Showing posts with label சுவடுகளைத் தேடி. Show all posts
Showing posts with label சுவடுகளைத் தேடி. Show all posts

Thursday, August 08, 2019

அநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி2018 டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று மஹாபாரதத்தின் பதிமூன்றாம் பர்வமான அநுசாஸன பர்வத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மொத்தம் 168 பகுதிகளைக் கொண்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு 2019 ஜூலை மாதம் 27ம் தேதி அன்று நிறைவடைந்தது. மொத்தம் 221 நாட்கள் ஆகியிருக்கின்றன. மஹாபாரதத்திலேயே கடினமான பகுதி சாந்தி பர்வம் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மையில் அநுசாஸன பர்வம் சற்றும் அதற்குச் சளைத்ததல்ல. இது, மொத்த மகாபாரதத்தில் அளவில் மூன்றாவது பெரிய பர்வமாகும். அளவில் வன பர்வத்திற்குச் சற்றே குறைந்ததாகும்.

Wednesday, December 19, 2018

சாந்தி பர்வச் சுவடுகளைத் தேடி!

பனிரெண்டாவது பர்வமான சாந்தி பர்வம் நிறைவுபெறும் இவ்வேளையில் முழுமஹாபாரதத்தில் ஐந்தில் நான்கு பாகம் நிறைவு பெறுகிறது. சென்ற வருடம் தீபாவளியன்று தொடங்கப்பட்ட சாந்தி பர்வத்தின் மொழிபெயர்ப்பு இப்போது நிறைவடைகிறது. 366 பகுதிகளில் 13,682 ஸ்லோகங்களைக் கொண்ட சாந்தி பர்வத்தை நிறைவு செய்ய 422 நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது வரை மொழிபெயர்த்திருக்கும் பர்வங்களில் ஒவ்வொரு பகுதிக்குப் சராசரியாக ஆன காலத்தை விடச் சாந்தி பர்வப் பகுதிகள் அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. இஃது இப்பகுதிகளை மொழிபெயர்ப்பதில் உள்ள கடினத்தை எடுத்துக் காட்டும்.

Wednesday, October 18, 2017

சௌப்திக, ஸ்திரீ பர்வச் சுவடுகளைத் தேடி!


மஹாபாரதத்தின் பதினெட்டுப் பர்வங்களில், பதினோரு பர்வங்கள் நிறைவடைந்திருக்கின்றன. மீதம் எஞ்சியிருக்கும் பர்வங்கள் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கே  இருக்கும். விளையாட்டாகத் தொடங்கிய இப்பணி இவ்வளவு தொலைவுக்கு இடைவெளியேதுமின்றிச் சீராக நடந்து கொண்டிருப்பது பரமன் செயலே.

Saturday, September 30, 2017

சல்லிய பர்வச் சுவடுகளைத் தேடி!


ஜுன் 7, வைகாசி விசாகத்தன்று தொடங்கப்பட்ட சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பு செப்டம்பர் 19ல் நிறைவடைந்திருக்கிறது. சல்லிய பர்வம் முடித்தது செப்டம்பர் 19ம் தேதிதான் என்றாலும், நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் செப்டம்பர் 16ம் தேதியே வந்து, உடல்நிலை சரியில்லாமல் உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ரூ.6,500/- கொடுத்துச் சென்றார். 65 பகுதிகளைக் கொண்ட சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பை நிறைவு செய்ய 105 நாட்கள் ஆகியிருக்கின்றன. இதற்கு, எடுத்துக் கொண்ட நாட்கள் மிக அதிகம் என்றாலும், இடையிடையே ஆதிபர்வத்தில் பிழைதிருத்தங்களையும், சுலோக எண்கள் சேர்ப்பையும் செய்ய முடிந்தது.

Tuesday, May 23, 2017

கர்ண பர்வச் சுவடுகளைத் தேடி!


அனுமன் ஜெயந்தியில் (28.12.2016 அன்று) தொடங்கப்பட்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு முடிய இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. கர்ண பர்வத்தை மொழிபெயர்க்க கிட்டத்தட்ட 145 நாட்கள் பிடித்திருக்கின்றன. இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பை ஆரம்பிக்கும்போதே சற்றுப் பயம்தான். மொழிபெயர்க்கத் தொடங்கியதில் இருந்தே வாரத்திற்கு, ஒருவர் அல்லது இருவர், “நினைச்சதெல்லாம் எழுதாதீங்க?”, “கர்ணனைக் குறைச்சு எழுதுனா மரியாதை கெட்டுடும்” என்று நிச்சயம் சொல்லிவிடுவார்கள். அவர்களுக்குப் பதிலளித்துக் கொண்டு நேர விரயம், சில குடும்ப விழாக்கள் மற்றும் தொழில் சம்பந்தமான சில முக்கியக் காரியங்கள் ஆகியவற்றுக்கு எடுத்துக் கொண்ட நாட்கள் என நாட்கள் இவ்வளவு தள்ளிப் போய்விட்டன. இந்தப் பர்வம் நெடுகவே, இன்று முடித்துவிடலாம் என்று நினைத்து, ஒரு பதிவையும் முடிக்க முடிந்ததே கிடையாது. கர்ணன் அனுமதித்தால்தான் உண்டு என்ற நிலை. கர்ணன் கொடைவள்ளல் என்ற பெயரெடுத்தவன், அதனாலோயென்னவோ எனக்கு வேலைகளை நிறைய அளித்து, கொஞ்சம் பொருளீட்டவும் வைத்து, இந்தப் பர்வம் முடிவதற்கு இவ்வளவு நாட்களைக் கடத்திவிட்டான் போலும்.

Wednesday, December 21, 2016

துரோண பர்வச் சுவடுகளைத் தேடி!“ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நல்லோருடன் நல்லோர் கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகளின் சொல்கின்றனர்”
- கர்ணனிடம் பீஷ்மர், துரோண பர்வம் பகுதி 4

துரோண வதத்தை மொழிபெயர்த்த போது, நான் நன்கறிந்த ஒரு மனிதரை இழந்தது போன்ற உணர்வை துரோணாச்சாரியரின் மறைவு எனக்குத் தந்தது. கதைகள், வரலாறுகள், புராணங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போது, அவற்றில் வரும் கதாப்பாத்திரங்களோடு ஒன்றி, அவர்களை நம்மில் ஒருவராக எண்ணுவது மானுட மனத்தின் இயல்பே. அவ்வகையில் துரோணர், மகாபாரதக் கால இளவரசர்களுக்கு மட்டுமல்ல; காலங்கள் நெடுகத் தோன்றிய மொத்த பாரத மனங்களுக்கும் ஆசானே என்றால் அது மிகையல்ல. துரோணரின் வதம் முடிந்த சில நாட்களுக்குள் நேர்ந்த திரு.சோ ராமசாமி அவர்களின் மறைவும், ஓர் ஆசானை இழந்த வலியையே தந்தது. கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதத்தைப் படிக்கத்தூண்டியது, திரு.சோ ராமசாமி அவர்கள் எழுதிய “மஹாபாரதம் பேசுகிறது” புத்தகமே. அதனுடன் ஒன்றிப்போனவனாக இருப்பினும், இவ்வளவு நாளும் அவரோடு பேச வேண்டும் என்று கூட நான் நினைத்ததில்லை. நல்லோனாகி, மேற்கண்ட பீஷ்மரின் சொற்களை இனியாவது என் வாழ்நாளில் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.


இந்த ஞாயிறன்று துரோண பர்வம் பகுதி 203-ஐ மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் வந்தார். மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்ச நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். ரூ.2000/- தாள்கள் சிலவற்றை எடுத்தார். “நாடெல்லாம் பணப்பற்றாக்குறைனு சொல்றாங்க. கஷ்டப்பட்டு எடுத்திருப்பீங்களே” என்று கேட்டேன். “ரெண்டு வாரத்துக்கு முன்ன இருந்தே ஒவ்வொரு நாளும் ஏடிஎம்க்குப் போய் 2000, 2000மா எடுத்தேன்” என்றார். “நேரடியா பேங்குக்கே போனா மொத்தமா எடுக்க முடியாதா?” என்று கேட்டேன். “எடுக்கலாமா இருக்கும். இருந்தாலும் யாருங்க அவ்வளவு பெரிய கியூவுல நிப்பாங்க?” என்றார். “ஏடிஎம்லையும் பெரிய கியூதானே நிக்குது?” என்று கேட்டேன். “அந்தக் கியூவுக்கு இந்தக் கியூ எவ்வளவோ பரவாயில்லைங்க” என்று சொல்லிக் கொண்டே ரூ.20,400/-ஐ என்னிடம் கொடுத்தார். துரோண பர்வத்தின் தொடக்கத்தில் பீஷ்மர், “ஆறுகளுக்குப் பெருங்கடலும், ஒளிக்கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும், விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் இருப்பது போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக” என்று கர்ணனிடம் சொல்வதாக இருக்கிறது. அந்த வாக்கியத்திற்குச் சாலப் பொருந்துபவர் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் என்றால் அது மிகையல்ல. இன்று {21.12.2016} அவருடைய பிறந்தநாள். வாழ்த்துகள் நண்பரே.

ஆதிபர்வத்தின் முதல் பகுதியான அனுக்ரமானிகா உபபர்வத்தில், மகாபாரதம் மரமென்றால், துரோண பர்வம் அதன் இலைகளைப் போன்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஐந்து நாள் போரை எவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் பர்வம் என்பது பிரம்மிப்பையே ஏற்படுத்துகிறது. போர்க்களத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடந்த தனிப்போர்களையும், ஒவ்வொரு போராளியின் உணர்வுகளையும் நுணுக்கமாகச் சொல்கிறது. ஒரு முறை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, “அப்பாடா, கடைசில கொன்னுட்டீங்களா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அருகில் இருந்து அப்படி ஆச்சரியமடைந்தது என் மனைவி லட்சுமி என்பதை அறிந்து, “ஏன்? என்னாச்சு?” என்றேன். “ஜெயத்ரதனக் கொல்லப்போறேன்னு சொல்லிக் கிளம்புன அர்ஜுனன், போறான், போறான் போயிகிட்டே இருக்கானேன்னு நினைச்சேன். கடைசியா கொன்னிட்டீங்களே?” என்றாள். அவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஜெயத்ரதவத பர்வம். அதுபோலவே துரோண பர்வம் முழுமையும்.

துரோண பர்வத்தில் 170 பகுதிகளும், 8,909 சுலோகங்களும் உள்ளன என்றும் ஆதிபர்வத்தின் சங்கிரக உபபர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது மொழிபெயர்ப்பில் இந்தப் பர்வம் 204 பகுதிகளைக் கொண்டிருக்கிறது, சுலோகங்களை இன்னும் எண்ணவில்லை. கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கின்றன. துரோண பர்வத்தின் பகுதி 131ல் இருந்து, ஒவ்வொரு பகுதியிலும் சுலோக எண்கள் குறிக்கப்படுகின்றன. Sacred Texts வலைத்தளத்தில் உள்ள கங்குலியில் பதிப்பை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு வலைத்தளத்தில் கங்குலியின் புத்தகமே பிடிஎப் கோப்பாகக் கிடைத்தது. இரண்டாம் பதிப்பான அப்புத்தகத்தில் சுலோக எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. சுலோக எண்களுடன் இருப்பது, பிற்காலத்தில் மூலத்துடன் ஒப்பு நோக்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக, அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடியே சுலோக எண்களைக் குறித்து வருகிறேன். துரோண பர்வம் முழுமைக்கும் சுலோக எண்களைப் பின்னர்க் குறிக்க வேண்டும்.

துரோண பர்வத்தின் இடையில் பீமனிடமும், சாத்யகியிடமும் கர்ணன் பலமுறை பின்வாங்குவதைப் படித்துவிட்டு, அதைக் கண்டித்துச் சிலர் மின்னஞ்சல்களை அனுப்பினர்; சிலர் முகநூல் பின்னூட்டங்களில் அதைத் தெரிவித்தனர். கர்ணன்தான் பெரிய வீரன் என்றும், அர்ஜுனன் கோழை என்றும் பொருள்படும்படியாக அவற்றின் சாரம் இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவர்களில் சிலர் மகாபாரதமே பொய் என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். அந்த அளவில் கர்ணன் பாராட்டுக்குரியவனே. பெரும்பாடு என்னவென்றால், இருப்பதைத் தான் நான் மொழிபெயர்க்கிறேன் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அடுத்து வரப் போவது கர்ண பர்வம். கர்ணனின் சிறப்புகள் பலவற்றைச் அதில் சொல்லியிருந்தாலும், சில இடங்களில் கர்ணன் பின்வாங்கும் சம்பவங்களும் இருக்கின்றன. விமர்சனங்களும் வரத்தான் போகின்றன. எனினும், அப்படி விமர்சிப்பவர்களும் கூட, இந்த மொழிபெயர்ப்பின் உண்மைத்தன்மையை நிச்சயம் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

ஆதிபர்வம் இன்னும் பிழைதிருத்தம் முடியவில்லை. அதனால் அச்சுக்கு இன்னும் செல்லவில்லை. ஆடியோ கோப்புகளைப் பொறுத்தவரை திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்களின் பணிச்சுமையின் காரணமாக அது சற்றுத் தொய்வடைந்திருக்கிறது. துரோண பர்வத்தின் முழுப் பகுதிகளையும் நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் தொகுத்து அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதைப் பிடிஎப் ஆக்கி பதிவிறக்கத்திற்குக் கொடுக்க வேண்டும். முழு மஹாபாரதம் 7 பர்வங்களையும் சேர்த்து இதுவரை 1228 பகுதிகள் நிறைவடைந்திருக்கின்றன. எஞ்சியவை இன்னும் 887 பகுதிகள். அதில் பெரிய பர்வங்களாகச் சாந்தி பர்வம் 345 பகுதிகளும், அனுசாசன பர்வம் 145 பகுதிகளும் இருக்கின்றன.

அடுத்து வரப் போகும் கர்ண பர்வம் 96 பகுதிகளைக் கொண்டது. விரைவில் மொழிபெயர்க்கத் தொடங்க வேண்டும். டிசம்பர் மாதம் 24 & 25ம் தேதி கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும், 2016ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது விழாவுக்குச் செல்லப் போகிறேன். அங்குச் சென்று திரும்பியதும் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அனைத்தும் பரமன் சித்தம்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2016

பின்குறிப்பு: கர்ண பர்வம் மொழிபெயர்ப்பு அனுமன் ஜெயந்தியான இன்று தொடங்கப்படுகிறது.
28.12.2016
Friday, March 25, 2016

பீஷ்ம பர்வச் சுவடுகளைத் தேடி!

