Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தன் தேரை ஆயத்தம் செய்யும்படி கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; தேரை ஆயத்தம் செய்து தகவல் தெரிவித்த தாருகன்; கர்ணனுடன் போரிடப் புறப்பட்ட அர்ஜுனனுக்கு முன்பு தோன்றிய நற்சகுனங்கள்; கவலைநிறைந்திருந்த அர்ஜுனனிடம், அவனது திறன்களை வியந்து சொன்ன கிருஷ்ணன், கர்ணனின் திறன்களையும் சொல்லி, அவனைக் கொல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உற்சாகம் நிறைந்த இதயத்தோடு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நிறைவு செய்து, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லத் தயாரான பார்த்தன் {அர்ஜுனன்}, கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “என் தேர் மீண்டும் ஆயத்தம் செய்யப்படட்டும், அதனோடு என் முதன்மையான குதிரைகள் பூட்டப்படட்டும். அந்தப் பெரும் வாகனத்தில் அனைத்து வகை ஆயுதங்களும் வைக்கப்படட்டும்.(2) குதிரைகள் தரையில் புரண்டிருக்கின்றன. குதிரைகளை நன்கறிந்தோரால் அவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தேரின் பிற கருவிகளுடன் கூடிய அவை, தங்கள் சேணங்கள் பூட்டப்பட்டு வேகமாகக் கொண்டு வரப்படட்டும்.(3) ஓ! கோவிந்தா, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரைந்து புறப்படுவாயாக” என்று சொன்னான். ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கிருஷ்ணன், தாருகனை அழைத்து, “பாரதக் குலத்தின் தலைவனும், வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன் சொன்னவை அனைத்தையும் செய்வாயாக” என்றான்.(4,5)
கிருஷ்ணனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தாருகன், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, புலித் தோல்களால் மறைக்கப்பட்டதும், எதிரிகள் அனைவரையும் எப்போதும் எரிக்கவல்லதுமான அந்தத் தேரில் அக்குதிரைகளைப் பூட்டினான்.(6) பிறகு அவன் {தாருகன்}, அவ்வாகனம் ஆயத்தம் செய்யப்பட்ட செய்தியை உயர் ஆன்ம பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான். உயர் ஆன்ம தாருகனால் ஆயத்தம் செய்யப்பட்ட தேரைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்},(7) யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பிராமணர்களைத் தன் நன்மைக்கான சடங்குகளைச் செய்யவும், தனக்கு ஆசி கூறவும் செய்து, அந்த அற்புத வாகனத்தில் ஏறினான்.(8) பெரும் விவேகியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அவனுக்கு ஆசி கூறினான். இதன் பிறகு பல்குனன், கர்ணனின் தேரை நோக்கிச் சென்றான்.(9) அந்தப் பெரும் வில்லாளி இவ்வாறு செல்வதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஏற்கனவே அந்த உயர் ஆன்ம பாண்டவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதின.(10)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திசைப்புள்ளிகள் அனைத்தும் அமைதியடைந்தன. ஓ! மன்னா, மீன்கொத்திப் பறவைகள், கிளிகள் மற்றும் நாரைகளும் அந்தப் பாண்டுவின் மகனை வலம் வந்தன.(11) அழகியவையும், மங்கலகரமானவையும், “புங் {பும்}” என்றழைக்கப்பட்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் (சரியான நேரத்தில் தோன்றி) அர்ஜுனனை அந்தப் போரில் பெரும் வேகத்தை வெளிப்படுத்த செய்யும் வகையில் அவனைச் சுற்றி உற்சாகமாக இரைந்தன. பயங்கரமான கங்கங்கள், கழுகுகள், நாரைகள், பருந்துகள், அண்டங்காக்கைகள் ஆகியன, உணவு இருப்பால் ஈர்க்கப்பட்டடு, அவனது தேருக்கு முன்பாகச் சென்று, மங்கலச் சகுனங்களை வெளிப்படுத்தும் வகையில், பகைவரின் படை அழியப்போவதையும், கர்ணனின் கொலையையும் முன்னறிவித்தன. பார்த்தன் சென்று கொண்டிருந்த அதே வேளையில், அவனது உடலானது வேர்வையால் மறைக்கப்பட்டது.(12-15) தன் சபதத்தைத் தான் நிறைவேற்றப் போவது எவ்வாறு என்ற கவலை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அதிகமானது. செல்லும்போதே பார்த்தன் கவலையால் நிறைவதைக் கண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளின் பேசினான்”.(16)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! காண்டீவதாரியே, இந்த உன் வில்லால் நீ யாரையெல்லாம் வென்றாயோ, அவர்களை வெல்ல இங்கே வேறொருவனும் இல்லை.