அனுமன் ஜெயந்தியில் (28.12.2016 அன்று) தொடங்கப்பட்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு முடிய இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. கர்ண பர்வத்தை மொழிபெயர்க்க கிட்டத்தட்ட 145 நாட்கள் பிடித்திருக்கின்றன. இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பை ஆரம்பிக்கும்போதே சற்றுப் பயம்தான். மொழிபெயர்க்கத் தொடங்கியதில் இருந்தே வாரத்திற்கு, ஒருவர் அல்லது இருவர், “நினைச்சதெல்லாம் எழுதாதீங்க?”, “கர்ணனைக் குறைச்சு எழுதுனா மரியாதை கெட்டுடும்” என்று நிச்சயம் சொல்லிவிடுவார்கள். அவர்களுக்குப் பதிலளித்துக் கொண்டு நேர விரயம், சில குடும்ப விழாக்கள் மற்றும் தொழில் சம்பந்தமான சில முக்கியக் காரியங்கள் ஆகியவற்றுக்கு எடுத்துக் கொண்ட நாட்கள் என நாட்கள் இவ்வளவு தள்ளிப் போய்விட்டன. இந்தப் பர்வம் நெடுகவே, இன்று முடித்துவிடலாம் என்று நினைத்து, ஒரு பதிவையும் முடிக்க முடிந்ததே கிடையாது. கர்ணன் அனுமதித்தால்தான் உண்டு என்ற நிலை. கர்ணன் கொடைவள்ளல் என்ற பெயரெடுத்தவன், அதனாலோயென்னவோ எனக்கு வேலைகளை நிறைய அளித்து, கொஞ்சம் பொருளீட்டவும் வைத்து, இந்தப் பர்வம் முடிவதற்கு இவ்வளவு நாட்களைக் கடத்திவிட்டான் போலும்.
கர்ணனின் ஈகை “கர்ண பர்வத்தை” மொழிபெயர்க்க ஆரம்பித்ததுமே தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் “தென்றல்” ஜனவரி மாத இதழில் என் நேர்காணல் ஒன்று வெளி வந்தது. திரு.அரவிந்தன் சுவாமிநாதன் அவர்கள் அதைத் தொகுத்திருந்தார். முழுமஹாபாரதத்திற்கான வாசகப் பரப்பு அமெரிக்காவிலும் வளர்ந்தது. இன்று நமது வலைத்தளத்தை ஒரு நாளைக்கு 4000 பேர் பார்க்கிறார்கள் என்றால், அதில் 1800 பார்வைகள் அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. இதற்காகத் தென்றல் இதழுக்கும், திரு. அரவிந்தன் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகூற வேண்டும். ஜனவரி மாத இறுதியில், அலைபேசியில், பழைய பதிவுகளைத் தேடிப் படிப்பதற்காகப் பொருளடக்கச் சுட்டி ஒன்றை தயார் செய்தேன். அதன் மூலமும் மகாபாரதத்தை மொபைலில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
முழுமஹாபாரதத்தின் ஒவ்வொரு அடுத்த நகர்விலும் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் பங்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. இப்போதும் இல்லாமல் போகுமா? அதிலும் கர்ணன் விட்டுவிடுவானா? சென்னை, வடபழனியில் நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நான்கு மணிநேரம் வெண்முரசு குறித்தும், முழுமஹாபாரதம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பாக மொழிபெயர்ப்புக்கு உதவும் விதமாக ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது, ஜெயமோகன் அவர்களின் மகனையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான், வண்ணதாசனுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்தித்தித்திருந்த மணிமாறன் அவர்கள் என் வங்கிக் கணக்கில் நன்கொடையாகப் பணம் அனுப்பியிருந்தார்.
