழ்ந்து உறுதியேற்ற அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆசி வழங்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனை வாழ்த்தி ஆசி வழங்கிய யுதிஷ்டிரன்; கர்ணனை அன்றே கொல்வதாக மீண்டும் உறுதியளித்த அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் யுதிஷ்டிரனின் மகிழ்ச்சிகரமான இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், யதுக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசினான்.(1) எனினும், கிருஷ்ணனின் {கிருஷ்ணன் பேசும்} அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனிடம் அவ்வார்த்தைகளைச் சொன்னதால், இழைத்துவிட்ட சிறு பாவத்தைக் கருதி மிகவும் உற்சாகமற்றவனாக இருந்தான்.(2) அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அறத்தை நோற்று, உன் கூரிய வாளால் தர்மன் மகனை {யுதிஷ்டிரரை} நீ கொன்றிருந்தால், உன் நிலைமை என்னவாக இருக்கும்? மன்னரை “நீ” என்ற மட்டுமே சொன்னதற்குக் கூட, உன் இதயம் உற்சாகத்தை இழந்துவிட்டது.(3,4) ஓ பார்த்தா, நீ மன்னரைக் கொன்றிருந்தால், அதன் பிறகு என்ன செய்திருப்பாய்? அறநெறியை அறிந்து கொள்ள முடியாது {அது கடினம்}, அதிலும் குறிப்பாக மூட அறிவால் அஃது அறியப்படமாட்டாது.(5) பாவம் குறித்த அச்சத்தின் விளைவால், ஐயமில்லாமல், பெரும் துயரத்தையே நீ அடைந்திருப்பாய். உன் அண்ணனைக் கொன்றதன் விளைவால் பயங்கர நரகத்திலும் நீ மூழ்கியிருப்பாய்.(6)
அறச் செயல்பாடு கொண்டவரும், அறம் பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரும், குரு குலத்தின் தலைவருமான இந்த மன்னரை {யுதிஷ்டிரரை} இப்போது மனம் நிறையச் செய்வாயாக. என் விருப்பமும் இதுவே.(7) அர்ப்பணிப்பால் மன்னர் யுதிஷ்டிரரை மனம் நிறையச் செய்து, அவர் மகிழ்ச்சியை அடைந்ததும், சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதற்காக அவனது தேரை எதிர்த்து நாம் இருவரும் செல்வோம்.(8) ஓ1 கௌரவங்களை அளிப்பவனே, இன்று உன் கூரிய கணைகளால் கர்ணனைப் போரில் கொன்று, தர்மன் மகனுக்கு {யுதிஷ்டிரருக்குப்} பெரும் மகிழ்ச்சியை நீ அளிப்பாயாக.(9) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த நேரத்திற்குத் தகுந்ததென இதையே நான் நினைக்கிறேன். இதைச் செய்த பிறகே உன் காரியம் நிறைவேறும்” என்றான் {கிருஷ்ணன்}.(10) அப்போது வெட்கத்தை அடைந்த அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தலையால் மன்னர் யுதிஷ்டிரனின் பாதங்களைத் தொட்டான்.(11) மேலும் அவன் {அர்ஜுனன்} அந்தப் பாரதர்களின் தலைவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “என்னிடம் மனநிறைவு கொள்வீராக. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அறம் நோற்கும் விருப்பத்தாலும், பாவத்திற்கு அஞ்சியும் நான் சொன்ன அனைத்தையும் மன்னிப்பீராக {பொறுப்பீராக}” என்று மீண்டும் மீண்டும் சொன்னான்.(12)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, அழுதுகொண்டே தன் பாதத்தில் கிடப்பதைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியை எழச் செய்தான்.(13) பூமியின் தலைவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியைப் பாசத்துடன் தழுவிக் கொண்டு, உரக்க அழுதான்.(14) பெரும் காந்தியைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், நீண்ட நேரம் அழுத பிறகு, ஓ! ஏகாதிபதி, இறுதியாகத் தங்கள் துயரில் இருந்து விடுபட்டு, முன்பு போலவே உற்சாகத்தால் நிறைந்தனர்.(15) அப்போது மீண்டும் பாசத்துடன் தன் தம்பியைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகுந்த மன நிறைவை அடைந்து, தன் தம்பியான ஜயனை {அர்ஜுனனைப்} பாராட்டி, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, போரில் மிகுந்த கவனத்தோடு நான் முயன்றாலும் கூட, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கர்ணன் தன் கணைகளால் என் கவசம், கொடிமரம், வில், ஈட்டி, குதிரைகள் மற்றும் கணைகள் ஆகியவற்றை வெட்டினான்.(17) ஓ! பல்குனா {அர்ஜுனா}, போரில் அவனது {கர்ணனின்} அருஞ்செயல்களைக் கண்டும், அவற்றை நினைத்தும் துயரத்தால் நான் என் சக்திகளை இழந்தேன்.(18) இன்றைய போரில் நீ அவ்வீரனை {கர்ணனைக்} கொல்லவில்லையென்றால், நான் என் உயிர் மூச்சை விட்டுவிடுவேன். உயிரோடிருப்பதால் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)
