Victory is of Krishna! | Karna-Parva-Section-96 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் ஆரத்தழுவிக் கொண்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு வாழ்த்து தெரிவித்த கிருஷ்ணன்; வெற்றியானது கிருஷ்ணனுடையதே என்று சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனின் உடலைக் காண போர்க்களத்திற்கு வந்தது; பாண்டவப் பாஞ்சால வீரர்களால் வாழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன்; கர்ண பர்வத்தை உரைப்பதாலும், உரைப்பதைக் கேட்பதாலும் கிட்டும் பலன்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு கர்ணன் கொல்லப்பட்டு, கௌரவத் துருப்புகள் தப்பி ஓடிய பிறகு, மகிழ்ச்சியால் பார்த்தனை {அர்ஜுனனைத்} தழுவிக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “{அசுரன்} விருத்திரன் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கொல்லப்பட்டான். கர்ணனோ உன்னால் கொல்லப்பட்டான். பயங்கரப் போரில் விருத்திரன் கொல்லப்பட்டதையும், கர்ணனின் படுகொலையையும் மனிதர்கள் (ஒரே அளவிலேயே) பேசுவார்கள்.(2) பெருஞ்சக்தி கொண்ட தேவனால் {இந்திரனால்} தனது வஜ்ரத்தைக் கொண்டு போரில் விருத்திரன் கொல்லப்பட்டான். உன்னால் வில்லையும், கூரிய கணைகளையும் கொண்டு கர்ணன் கொல்லப்பட்டான்.(3) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஓ! பாரதா, உலகத்தில் நன்கு அறியப்படப் போவதும், உனக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தரக்கூடியதுமான இந்த உனது ஆற்றலைக் குறித்து நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சென்று சொல்வாயாக.(4) போரில் எதைச் சாதிக்க நீண்ட வருடங்களாக நீ முயற்சி செய்து வந்தாயோ, அந்தக் கர்ணனின் படுகொலையை நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சொல்லி, மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} நீ பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுவாயாக.(5) உனக்கும், கர்ணனுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, களத்தைக் காண்பதற்காகத் தர்மன் மகன் {யுதிஷ்டிரர்} ஒரு முறை {இங்கே} வந்தார்.(6) எனினும், (கணைகளால்) அதிகமாகவும் ஆழமாகவும் துளைக்கப்பபட்டிருந்த அவரால் {யுதிஷ்டிரரால்}, போரில் நிற்க இயலவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(7)
பார்த்தன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, யது குலத்துக் காளையான கேசவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பதிலளித்தான். பின்னவனும் {கிருஷ்ணனும்} உற்சாகமாக அந்த முதன்மையான தேரை அப்போது திரும்பச் செய்தான்.(8) இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன், படைவீரர்களிடம், “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் அனைவரும் எதிரியை எதிர்த்துக் கவனமாக நிற்பீராக” என்றான்.(9) பிறகு அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்}, திருஷ்டத்யும்னன், யுதாமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, விருகோதரன் {பீமன்}, யுயுதானன் {சாத்யகி} ஆகியோரிடம்,(9) “மன்னர்களே, அர்ஜுனனால் செய்யப்பட்ட கர்ணனின் படுகொலையை மன்னருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தெரிவித்துவிட்டு நாங்கள் திரும்பி வரும் வரையில் கவனமாக இங்கேயே நிற்பீராக” என்றான்.(11)