கிருஷ்ண ஜெயந்தி அன்று {03.08.2015} பீஷ்ம பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கி, பங்குனி உத்திரத்தன்று {23.03.2016} நிறைவை எட்டுகிறேன். மொத்தம் 234 நாட்களாகியிருக்கின்றன. நினைத்ததைவிடக் காலம் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. பொருளளவில் பீஷ்ம பர்வம் கனமானதாகும். ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஜம்பூகண்ட நிர்மாண பர்வம், பூமி பர்வம் ஆகியவற்றில் புவியியல், இயற்கையின் வரலாறு குறித்த செய்திகள்; அது முடிந்தவுடனேயே பகவத் கீதை எனும் தத்துவ உரை; அதன் பிறகு, முதல் பத்து நாள் போரின் வர்ணனைகள் என்று அடுத்தடுத்து மொழிபெயர்க்கக் கடினமான பகுதிகளையே பீஷ்ம பர்வம் கொண்டிருக்கிறது. எதிர்பாரா தாக்குதல்களைச் செய்து, அந்தப் போர் முடிந்த பிறகு இரு தரப்பும் ஒப்பந்தமிடுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன்பே இருதரப்பும் போர் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டு போரிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒன்றன்றபின் ஒன்றாக ஏற்படும் பிரமிப்புகளே கூட நம்மைத் தாமதம் செய்யத்தூண்டுகிறது. மேலும், நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றது, அலுவலகப் பணிகள், இயற்கை சீற்றங்கள், மின் பழுது, இணையப் பழுது என என்னென்ன எல்லாம் உண்டோ, அனைத்தும் பீஷ்ம பர்வம் தாமதமாவதற்கு ஒவ்வொரு வகையில் காரணங்களாகின.


23.03.2016 அன்று பங்குனி உத்திரம், அன்று அர்ஜுனன் பிறந்தநாளும் கூட, அன்றே பீஷ்ம பர்வத்தின் நிறைவை எட்டிவிட வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. அது தோன்றிய போது பீஷ்ம பர்வத்தில் மூன்று பகுதிகள் எஞ்சியிருந்தன. 22ந்தேதி காலையில் பகுதி 122ஐயும், அன்று இரவே பகுதி 123யும் மொழிபெயர்த்து வலையேற்றினேன். 23ந்தேதி பகல் பொழுதில் அலுவலகத்தில் மொழிபெயர்க்க முடியாது என்பதால் 22ந்தேதி இரவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு இறுதிப் பகுதியான 124ஐயும் முடித்து விட வேண்டும் என்று முயன்றேன். மணி 3.30 ஆகிவிட்டது கண்கள் சொக்கிவிட்டன. ஒரு பத்தி கூட மொழிபெயர்க்க முடியவில்லை. சரி காலையில் எழுந்து இந்தப் பகுதியை முடித்த பிறகுதான் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக்கொண்டு உறங்கிவிட்டேன்.

காலை 8.00 மணிக்கு எழுந்தேன். எழுந்ததும் கணினியில் அமர்ந்தேன். பகுதி 124ல் பீஷ்மரைக் கர்ணன் சந்தித்தான். இரண்டு மூன்று வரிகள் தாண்டுவதற்குள் கர்ணன் பேசும் ஒரு வசனம் மனத்தை கனக்கச் செய்தது. 8.30க்குப் பிள்ளைகளைப் பள்ளியில் விட வேண்டும். மொழிபெயர்ப்பதை நிறுத்தி எழுந்து சென்றேன். பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெங்கும் கர்ணனே மனமுழுவதும் நிறைந்திருந்தான். பள்ளியில் இருந்து திரும்பியதும் மொழிபெயர்ப்பைத் தொடராமல், அந்தப் பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில் படித்தேன். அந்தக் காலத்து மனிதர்களின் பண்புகளை எண்ணி எண்ணி வியந்தேன். சரி மொழிபெயர்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது, வாசலில் நண்பர் சீனிவாசன் ஓர் அவசர வேலையுடன் வந்திருந்தார். ஒரு கல்லூரியின் பிராஸ்பெக்டஸ் வடிவமைப்பைச் செய்வதற்கு வந்திருந்தார். “அர்ஜுனன் பிறந்த நாளில் பீஷ்ம பர்வத்தை முடிக்கக் கர்ணன் விடமாட்டான் போல, இன்னுமாடா உங்க பகை தொடருது” என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக அலுவலகத்தைத் திறந்து கணினியில் அமர்ந்தேன்.

3, 4 விதங்களில் அந்த வடிவமைப்பைக் கேட்டார் நண்பர். சில ஐயங்களுக்காக, அவர் கல்லூரிக்குப் போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்று {வீடும் அலுவலகமும் அருகருகில்தான்} வடிவமைப்பில் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் மணி 2.30 இருக்கும். “வாங்கையா, வாங்க, நல்லவரே” என்று யாரையோ அழைத்தார் நண்பர் சீனிவாசன். “யாரது?” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க?” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல!” என்றார். “இல்லங்க, வேல… அதான் முடியல” என்றேன். “சரி, சீக்கிரம் முடிங்க” என்று சொல்லித் தன் கையில் இருந்த கவரை என்னிடம் கொடுத்தார். கவரை வாங்கி வைத்துவிட்டு, வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டே நண்பர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.

அன்று என் மனைவியின் தந்தையுடைய நினைவு நாள். அங்கும் நான் செல்ல வேண்டியிருந்தது. என் மனைவி காலையிலேயே சென்று விட்டாள். நண்பர்களை அலுவலகத்திலேயே இருத்திவிட்டு, பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். பிறகு நண்பர் சீனிவாசனின் வடிவமைப்பு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, நண்பர் ஜெயவேலனையும் வழியனுப்பிவிட்டு, என் மாமியார் வீட்டுக்குச் சென்றேன். மீண்டும் வீடு திரும்பும்போது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. அதன் பிறகே இறுதிப் பகுதியை மொழிபெயர்த்து வலையேற்ற முடிந்தது. இந்த ஒரு பகுதி மட்டுமல்ல, பீஷ்ம பர்வத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட்டன. இன்று ஒரு பகுதியை மொழிபெயர்த்து வலையேற்றிவிட வேண்டும் என்று நினைத்தால், அது முடிவதற்கே ஒரு பெரும் போர் செய்ய வேண்டியதிருக்கும். ஆனாலும் பீஷ்ம பர்வம் நிறைவை எட்டிய போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனத்தில் பரவியது. அது போன்ற ஓர் உணர்வு யாருக்கும் எளிதில் கிட்டிவிடாது. பரமனின் கருணையை எண்ணி மகிழ்கிறேன்.

நண்பர் ஜெயவேலன் அவர்கள் கொடுத்த கவரை காலையில்தான் பிரித்தேன். எண்ணியது போலவே ரூ.12,400/- இருந்தது. ஒவ்வொரு பதிவையும் வலையேற்றியதும், அப்பதிவைத் திருத்தி அடுத்தநாளே அந்தப் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் தரும் திரு.ஜெயவேலன் அவர்கள் பிப்ரவரி 1, 2016 அன்று நாடு முழுவதும் உடல் மற்றும் உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தார். தங்க நாற்கரச்சாலையில் 10,300 கி.மீ. கொண்ட தன் பிரச்சாரப்பயணத்தை மார்ச் 4 அன்று நிறைவு செய்தார். நண்பர் ஜெயவேலன் அவர்களின் 10000 கிமீ இருசக்கர வாகன பயணத்தின் வாயிலாக உடல் மற்றும் உறுப்புத் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகளை காண கீழ்கண்ட லிங்கிற்குச் செல்லலாம்:

https://www.facebook.com/10000-km-Bike-Ride-to-spread-Awareness-of-Organs-and-Body-Donation-1520691041594782/

அவர் இல்லாத அந்த 33 நாட்களும் கண்களை இழந்த குருடன் நிலையாகவே எனக்கு இருந்தது. பயணத்தில் இருந்து திரும்பி ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திருத்தாதிருந்த 33 பகுதிகளையும் திருத்தி விட்டார். இப்படி முழுமஹாபாரதம் வளர்வதில் அவரது பங்கும், அவரது மனைவி தேவகி ஜெயவேலன் அவர்களது பங்கும் மிகப் பெரியது.

ஆதிபர்வம் இன்னும் வெளிவரவில்லையே ஏன்?

அச்சிடப்போகிறோம் என்று அறிவித்த உடனேயே, முடிந்தவரை சொற்பிழைகள் அனைத்தையும் நீக்கி, அச்சக நண்பர் சீனிவாசன் அவர்களிடம் அச்சேற்றிவிடும்படி கோப்பினைக் கொடுத்தும் விட்டேன். பிறகு தான், இப்போது மொழிபெயர்க்கும் பர்வங்களில் உள்ளது போல ஆதிபர்வத்தில் ஒவ்வொரு பகுதியின் சுருக்கங்களும் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எனவே, புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று நண்பரிடம் சொல்லி, ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் அந்தந்தப் பகுதியின் சுருக்கங்களைச் சேர்த்தேன். கிட்டத்தட்ட அதையும் முடிக்கும் சமயத்தில் விஜயசாரதி என்றொரு நண்பர் அறிமுகமானார். அவர் குழந்தைகளுக்கான மகாபாரதத்தை எழுதி வருகிறார். அதில் சில பக்கங்களையும் நான் கண்டேன். குழந்தையோடு குழந்தையாக அமர்ந்து கதை சொல்வது போல நேர்த்தியான நடையில் எழுதியிருந்தார். பிற்காலத்தில் அஃது ஒரு பெரிய படைப்பாக நிச்சயம் அறியப்படும். அப்படிப்பட்ட அவர் நம் மஹாபாரதத்தை படிக்க நேர்ந்தவிதத்தைச் சொல்லிப் பாராட்டி, “ஆதிபர்வம் அச்சிடப் போகிறீர்களா?” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர்வம் மற்றும் பிற பர்வங்களின் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்! காத்திருப்போம்.

பாண்டிச்சேரி "முகநூல் நண்பர்கள் சந்திப்பு"

2016, ஜனவரி 30 அன்று, முகநூல் நண்பர் திரு.நாராயணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "முகநூல் நண்பர்கள் சந்திப்புக் கூட்டம்" புதுவையில் நடைபெற்றது. புதிய நண்பர்கள் பலரைப் பெற முடிந்தது. முகநூல் நண்பர்கள் கூட்டத்திற்கு முன்மாதிரியான கூட்டமாக அது அமைந்தது. நிகழ்வில் பேசிய அனைவரும் அருமையாகப் பேசினார்கள். திடீரென என்னையும் பேச அழைத்துவிட்டார் நாராயணன் அவர்கள். தயார் செய்து பேசினாலே நான் பயங்கரமாகப் பேசுவேன். இப்போது தயாரிப்பில்லாமல் பேசவேண்டும். ஏதோ பேசி சமாளித்துவிட்டேன். "திராவிட மாயை" சுப்பு மணியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. நண்பர் முத்துமாணிக்கத்தின் உரை நெகிழ்வை ஏற்படுத்தியது. அனுபமா ரெட்டி என்றொரு நண்பர் உணர்வுப் பூர்வமாகப் பேசினார். காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அருமையாகப் பேசினார். யோகானந்த் ராமலிங்கம் அவர்கள் நிகழ்வை அருமையாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே சுப்பு அவர்களின் நகைச்சுவை கலந்த அனுபவ உரைகளும் அருமையாக இருந்தது. மொத்தத்தில் அன்றைய நிகழ்வு மனத்துக்கு நிறைவை அளித்தது. என்னுடன் நண்பர் சீனிவாசனும் வந்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் நாங்கள் இருவரும் வடலூர் சென்று வள்ளலாரின் சபையைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினோம்.

ஆடியோ பதிவுகளின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பர் தேவகி ஜெயவேலன் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி பர்வம் முதல் 21 பகுதிகளும், விராட பர்வம் முழுமையாக 72 பகுதிகளும், உத்யோக பர்வம் முழுமையாக 199 பகுதிகளும், பீஷ்ம பர்வம் முதல் 50 பகுதிகளும் நிறைவு செய்திருக்கிறார். அலுவலகப் பணி, வீட்டுப் பணி, ரோட்டரி சங்கப் பணி, ரோட்டராக்ட் சங்கப் பணி, மஹாபாரத ஆடியோ பணி எனச் சுழன்று சுழன்று வேலை செய்து வருகிறார். அவரது உழைப்புப் பிரமிப்பைத் தருகிறது.

விவாத மேடையில் நண்பர் தாமரைச் செல்வன் அவர்கள் பெரும் ஆய்வுகளை அப்போதைக்கப்போது தந்து கொண்டே இருக்கிறார். மேலும் வாசகர்களின் கேள்விகளுக்கும் அவரே பதிலளித்து வருகிறார். சில வேளைகளில் என் மின்னஞ்சலுக்கு வரும் சில கேள்விகளையும் அவருக்கே நான் அனுப்பி விடுவதுமுண்டு. மஹாபாரதத்தில் தெளிந்த ஞானம் கொண்டவர் அவர்.

நண்பர் செல்வராஜ் ஜெகன் அவர்கள் வழக்கம்போபவே ஒவ்வொரு 50 பகுதி நிறைவின் போதும், வலைத்தளத்தில் உள்ள பகுதிகளை வேர்ட் கோப்பில் சேகரித்து அனுப்பித் தருகிறார். சில வேளையில் நான் வலைத்தளத்தில் பல திருத்தங்களைச் செய்திருப்பேன், எனவே அவரை அப்பகுதிகளை மீண்டும் எடுத்துத் தரச் சொல்வேன். நான் கேட்ட போதெல்லாம் சலிக்காமல் அதைச் செய்து தந்திருக்கிறார்.