(17) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக்கொண்ட பல வீரர்கள், வீரனான உன்னோடு போரில் மோதி உயர்ந்த உலகங்களை அடைந்ததை நாங்கள் கண்டோம்.(18) ஓ! பலமிக்கவனே, துரோணர், பீஷ்மர், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் தலைவர் சுதக்ஷிணன், வலிமையும் சக்தியும் கொண்ட சுருதாயுதன் மற்றும் அச்யுதாயுதன் ஆகியோருடன் மோதிய பிறகு உனக்கு இணையில்லாத எவனால் {உன்னைத் தவிர வேறு எவனால்} நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்?(19,20) தெய்வீக ஆயுதங்கள், கரநளினம், வலிமை ஆகியவற்றைக் கொண்டவனான நீ போரில் மலைப்படையாதவனாக {மயங்கி வீழாதவனாக} இருக்கிறாய். அறிவால் உண்டான பணிவைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய்.(21)
விளைவை ஏற்படுத்தும் வகையில் உன்னால் தாக்க முடிகிறது. ஓ! அர்ஜுனா, இலக்கில் துல்லியமும், சமயத்திற்கு ஏற்ற தேர்வு செய்யும் ஆற்றலையும் நீ கொண்டிருக்கிறாய். தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரோடு சேர்த்து அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத்தகுந்தவனாகவும் நீ இருக்கிறாய்.(22) ஓ! பார்த்தா, போரில் உனக்கு இணையான வேறு மனிதப் போர் வீரன் எவனும் இவ்வுலகில் கிடையாது. வில் தரித்துப் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரிலும், ஏன் தேவர்களுக்கு மத்தியிலும் கூட, உனக்கு இணையான ஒருவனை நான் கண்டதோ, கேட்டதோ கிடையாது. ஓ பார்த்தா, அனைத்து உயிரினங்களையும் படைத்த பிரம்மனே நீ எதைக் கொண்டு போரிடுகிறாயோ, அந்தப் பெரும் வில்லான கண்டீவத்தையும் படைத்தான். இந்தக் காரணத்தாலும், உனக்கு இணையாக வேறு எவனும் இல்லை. எனினும், ஓ! பார்த்தா, உனக்கு நன்மையானதையும் நான் சொல்ல வேண்டும்.(23-25)
ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, போர்க்கள ரத்தினமான கர்ணனை நீ அலட்சியம் செய்யாதே. கர்ணன் வலிமைமிக்கவனாவான். அவன் செருக்குமிக்கவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமாவான். அவன் ஒரு மஹாரதன்.(26) அவன் (போர் முறைகளில்) சாதித்தவனும், போர் முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமாவான். இடத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமான அனைத்தையும் அவன் நன்கறிவான். இன்னும் அதிகம் சொல்ல என்ன இருக்கிறது? ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, சுருக்கமாகக் கேட்பாயாக.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை உனக்கு இணையானவனாக, அல்லது ஒருவேளை உனக்கு மேம்பட்டவனாக நான் கருதுகிறேன். இந்தப் பெரும்போரில், பெரும் கவனத்தோடும், உறுதியோடும் நீ அவனைக் கொல்ல வேண்டும்.(28) சக்தியில் அவன் அக்னிக்கு இணையானவன். வேகத்தில் அவன் காற்றைப் போல மூர்க்கமானவன். கோபத்தில் அவன் அந்தகனுக்கே ஒப்பானவன். வலிமையுடன் கூடிய அவன், உடலமைப்பால் சிங்கத்திற்கு ஒப்பாக இருக்கிறான்.(29) அவன் எட்டு ரத்னிகள்[1] அளவுக்கு உடற்கட்டைக் கொண்டவனாக இருக்கிறான். அவனது கரங்கள் பருத்தவையாக இருக்கின்றன. அவனது மார்பு அகன்றதாக இருக்கிறது. அவன் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். அவன் உணர்ச்சிமிக்கவனாக இருக்கிறான். அவன் வீரனாக இருக்கிறான். மேலும் அவன் வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறான். அவன் மிகுந்த அழகனாக இருக்கிறான்.(30)
[1] “கை முட்டியில் இருந்து கைவிரல் முட்டி வரை உள்ள ஒருவகை முழ அளவே ரத்னி என்பதாகும். ரத்னி என்பது 21 கட்டைவிரல்களின் பருமன் அளவுக்கு இணையானதாகச் சொல்லப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், ஒரு ரத்னி என்பது 21 அங்குல நீளம் என்று விளக்கப்பட்டு, கர்ணன் 8 ரத்னி உயரம் கொண்டவன் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது 168 அங்குல உயரம். அதாவது பதினான்கு அடி உயரம். மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அடைப்புக்குறிக்குள் 168 அங்குலம் என்று விளக்கப்பட்டிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் மட்டும் வேறுவிதமாகக் கர்ணனின் மார்பளவு 8 ரத்னி என்றும் அது 18 அங்குலம் அகலம் கொண்டதென்றும் விளக்கப்பட்டிருக்கிறது.