அந்த வீரர்களின் அனுமதியைப் பெற்ற பிறகே அவன் {கிருஷ்ணன்} மன்னன் {யுதிஷ்டிரன்} இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். பார்த்தனுடன் {அர்ஜுனனுடம்} சென்ற கோவிந்தன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலான சிறந்த படுக்கையில், மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன் கிடப்பதைக் கண்டான். பெரும் மகிழ்ச்சியோடு கூடிய அவ்விருவரும் மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதத்தைத் தொட்டனர் {தொட்டு வணங்கினர்}.(12,13) அவர்களின் மகிழ்ச்சியையும், அவர்களது உடலில் இருந்த இயல்புக்கு மீறிய அதிகமான காயங்களையும் கண்ட யுதிஷ்டிரன், ராதையின் மகன் {கர்ணன்} இறந்து விட்டதாகக் கருதி தன் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தான்.(4) எதிரிகளைத் தண்டிப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் படுக்கையில் இருந்து எழுந்து, வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் மீண்டும் மீண்டும் அன்புடன் தழுவிக் கொண்டான். பிறகு அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனிடம் (கர்ணனின் மரணத்தைக் குறித்த செய்திகளைக்) கேட்டான்.(15)
அப்போது, இனிய பேச்சைக் கொண்டவனும், யதுகுலத்தின் வழித்தோன்றலுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கர்ணனின் மரணத்தைக் குறித்து உள்ளபடி நடந்தவாறே சரியாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான்.(16) அச்யுதன் என்றும் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன், சிரித்துக் கொண்டே தன் உள்ளங்கைகளைக் கூப்பி, எதிரிகள் கொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரனிடம்,(17) “வீரர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதுமான இந்தப் போரில் இருந்து, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பாண்டுவின் மகனான விருகோதரரும் {பீமரும்}, நீரும், மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} விடுபட்டது நற்பேறாலேயே.(18)
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அடுத்து செய்யப்பட வேண்டியவற்றைச் செய்வீராக. பெரும் வலிமையைக் கொண்டவனும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான அந்தச் சூதன் மகன் கர்ணன் கொல்லப்பட்டான். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி உமதானது நற்பேறாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, நற்பேறாலேயே நீர் வளர்கிறீர்.(19) பகடையில் வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு சிரித்தவனும், மனிதர்களில் பொல்லாதவனுமான அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியை இன்று பூமாதேவி குடித்தாள்.(20) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த உமது எதிரி {கர்ணன்}, மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு இன்று வெறுந்தரையில் கிடக்கிறான். கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அந்த மனிதர்களில் புலியை {கர்ணனைக்} காண்பீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது எதிரிகள் எவரும் அற்ற இந்தப் பூமியைக் கவனமாக ஆண்டு, அனைத்து வகை இன்பமான பொருட்களுடனும், எங்களோடும் மகிழ்ச்சியாக இருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.”(22)
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அடுத்து செய்யப்பட வேண்டியவற்றைச் செய்வீராக. பெரும் வலிமையைக் கொண்டவனும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான அந்தச் சூதன் மகன் கர்ணன் கொல்லப்பட்டான். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி உமதானது நற்பேறாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, நற்பேறாலேயே நீர் வளர்கிறீர்.(19) பகடையில் வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு சிரித்தவனும், மனிதர்களில் பொல்லாதவனுமான அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியை இன்று பூமாதேவி குடித்தாள்.