மஹாபாரதத்தின் மூலம் மற்றொரு நண்பரும் எனக்கு அறிமுகமானர். அவர் பெயர் வெற்றிவேல். வயதில் மிகவும் இளையவர். மூர்த்திச் சிறிதாயினும் கீர்த்திப் பெரிது என்பது போல 24 வயதிற்குள்ளாகவே பெரும் காரியங்களைச் செய்து வருகிறார். கரிகாலன் சம்பந்தமான ஒரு சரித்திர நாவலை எழுதி முடித்துள்ளார். “வானவல்லி” என்ற தலைப்பில் நான்கு பாகங்களில் அதை எழுதியிருக்கிறார். குறைந்தது 2000 பக்கங்கள் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நாவல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் தாக்கம் இவரிடம் அதிகம் இருக்கிறது. அந்நாவல் முழுவதையும் வேறு தடையில்லாமல் என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. நல்ல வேகமான நடையும் கூட… பிற்காலத்தில் இந்நண்பர் பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது.

இப்படி நண்பர்கள் பலரையும் மஹாபாரதம் எனக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அடுத்து துரோண பர்வம்… இன்று ஹோலிப் பண்டிகை இதோ அதற்குள் நுழைகிறேன்…. வழக்கமாகத் திரௌபதி சிரிப்பாள், பீஷ்ம பர்வத்தில் கர்ணன் சிரித்தான். வரப்போகும் துரோண மற்றும் கர்ண பர்வங்களிலும் அவனே சிரிப்பான் என நினைக்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
24.03.2016

பின்குறிப்பு: இப்பதிவில், பாண்டிச்சேரியில் நண்பர் திரு நாராயணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ந்த முகநூல் நண்பர்கள் கூடுகையைப் பதிய நான் மறந்துவிட்டேன். துரோண பர்வம் பகுதி 1-ஐ மொழிபெயர்த்து வலையேற்றிய பிறகு உறங்கச் சென்றேன். அதிகாலையில் ஒரு கனவு...

நான் என் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன் {கனவில்தான்}. சற்றுத் தொலைவில் புதுவையில் நான் சந்தித்திருந்த திரு.முத்துமாணிக்கம் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய வெளிப்படையான உரையைக் கேட்டு நெகிழ்ந்திருந்தேன். இவர் ஏன் இங்கு நிற்கிறார். ஒரு வேளை நம்மைத் தேடித்தான் வந்திருக்கிறாரோ என்று எண்ணி அவரை நோக்கிக் கையசைத்தவாறே நடந்து சென்றேன். அவருடன் ஒரு நண்பரும் இருந்தார். அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். முத்துமாணிக்கத்தின் நண்பர் புகைப்பிடிக்கிறாரா? பரவாயில்லை அது அவரவர் விருப்பம்தானே என்றெண்ணி ஓடிச் சென்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தேன். திடீரெனச் சூழல் மாறுகிறது. பொழுது இருட்டிவிட்டது. இருட்டு என்றால் அப்படியொரு மையிருட்டு. என் வீட்டை நோக்கி நாங்கள் நடக்க எத்தனிக்கையில் எங்களை நோக்கி ஒரு மங்கை நடந்து வருகிறாள். சிவப்பு நிறப் பட்டுடுத்தியிருக்கிறாள், நீல நிற இரவிக்கையணிந்திருக்கிறாள். அவள் எங்களை நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போதுதான் தெரிகிறது அவள் தன் கூந்தலை முன்னே தொங்கவிட்டபடி நடந்துவருகிறாள். நெஞ்சில் திக் என்று இருக்கிறது. யார் இந்தப் பெண் என்று மனம் நினைத்தாலும், அச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு விலகி வழி அளிக்கிறேன். அப்படியே காட்சி மறைகிறது.

திடீரென வேறொரு காட்சி நானும் என் தம்பிகளில் ஒருவரும் ஒரு இடத்தில் நின்றிருக்கிறோம். எங்களுக்கு முன்பு ஒரு அகழி இருக்கிறது. அகழியைத் தாண்டி பூங்கா போன்ற ஒரு பகுதி இருக்கிறது. அந்த இடம் அவ்வளவு அழகாக இருக்கிறது. அப்படியே அந்தக் காட்சியில் லயித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கத்தில் ஒரு பெரும் மனிதன் வருகிறான். பெரும் மனிதன் என்றால் 6 அடி 7 அடி மனிதனல்ல; அதையும் விட மிகப் பெரும் மனிதன். அவன் அகழியை நோக்கித் தான் நடந்து வருகிறான். அழகாகத் தெரிகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுக்குக் கருவிழிகளில்லை. கண்கள் முழுவதும் வெள்ளையாக இருக்கின்றன. என்னடா இது என்று நினைத்துக் கொண்டிருக்கையில்தான் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் மற்றும் இரண்டு முகங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவனது தாடி மீசை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்கையில் சிங்கம் போன்ற முகமாகத் தெரிகிறது. நான் "ஆ" என்று அலறிக் கொண்டே, ஆர்கிமீடிஸ் போல "நான் பாத்துட்டேன், நான் பாத்துட்டேன்" என்று கதறுகிறேன். அதுவரை என்னைக் கவனியாத அம்மனிதன் என்னை நோக்கித் திரும்புகிறான். என் இதயம் கிலி கொள்கிறது. அருகில் இருந்த என் தம்பியையும் மறந்துவிட்டு அச்சத்தால் "ஆ" என்று அலறியபடியே தலைதெறிக்க ஓடுகிறேன். ஓடுகிறேன் ஓடுகிறேன் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. பிறகு ஒரு வீட்டிற்குள் செல்கிறேன். அவ்வீடு எனக்குத் தெரிந்தவர்கள் யாரோ ஒருவருடைய வீடு என எண்ணுகிறேன். மூச்சுவாங்குகிறது. நான் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறேன். அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேட்டியை எடுத்து உடுத்துகிறேன். கனவு கலைந்து வியர்த்து எழுகிறேன். எப்பா, என்ன கனவு இது?

பிறகு தான் பாண்டிச்சேரி நிகழ்வு நினைவுக்கு வந்து மேலுள்ள பதிவில் திருத்தியிருக்கிறேன். 27.03.2016


Monday, August 03, 2015

உத்யோக பர்வச் சுவடுகளைத் தேடி!


எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. வானத்தின் அடர்நீலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறைந்து தூரத்தில் இருந்த நிலமகளை அரவணைத்தபடி கருப்பாக மறைந்தது. ஆகாயமும் பூமியும் சந்திக்கும் இடத்தில், கருப்பும் வெள்ளையும் கலந்த கலவையாகத் தங்கள் நெளிவு சுழிவுகளைக் காட்டியபடி மலைகள் ஓடிக் கொண்டிருந்தன. அவை எப்படி ஓடும்? என் கண்களே அப்படி அலைபாய்ந்தன. சிதறிக் கிடக்கும் பூக்கள் விரிந்து விரிந்து சுருங்குவது போல நட்சத்திரங்கள் அதற்கும் மேலே மின்னிக் கொண்டிருந்தன. இந்த இருட்டிலும் இப்படியோர் ஓவியமா? இல்லை, காலமெனும் சிற்பியின் உளியால் செதுக்கப்பட்ட அற்புதமா இஃது?


மயக்கத்துடன் எதிர் திசையைத் திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் ஆறு கரும் உருவங்கள், நுண்ணிய அசைவுகளுடன் ஆடிக்கொண்டிருந்ததைப் போலத் தெரிந்தது. இல்லை அவை நடக்கின்றன. நானிருந்த திக்கை நோக்கியே அவை வந்து கொண்டிருந்தன. அவைகளுக்குப் பின்னே பெரிய மஞ்சள் நிலா அடிவானத்தில் இருந்து முக்கால் உருண்டையாக முளைத்திருந்தது. அந்தக் கரிய உருவங்கள் அனைத்தும் அந்த மஞ்சள் நிறத்திற்குள்ளேயே அடங்கியிருந்தன.

"யாரிவர்கள்? இந்த வேளையில் இங்கு என்ன செய்கிறார்கள்? நான் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்?" மனம் பதைபதைத்தது. "வருவது மனிதர்கள்தானா? திரும்பிப் போய்விடலாமா? எங்குப் போவது? நாம் எங்கிருந்து வந்தோம்?" மனம் குழம்பியது. சிறு உருவங்களாகத் தெரிந்தவை, நேரமாக ஆகப் பெரிதாகிக் கொண்டே இருந்தன. எவ்வளவு பெரிது? "ஆ... அவர்களின் கால் கட்டைவிரலின் நுனியளவு கூட நாம் இல்லையே... இதோ மிதிக்கப் போகிறார்கள். நாம் தொலைந்தோம்." என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே நினைவு தப்பியது. கீழே சாய்ந்தேன்.

பனியுடன் சேர்ந்து குளுமையாக வீசிக்கொண்டிருந்த தென்றலால் உடல் சில்லிட்டுப் போனது. காற்றில் ஆடிய நாணலின் ஸ்பரிசம் முகத்துக்குக் கிட்டி, தும்மலுடன் மயக்கம் கலைந்தது. முகம் மண்ணில் கிடப்பத்தை மணத்தால் நுகர்ந்துணர முடிந்தது. அந்த மணத்திற்குத்தான் என்ன ஒரு மருத்துவக் குணம். மரணம் போன்ற ஒரு மயக்கத்தையே நொடிப்பொழுதில் தெளித்து விட்டதே.

அச்சத்தால் அழுது உடல் வெளியிட்ட கண்ணீராக முகமெல்லாம் வியர்வை வழிந்திருந்தது. அதனுடன் மண்ணும் கலந்து என்னமோ செய்தது. கவிழ்ந்து விழுந்த நிலையிலேயே முகத்தை நிமிர்த்தினேன். முகத்தில் ஒட்டியிருந்த புழுதியை கீழே வழித்தெறிய இரு கைகளாலும் நெற்றி முதல் துடைத்து வந்தேன். கண்களை விரல்கள் தாண்டவும், புருவத்தை மேலிமை முத்தமிடவும், நட்சத்திர மழையால் நனைந்து கொண்டிருந்த மலைகள் என் விழிகளில் விரிந்தன. அந்த அறுவரின் முதுகுப்புறங்களும் நிலவு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தன. "பின்னே செல்வது ஒரு பெண் போலல்லவா தெரிகிறது", "என்ன இது? எங்கே செல்கிறார்கள்? அந்த மலைகளுக்குத் தான் செல்கிறார்களா? அங்கே எதற்கு?"

மனதைத் திக்கெனச் செய்தது, திடீரென எழுந்த சர சரவென்ற சத்தம். "என்னமோ நடக்கப்போகிறது" என்ற நினைப்பை மனம் எண்ணி முடிப்பதற்குள், கவிழ்ந்திருந்த அந்நிலையிலேயே எனது முகம் மட்டும் தானாகப் பின்புறம் திரும்பி நிலவைப் பார்த்தது. நான்கு கால்களைக் கொண்ட ஒரு பெரும் விலங்கு நிலவுக்குள் இருந்து பாய்ந்தோடி வந்தது. ஒரே குதிதான், நான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அதன் கால்களுக்கிடையில் இருந்தேன். மோவாய் ரோமம் முள்ளெனக் குத்திக்கொண்டு நிற்க, திறந்திருந்த அதன் வாயிற்கு வெளியே எச்சில் சொட்டியபடி நாக்கு தொங்கிக் கொண்டிருந்தது. மலைத்துப்போய் மல்லாந்த நான், மேலே தெரிந்த அதன் வயிற்றைப் பார்த்தேன். அடுத்தக் குதி, அது என்னைத் தாண்டிச் சென்றது.

ஊதா நிற வானம் என் கண்களைத் தாண்டி எனது தலைக்குப் பின்னே ஓடி ஒளிந்து கொண்டது. நிலவும் அப்படித்தான் ஓடவே செய்தது. சட்டென எனது தலை தரையில் மோதியது. அவ்விலங்கு என்னைத் தாண்டி மட்டும் செல்லவில்லை. பின்னங்கால்கள் ஒன்றினால் எனது தலையைத் தூக்கிப் போட்டுவிட்டே சென்றிருக்கிறது. குட்டிக்கரணம் அடிக்கும் குரங்கைப் போல, நானும் நிலவை நோக்கி உருண்டு விழுந்தேன். "அது நாய்!" என்று மனம் சொன்னது. "நாயா? இவ்வளவு பெரியதா?" என்று குறுக்குப் புத்தி கேள்வி கேட்டது. "ஆம். அது நாயேதான். ஆனால் சாதாரண நாயல்ல" என்று நினைத்தபடியே அது சென்ற திக்கை நோக்கிப் பின்புறம் திரும்பினேன்.

"ஆ... அவர்களை நோக்கிச் செல்கிறதே. என்ன நேரப்போகிறதோ?" பயத்தால் கண்களை அகல விரித்தேன். "அம்மா! நாய்" என்று அலறினேன். அந்தப் பெண் திரும்பினாள். கண்களா அவை? சந்திரன் மற்றும் சூரியனின் ஒளிபொருந்திய அவை கருணை கலந்த கண்டிப்புடன் என்னை நோக்கின! "என்னையா நீ எச்சரிக்கிறாய்?" என்ற கண்டிப்பையும், "இவன் நம்மை அறியவில்லைபோலும்" என்ற நினைப்பால் எழுந்த கருணையையும் அந்தப் பார்வையில் உணர்ந்தேன். இடி இடித்தாற்போலக் கேட்ட பெருவொலியால், அவளிடம் இருந்து பார்வையை விலக்கி நாயைப் பார்த்தேன். குரைத்தபடியே சென்ற அது அந்த அறுவரில் ஒருவரின் காலை, வலம் வந்து பெருமூச்சுவிட்டபடி நின்றது. காட்சி மறைந்தது. எங்கும் இருள். "பார்வைப் புலனை இழக்கிறேனா? மரணம் என்னை அரவணைக்கிறதா?" ஒன்றும் புரியவில்லை. "ஒலிகூடக் கேட்கவில்லையே! காதுகளும் உணர்வை இழந்து விட்டனவோ?" மனதிலும் இருள் சூழ்ந்தது. எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கிறேன்? ஒரு மணிநேரமா? ஒரு நாளா? ஒரு வருடமா? இல்லை... இல்லை... யுகம் யுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு.

"ஏங்க! பசங்க ரெடி, ஸ்கூலுக்கு விடணும்! எந்திரிங்க!" என்ற என் மனைவியின் குரல் கேட்டது. "அப்பாடா! காது கேக்குதுடா!" என்றெண்ணி, பார்வையும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் கண்களைத் திறந்தேன். "ஏம்பா எவ்ளோ நேரம்பா தூங்குவீங்க!" என்று கேட்டான் என் இளைய மகன். சோம்பல் முறித்துக் கொண்டே, "அப்பா தூங்க லேட்டாயிடுச்சுப்பா!" என்றேன். "லேட்டாயிடுச்சுன்னா, என்னத்தான மிஸ் திட்டுவாங்க. உங்களையா திட்டுவாங்க?" என்றான் அவன்.

"என்ன கனவு இது? இது எதைக் குறிக்குது? கனவு மாதிரியா இருந்தது?" கனவுக்கும் நனவுக்கும் இடையில் ஊசலாடியது மனம். அன்றைய நாள் முழுவதும் இக்கனவே என்னை ஆக்கிரமித்தது. என் அலுவல்களுக்கிடையிலும் இக்காட்சி என் கண்களில் தோன்றித் தோன்றி மறைந்தது. இது பாண்டவர்களின் கடைசி நெடும்பயணத்தைக் குறிப்பதாகவே எனக்குப் படுகிறது. அப்படியே அதை நான் நம்பவும் செய்கிறேன்.

இந்த நேரத்தில் ஏன் அப்படி ஒரு காட்சி? அதுதான் தெரியவில்லை! வரவர தூக்கத்திலும் மகாபாரதம்தான் ஓடுகிறது. நான் கண்ட பல கனவுகளில் சமீபத்தில் நான் மிக நுணுக்கமாக உணர்ந்த ஒன்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். உறக்கத்தை விட அதிகமான ஓய்வை இவையே அளிக்கின்றன. "தூங்கிக் காண்பதல்ல; உன்னைத் தூங்கவிடாததே கனவு" என்ற அப்துல் கலாம் அவர்களின் வரிகளுக்கிணங்க மகாபாரதம் என்னைத் தூங்க விடுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவையேனும் இடாமல் கண்கள் உறங்க மறுக்கின்றன. வெளியூர்களுக்குச் செல்ல நேரும் போதெல்லாம் இரவுகள் எனக்கு வருத்தத்தையே அளிக்கும்.

ஏன் இங்கே கனவையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால், இதுவும் மனதில் பதிந்த ஒரு சுவடுதானே. நாம் உணர்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்தே, "சுவடுகளைத் தேடி" என்ற இந்தப் பதிவில் மேற்கண்ட கனவை சொல்ல விழைந்தேன். கண்டது நேற்றென்பதால் கண்டது போலவே நினைவிலும் பதிந்திருந்தது. உண்மையில் நான் கண்ட அக்காட்சியை உணர்ந்தபடியே இங்குச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால், கனவுக்கும், நனவுக்கும் வேறுபாடில்லாதவாறு அது உயிரோட்டமாகவே இருந்தது. மேற்கண்ட என் எழுத்துகளுக்கு அந்த உயிரை என்னால் கொடுக்க முடிந்ததா என்பது தெரியவில்லை. உண்மையில் கனவுகளை எழுத்துகளாலோ, ஒளிப்படங்களாலோ கூட முழுமையாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

சரி நிகழ்கால நிஜத்திற்குத் திரும்புவோம்! கனவெல்லாம் கண்டு முடித்து, பிள்ளைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். அலுவலகத்தைத் திறக்கவில்லை. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அலுவலகத்தை அடைத்துவிட்டு, உத்யோக பர்வத்தின் எஞ்சிய பதிவுகளை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். உத்யோகபர்வம் பகுதி 197-ஐ மொழிபெயர்த்து முடித்துப் பிளாகரில் பதிவேற்றி விட்டு, வாட்சாப்பில் ஜெயவேலன் அவர்களுக்குத் தகவல் அனுப்பினேன். அரை மணிநேரம் கழித்துப் பார்த்தேன். திரு.ஜெயவேலன் அவர்கள் அந்தப் பதிவைத் திருத்தி முடித்திருந்தார்.

198-ம் பகுதியின் நிறைவு பத்தியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது, எனக்குப் பின்னால் ஓர் உருவம் நின்று கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அலுவலகத்தை முன்புறம் மூடி வைத்திருந்தாலும், என்னை நன்கறிந்த வாடிக்கையாளர்கள், என் வீட்டின் கேட் வழியாக, அலுவலகத்தின் பின்புறமாக வந்துவிடுவார்கள். "ஆஹா... அலுவலுக்கு யாரோ வந்துவிட்டார்கள். இன்றும் உத்யோக பர்வத்தை முடிக்க முடியாது போலிருக்கிறதே" என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தேன். ஜெயவேல் அவர்கள் நின்று கொண்டிருந்தார். எனக்கோ இன்ப அதிர்ச்சி "என்னங்க... சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க. நான் யாரோனு நினைச்சேன்" என்றேன். "ஏன் வரக்கூடாதா?" என்று கேட்டார். "என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க" என்றேன்.

பிறகு மொழிபெயர்ப்பைக் குறித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். "ஏங்க "நளன் தமயந்தி" கதையைவிட "அம்பை" கதை அருமைங்க" என்றார். "அது ஒரு விதம், இது ஒரு விதம்! இரண்டுமே நல்ல கதைகள்தானே" என்றேன். வீட்டினுள்ளே என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த திருமதி. தேவகி ஜெயவேலன் அவர்கள், என் அலுவலகத்திற்குள் முதல்முறையாக நுழைந்தார். "என்னண்ணா இவ்ளோ பள்ளமா இருக்கு" என்று என் அலுவலகத்தின் நிலை குறித்துக் கேட்டார். "ஓ... இவங்களும் வந்திருக்காங்களா? சொல்லவே இல்லையே!" என்று கேட்டேன். "ஆமா வந்த உடனே அவங்க வீட்டுக்குள்ளே போனாங்க. நீங்க எப்படியும் இங்கதான் இருப்பீங்கன்னு, நான் ஆஃபீசுக்குள்ளே வந்தேன்" என்றார்.

என் மனைவி காபியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, தன் கையில் இருந்த கவரை என் மனைவியிடம் கொடுத்தார் ஜெயவேல். "நாங்க வாங்கிக்கிட்டே இருக்கோம். இது தப்பில்லையா?" என்று இம்முறை அவரிடமே கேட்டுவிட்டாள் என் மனைவி. "ஏங்க இது அவருக்கில்லங்க. இரவு நேரத்திலும் அவர் இந்த வேலையச் செய்ய உறுதுணையா இருக்கீங்கல்ல. இது உங்களுக்குத்தாங்க" என்றார். என் மனைவி வாங்கத் தயங்கினாள். "ஏ... வாங்கிக்க லட்சுமி" என்றேன். வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணவனும் மனைவியுமாகத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார்கள் ஜெயவேலன்-தேவகி தம்பதியினர். நானும் காபி குடித்துவிட்டு வரலாமே என்று வீட்டிற்குச் சென்றேன். என் அன்னையின் புகைப்படத்திற்கு அருகே இருந்த கவரைப் பிரித்து ரூபாயை எண்ணினேன். ரூ.19,900/- இருந்தது. மீண்டும் அலுவலகம் திரும்பி 198 மற்றும் 199 பகுதிகளை மொழிபெயர்த்து முடித்தேன். மகாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வம் இனிதே நிறைவை எட்டியது. இன்னும் பதிமூன்று பர்வங்களைக் கடக்க வேண்டும். கனவில் வந்த அந்த அறுவர் மலைகளை எட்டுவதையும், தர்மன் தர்மதேவனிடம் மீண்டும் பேசுவதையும் நான் நிச்சயம் காண்பேன் என நம்புகிறேன்.

இதற்கு முன்பு ஒரு சமயம், உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பித்த நேரத்தில் என்று நினைக்கிறேன். திரு.ஜெயவேலன் அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு வரச் சொன்னார். நானும் சென்றேன். அவர் புதிதாக ஆரம்பித்திருக்கும் ஒரு நிறுவனத்தைக் குறித்து விவாதித்தார். பிறகு, "நீங்களும் இங்கேயே வந்துவிடலாமே. கணினி வரைகலையே உங்களது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திச் செய்து விடாது. நமது நிறுவனம் இணையம் சம்பந்தமான வேலையைத்தானே செய்யப் போகிறது. நீங்களும் இங்கேயே வந்துவிட்டால், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் நீங்கள் மகாபாரதத்தை மொழிபெயர்க்கலாமே!" என்றார். "சரி பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். பிறகு என்னால் அவரது அலுவலகத்ததிற்கு அடிக்கடி செல்ல முடியவில்லை. நான் ஏற்றிருக்கும் வேலைகளை எனது அலுவலகத்தில் முடிப்பதே பெரும் நேரத்தை எடுத்துக் கொண்டது.

ஒரு நாள் ஓர் அவசர வேலைக்காக நான் ஜெயவேலன் அவர்களின் அலுவலகத்திற்குச் செல்ல நேர்ந்தது. அலுவலை முடித்துவிட்டு, நானும் அவரும் வெளியில் இருந்த டீக்கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அவர், "ஏங்க. மனிதனுக்கு எப்போது என்ன நேர்கிறது என்பது தெரிவதில்லை. நீங்கள் ஏற்றிருக்கும் பணியோ மிகப் பெரியது. முடிந்த அளவுக்கு எவ்வளவு விரைவாக மொழிபெயர்க்க முடியுமோ அவ்வளவு செய்து மகாபாரதத்தை முடித்து விடுங்கள்" என்றார். "நான் முடிந்த அளவுக்குச் செய்தே வருகிறேன்" என்று அவரிடம் சொன்னேன். "இல்லங்க இது பத்தாது. நான் ஒரு யோசனை சொல்றேன். ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலேயும் நான் உங்களுக்குப் பணம் தரப்போவது நிச்சயம். ஒரு பதிவுக்கு ரூ.100/ - என்று கணக்கு வைத்தே இதுவரை நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நீங்கள் செய்து வரும் வேலையை விட்டுவிடுங்கள். முழு நேரமாக மொழிபெயர்ப்பை மட்டுமே செய்யுங்கள். நான் ஒரு பதிவுக்கு ரூ.200/- தருகிறேன். உங்களால் ஒரு நாளைக்கு நிச்சயம் ஐந்து பதிவுகளை இட முடியும். ஆக ஒரு மாதத்திற்கு நிச்சயம் உங்களுக்கு ரூ.30,000/- கிடைக்கும்" என்றார்.

"நீங்கள் இன்றைய கதையைச் சொல்கிறீர்கள். நான் நாளைய நிலையைப் பார்க்கிறேன். மகாபாரதம் முடிந்த பிறகு? என்னதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டாமா?" என்று கேட்டேன். "ஏங்க மகாபாரதம் முடிந்ததும், உங்கள யாருங்க சும்மா இருக்க விடப் போறது. எவ்வளவோ இருக்கு மொழிபெயர்க்க! எனவே இது குறிச்சு நீங்க சிந்திங்க" என்று சொன்னார். நான், "பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். கணினி வரைகலைத் தொழிலில் எனக்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தைக் கொண்டிருக்கிறேன். சேர்ந்தாற்போல் இரண்டு மூன்று நாளைக்கு நானில்லை என்றாலே திண்டாடிப் போய்விடுவார்கள். மேலும், தொழிலின் அடிப்படையில் நானும் இவ்வளவு காலம் அவர்களையே நம்பியிருந்திருக்கிறேன். திரு.ஜெயவேலன் அவர்கள் சொன்னதைக் குறித்து அதற்கு மேல் நான் சிந்திக்கவேயில்லை. இப்படி மொழிபெயர்ப்பதற்கான ஊக்கத்தை எப்படியெல்லாம் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்தே வருகிறார். நான் என்ன செய்யப் போகிறேன் அவருக்கு?

2014 நவம்பர் 9ந்தேதி நடைபெற்ற வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவை, 2015 ஜனவரி 18ந்தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். இது குறித்து ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் என் வலைத்தளத்தில் http://mahabharatham.arasan.info/2015/01/venmurasu-release-function-broadcast-vijaytv.html அந்த லிங்கைப் பகிர்ந்திருந்தேன். நிகழ்ச்சியைக் கண்ட நண்பர்களும், உறவினர்களும் போனிலும், மின்னஞ்சலிலும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மொழிபெயர்ப்பு அல்லாமல், புதிய பதிவு ஒன்றை நான்கு வரி சேர்த்து எழுதுவதற்குள் நாக்குத் தள்ளி விடுகிறது. மேற்கண்ட கனவை எழுதுவதற்கே விக்கித்துப் போனேன். தினமும் குறைந்தது பத்து பக்கமாவது கொண்ட வெண்முரசின் ஒரு பதிவையும் எழுதிவிட்டு, அதற்கு மேலும் வாசகர்களின் கடிதங்களுக்குப் பதில் சொல்வது, ஜெயமோகன் அவர்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. வெண்முரசை எப்போதாவதுதான் என்னால் படிக்க முடிகிறது. படித்தால் சேர்ந்தாற்போல 10 பதிவையாவது படித்து விடுவேன். பெரும் சாதனையை அருகிலிருந்து உணர முடியாதவனாக இருக்கிறேன்.

திடீரென முழுமஹாபாரத வலைத்தளத்திற்கு நிறையப் பார்வைகள் கிடைப்பதை உணர்ந்து, எங்கிருந்து இவை வருகின்றன என்று பிளாகரில் தேடினேன். http://charuonline.com/blog/?p=2323 என்ற பக்கத்தில் இருந்து அதிகமான பேர் நமது வலைத்தளத்திற்கு வருவதை அதில் காண முடிந்தது. அந்தப் பக்கத்திற்குச் சென்று பார்த்தேன். எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் முழுமஹாபாரதத்திற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரே என்னிடம் தொலைபேசியிலும் பேசினார். 2015 மார்ச் 07ந்தேதி அவரது வீட்டிற்குச் சென்று நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் சந்தித்தோம். நான் எடுத்துக் கொண்ட பணியைப் பாராட்டியபடி மகிழ்ச்சியாகப் பேசினார். நீண்ட நேரம் அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒன்றிரண்டு நாட்களில் http://andhimazhai.com/news/view/charu29.html என்ற பக்கத்தில், தனது வாசகர் ஒருவருக்குப் பதில் சொல்லும் விதமாக நளன் தமயந்தி கதையைச் சுட்டிக் காட்டி நமக்கு ஓர் அறிமுகத்தைத் தந்திருந்தார் சாரு. மேலும் அவர், புதிய தலைமுறை இதழில் "வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்" என்று தான் எழுதி வரும் தொடரில், 26 மார்ச் 2015 தேதியிட்ட இதழில் "மஹாபாரதத்தை மறக்கலாமா?" என்ற தலைப்பின் கீழ், http://mahabharatham.arasan.info/2015/03/introduction-to-mahabharata-by-charu-in-pudhiyathalaimurai-magazine.html நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இப்படிப் பல்வேறு வகைகளில் நம்மைப் பல தளங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தனது வலைத்தளத்தில் தமிழ்மொழிக்காக சிறு அறிமுகத்தைத் தந்திருந்தார். http://www.sramakrishnan.com/?p=4551

திரு.ஜெயமோகன் அவர்களுக்கும், திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கும் நான் செலுத்தும் நன்றி வார்த்தைகளால் இல்லாமல் செயலால் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான சந்தர்ப்பம் அமைய பரமனை வேண்டுகிறேன்.

2015 மே 3ந்தேதி அன்று தந்தி தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் "யாத்ரீகன்" என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், "மகாபாரதப் பாதையில்" என்ற பதிவில் எனது சிறிய பேட்டி ஒன்று வெளிவந்தது. http://mahabharatham.arasan.info/2015/05/Thanthi-TV-Yathrigan-1-03052015.html அதுவும் வாசகர்களின் மத்தியில் எனக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. என்னைத் தொடர்பு கொண்டு படப்பிடிப்பு நடத்திய தந்தி டி.வி.யின் திரு.ஜான்சன் அவர்களுக்கு நன்றி

2015 ஜுன் 3ந்தேதி அன்று மயிலாப்பூர் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் {RK Convention Center} நடைபெற்ற அரிமா சங்கத்தின் {Lion’s Club} கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் கூட்டத்தைப் பாடி அரிமா சங்கம் & ஷெனாய் நகர் அரிமா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் http://mahabharatham.arasan.info/2015/06/support-from-lions-club-of-padishenoynagar-and-nungambakkam.html . மேடையொன்றில் நின்று பேசியது அதுவே எனக்கு முதல் முறை. நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் திரு.சாருநிவேதிதா மற்றும் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் பங்கு பெற்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. நிகழ்ச்சியின் முடிவில், பாடி-ஷெனாய் நகர் அரிமா சங்கத்தின் சார்பாக ஒரு நினைவுக் கேடயமும், நுங்கம்பாக்கம் அரிமா சங்கத்தின் சார்பாக ரூ.25,000/-க்கான காசோலையும் எனக்கு வழங்கப்பட்டது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்து என்னைக் கௌரவித்த ஆர்கே திரு. A.S.இராமக்கிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

மீனம்பாக்கம் சுழற்சங்கத்தில் வருகின்ற 2015 ஆகஸ்ட் 12ந்தேதி பேச அழைத்திருக்கிறார்கள். எனது பேச்சுப் பயிற்சியை அங்குதான் சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஆடியோ மற்றும் காணொளி பதிவுகள் நன்றாக வந்து கொண்டிருக்கின்றன. திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் கிட்டத்தட்ட வனபர்வத்தை முடித்துவிட்டார். விராட பர்வம் முழுதுமாக ஆடியோ மற்றும் வீடியோவில் இருக்கிறது. உத்யோக பர்வமும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் அலுவலகத்தில் தன் வேலைகளை முடித்து, வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளையும் முடித்து, இவ்வளவு காணொளிகளைப் படைத்திருப்பது வியப்பைத் தருகிறது. அவருக்கு எனது நன்றி.

2015 மார்ச் 16 அன்று நமது வலைப்பூ ஆயிரம் (1000) பதிவுகளைக் கடந்தது. ஜனவரி 1ந்தேதி 10 லட்சமாக இருந்த பக்கப்பார்வைகள் இப்போது பதினாறு லட்சங்களைக் கடந்திருக்கிறது. ஆறு லட்சம் பார்வைகள் ஏழு மாதங்களில் கிடைத்திருக்கின்றன. முகநூல் பக்கம் இருபத்தேழாயிரம் லைக்குகளைக் கடந்திருக்கிறது. கூகிள்+ல் 5000 பேர் சர்க்கிளில் இணைந்திருக்கிறார்கள்.

2015 ஜனவரி 1ந்தேதி ஆரம்பித்த உத்யோக பர்வம் ஜூலை 31 அன்று நிறைவடைந்தது. 212 நாட்களில் 199 பகுதிகளின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்திருக்கிறது. இடையில் அவ்வப்போது சில ஊர்களுக்குச் செல்ல வேண்டி நேர்ந்ததால் பணியில் கொஞ்சம் வேகம் குறைந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் வேகமடைந்ததால் இவ்வளவு நாட்களுக்குள் நிறைவு செய்ய முடிந்தது.

இதுவரை,
ஆதிபர்வம் பகுதிகள் 236
சபாபர்வம் பகுதிகள் 80
வனபர்வம் பகுதிகள் 313
விராடபர்வம் பகுதிகள் 72
உத்யோகப்பர்வம் பகுதிகள் 199
என மொத்தம் 900 பகுதிகள் நிறைவடைந்துள்ளன.
பீஷ்மபர்வம் பகுதிகள் 124 ஆகும்.

அடுத்து பீஷ்ம பர்வத்தை மொழிபெயர்க்க வேண்டும். பீஷ்ம பர்வத்தின் மூன்றாவது உப பர்வமாக "ஸ்ரீ மத் பகவத்கீதை" வருகிறது. மிகக் கவனமாக மொழிபெயர்க்க வேண்டும். கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கிலத்தைப் படித்து, கும்பகோணம் தமிழ் பதிப்புடன் ஒப்பிட்டே இது வரை, அதாவது சபாபர்வம் முதல் உத்யோக பர்வம் வரை மொழிபெயர்த்திருக்கிறேன். சில நேரங்களில் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கும். அப்போதெல்லாம் நான் கங்குலியைச் சார்ந்தே மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போது, பகவத்கீதையைப் பொறுத்தவரை, மேலும் ஓர் ஒப்பீடாகக் கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த தெய்வத்திரு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்களின் "பகவத் கீதை - உண்மையுருவில்" என்ற புத்தகத்தையும் துணையாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். இந்தப் புத்தகம் பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோவிலில் வாங்கியது. எனவே பகவத் கீதை பகுதிகள் வரும்போது மட்டும் சற்று நிதானமாகவே செய்யலாம் என்றிருக்கிறேன்.

திரு.செல்வராஜ் ஜகன் அவர்கள் பதிவுகளைத் திரட்டித் தந்ததும் உத்யோக பர்வத்தின் முழுமையான பிடிஎஃப் வெளிவரும். நாளை முதல் பீஷ்ம பர்வத்தின் பகுதிகள் வெளிவரும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்.
02.07.2015Tuesday, December 30, 2014

விராட பர்வச் சுவடுகளைத் தேடி


“என்னங்க.. நல்ல மழையா?” என்று நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டேன். “ஓ… விராடபர்வம் முடிச்சிட்டீங்களாக்கும்…” என்றார். “ஆமாங்க முடிஞ்சிடுச்சு” என்றேன். “அதான் மழை பெய்யுதா? ஏற்கனவே மழைக்கும் விராட பர்வத்துக்கும் உள்ள சம்பந்தம்னு, வழக்கத்தில் உள்ள நம்பிக்கையான விராடபர்வம் வாசித்தால் மழைவரும் என்று ஒரு பதிவு போட்டோமே!” என்றார். “அட நீங்க வேற… கடைசிப் பதிவு போட்டவுடன சொல்லுங்க, திருத்தணும்னு சொன்னீங்களே! அதான் ஃபோன் பண்னேன்!” என்றேன். “காலைலேயே திருத்தியாச்சுங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன்!” என்றார். “மழை பெய்யுதே” என்று நான் சொல்வதற்குள், “நான் சிக்னல்ல இருக்கேங்க!” என்றார். “சரி வாங்க” என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.


அடுத்த அரைமணிநேரத்தில் என் வீட்டுக்கு வந்தார். வந்ததும் வராததுமாகக் கையில் வைத்திருந்த கவரைக் கொடுத்தார். என் தம்பி மனைவி திருமதி.ஜெயா அருண் அவர்களிடம், ஜெயவேலன் அவர்கள் என்னிடம் கவரைத்தரும் போது அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கூறினேன். “ஏங்க இப்படிலாம் செய்யக்கூடாதுங்க” என்றார். “அதெல்லாம் செய்யலாம். நீங்க கொடுக்குறீங்க… நான் வாங்குறேன்றது வெளிப்படையா இருக்கணுங்க!” என்று சொல்லி புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன். பிறகு, கவரை வாங்கிக் கிருஷ்ணன் காலடியில் வைத்தேன்…

“ஏங்க… நாம போடுற வீடியோ புக்குங்கள யாரும் பாக்குறது மாறியே தெரியல… விராட பர்வம் வீடியோக்கள மொத்தமாவே 2000 பேர்தான் பாத்துருக்காங்க. நீங்க ஃபேஸ்புக்குல வீடியோ லிங்குகளையும் ஷேர் செஞ்சு பாருங்க. வியூஸ் கூடுதானு பாப்போம்” என்றார். “மகாபாரதம் மொழிபெயர்ப்ப ஆரம்பிச்ச போது, அஞ்சு மாசத்துக்கு மொத்தமா 3000 பேர்தான் பாத்திருந்தாங்க. இப்போ… அது ஒரு நாளைலேயே நடக்குது… காணொளி கொடுக்க இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம்… பாப்போம்.. ஃபேஸ்புக்குலயும் போடுறேன். வேற ஏதாவது செய்ய முடியுமானும் பாப்போம்… இது கண்டிப்பா வயதானவங்களுக்குப் பயன்படுங்க…” என்று சொன்னேன்.

தீபா நடராஜன் அவர்கள் ஆதிபர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். திருமதி.ஜெயலட்சுமி அருண் சபா பர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். தீபா அவர்கள் ஒலிக்கோப்புகள் செய்வதற்கு முன்னரே, திரு.ஜெயவேலன் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆலோசித்திருந்தார். ஆனால் குரல்வளம் மிக்க நண்பர்கள் யாரும் எங்களில் இல்லை. நானேகூட படிக்க சிறு முயற்சி செய்து பார்த்து, தோற்றிருந்தேன். பிறகுதான் தீபா தன்னார்வமாகப் படித்து ஒலிக்கோப்புகள் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு ஜெயலட்சுமி வந்தார். இந்தச் செப்டம்பர் மாதம்தான் ஜெயவேலன் அவர்களுக்குத் திருமணம் முடிந்தது. இதோ டிசம்பருக்குள் அவரது மனைவி திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் விராட பர்வத்தில் அனைத்துப் பதிவுகளையும், வன பர்வத்தில் நூறு பதிவுகளையும் ஒலிக்கோப்புகளாக்கி எனக்கு அனுப்பிவிட்டார். நான் அவற்றைக் காணொளியாக மாற்றி, யூடியூபில் பதிவேற்றி, வலைப்பூவில் இணைப்பு கொடுத்து வருகிறேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று முதன் முதலாகக் கனவு கண்ட நண்பரே “காணொளிகளைப் பலர் பார்க்கவில்லையே” என்று சொன்னது வருத்தமாகவே இருந்தது.

விராட பர்வத்தை மொழிபெயர்த்ததற்கிடையில் மனதில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் என்றால், குறிப்பாக மூன்றைச் சொல்லலாம். ஒன்று சென்னையில் நடந்த வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா, மற்றொன்று மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது. மூன்றாவது நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்களின் தொலைபேசி உரையாடல்.

வெண்முரசு விழாவில் சற்றும் எதிர்பாராமல் மேடையில் அழைத்து, பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு நினைவுப்பரிசை வழங்கிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. முழுமஹாபார மொழிபெயர்ப்பைச் செழுமையாக்க நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்குச் செலுத்தும் எனது நன்றியாக அமைய வேண்டும் என்று பரமனை வேண்டுகிறேன். ஜெயமோகன் அவர்களது பிரயாகை அருமையாக வந்து கொண்டிருக்கிறது.

மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு என நினைக்கிறேன். நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். நமது முழுமஹாபாரதம் குறித்துப் பாராட்டினார். ஏன் இன்னும் முழுமஹாபாரதம் புத்தக வடிவில் வரவில்லை என்று கேட்டார். நான் "புத்தக வடிவமைப்பு தயாராக இருக்கிறது. நண்பரின் அச்சகமும் தயாராக இருக்கிறது. மூலதனம்தான் இல்லை. தற்போதைய நிலையில் ஆதிபர்வம் மட்டும் 1000 புத்தகங்கள் அச்சிடவேண்டுமென்றால் 2 1/2 லட்சம் வரை ஆகும்” என்றும் சொன்னேன். அதற்கு நாமக்கல் திரு.ரவிக்குமார் அவ்ர்கள்,“எழுத்துகள் சிறியதாக இருக்கக்கூடாது. முதியவர்களும் படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்” என்று சொன்னார். “அப்படியென்றால் 900 முதல் 1000 பக்கங்கள் வரை வரும். செலவு இன்னும் அதிகமாகும்” என்றேன். “இப்படி ஒரு நல்ல காரியம் செய்வதற்கு, முழுத் தொகையையும் நானே தருகிறேன். இருப்பினும் மற்ற வாசகர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் தரும் சிறு நன்கொடையைக் கூடப் பெற்றுக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிடலாம்” என்றார். அறிமுகம் இல்லாத நபர் இப்படி ஒரு பெருந்தொகை தர முன்வருவதை என் வாழ்வில் நான் கண்டதில்லை. அவருக்கு என் நன்றி.

இது சம்பந்தமாக ஜெயவேலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். “அவர் சொல்ற மாதிரி, நம்ம பிளாக்ல ஒரு கோரிக்கை வச்சுப் பாருங்க. தப்பில்லைங்க” என்றார். வலைப்பூவில் பதிவிட்டு முகநூலில் பகிர்ந்ததில், மொத்தம் பதினைந்து நண்பர்கள் எனது வங்கிக் கணக்கெண்ணைக் கேட்டுப் பணம் தர முன்வந்தனர். நான் அவற்றை மறுத்து, நண்பர்களின் முடிவான கருத்து என்ன என்பதைக் கேட்டு முடிவெடுத்த பிறகு தருகிறேன் என்று சொன்னேன். அப்படிக் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது அக்கறை கொண்ட நெருக்கமான நண்பர்கள் சிலர், “இப்போதைக்கு இது வேண்டாம். முதலில் முழு மஹாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். தொண்டு என்பது போய், வணிகத்திற்காகவும் நடைபெறும் செயல் என்று முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு பழிக்கு ஆளாகக்கூடாது” என்று தொலைபேசியிலும், முகநூல் அகப்பேழையிலும் கருத்து தெரிவித்தனர். ஜெயவேலன் அவர்களிடம் இந்தக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டேன். “சரி. அப்ப நாம பிறகு பாத்துக்கலாங்க. முதலில் மொழிபெயர்ப்பை மட்டும் கருத்தா பாப்போம்!” என்றார்.

புத்தகம் அச்சிடுவது சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்த போது, திரு.ஹரன்பிரசன்னா அவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் புத்தகம் அச்சிடுவது குறித்துச் சில தகவல்களையும், வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் சொல்லி விட்டு, “உங்க பதிவுகள்ல டெக்ஸ்ட {Text} கலர் கலரா போடுறீங்களே. அதனால படிக்கிறது சிரமமாயிடுது. நார்மலாவே போடலாமே” என்று ஒரு கருத்தைச் சொன்னார். “பதிவ திருத்தும்போது நண்பர் ஜெயவேல் கலர்கலரா எழுத்துங்கள மாத்துறாரு. நான் உங்க கருத்த அவர்கிட்ட சொல்றேன்” என்று சொன்னேன். பிறகு ஜெயவேலன் அவர்களிடம் இது குறித்து இன்றுதான் அதுகுறித்துப் பேசினேன். “ஏங்க… படிக்கிறது கஷ்டமாயிருக்கும்னுதான் நானும் நினைச்சேன்…. ஆனா… நான் என்ன செய்றேன் தெரியுமா…? ஒவ்வொரு பதிவுலயும் உள்ள பெயர்ச்சொற்கள்ல மனிதர்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், இடங்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், உவமைகளை ஒரு கலர்லயும், நீதிகள ஒரு கலர்லயும், முக்கியமான வரிகள ஒரு கலர்லயும், சாத்தியக்கூறுகள்ல சந்தேகம் வர்ற மாதிரி உள்ள வரிகள ஒரு கலர்லயும் மாத்துறேன். நாளைக்குப் பின்ன இது குறிச்சுத் தேடுறவங்களுக்கு, ஈசீயா இருக்கும்… நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார். “சரிதான். செய்யுங்க! ஆனா எழுத்துக்குப் பின்னாடி வர்ற {Background} கலர் வேண்டாமே” என்றேன் நான். அவர், “சரி!” என்றார்.

“அப்புறம், உத்யோக பர்வம் எப்போ ஆரம்பிக்கிறீங்க?” என்று கேட்டார். “ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி அன்று ஆரம்பிக்கப் போறேன்” என்றேன். “அதுவரை!” என்றார். “விராட பர்வத்துக்கான “சுவடுகளைத் தேடி” பதிவு எழுதணும். உங்க வைஃப் தேவகி அனுப்பி வச்சிருக்கும், விராட பர்வ ஆடியோ பதிவுகள் பகுதி 56 முதல் 72 வரை வீடியோ புக்கா மாத்தாமலேயே இருக்கு. அதை மாத்தி யூடியூபில போடணும். வனபர்வம் 100 பதிவுங்க ஆடியோ அனுப்பியிருக்காங்க அது இப்ப முடியலனாலும், பின்னயாவது வீடியோ புக்கா மாத்தணும். ஆதிபர்வ பதிவுங்க எதுக்குமே “பதிவின் சுருக்கம்” இல்ல. அதப் போடணும். இது வரை உள்ள நாலு பர்வத்தையும் பிரிண்ட் எடுத்து எங்கப்பாக்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லிருந்தேன். நிறையப் பிழை சுட்டிக்காட்டியிருக்காங்க. அதையெல்லாம் திருத்தணும். நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் விராடபர்வப் பதிவுகள எல்லாம் திரட்டி இமெயில் அனுப்பிச்சிருக்காரு. அதுக்கு ஒரு ராப்பர் {முகப்பு அட்டை} டிசைன் செய்து, விராட பர்வ பிடிஎஃப்க்கான வேலைய ஆரம்பிக்கணும். வேலையாங்க இல்ல. நிறைய இருக்கு. ஆனா இதையெல்லாம் மூணு நாள்ல செஞ்சுட முடியாது. பொறுமையாத்தான் செய்யணும். பாப்போம்” என்றேன்.

ஜெயவேலன் அவர்களுக்கு இன்று நிறைய வேலைகள் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும், எனக்காக நேரத்தை ஒதுக்கி வந்திருந்தார். அதனால், அதிகம் பேசமுடியவில்லை. உடனே கிளம்பிவிட்டார். ஒவ்வொரு பர்வம் முடிந்தவுடனும் என்னை உற்சாகபடுத்தும் விதமாக மகாபாரதப் பர்வத்தில் வரும் பகுதிகளின் எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுத்து வருகிறார்.மாலை வரை அவர் தந்த கவர் கிருஷ்ணன் காலடியிலேயே இருந்தது. என் மனைவி, “கவரை இன்னும் பிரிச்சுக் கூடப் பாக்கல” என்றாள். “இல்ல... சாமிகிட்ட வச்சேன், பிறகு வேலைல மறந்துட்டேன். நீ பாத்திருக்கலாமே” என்றேன். “நீங்க வந்து எடுத்துக் கொடுப்பீங்கனு நினைச்சேன்” என்றாள். “சரி… பிரி” என்று சொல்லி கவரை எடுத்துக் கொடுத்தேன். ரூ.7,200 இருந்தது. “அவரு குடுக்குறார்னு, நீங்களே வாங்கிட்டே இருக்கீங்களே! தப்பில்லையா” என்றாள். “தப்புதான். வாங்கலேனா அவர் மனசு புண்படும். நான் வேற யாருகிட்டயும் வாங்கல. என் நண்பர் நமக்கு மகிழ்ச்சியா கொடுக்கிறார். வாங்கிக்கிறேன்” என்றேன். “ஏங்க… நாம இதுவரை யாருக்காவது இப்படிப் பணம் கொடுத்திருக்கோமா… இல்ல கொடுக்கத்தான் செய்வோமா… இவருக்கு எப்படிங்க மனசு வருது” என்றாள். “அதுதான் ஜெயவேல்” என்றேன். இதையேதான் என் சித்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வனபர்வம் 313 பகுதிகள்  முடிந்தபோதும்  கேட்டார். ஜெயவேலன் பணம் தருவது பெரிதல்ல. முழுமஹாபாரதத்திற்கும் அவர் செலுத்தி வரும் உழைப்பே பெரிது. இன்னும் பெரிதினும் பெரிது, அவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஈடுபாட்டுடன் உதவுவது.

அக்டோபர் மாதம் 22ந்தேதி, தீபாவளி அன்று விராட பர்வ மொழி பெயர்ப்பை ஆரம்பித்தேன். டிசம்பர் மாதம் 28ந்தேதி நிறைவடைந்திருக்கிறது. 68 நாட்களில் 72 பகுதிகளின் மொழிபெயர்ப்பு முடிந்திருக்கிறது. அடுத்து உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வேண்டும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்.
29.12.2014 

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!Saturday, October 18, 2014

வனபர்வச் சுவடுகளைத் தேடி!

மஹாபராதத்திலேயே பெரிய பர்வம் சாந்தி பர்வம். அதற்கடுத்து பெரிய பர்வம் வன பர்வமே. அப்படிப்பட்ட வனபர்வத்தை மொழிபெயர்த்து முடிக்க ஒரு வருடத்திற்கு மேல் நிச்சயம் ஆகும் என்று நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே வனபர்வம் இனிதே முடிந்தது. வனபர்வம் கடைசி பகுதியை நேற்றிரவு (16.10.2014) நான் மொழிபெயர்த்து முடித்து வலைப்பூவில் வலையேற்றி முடிக்க இரவு மணி 2.30 ஆனது. காலை 8.00 மணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் சமயத்தில்தான் எழுந்தேன். எழுந்ததும் முகத்தை மட்டும் கழுவி பிள்ளைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, கடைசி பதிவைத் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்ப்பதற்காக வலைப்பூவைத் திறந்து பார்த்தேன். நண்பர் ஜெயவேலன் அவர்கள் அந்தப் பதிவையும் திருத்தி முடித்திருந்தார்.


ஒரு பதிவை மொழிபெயர்த்ததும், வரிகள் எதையும் தடித்த எழுத்துகளாக மாற்றாமலும், பிழை திருத்தம் ஏதும் செய்யாமலும், எந்த ஒரு ஒழுங்கமைப்பும் செய்யாமலும், அப்படியே வலைப்பூவில் இடுவதுதான் என் வேலை. அதன் பிறகு எழுத்துகளுக்கு வண்ணம் மாற்றுவது, சில பார்மேட்டிங்குகள் செய்வது, முக்கியமான வரிகளை தடித்த எழுத்துகளில் அமைப்பது, கண்ணில் உடனே படும் பிழை திருத்தங்கள் போன்றவற்றை ஜெயவேலனே செய்து வருகிறார். எப்போதும் பத்து பதிவுகள் பின் தங்கியே இருப்பார். "நள்ளிரவில்தானே பதிவிட்டோம், அதற்குள் திருத்திவிட்டாரே!” என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே என்னைத் தொலைபேசியில் அழைத்து, “நானும் என் மனைவியும் அங்கேதாங்க வர்றோம். வீட்லதானே இருக்கீங்க" என்று கேட்டார். நான் "ஆமாங்க இங்கதான் இருக்கேன். வாங்க" என்றேன்.

ஜெயவேல் அவர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம்தான் திருமணம் நடந்தது. "நண்பருக்குத் திருமணமாகிவிட்டது, இனி அவரது மனம் மகாபாரதத்தில் ஈடுபடுவது கடினம்" என்று நினைத்து, அவரை அடிக்கடி தொல்லை கொடுக்கக்கூடாதே என்றெண்ணி தொலைபேசியில் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்தேன். இந்நிலையில்தான் வனபர்வ மொழிபெயர்ப்பும் முடிந்தது. அவரது தொலைபேசி அழைப்பும் வந்தது.

இதை நினைத்தபடியே சிற்றுண்டியை முடித்து, வழக்கம் போல என் கணினி வரைகலை மையத்தைத் திறந்து, ஏற்கனவே ஏற்றிருந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். அரை மணிநேரத்தில் அலுவலகத்துக்கு வந்த அவரையும், அவரது மனைவி தேவகி அவர்களையும் வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். வனபர்வம் முடிச்சிட்டீங்க!” என்றார் மகிழ்ச்சியாக. என் தந்தை, என் மனைவி, என் தம்பிகளின் மனைவியர் என அனைவரையும் குசலம் விசாரித்தார். அவரும் அவரது மனைவியும் இணையாகச் சேர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்தது இதுவே முதல் முறை. இருப்பினும் எதுவும் செய்ய முடியாத நிலையில் நான்... சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கிளம்பும் முன் பையில் இருந்து கவரை எடுத்தார். என் மனைவி சமைலறைக்குள் சென்றுவிட்டாள். அதைப் பார்த்த திரு.ஜெயவேலன்,அவங்க வாங்க மாட்டாங்க... நீங்கதான் வாங்கணும்" என்றார். நான் மறுபேச்சில்லாமல் கவரை வாங்கி கிருஷ்ணன் காலுக்கடியில் வைத்தேன்.

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழைவிடுவதற்காக சிறிது நேரம் காத்திருந்த அவர், வனபர்வத்தில் ஏங்க கர்ணன் கதை வருகிறது?” என்று கேட்டார். “பாண்டவர்களின் பனிரெண்டாம் {12} ஆண்டு வனவாசத்தில் கர்ணன் தன்னோட கவசத்தையும், குண்டலங்களையும் இழக்கிறான். அதனாலதான் வனபர்வத்தோட கடைசில கர்ணன் வருகிறான்" என்றேன். மேலும், “ஃபேஸ்புக்கிலயும், விவாத மேடையிலேயும் கர்ணன் சம்பந்தமா நடந்த விவாதங்களப் பாத்தீங்களா?” என்று கேட்டேன். “ஆமாங்க... பாத்தேன்... தேவையில்லாத விவாதங்க" என்றார். “தேவையற்றது என்பது மேலெழுந்தவாரியாகச் சரிதான் என்றாலும், நமது ஞானமரபென்பதே விவாதங்களில் வளர்ந்ததுதானே! மகாபாரதம் உரைக்கப்படுவதும் விவாதமாகவே உரைக்கப்படுகிறது. வைசம்பாயனருக்கும் ஜனமேஜயனுக்கு இடையில் நடந்த உரையாடலை நைமிச வனத்தில் முனிவர்களுக்கு சௌதி {சூத பௌராணிகர்} உரைப்பதே மகாபாரதம்" என்று நினைத்து அவருக்கு பதிலளிக்கும் முன்பே மழைவிட்டதால், ஜெயவேல் அவர்கள் கிளம்பத் தயாரானார்.

ஜெயவேல் கிளம்பவும், எனது சித்தி திருமதி.பிரபா அவர்கள் வரவும் சரியாக இருந்தது. சிறு வயதில் என்னை வளர்த்தவர் அவர்தான்.சித்தி! வனபர்வம் மொழிபெயர்ப்பை முடிச்சிட்டேன் சித்தி" என்றேன். “நல்லாயிருப்படே!” என்றார்கள். கிருஷ்ணன் காலுக்கடியில் இருந்த கவரை எடுத்து என் சித்தியிடம் கொடுத்து, ஜெயவேல் அவர்கள் கொடுத்ததைப் பற்றிச் சொன்னேன். என் சித்தி மகிழ்ந்து, “அப்படியா...? ஏடே... எவ்வளவுடே...” என்றார்கள்.முப்பத்தோராயிரத்து முன்னூறு {31300} இருக்கும் சித்தி", அதெப்படிடே கரெக்டா இவ்வளவு சொச்சம் இருக்கும்னு கவரப் பிரிக்காம சொல்றா" என்றார்கள். வனபர்வம் முன்னூத்திபதிமூணு {313} பகுதி சித்தி" என்று சொன்னேன். பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, “அதெப்பிடிடே.. அந்த மனுசனுக்கு இப்படி மனசு வருது!” என்று கேட்டார். “அந்த ஆளு நல்லா இருக்கணுன்டே!” என்று சொல்லி, தன் கையில் இருந்த நூறு ரூபாயைக் கொடுத்து, "இத லட்சமா நினைச்சுகணுண்டே" என்று சொல்லி என் தலையைக் கோதிக் கொடுத்தார்.