போர்வீரனுக்குரிய அனைத்தையும் கொண்ட அவன் நண்பர்களின் அச்சங்களைப் போக்குபவனாக இருக்கிறான். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நன்மையில் ஈடுபடும் அவன் {கர்ணன்}, பாண்டுவின் மகன்களை வெறுக்கிறான்.(31) உன்னைத் தவிர, வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட ராதையின் மகனைக் கொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, அந்தச் சூதன் மகனை {கர்ணனை} இன்று கொல்வாயாக.(32) இரத்தமும், சதையும் கொண்ட எவனாலும் {எந்த மனிதனாலும்}, ஏன் பெருங்கவனத்துடன் போரிடும் தேவர்களாலும், ஒன்றாகத் திரண்டு போரிட வரும் (மூவுலகங்களின்) போர்வீரர்கள் அனைவராலும் கூட அந்தத் தேர்வீரனை வெல்ல முடியாது.(33) பாண்டவர்களிடம் அவன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்டவனாகவும், பாவம்நிறைந்த நடத்தை கொண்டவனாகவும், கொடூரனாகவும், தீய புத்தி {எண்ணம்} கொண்டவனாகவுமே நடந்திருக்கிறான். பாண்டு மகன்களுடனான தன் சச்சரவில், தன் சொந்த நலன்கள் பாதிக்கப்படுவதையும் கருதிப்பாராமலேயே அவன் செயல்படுகிறான். எனவே, அந்தக் கர்ணனைக் கொன்று, உன் நோக்கத்தை இன்று நிறைவேற்றுவாயாக.(34) மரணத்தின் அருகாமையில் இருக்கும் முதன்மையான தேர்வீரனான அந்தச் சூதன் மகனை இன்று யமனின் முன்னிலைக்கு அனுப்புவாயாக. உண்மையில், தேர்வீரர்களில் முதல்வனான அந்தச் சூதன் மகனைக் கொன்று, நீதிமானான யுதிஷ்டிரரிடம் நீ கொண்டுள்ள அன்பைக் காட்டுவாயாக.(35)
ஓ! பார்த்தா, தேவர்களாலும், அசுரர்களாலும் தடுக்கப்பட முடியாத உன் ஆற்றலை நான் உண்மையாக அறிவேன். தீய ஆன்மா கொண்ட அந்தச் சூதன் மகன், செருக்கின் மிகுதியால் எப்போதும் பாண்டுவின் மகன்களை அவமதித்தே வருகிறான்.(36) ஓ! தனஞ்சயா, இழிந்தவனான துரியோதனன், எந்த மனிதனால் தன்னை வீரனாகக் கருதிக் கொள்கிறானோ, (அந்தப்) பாவம் நிறைந்த மனிதர்கள் அனைவருக்கும் எவன் வேராக இருக்கிறானோ, அந்தச் சூதன் மகனை {கர்ணனை} இன்று நீ கொல்வாயாக.(37) ஓ! தனஞ்சயா, மனிதர்களில் புலியும், சுறுசுறுப்பு மற்றும் செருக்கு மிக்கவனும், தன் நாவையே வாளாகவும், வாயையே வில்லாகவும், பற்களையே கணைகளாகவும் கொண்டவனுமான அந்தக் கர்ணனைக் கொல்வாயாக.(38) உன்னில் இருக்கும் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றைப் பொறுத்தவரை உன்னை நான் நன்றாக அறிவேன். யானையொன்றைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல, நீ துணிச்சல்மிக்கக் கர்ணனைப் போரில் கொல்வாயாக.(39) ஓ பார்த்தா, எவன் வைகர்த்தனன் என்று வேறு பெயரால் அழைக்கப்படுகிறானோ, எவனுடைய சக்தியால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உன் சக்தியை {உங்களை} அவமதிக்கிறானோ, அந்தக் கர்ணனை இன்று நீ கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(40)
கர்ண பர்வம் பகுதி -72ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |