Kauravas returned to their encampment! | Karna-Parva-Section-95 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, களத்தில் இருந்து ஓயச் சென்ற கௌரவர்களின் வரிசைமுறை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, வெறும் வெளியில் தங்கள் கண்களைச் செலுத்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(1) உண்மையில், எதிரியால் வீரக் கர்ணன் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், அச்சத்தால் மலைத்த உமது துருப்புகள் அனைத்தும் பிளந்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.(2) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவலையால் நிறைந்த குரு தலைவர்கள், தப்பி ஓடுவதில் இருந்து யாரை உமது மகன் {துரியோதனன்} தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தானோ அந்தத் தலைவர்கள் தங்கள் துருப்புகளைத் திரும்ப அழைக்க விரும்பினர்.(3) அவர்களின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் ஆலோசனைப்படி செயல்பட்டு படையைத் திரும்ப அழைத்தான்.(4)
அப்போது கிருதவர்மன், ஓ! பாரதரே, உமது படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த நாராயணத் துருப்புகள் சூழ வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(5) ஆயிரக்கணக்கான காந்தாரர்கள் சூழ இருந்த சகுனி, அதிரதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு, வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(6) சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகத் திரள்களுக்கு ஒப்பான ஒரு பெரும் யானைப்படையால் சூழப்பட்டு வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றார்.(7) பாண்டவர்களின் வெற்றியைக் கண்டு நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட வீர அஸ்வத்தாமன் வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(8) கொல்லப்படாமல் எஞ்சியிருந்த சம்சப்தகர்களால் இன்னும் ஒரு பெரிதாகவே இருந்த அந்தப் படையால் சூழப்பட்ட சுசர்மனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமுற்ற அந்தப் படைவீரர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தியபடியே சென்றான்.(9)
ஆழமாகப் பீடிக்கப்பட்டவனும், அனைத்தையும் இழந்தவனுமான மன்னன் துரியோதனன், இதயம் நிறைந்த துயருடன், மகிச்சியற்ற சிந்தனைகள் பலவற்றுக்கு இரையாகியபடியே சென்று கொண்டிருந்தான்.(10) தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தியபடியே கொடிமரத்தை இழந்த அந்தத் தேரில் பாசறையை நோக்கிச் சென்றான்.(11) இன்னும் பெரும் எண்ணிக்கையில் இருந்த பாரதப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், வெட்கத்தால் நிறைந்தும், கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை இழந்த நிலையில் வேகமாகத் தப்பி ஓடினர்.(12) உண்மையில், கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும் கவலையுற்றவர்களுமாகக் கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் நடுங்கிக் கொண்டே தப்பி ஓடினர்.(13) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் அர்ஜுனனைப் பாராட்டினர், சிலர் கர்ணனைப் பாராட்டினர்.(14)
அந்தப் பெரும்போரில் உமது படையின் ஆயிரக்கணக்கான போர்வீரர்களுக்கு மத்தியில் அதற்கு மேலும் போரிட விரும்பிய எந்த ஒரு மனிதனும் அங்கே இல்லை.(15) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, வாழ்வு, அரசு, மனைவியர், செல்வம் ஆகியவற்றில் கௌரவர்கள் நம்பிக்கையற்றவர்கள் ஆனார்கள்.(16) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்களைக் கவனமாக வழிநடத்திய உமது மகன் {துரியோதனன்}, துயரத்தாலும், கவலையாலும் நிறைந்தவனாகி, இரவில் அவர்களை ஓய்வெடுக்கச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) அந்தப் பெரும் தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அவனது ஆணைகளைச் சிரந்தாழ்ந்து ஏற்று, உற்சாகமற்ற இதயங்களுடனும், மங்கிய முகங்களுடனும் களத்தை விட்டு ஓயச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(18)
-------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -95ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |