கர்ண பர்வத்தின் சுவடுகளைத் தேடி பதிவில் சொன்னதுபோல, முழுமஹாபாரதத்தை அச்சில் கொண்டு வர "தடாகமலர்" பதிப்பகத்தார் முன் வந்திருக்கிறார்கள்.
ம.வெங்கடேசன் அவர்களின் ஆக்கங்கள் தமிழ் இந்து வலைத்தளத்தில் வெளிவரும்போதே படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த ஓர் எழுத்தாளர், தானாகத் தொலைபேசியில் அறிமுகமானது மகிழ்ச்சியைத் தந்தது. சிறு அறிமுக வார்த்தைகளைக்குப் பிறகு, ம.வெ, "மஹாபாரதத்தை நாம் அச்சில் கொண்டு வரலாமே" என்று கேட்டார். பிழைதிருத்தம், சுலோக எண் சேர்ப்பு போன்ற சில விவரங்களை நான் அவரிடம் சொன்னேன். "சுலோக எண்களுடன் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்று அவரும் கருதினார்.
ஒரு நாள் நேரில் சந்திப்பது என முடிவெடுத்து, திருவல்லிக்கேணியில் இருக்கும் தடாகமலர் பதிப்பகத்திற்கு நண்பர் ஜெயவேலன் அவர்களுடன் சென்றேன். திரு.ஜவஹர் அவர்களும் அறிமுகமானார். நால்வரும் சேர்ந்து கலந்தாலோசித்தோம். எட்டுப் பர்வங்களை மொழிபெயர்க்க எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கின்றன; இன்னும் எஞ்சியிருக்கும் பர்வங்களை மொழிபெயர்க்க மேலும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது போன்ற விவரங்களையும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு படம் வேண்டுமா என்பது குறித்தும் பேசினோம். அப்போது, எஞ்சியிருக்கும் பத்து பர்வங்களையும் நிறைவு செய்ய இன்னும் 3 வருடங்கள் ஆகலாம் என்பதை அவர்களிடம் சொன்னேன். பேச்சின் இறுதியில், கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்ததும், மேற்கொண்டு சல்லிய பர்வத்தை மொழிபெயர்க்காமல், ஆதிபர்வத்திலிருந்து தொடங்கி, துரோண பர்வம் வரை சுலோக எண்களைச் சேர்த்து அச்சுக்குக் கொடுப்பதென்றும், அதன் பிறகு சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம் என்றும் முடிவெடுத்து, பதிப்பகத்தில் இருந்து திரும்பினோம்.
சுலோக எண்கள் குறிக்காமலேயே வெளியிடலாமே என்று சில நண்பர்கள் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். சுலோக எண்களையும் சேர்த்து வெளியிட்டால்தான், குறிப்புதவிக்கு {Reference-க்குப்} பயன்படும் நூலாக முழுமஹாபாரதம் இருக்க முடியும். எனவே, சுலோக எண்களுடன் வருவதே சிறப்பாக இருக்க முடியும் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
இப்போது கர்ண பர்வம் மொழிபெயர்ப்பு நிறைவடைந்ததிலிருந்து, ஆதிபர்வத்தில் திருத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆதிபர்வம், சபாபர்வம், வனபர்வம், விராடபர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம் ஆகியவற்றின் திருத்தங்களையும், சுலோக எண்கள் சேர்ப்பையும் செய்வதற்குக் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகலாம். ஆதிபர்வத்தில் இருந்து, உத்யோக பர்வம் வரை மன்மதநாததத்தரின் ஆங்கிலப்பதிப்பை ஒப்பிட்டு சுலோக எண்களைக் குறிக்கப்போகிறேன். அதன் பிறகு, பீஷ்ம பர்வத்திலும், துரோண பர்வத்திலும் கங்குலியின் இரண்டாம் பதிப்பிலேயே சுலோக எண்கள் இருக்கின்றன. அதையே பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்.
சுலோக எண் சேர்ப்புப்பணி மிகவும் மெதுவாகத் தான் நகர்கிறது. ஆறு மாதங்கள் சல்லிய பர்வம் மொழிபெயர்க்காமல் இருக்க வேண்டுமே என்ற நினைப்பால் கூட, பிழைதிருத்தங்களில் ஈடுபட மனம் ஒப்ப மறுக்கிறதோ என்றெண்ணி, பிழைதிருத்தங்களோடு சேர்த்துச் சல்லிய பர்வம் மொழிபெயர்ப்பையும் மெதுவாகத் தொடரலாம் என்று இப்போது கருதுகிறேன். 11வது பர்வமான ஸ்திரீ பர்வம் வரை மொழிபெயர்த்துவிட்டால், முழுமஹாபாரதத்தின் கதை போக்கு கிட்டத்தட்ட நிறைவை எட்டும். 9வது பர்வமான சல்லியபர்வத்திலிருந்து, 11வது பர்வமான ஸ்த்ரீ பர்வம் 104 பகுதிகளும் {அத்யாயங்களும்}, 4865 சுலோகங்களும் உண்டு. மூன்று பர்வங்களும் சேர்த்தும் கூட, கர்ண பர்வத்தின் அளவை விடச் சிறியதாகவே இருக்கிறது. பதிப்பகத்தாரிடம் இது குறித்து இன்னும் பேசவில்லை. இதில் அவர்களது ஆலோசனையையும் கேட்க வேண்டும் என்றிருக்கிறேன்.
இதுவரை ஒவ்வொரு பர்வத்தின் மொழிபெயர்ப்பும், ஏதாவதொரு முக்கியத் தினத்தில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. சுவடுகளைத் தேடி பதிவுகளில் அவற்றை நீங்கள் கண்டிருக்கலாம். எனவே, வரப்போகும் வைகாசி விசாகம் (07.06.2017) முதல் சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம் என்றும், முந்தைய எட்டு பர்வங்களின் பிழைதிருத்தங்களையும் உடன் செய்துகொண்டே மெதுவாக மொழிபெயர்க்கலாம் என்றும் நினைத்திருக்கிறேன். இப்படிச் செய்தால் இந்த வருட முடிவிற்குள் பதினோரு பர்வங்களையும் வெளியிட்டுவிடலாம் என்றும் கருதுகிறேன். பரமன் திருவுளத்தின் படியே அனைத்தும் நடக்கும்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
25.5.2015
திருவொற்றியூர்