3.11.2013 அன்று வன பர்வத்தை மொழிபெயர்க்கத்தொடங்கினேன். இன்று {17.10.2014 அன்று} வன பர்வ மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது. மொத்தம் 348 நாட்கள் ஆகியிருக்கின்றன {11 மாதங்களும் 14 நாட்களும்}. வன பர்வம் ஆரம்பித்த போது, இரண்டு லட்சம் {200000} பார்வைகள் பெற்றிருந்த முழுமஹாபாரத வலைப்பூ இப்போது ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் {950000} பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் நண்பர் ஜெயவேலன் என்றால் அது மிகையாகாது. மொழிபெயர்த்த பகுதிகளைப் பார்வையாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே முகநூல் கணக்கினைத் தொடங்கினேன்; பல குழுமங்களில் சேர்ந்தேன்; பல திரட்டிகளில் முழுமஹாபாரத வலைப்பூவை இணைத்தேன். ஆனால், திரட்டிகளில் இணைப்பதற்காக நான் வலைப்பூவில் இடும் கோடிங்குகளால் வலைப்பூ திறப்பது தாமதமாகிறது என்ற காரணத்தால் சில திரட்டிகளின் இணைப்பை நீக்கிவிட்டேன். பல குழுமங்களில் ஏன் மகாபாரதத்தையே போடுகிறீர்கள் என்ற எதிர்வினையின் காரணமாக அவற்றில் இருந்தும் விலகிவிட்டேன். ஒரு நண்பர், "குப்பைகளை இங்கே ஏன் குவிக்கிறீர்கள்" என்றே கேட்டார். நான் அவர்களிடம், "குப்பைகளிலேயே வாழ்பவர்களுக்கு, குப்பையில் கிடக்கும் ரத்தினமும் குப்பையாகத் தான் தெரியும். பரவாயில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி ஒரு குழுமத்தில் இருந்து விலகினேன். இப்போதெல்லாம் எனது முகநூல் கணக்கில் தொடங்கப்பட்ட முழுமஹாபாரதம் பக்கத்திலும், எனது சுவரிலும் மட்டுமே பதிவுகளைப் பகிர்கிறேன்.

மொழியாக்கப்பணிக்காக பல பாராட்டுகள் வந்தாலும், சில எதிர்வினைகள் மனதைச் சோர்வடையவே செய்கின்றன. முகநூல் மற்றும் G+ஆகியவற்றில் வந்த எதிர்வினைகளை நான் ஏற்கனவே பகிர்ந்திருப்பதால் வேறு ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

தீவிரத் தமிழ்ப்பற்றும், பொதுவுடைமை மற்றும் தலித்திய சிந்தனைகளும் கொண்ட ஒரு நண்பர் தனது வரைகலைப் பணிக்காக எனது அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார். அப்படி அவர் வரும் ஒரு சமயத்தில் நான் இணையத்தில் முழுமஹாபாரதம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, ஏங்க. உங்களுக்கு வேற வேலையே இல்லையாங்க. நீங்களும் கெட்டு, மற்றவர்களையும் ஏங்க கெடுக்குறீங்க" என்றார். “நல்லதச் செய்றதாத்தான் நான் நினைக்கிறேன். நான் வேற என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?” என்றேன். “ஏங்க நீங்க தமிழங்க... தமிழுக்காக நீங்க இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க சொல்லுங்க பார்ப்போம்...”, தோழர், மஹாபாரதம் தமிழ்லதான் எழுதுறேன் தோழர். தமிழர்கள் படிக்கத்தான் எழுதுறேன். மகாபாரதத்தைப் படிக்காமலேயே உங்கள மாரி ஆளுங்க திட்டும்போது, அதைக் கேட்கும் தமிழர்களும் மகாபாரதத்தை முழுசா படிக்காததனாலதானே நீங்க சொல்றதெல்லாம் உண்மைனு நம்புறாங்க. முழுசா இலவசமா இணையத்திலேயே கிடைக்குதுன்னா, ஒரு சிலராவது படிப்பாங்களே தோழர். நீங்க ரொம்பலாம் பொய் சொல்ல முடியாதுல்ல. இன்னும் கேட்டா வேற மொழியில இருக்கிற ஒரு படைப்பை தமிழுக்குக் கொண்டு வர்றதும் தமிழுக்குச் செய்யுற தொண்டுதானே" என்றேன். “நல்லா இருக்குதுங்க ஒங்க தொண்டு. பாப்பான தூக்கி நிறுத்திறதுக்குப் பார்ப்பனீயம் இருக்கு. பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்க உங்கள மாறி அடிமைங்க. தமிழுக்குத் தொண்டு செய்ங்கனா செய்யமாட்டீங்க" என்றார். “சரி தோழர். என்னால்தான் நீங்கள் நினைக்குமளவுக்கு தொண்டு செய்ய முடியவில்லை. நீங்கள் தமிழுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எது பார்ப்பனீயம்னு சொல்றீங்க?” என்று கேட்டேன். “இந்துமதம்தாங்க தோழர் பார்ப்பனீயம். இந்து மதம்ன்ற பேர்லதான பார்ப்பான் பார்ப்பனீயத்தை போதிச்சி, நம்மை அடிமையாக்கி வச்சிருக்கான். அதெல்லாம் தோலுரிச்சு காட்டுறதுதான் தமிழுக்கு நான் செய்யும் தொண்டு." என்றார். “ஓ! இதுதான் தொண்டா? சரி தோழர் எது இந்து மதம்?” என்று கேட்டேன். “புராணங்களிலேயும், வேதங்களிலேயும் மனுசன நாலா பிரிச்சு வச்சுச்சுல அந்த மதம்தான் இந்து மதம்" என்றார். “இந்து மதம்னு ஒன்னு இருக்குணு எந்த புராணத்துல, அல்லது வேதத்துல சொல்லியிருக்கு தோழர்சரி நீங்க சொல்றபடியே பார்த்தாலும், நாலாத்தான பிரிச்சிருக்கானு சொல்றீங்க, இங்க நாப்பதாயிரம் இருக்கே! அதையெல்லாம் யார் பிரிச்சது" என்று கேட்டேன். “தோழர் ஆசிவகம்தான் தோழர் தமிழர் மதம். நம்மள இந்து மதம்ன்ற பேருல இப்படி நாப்பதாயிரமா பிரிச்சிட்டானுக தோழர்" என்றார் நண்பர். “ஆசிவகம் என்ற சொல் தமிழா தோழர்?” என்று கேட்டேன். “என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. சீவன்ற வார்த்தைல இருந்து வந்ததுங்க ஆசிவகம்" என்றார். “ஜீவன் என்ற வார்த்தையை சீவன் என்று சொல்லிக் கொண்டால் அது தமிழாகுமா தோழர்?” என்று மீண்டும் கேட்டேன். “ஏங்க உங்களலாம் திருத்தவே முடியாதுங்க. தமிழ் வார்த்தைய எல்லாம் அவன் திருடிப்பான். நீங்க அது தமிழ் இல்ல. இது தமிழ் இல்லனுவீங்க. நீங்க எப்படியும் கெட்டு நாசமா போங்க, தமிழர்கள விட்ருங்க!” என்று திட்டாத குறையாக விட்டுச் சென்றார் அந்த நண்பர்.

ஒரு இடதுசாரி நண்பர், "என்னங்க உங்க மகாபாரதம்லாம் எப்படி போகுது" என்று கேட்டார். நான், "பரவாயில்லை தோழர் எட்டு லட்சம் வியூ கிடைச்சிருக்கு தோழர்" என்றேன். "அதனால எவ்வளவு சம்பாதிச்சீங்க. ஒரு வியூவுக்கு ஒரு ரூபானாலும் எட்டு லட்சம் சம்பாதிச்சிருக்கணுமே. உழைப்ப சரியா பயன்படுத்தணும் தோழர்" என்றார். அப்படிச் சொன்னவர் நான் பெரிதும் மதிக்கும் ஒரு தோழராவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு காரணமாக இருந்தவரும் அவர்தான். "நீங்க இடதுசாரி சிந்தனை இல்லாதவர். உங்களுக்கு இங்க இருக்கிறது ரொம்ப கஷ்டம், கட்சிக்கு கஷ்டம்" என்று சொல்லி கட்சியில் இருந்து விலக வைத்தவர். கட்சியில் இருந்தேன் என்றுதான் பெயர், பெரிதான எந்த இயக்கங்களிலும் நான் கலந்து கொண்டது கிடையாது. ஒரு நண்பரின் வற்புறுத்தலாலேயே கட்சியில் நான் இணைந்திருந்தேன். அப்படிப்பட அவரிடம், "நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை தோழர். உங்களுக்காகத்தான் செய்றேன்" என்று சொல்லி மனதில் பட்டதையெல்லாம் பட் பட் என்று சொல்லி திட்டி அனுப்பி விட்டேன். திட்டிவிட்ட பிறகு இப்படி நடந்து கொண்டோமே என்று மனம் வருந்தியதால் அன்று மொழிபெயர்ப்பைச் செய்ய முடியவில்லை. இப்படி பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியும், எதிர்ப்புகள் வரும்போது துயரமும் அடைந்தேன். "முரண்பட்ட இரட்டைகளைச் சமமாகக் கருத வேண்டும்" என்று மகாபாரதம் அடிக்கடிச் சுட்டிக்காட்டினாலும், மகாபாரதத்தை மொழிபெயர்த்து வரும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. முயன்றுதான் வருகிறேன். சித்திக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இறைமறுப்பாளர்களும், இடதுசாரிகளும், தலித்தியம் பேசுபவர்களுமாகவே இருக்கிறார்கள். ஆன்மிகவாதிகள், வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் ஆகியோரிடம் என்னால் ஒன்ற முடியவில்லை. முகம் தெரியாத ஆன்மிகவாதிகள் மற்றும் வலதுசாரிகளே, இணைய வழியாக எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதே கிடையாது.

இப்படி ஒரு சிலர் அரசியல் ரீதியாக அணுகி எதிர்வினை புரிந்தாலும், "தொழில் மந்தமாகப் போகிறது! வேண்டாத வேலை செய்கிறீர்கள். இது ஆரம்பிப்பதற்கு முன் எவ்வளவு சம்பாதித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது எவ்வளவு சம்பாதிக்கீறீர்கள்! உங்கள் நேரத்தையெல்லாம் வீண் செய்கிறீர்கள். பிள்ளைகளைப் பற்றி கொஞ்சமாவது அக்கறை இருந்தால் இப்படிச் செய்வீர்களா?” என்று கேட்கப்படும் ஒரு சில நண்பர்களின் எதிர்வினைகளை எதிர்கொள்ள முடியாமல் சில நேரங்களில் சோர்வடைந்திருக்கிறேன். அப்படி சோர்வடையும் நேரங்களில், வீட்டில் இருக்கும் கணினியில் நான் அமராமல் இருப்பதைக் கவனிக்கும் என் மனைவி, “என்னங்க மகாபாரதம் பண்ணலையா?” என்று கேட்பாள். இல்ல லட்சுமி வேல அதிகம் மனசு வேற சரியில்ல" என்று சொல்லி படுத்துவிடுவேன். அடுத்த நாள், என் மனைவி இரவு நான் அலுவலகம் மூடுவதற்கு முன்பே வந்து இன்னும் மூடவில்லையா என்று கேட்டு, உடன் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று, “மகாபாரதம் எப்படி போகுது, மெயில் ஏதாவது வந்துச்சா.. அவரு இப்படி பாராட்டினாரு, இவரு இப்படி சொல்லியிருக்காரும்பீங்க.. இப்ப ஒன்னுமே சொல்ல மாட்றீங்களே" என்று கேட்டு அருகில் அமர்ந்து மெயில்களைப் பார்ப்பாள். “எல்லாரும் பாராட்ட மட்டுந்தான் செய்றாங்க, குறையே சொல்ல மாட்றாங்கல" என்பாள். “இப்ப எத்தனாவது பகுதி எழுதுறீங்க. ஏன் ரொம்ப ஸ்லோவா போறீங்க. இப்ப மகாபாரதத்துல என்ன கதை வருது" என்று கேட்டு உற்சாகமூட்டுவாள். நானும் மீண்டும் கதையில் ஒன்றி, எதிர்வினைகளை மறந்து பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன்.

சோர்வாகும் சில நேரங்களில் ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு, விஜய் டிவி மஹாபாரதம் ஆகியன என்னை பழைய நிலைக்குத் திருப்பும். இங்கே ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு குறித்து சில வார்த்தைகள்.... முதற்கனலை முழுமையாக நாள் விடாமல் தொடர்ந்து படித்தேன். ஆரம்பத்தில் சில விமர்சனங்களும் எழுதினேன். ஆனால் நேரமின்மையால் அதைத் தொடர முடியாமல் போயிற்று. விமர்சனம் எழுத முடியவில்லையாயினும் முதற்கனலை முழுதாய்த் தொடர்ந்து முடித்தேன். வேலை அதிகரித்ததன் காரணமாக மழைப்பாடலின் ஆரம்பத்தில் சற்று நிறுத்தினேன். அப்படியே அதற்கு மேல் தொடராமல் விட்டுவிட்டேன். அற்புதமான சொற்களால் வேறு கோணத்தில் இருந்து கதையை விளக்குவது லேசுபட்ட காரியமா? கதைசொல்லும் நேர்த்தியிலும், புதிய சொற்களைக் கையாளும் விதத்திலும், பாத்திரங்களின் தன்மையைப் படைப்பதிலும் நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டுவருகிறார் ஜெயமோகன். மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். விட்டதில் இருந்து அல்ல. தொட்ட இடத்தில் {ஆரம்பத்தில்} இருந்து...