இவ்வாறு சொல்லப்பட்ட விஜயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, “இன்றைய போரில் நான் கர்ணனைக் கொல்வேன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! பூமியின் தலைவரே , அல்லது அவனால் {கர்ணனால்} கொல்லப்பட்டுப் பூமியில் வீழ்வேன் என்று உண்மை மற்றும் உமது அருளின் பெயராலும், பீமர் மற்றும் இரட்டையர்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} பெயராலும் நான் உறுதியேற்கிறேன்.(20,21) உண்மையாக உறுதியேற்றபடியே நான் என் ஆயுதங்களைத் தொடுவேன்” என்று மறுமொழி கூறினான். மன்னரிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {அர்ஜுனன்}, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்},(22) “ஓ! கிருஷ்ணா, இன்றைய போரில் நான் கர்ணனைக் கொல்வதில் ஐயமில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் நுண்ணறிவின் துணையால் அந்தத் தீயவனின் படுகொலை நிச்சயம் நேரும்” என்றான் {அர்ஜுனன்}.(23)
இவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவனே, வலிமைமிக்கக் கர்ணனைக் கொல்வதற்கு நீ தகுந்தவனே.(24) ஓ! வலிமைமிக்கத் தேர்வீரா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, போரில் கர்ணனை நீ கொல்வாய் என்பதே எப்போதும் என் எண்ணமாக இருக்கிறது” என்றான்.(25) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மாதவன், மீண்டும் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரரே, பீபத்சுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலை அளித்து, தீய ஆன்மாவான கர்ணனைக் கொல்ல அவனுக்கு ஆணையிடுவதே உமக்குத் தகும்[1]. கர்ணனின் கணைகளால் நீர் பீடிக்கப்பட்டீர் என்பதைக் கேட்டே, ஓ! பாண்டுவின் மகனே, உமது நிலையை உறுதி செய்து கொள்வதற்காக நானும், இவனும் இங்கே வந்தோம்.(26, 27) ஓ! மன்னா, நீர் கொல்லப்படாதது நற்பேறாலேயே. நீர் பிடிபடாததும் நற்பேறாலேயே. ஓ! பாவமற்றவரே, உமது பீபத்சுவின் {அர்ஜுனனின்} வெற்றிக்கான வாழ்த்துகளைச் சொல்லி, அவனுக்கு ஆறுதலளித்து ஆசி கூறுவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(28)
[1] “மூத்தோரின் ஆணையானது, உறுதியான வெற்றிக்கு வழியாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன், “ஓ! பார்த்தா, ஓ! பீபத்சு, வாருங்கள், ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} வந்து என்னைத் தழுவிக் கொள்வாயாக. சொல்லத்தகுந்த நன்மையான வார்த்தைகளையே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய், நான் உன்னை மன்னித்தேன்.(29) ஓ! தனஞ்சயா, செல்வாயாக, சென்று கர்ணனைக் கொல்வாயாக என்று நான் ஆணையிடுகிறேன். ஓ! பார்த்தா, நான் உன்னிடம் சொன்ன கடுஞ்சொற்களுக்காக என்னிடம் நீ கோபங்கொள்ளாதே” என்றான் {யுதிஷ்டிரன்}.”(30)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா யுதிஷ்டிரனுக்குத் தலைவணங்கி, தன் அண்ணனின் பாதங்களைத் தன்னிரு கரங்களாலும் பற்றிக் கொண்டான்.(31) அவனை எழச் செய்து, நெருக்கமாக அவனைத் தழுவிக் கொண்ட மன்னன், அவனது தலையை முகர்ந்து, மீண்டும் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(32) “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, நான் உன்னால் பெரிதும் கௌரவிக்கப்பட்டேன். நீ எப்போதும் வெற்றியையும், மேன்மையையும் வெல்வாயாக {அடைவாயாக}” என்றான்.(33)
அர்ஜுனன், “இன்று வலிமையில் செருக்குற்ற ராதையின் மகனை {கர்ணனை} போரில் அடைந்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்த அம்மனிதனை, அவனது சொந்தங்கள் மற்றும் அவனைப் பின்தொடர்வோர் அனைவருடனும் சேர்த்து என் கணைகளால் கொல்வேன்.(34) தன் வில்லை வலுவாக வளைத்து, எவன் அவனது கணைகளால் உம்மைப் பீடித்தானோ, அந்தக் கர்ணன், தன் செயலுக்கான கசந்த கனியை இன்று அடைவான்.(35) ஓ! பூமியின் தலைவரே, கர்ணனைக் கொன்ற பிறகு, உமக்குப் பின்னால் நடந்து உம்மைக் கௌரவிக்க, அந்தப் பயங்கரப் போரில் இருந்து இன்று நான் திரும்பிவருவேன்.(36) கர்ணனைக் கொல்லாமல், இன்று அந்தப் பெரும்போரில் இருந்து நான் திரும்பேன். ஓ! அண்டத்தின் தலைவா, உமது பாதங்களைத் தொட்டு, நான் இந்த உறுதியை ஏற்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}”.(37)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்தக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) யுதிஷ்டிரன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மிக முக்கியமான இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(38) “அழியாப் புகழையும், உன் விருப்பத்திற்குத் தகுந்தபடியே வெற்றி, சக்தி மற்றும் உன் எதிரிகளின் அழிவு, வாழ்நாள் ஆகியவற்றை அடைவாயாக. தேவர்கள் உனக்குச் செழிப்பை அருளட்டும். என்னால் விரும்பப்பட்டும் அளவுக்கு நீ இவை அனைத்தையும் அடைவாயாக. தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளும்பொருட்டு விருத்திரனைக் கொன்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே, {கர்ணனைக் கொல்வதற்காகப்} போரிட நீ விரைந்து செல்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(39)
ஆங்கிலத்தில் | In English |