(20) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த உமது எதிரி {கர்ணன்}, மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு இன்று வெறுந்தரையில் கிடக்கிறான். கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அந்த மனிதர்களில் புலியை {கர்ணனைக்} காண்பீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது எதிரிகள் எவரும் அற்ற இந்தப் பூமியைக் கவனமாக ஆண்டு, அனைத்து வகை இன்பமான பொருட்களுடனும், எங்களோடும் மகிழ்ச்சியாக இருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.”(22)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடு பதிலுக்கு அந்தத் தாசார்ஹ குலத்து வீரனை {கிருஷ்ணனை} வழிபட்டு, “நற்பேறே, நற்பேறே” என்று சொன்னான்.(23) மேலும் அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணனா}, உன்னைத் தேரோட்டியாக அடைந்த பார்த்தனால் {அர்ஜுனனால்} மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையமுடியும் எனும்போது, இஃது உனக்கு ஆச்சரியமானது இல்லை” என்றான்.(24) பிறகு பிருதையின் {குந்தியின்} நீதிமிக்க மகனான அந்தக் குரு குலத் தலைவன் {யுதிஷ்டிரன்}, அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, கேவசன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரிடமும்,(25) “நீங்கள் இருவரும், புராதனமானவர்களும், அறத்தை {நீதியைக்} காப்பதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், சிறந்த முனிவர்களுமான நர நாராயணர்கள் என்று நாரதர் என்னிடம் சொன்னார்.(26) பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட தலைவர் கிருஷ்ணதுவைபாயணரான உயர்ந்த அருளைக் கொண்ட அந்த வியாசரும் கூட இந்தத் தெய்வீக வரலாற்றை மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(27) ஓ! கிருஷ்ணா, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை எதிர்த்து, எவரிடமும் புறமுதுகிடாமல் அவர்களை வென்றிருப்பது உனது செல்வாக்கினாலேயே. போரில் பார்த்தனுடைய சாரதிநிலையை நீ ஏற்றபோதே, தோல்வியையல்ல, வெற்றியையே அடைவோம் என்பது உறுதியாகிவிட்டது” என்றான் {யுதிஷ்டிரன்}.(29)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தந்தத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையும், கருப்பு வால்களைக் கொண்டவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் தேரில் ஏறிக்கொண்டு, பல பாண்டவத் துருப்புகள் சூழப் புறப்பட்டு, ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்ற போர்க்களத்தைக் காண்பதற்காக, வழிநெடுக கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம் இனிமையாகப் பேசிக் கொண்டே சென்றான்.(30,31) மாதவன் {கிருஷ்ணன்}, மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களிடமும் பேசிக் கொண்டே சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில் கிடக்கும் மனிதர்களில் காளையான கர்ணனைக் கண்டான்.(32) உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், நேரான இழைகளுடன் கூடிய கதம்ப மலரைப் போலக் கணைகளால் மேனியெங்கும் துளைக்கப்பட்டிருந்த கர்ணனைக் கண்டான்.(33) அந்த யுதிஷ்டிரன், நறுமணமிக்க எண்ணெய் நிறைந்த ஆயிரக்கணக்கான தங்க விளக்குகளின் ஒளியில் கர்ணனை {கர்ணனின் உடலைக்} கண்டான்.(34) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கர்ணனையும், அவனது மகனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(35) தன் கண்களை நம்புவதற்கு முன்பு, மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்தான்.
பிறகு மனிதர்களில் புலிகளான மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பல்குனனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்த அவன்,(36) “ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பெரும் விவேகத்தைக் கொண்ட நீ என் பாதுகாவலனாகவும், தலைவனாகவும் இருக்கும் விளைவால், என் தம்பிகளுடன் கூடிய நான் இன்று இந்தப் பூமியின் மன்னனாகிறேன்.(37) மனிதர்களில் புலியான செருக்கு மிக்க ராதையின் மகனுடைய {கர்ணனின்} கொலையைக் கேட்கும் திருதராஷ்டிரரின் தீய ஆன்ம கொண்ட மகன் {துரியோதனன்}, உயிர் மற்றும் அரசு ஆகிய இரண்டிலும் மனத்தளர்ச்சி அடைவான். ஓ! மனிதர்களில் காளையே {கிருஷ்ணா}, உன் அருளின் மூலமாகவே நாங்கள் எங்கள் நோக்கங்கள் நிறைவேறியவர்களானோம்.(38,39) எதிரி கொல்லப்பட்டது நற்பேறாலேயே. பாண்டுவின் மகனான காண்டீவதாரி {அர்ஜுனன்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதும் நற்பேறாலேயே.(40) பதிமூன்று {13} வருடங்களை நாங்கள் விழிப்புடனும், பெரும் கவலையுடனுமே கழித்தோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் அருளால் நாங்கள் இந்த இரவில் மகிழ்ச்சியாக உறங்குவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) இவ்வாறே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பெரிதாகப் புகழ்ந்தான்.”(42)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பார்த்தனின் கணைகளால் கர்ணனும், அவனது மகனும் கொல்லப்பட்டதைக் கண்டவனும், குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், மீண்டும் பிறப்பெடுத்தவனாகத் தன்னைக் கருதினான்.(48) (பாண்டவப் படையின்) மன்னர்களும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை அணுகி, அவனைப் பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.(44) சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, விருஷ்ணித் தேர்வீரர்களில் முதன்மையானவனான சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சிகண்டி, பிற பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அந்தக் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} வழிபட்டனர்.(46) போரில் திளைப்பவர்களும், திறம்படத் தாக்குபவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களுமான அந்த வீரர்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை வெகுவாகப் பாரட்டி, எதிரிகளை எரிப்பவர்களான இரு கிருஷ்ணர்களையும், புகழுரைகள் நிறைந்த தங்கள் பேச்சால் புகழ்ந்தனர். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(47,48) ஓ! மன்னா, உமது தீய கொள்கையின் விளைவால் விளைந்ததும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியதுமான அந்தப் பேரழிவு இவ்வாறே நடந்தது. இப்போது அதற்காக ஏன் நீர் வருந்துகிறீர்?” {என்றான் சஞ்சயன்}.”(49)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தத் தீய செய்திகளைக் கேட்ட குரு மன்னன் திருதராஷ்டிரன், தன் அற்புத இருக்கையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(50) அதே போல, பெரும் முன்னறி பார்வை கொண்ட அரச மங்கை காந்தாரியும் கீழே விழுந்தாள்.(51) அப்போது விதுரன், சஞ்சயன் ஆகிய இருவரும் விழுந்துவிட்ட ஏகாதிபதியைத் தூக்கி, அவனுக்கு ஆறுதலளித்தனர். அதேபோலக் காந்தாரியும் குரு பெண்மணிகளால் தூக்கப்பட்டாள்.(52,53) விதியும், தேவையும் அனைத்திலும் சக்திமிக்கவை என்று நினைத்த அந்த அரசத் துறவி {திருதராஷ்டிரன்}, பெரும் துயரில் வீழ்ந்து, தன் உணர்வுகளை இழந்தவனாகத் தெரிந்தான்.(54) எனினும், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்த இதயத்துடன் கூடிய அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் மயக்கமடையவில்லை. அவர்களால் ஆறுதலளிக்கப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அமைதியாக இருந்து, துக்கத் தியானத்தில் ஈடுபட்டான்.(55)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்ததும், ஒரு வேள்வியைப் போன்றதுமான இந்தப் பெரும்போரைப் படிப்பவன் {உரைப்பவன்}, படிக்கப்படுவதைக் கேட்பவன் ஆகிய இருவரும் ஒரு பெரும் வேள்வி செய்ததன் கனியை {பலனை} அடைவார்கள்.(56) புனிதமானவனும், அழிவில்லாதவனுமான விஷ்ணுவே வேள்வி என்றும், பிற தேவர்களான, அக்னி, வாயு, சோமன், சூரியன் ஆகிய ஒவ்வொருவரும் அவ்வாறானவர்களே {வேள்வியே} என்றும் கல்விமான்கள் சொல்கின்றனர். எனவே, கெடுநோக்கம் இல்லாமல் இந்தப் பர்வத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ, மகிழ்ச்சியை அடைபவனும், அருள் உலகங்கள் அனைத்தையும் அடையவல்லவனும் ஆவான்.(57) புனிதமானதும், சம்ஹிதைகளில் முதன்மையானதுமான இதைப் படிக்கும் மனிதர்கள், எப்போதும் அர்ப்பணிப்பில் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு செயல்படுபவர்கள், செல்வம், தானியம் மற்றும் புகழையும் அடைவார்கள்.(58) எனவே, ஒரு மனிதன் கெடுநோக்கம் இல்லாமல் இதை எப்போதும் கேட்க வேண்டும். இவ்வாறு செய்பவன், அனைத்து வகை இன்பங்களையும் அடைவான். விஷ்ணுவும், சிறப்புமிக்கத் தான்தோன்றியான பவனும் {சிவனும்} அந்த மனிதர்களில் முதன்மையானவனிடம் நிறைவடைவார்கள்.(59)
ஒரு பிராமணன், இதைப் படிப்பதால், வேதங்களைப் படித்ததன் கனியை {பலனை} அடைவான்;
ஒரு க்ஷத்திரியன், பலத்தையும், போரில் வெற்றியையும் அடைவான்;
வைசியர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைவார்கள்;
சூத்திரர்கள் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைவார்கள்.(60)
மேலும் சிறப்பு மிக்க விஷ்ணு நித்தியமானவனாவான். இந்தப் பர்வத்தில் அந்தத் தேவனே மகிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இதைப் படிக்கும், அல்லது கேட்கும் மனிதன், மகிழ்ச்சியை அடைந்து, தன் இதயத்தின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியவனாவான். பெரும் முனிவரின் (வியாசரின்) இந்த வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாக முடியாது.(61) கர்ண பர்வம் உரைக்கப்படும்போது கேட்பதால் அடையப்படும் தகுதியானது {புண்ணியமானது}, ஒரு வருடம் முழுவதும் நிறுத்தாமல் {தடையில்லாமல்} கன்றுகளோடு கூடிய பசுக்களைத் தானமளிப்பதற்கு இணையானதாகும்[1]”(62)
ஒரு க்ஷத்திரியன், பலத்தையும், போரில் வெற்றியையும் அடைவான்;
வைசியர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைவார்கள்;
சூத்திரர்கள் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைவார்கள்.(60)
மேலும் சிறப்பு மிக்க விஷ்ணு நித்தியமானவனாவான். இந்தப் பர்வத்தில் அந்தத் தேவனே மகிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இதைப் படிக்கும், அல்லது கேட்கும் மனிதன், மகிழ்ச்சியை அடைந்து, தன் இதயத்தின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியவனாவான். பெரும் முனிவரின் (வியாசரின்) இந்த வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாக முடியாது.(61) கர்ண பர்வம் உரைக்கப்படும்போது கேட்பதால் அடையப்படும் தகுதியானது {புண்ணியமானது}, ஒரு வருடம் முழுவதும் நிறுத்தாமல் {தடையில்லாமல்} கன்றுகளோடு கூடிய பசுக்களைத் தானமளிப்பதற்கு இணையானதாகும்[1]”(62)
-------------------------------------------------------------------------------------[1] வேறொரு பதிப்பில், “மஹாத்மாவான தனஞ்சயனுக்கும், கர்ணனுக்கும் நடந்த இவ்விதமான மஹாயுத்தத்தை எவன் படிப்பனோ, எவன் நாள்தோறும் கேட்பனோ அவன் நன்கு அனுஷ்டிக்கப்பட்ட யாகத்துக்குரிய பலனை அடைவான். ஷாட்குண்யங்களால் நிறைந்தவரும், சாஸ்வதமாக இருப்பவரும், வாயுவினாலும், சந்திரனாலும், சூரியனாலும் வகிக்கப்படுபவருமான விஷ்ணுவே யாகரூபமாக இருக்கிறார். ஆதால் அஸூயை இல்லாதவனாக இதனைப் படிப்பவனும், கேட்பவனுமான மனிதன் எல்ல உலகங்களையும் ஜயிப்பான்; ஸுகியும் ஆவான்” என்றிருக்கிறது. வர்ணங்களுக்குத் தகுந்த பலன்கள் சொல்லப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கர்ண பர்வத்தைப் படிப்பதால் கிட்டுமென எந்தப் பலனும் சொல்லப்படவில்லை.
கர்ண பர்வம் பகுதி -96ல் உள்ள சுலோகங்கள் : 62
பதினேழாம் நாள் போர் முற்றும்
********** கர்ண பர்வம் முற்றிற்று **********
ஆங்கிலத்தில் | In English |