இப்படியெல்லாம் உற்சாகங்கள் கிடைத்தாலும், என் வரைகலைத் தொழிலில் வேலைப்பளு அதிகரித்துவிட்டதும், ஏப்ரல் மாதத்தில் தங்கையின் திருமணத்தை நிச்சயித்திருந்ததாலும், மொழிபெயர்ப்பதில் சுணக்கமே இருந்தது. முழுமஹாபாரதம் முகநூல் பக்கத்தில், “ஏன் இவ்வளவு மெதுவாக மொழிபெயர்க்கிறீர்கள்” என்று வாசகர் ஒருவர் கேட்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பின் வேகம் குறைந்துவிட்டது. ஏப்ரல் 24க்குப் பிறகுதான் மொழிபெயர்ப்பில் கொஞ்சம் வேகம் கூடியது.
பீஷ்ம பர்வத்தில், பகவத் கீதை வரும் பகுதியில் மட்டும் ISKONன் Bhagavad Gita - As it is என்ற பதிப்பில் இருந்து சுலோக எண்களை எடுத்துப் பொருத்தியிருந்தேன். அதன்பிறகு துரோண பர்வம் மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டிருக்கும்போது, கங்குலியின் இரண்டாம் பதிப்புக் கிடைக்கப் பெற்றேன். அதில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சுலோக எண்களும் இருந்தன. அதனால், துரோண பர்வத்தின் 151வது பகுதியில் இருந்து சுலோக எண்களைக் குறித்து வந்தேன். கங்குலியின் இரண்டாம் பதிப்பிலும், பீஷ்ம பர்வத்தில் இருந்தே சுலோக எண்கள் இருக்கின்றன. அதற்கு முந்தைய பர்வங்களில் சுலோக எண்கள் இல்லாமலேயே இருக்கின்றன. கர்ண பர்வம் 96 பகுதிகளைக் கொண்டது. இதில் மொத்தம் 4,887 சுலோகங்கள் இருக்கின்றன. சுலோக எண்களுடன் முழுமையாக நிறைவடைந்திருப்பது இந்தக் கர்ண பர்வம் மட்டுமே. மஹாபாரதத்தில் “ஹரிவம்சத்தை” சேர்க்காமல் மொத்தம் 84829 சுலோகங்கள் உண்டு. இதில் இந்தக் கர்ண பர்வத்தின் முடிவுவரை 51,564 சுலோகங்களைக் கடந்திருக்கிறோம். ஆக இதுவரை நாம் மஹாபாரதத்தில் 60% பகுதியைக் கடந்திருக்கிறோம் என்று சொல்லலாம். இனிவருவதில் பனிரெண்டாம் பர்வமான சாந்தி பர்வமே மிகப் பெரியது. மொத்தம் 14,725 சுலோகங்கள் அதில் மட்டுமே அடங்கும். அதன் பிறகு 13வதாக வரும் அனுசாசன பர்வத்தில் 8000 சுலோகங்கள் உண்டு. இவற்றைத் தவிர்த்த இனி வரப்போகும் பிற பர்வங்கள் அளவில் மிகச் சிறியனவே.
இதற்கிடையில், முழுமஹாபாரதத்தை அச்சில் கொண்டு வர ஒரு பதிப்பகம் முன் வந்திருக்கிறது. ஆதிபர்வத்தை மட்டுமல்ல, இதுவரை மொழிபெயர்த்திருக்கும் 8 பர்வங்களையும் மொத்தமாக அச்சில் கொண்டுவந்துவிடலாம் என்று பதிப்பகத்தார் சொல்கிறார்கள். நான் அவர்களிடம் இந்தச் சுலோக எண்கள் குறிப்பதைக் குறித்துச் சொன்னேன். “அனைத்து பர்வங்களும் ஸ்லோக எண்களுடன் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்று பதிப்பகத்தார் கருதுகின்றனர்; நானும் அவ்வாறே கருதுகிறேன். எனவே, இருவரும் பேசி ஒரு முடிவை எட்டியிருக்கிறோம். அதாவது, கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்ததும், மேற்கொண்டு சல்லிய பர்வத்தை மொழிபெயர்க்காமல், ஆதிபர்வத்திலிருந்து தொடங்கித் துரோண பர்வம் வரை சுலோக எண்களைக் குறித்து அச்சுக்குக் கொடுப்பதென்றும், அதன் பிறகு சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம் என்றும் நினைத்திருக்கிறோம். கங்குலியின் பதிப்பில் பீஷ்ம பர்வத்தில் இருந்துதான் சுலோக எண்கள் ஆரம்பிக்கின்றன என்பதால், ஆதிபர்வத்தில் இருந்து, உத்யோக பர்வம் வரை மன்மதநாததத்தரின் ஆங்கிலப்பதிப்பை ஒப்பிட்டு சுலோக எண்களைக் குறிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.
இதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று பதிப்பகத்தார் கேட்டனர். குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகலாம் என்றேன். முழுநேரம் இதையே செய்தால் விரைவாக முடிக்கலாமே என்றார்கள். முழுநேரம் இதையே கவனித்தால் என் தேவைகளையும், என் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையும் என்னால் பூர்த்திச் செய்ய முடியாதாகையால், என்னால் அவ்வாறு செய்ய இயலாது என்று சொல்லியிருக்கிறேன். சுலோக எண்களைக் குறிப்பதிலாவது வேறு எவரையாவது ஈடுபடுத்தலாமா என்றும் ஆலோசித்தோம். பிழைகள் திருத்தப்பட வேண்டும் என்பதாலும், சில விடுபட்ட வரிகளையும் சேர்க்க வேண்டும் என்பதாலும் அது கிட்டத்தட்ட இயலாதென்றும், நடைமுறைக்குச் சரியாக வராது என்றும் நான் நினைக்கிறேன். சல்லிய பர்வத்தை உடனே மொழிபெயர்க்க வேண்டும் என்றும் ஆவலிருக்கிறது. சுலோக எண்கள் சேர்ப்பு, பிழைதிருத்தம் ஆகியவற்றுடன் சேர்த்து மொழிபெயர்ப்பையும் செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். பதிப்பகத்தாரின் ஆலோசனையையும் இதில் கேட்க வேண்டும் என்றிருக்கிறேன். பரமனருள் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே இக்காரியம் நடக்கும்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களும் உடன் இருந்தார். கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பு முடிந்த நாளன்றே வீடு தேடி வந்த சடையப்பராக ரூ.9,600/- அளித்தார். இந்த ஐந்து வருடங்களில் 8 பர்வ மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து இதுவரை ரூ.1,32,300/- கொடுத்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்புப்பணி நெடுகிலும் நிதியையும், விலைமதிப்பில்லா தன் உழைப்பையும் தந்திருக்கிறார் நண்பர் ஜெயவேலன் அவர்கள். கடைசிப் பதிவையும் திருத்திவிட்டே அன்றும் வந்திருந்தார். சோம்பல் ஏற்படும் வேளைகளில் இவரது அர்ப்பணிப்பின் முன் கூனிக் குறுகி நிற்பதாகவே நான் எப்போதும் உணர்கிறேன். உற்சாகம் வேண்டுமென்றால் குளூகோஸ் தேவையில்லை நண்பர் ஜெயவேலனின் வார்த்தை போதும். துரியோதனனுக்குக் கர்ணனைப் போலவும், பார்த்தனுக்குக் கண்ணனைப் போலவும் எப்போதும் அவர் என் உடன் இருப்பதே பரமன் எனக்களித்திருக்கும் பெரிய பலம்தான்.
கர்ண பர்வத்தின் இறுதியில் சொல்லப்படும் பலன்களில், கர்ண பர்வத்தைப் படிப்பது ஒரு வேள்வி செய்த பலனைக் கொடுக்கவல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மையில், கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பால் கர்ணன் எனக்களித்திருக்கும் கொடைகள் ஏராளமே.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
22.5.2017
திருவொற்றியூர்