விஜய் டிவி மகாபாரதம் நல்ல நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பல இடங்களில் மூலத்திற்கு மிக அந்நியமாகவே போகிறது. வழக்கமாகக் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கர்ணன் கதாப்பாத்திரத்தைத்தான் சற்று மிகைப்பட சொல்வார்கள். ஆனால் விஜய் டிவியில் அனைத்து கதாப்பாத்திரங்களின் இயல்பும் மிகைப்படவே சொல்லப்படுகிறது. அம்பறாத்தூணியே இல்லாத வில்லாளிகளை விஜய் டிவியின் மகாபாரதத்தில்தான் பார்க்கலாம். அதற்காக அந்தப் படைப்பை மொத்தமும் குறைசொல்லிவிடவும் முடியாது. காட்சி அமைப்பிலும், விறுவிறுப்பைக் கூட்டியிருப்பதிலும் அவர்கள் வென்றே இருக்கிறார்கள்.

காசியில் வியாசர் கோவில் அருகில்
திரு.ஜெயவேலன், நான் மற்றும் திரு.ஜெகதீஷ்
வனபர்வம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போது வடநாடு செல்லவும், பல கோவில்களைத் தரிசிக்கவும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 6.5.2014 அன்று நண்பர் ஜெகதீஷ், ஜெயவேல் மற்றும் சீனிவாசன் அவர்களுடன் காசி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு நல்கிய நண்பர் ஜெகதீஷ் அவர்களுக்கும், அந்தப்பயணத்தின் போது எங்கள் அனைவரையும் தாய் போல கவனித்து வந்த திருமதி.கீதா {திரு.ஜெகதீஷ் அவர்களின் மனைவி} அவர்களுக்கும் நன்றிகள் கோடி. அவர்கள் புண்ணியத்தில் உயிர்கொண்ட தெய்வமான அன்னை கங்கை மடியின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன். அப்பயணத்தின் போது, திரு.ஜெகதீஷ் அவர்களின் பிள்ளைகள் ஆதித்யா மற்றும் ஆகாஷ் அவர்களின் மஹாபாரத அறிவையும், பொது அறிவையும் கண்டு வியந்தேன். இன்றும் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமையாக இருக்கிறது. அப்பயணத்தின் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் செல்லவும், பிறகு, நண்பர் திரு. ஜெயவேலன் அவர்கள் திருமணத்திற்காக ஸ்ரீரங்கம் சென்ற போது, ரங்கனைத் தரிசித்து, காவேரி அன்னையின் மடியில் தவழவும் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்கள் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார். அவர் பூரண குணமடைய பரமனை மனதாரத் தியானிக்கிறேன்.

சரி நமது வலைப்பூவுக்குத் திரும்புவோம்....

புதிதாக அருஞ்சொற்பொருள் என்ற பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். சில தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் {#} என்ற குறிகளை இட்டு, அந்த குறிகளுக்கு ஹைப்பர்லிங்க் கொடுத்துவருகிறேன். அந்த ஹைப்பர்லிங்கைத் தொடர்ந்து சென்றால், அந்தச் சொல்லின் பொருள் தெரியும். இது வலிந்து சம்ஸ்க்ருதத்தை விலக்குவதற்காக அல்ல. அழகிய தமிழ்ச்சொற்களை வலிந்து நாம் ஏன் கைவிட வேண்டும். நடைமுறையில் அவற்றைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் செய்கிறேன்.

வலைப்பூ பதிவுகளுக்குத் துணையாக பல துணைபக்கங்களைச் செய்திருந்தாலும், அவை எதுவும் மேம்படுத்தப்படாமலேயே {update} இருக்கின்றன. நாட்குறிப்பு, பெயர்க்காரணம், நீதிமொழிகள் ஆகியன அப்படியே இருக்கின்றன. மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அதை திரு.ஜெயவேலன் அவர்கள்தான் செய்ய வேண்டும். விவாத மேடை பகுதி மட்டும்தான் நன்றாக செயல்படுகிறது. விவாத மேடையில் திரு.தாமரை, திரு.மெய்யப்பன் அருண், திரு.தமிழ்வள்ளுவர், திரு.சதானந்த கிருஷ்ணன் ஆகியோர் நன்றாக விவாதித்து வருகின்றனர்.

விவாத மேடையில் "வஞ்சகன்- கண்ணனா? கர்ணனா?" என்ற திரியின் நல்ல விவாதங்கள் நடைபெற்றன. அவற்றை நான் முகநூலிலும், முழுமகாபாரத வலைப்பூவின் முகப்பிலும் வெளியிட்டேன். நான் கண்ணனுக்கு ஆதரவான நிலையை எடுத்தாலும், கர்ணனுக்கு ஆதரவாகப் பேசிய திரு.மெய்யப்பன்அருண் அவர்களின் மறுமொழிகள் மிகவும் கவரும் வகையில் இருப்பதைக் கண்டு சிந்தித்திருக்கிறேன். அதற்கு பதில் சொன்ன தாமரை, சதானந்த கிருஷ்ணன் ஆகியோரின் மறுமொழிகளும் அருமையாக இருந்தன.

இவற்றையெல்லாம் முகநூலில் பகிர்ந்த போது எதிர்பாராத எதிர்ப்புகள் வந்தன. “உன் கருத்துகள் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோல எழுதாதே" என்று ஒருமையிலேயே கூட மருமொழிகள் வந்தன. இவ்வளவுக்கும் நான் என் கருத்து என்று எதையுமே முன்வைக்கவில்லை. விவாத மேடையில் நடந்த நணபர்களின் விவாதங்களைத் தொகுத்தே வெளியிட்டேன். கருத்து என்று வரும்போது நிச்சயம் ஒரு நிலையை எடுத்துத்தான் ஆக வேண்டும். இருப்பது இரண்டு நிலைகள்தான். நான் இருபுறமும் சேரமாட்டேன் என்றால் அது நேர்மையாக இருக்காது என்றே கருதுகிறேன். விவாதங்களில் ஈடுபடும்போது, எதிர்நிலை எடுக்கும் நண்பர்களின் மதிப்புமிக்க கருத்துகளை கவனத்தில் கொள்ளவே செய்கிறேன். குறிப்பாக கர்ணன் சம்பந்தமான விவாதங்களில் எதிர்நிலை எடுத்திருந்த நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் "கர்ணன் பாண்டவர்களைவிட மிகவும் நல்லவனா?” என்று வரும்போது, நான் அக்கருத்துக்கு எதிர்நிலையே எடுத்திருக்கிறேன். இதனால் மொழிபெயர்ப்பில் பாரபட்சம் காட்டுவேனோ என்று நினைப்பது தவறு. அப்படி நான் பாரபட்சம் காட்டவே முடியாது. ஏனெனில், கங்குலியின் வரிகளை வரிக்குவரி சரியாக மொழிபெயர்க்கவே முயன்றுவருகிறேன். என் கருத்துகளையோ, நான் கொண்ட நிலைகளையோ பதிவுகளில் திணிக்க நான் முயன்றதில்லை. எங்காவது பொருளில் விலகிச் சென்றிருக்கிறேன் என்று நண்பர்கள் கருதினால், எனக்குச் சுட்டிக்காட்டவும். நான் நிச்சயம் திருத்திக் கொள்வேன். மொழிபெயர்க்கிறேன் என்பதற்காக கருத்து கூறும் சுதந்திரத்தையும் நான் இழக்க விரும்பவில்லை.

முழுமஹாபாரத்தையும் முழுமூச்சாகப் படிக்கச் சிரமப்படுபவர்களுக்கென்று முழு மஹாபாரதத்தில் இருந்து சிறு சிறு கதைகளாகச் சேகரித்து மின்புத்தகங்களாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. அப்போது வன பர்வத்தில நளன் தமயந்தி கதையை மொழிபெயர்த்து முடித்திருந்தேன். எனவே, முதலில் நளன் தமயந்தி கதையை மட்டும் தொகுத்து மின்புத்தகமாக அளித்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு வரிசையாக உதங்கா, ருருவும் பிரம்மத்வாராவும், கருடன், பரிக்ஷித், ஜரத்காரு, ஆஸ்தீகர், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகியவற்றைத் தொகுத்து மின்புத்தகமாக வெளியிட்டேன். நண்பர் ராமராஜன் மாணிக்கவேல் அவர்கள் வனபர்வத்தில் கந்தன் கதை வரும் பகுதிகளைத் தொகுத்து, அட்டையும் வடிவமைத்து மின்புத்தமாக எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார். அதை அப்படி அவர்கள் அளித்தவாறே திருத்தங்கள் இன்றி மஹாபாரதச் சிறுகதைகள் மின்புத்தகத் தொகுப்பில் சேர்த்தேன்.

ராமராஜன் மாணிக்கவேல் அவர்கள், நான் இடும் பதிவுகளை ஜெயவேல் திருத்துவதற்கு முன்பே பிழைகளைக் கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிவருகிறார். கிட்டத்தட்ட அவர் முழுமஹாபாரத பதிவுகளுக்கு ஒரு ப்ரூஃப் ரீடர் போலவே செயலாற்றி வருகிறார். இதைத்தவிர பதிவுகளின் தலைப்புகளிலும் தனது ஆலோசனைகளை வழங்கி வருகிறார். திரு.ராமராஜன் மாணிக்க வேல் அவர்களுக்கு நன்றி.

வனபர்வத்தில் 50 பகுதிகள் கொண்ட ஒவ்வொரு தொகுதி முடிவடையும்போதும் நண்பர்கள் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்களும், சிலவேளைகளில் திரு.வீரசிங்கம் விசிதன் அவர்களும் அவற்றைச் சேகரித்துத் தொகுத்து MS Word கோப்பாக எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றுக்கு மேலட்டை மட்டும் வடிவமைத்து, அவ்வப்போது நமது முழுமஹாபாரதம் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன். வனபர்வம் பகுதிகள் அனைத்தையும் (001-313 பகுதிகள் வரை} புதிதாக, கடைசியாக செய்யப்பட்டத் திருத்தங்களுடன் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் சேகரித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் அனுப்பித்தந்ததும் வனபர்வம் முழு பிடிஎப் கோப்பாக நமது வலைப்பூவில் அளிப்பேன். மேற்கண்ட நண்பர்களுக்கு நன்றி. சில நண்பர்கள், முகநூலில் நமது பதிவுகளைப் பகிர்ந்தும், ஆலோசனைகள் கூறியும், விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டும் வருகிறார்கள். அந்த நண்பர்களுக்கு நன்றி.

தீபா நடராஜன் என்ற முகநூல் நண்பர் ஒருவர், "ஏன் மஹாபாரதப் பதிவுகளை ஆடியோ கோப்புகளாக்கக்கூடாது" என்று கேட்டார். அதற்கு நான் ஏற்கனவே முயன்றதையும், என் குரல் நன்றாக இல்லாததால் அம்முயற்சியை கைவிட்டதையும், நான் தீபா அவர்களிடம் சொன்னேன். “நான் செய்து தரட்டுமா?” என்று கேட்டார். “தாராளமாக, உங்களுக்குக் கோடி புண்ணியம்" என்று சொன்னேன். முதல் ஆடியோவை அனுப்பித் தந்தார். குரல் நன்றாக இருந்தது. மேலும் அதில் பின்னணி இசையைக் கோர்த்து மீண்டும் 30.6.2014 அன்று அனுப்பிவைத்தார். இதுவரை ஆதிபர்வம்15வது பகுதி வரை நமதுவலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன். ஆடியோவில் 15 பகுதிகள் மொத்தமாக 3 மணிநேரங்கள் ஓடுகின்றன. தீபா அவர்களின் முயற்சியைக் கண்ட என் தம்பியின் மனைவி ஜெயா அருண் அவர்கள், “நானும் இதுபோல ஆடியோ செய்து தரட்டுமா?” என்று கேட்டார்.தீபா அவர்கள் ஆதிபர்வம் படிக்கிறார். நீ சபாபர்வம் படிம்மா!” என்றேன். பிறகு தீபா அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். “தாராளமாகப் படிக்கட்டும் நண்பரே" என்றார். அந்த வகையில் ஜெயா அவர்கள் சபா பர்வத்தில் இதுவரை 15 பகுதிகள்படித்திருக்கிறார். ஆடியோவில் சபா பர்வத்தின் 15 பகுதிகள் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ஓடுகின்றன. மேற்கண்ட இரண்டு பர்வங்களின் ஆடியோக்களையும் நமது வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன். முழுமஹாபாரதம் பதிவுகளுக்குக் குரல் கொடுக்கும் மேற்கண்ட நண்பர்களுக்கு நன்றி.

புத்தகமாக வெளியிடவில்லை என நண்பர்கள் மின்னஞ்சலிலும், முகநூலிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், என்னால்தான் முடியவில்லை. நான் பப்ளிஷர் யாரையும் இதுவரை அணுகவில்லை. அச்சகம் நடத்தும் எனது நண்பர் சீனிவாசன் அவர்கள் "நாமே வெளியிடலாம் சார்!” என்றார். ஆதிபர்வம் மட்டும் புத்தகமாக்க வேண்டுமென்றால் எவ்வளவு ஆகும் என்றும் கணக்குப்போட்டுப் பார்த்தோம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது. முயன்று கொண்டுதான் இருக்கிறேன். பார்ப்போம் இந்த வருடம் முடிகிறதா என்று.

இனி, விராட பர்வத்தின் மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க வேண்டும். வரைகலைப் பணிகள் அதிகமாக இருக்கின்றன. வனபர்வத்திற்கு என்னுரை அளிக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்து, இந்தப் பதிவை முடிக்கவே இரண்டு நாட்கள் பிடித்துவிட்டன. தீபாவளி அன்று விராட பர்வத்தின் முதல் பதிவை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதுவரை பணிக்கிடையில் நேரம் கிடைத்தால் வலைப்பூவில் சில திருத்தங்கள் செய்யலாம் என்றிருக்கிறேன். முடிந்த வரையில் இனிவரும் பர்வங்களை விரைவாக மொழிபெயர்க்க முயல்வேன். பரமன் திருவருள் புரியட்டும். ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
18.10.2014
திருவொற்றியூர்மறுமொழி கூற கீழிருக்கும் முகநூல் லிங்கின் கமென்ட் பட்டனையும் அதற்கு கீழே இருக்கும் மறுமொழி செய்ய என்ற பட்டனையும் பயன்படுத்தலாம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top