When will I hear Duryodhana's endearing words? | Shalya-Parva-Section-02 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் புலம்பல்; துரியோதனனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருதராஷ்டிரன்; விதியை நொந்து கொண்டது; விதுரனின் ஆலோசனைகளைக் கேட்காமல் போனதற்காக வருந்தியது; போர் நடந்த முறையை விவரமாகச் சொல்லுமாறு சஞ்சயனைப் பணித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "{அங்கிருந்து} மகளிர் {அனைவரும்} அனுப்பப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், முன்பைவிடப் பெருந்துயரில் மூழ்கிப் புலம்பத் தொடங்கினான். புகைக்கு ஒப்பான பெருமூச்சுகளைவிட்டபடியே, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்துக் கொண்டு, சிறிது நேரம் சிந்தித்த அவன் {திருதராஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(2)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா}, போரில் எந்த இழப்பையும் சந்திக்காமல், பாண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று உன்னிடம் இருந்து நான் கேட்கும் செய்தி துயர் மிகுந்ததாகும்.(3) என் மகன்கள் வீழ்ந்ததைக் கேட்டும் நொறுங்காமல் இருப்பதால், கடுமையான என் இதயம் வஜ்ரத்தின் தன்மையைக் கொண்டது என்பதில் ஐயமில்லை.(4) ஓ! சஞ்சயா, அவர்களது வயது, பிள்ளைப்பருவத்தில் அவர்களின் விளையாட்டுகள் ஆகியவற்றை நினைத்தும், இன்று அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் என் இதயம் துண்டுகளாக நொறுங்குவதாகத் தெரிகிறது.(5) பார்வையற்றதன் விளைவால், நான் அவர்களின் வடிவங்களைப் பார்த்ததில்லை என்றாலும், பிள்ளைகளிடம் ஒருவன் கொள்ளும் பாசத்தின் விளைவால், அவர்களிடம் நான் பேரன்பைக் கொண்டிருந்தேன்.(6) ஓ! பாவமற்றவனே, பிள்ளைப்பருவத்தைக் கடந்து, ஆண்மையின் தொடக்கமான இளமைப் பருவத்திற்குள் அவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.(7) இன்று செழிப்பையும், சக்தியையும் இழந்த நிலையில் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டதும், அவர்களுக்கு நேர்ந்த துயரால் ஏற்பட்ட கவலையில் மூழ்கி, மன அமைதியை அடைய முடியாதவனாக நான் இருக்கிறேன்.(8) {இவ்வாறு சஞ்சயனிடம் பேசிக் கொண்டிருந்த திருதராஷ்டிரன், துரியோதனனை நினைத்துப் பின்வருமாறு புலம்பத் தொடங்கினான்}
வா, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது பாதுகாவலனற்றவனாக இருக்கும் என்னிடம் வருவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன்னை இழந்தவனான நான், எந்த அவல நிலையை அடைவேனோ?(9) ஓ! ஐயா, கூடியிருக்கும் மன்னர்களை விட்டுவிட்டு, சாதாரணமான ஓர் இழிந்த மன்னனைப் போல உயிரையிழந்து வெறுந்தரையில் ஏன் நீ கிடக்கிறாய்?(10) ஓ! ஏகாதிபதி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகலிடமாய் இருந்தவனே, ஓ! வீரா, குருடனும், கிழவனுமான என்னைவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்?(11) ஓ! மன்னா {துரியோதனா}, உன்னுடைய அந்தக் கருணையும், அந்த அன்பும், அந்த மரியாதையும் இப்போது எங்கே? போரில் வெல்லப்பட முடியாதவனான நீ, ஐயோ, எவ்வாறு பார்த்தர்களால் கொல்லப்பட்டாய்?(12) உறக்கத்திலிருந்து சரியான நேரத்தில் விழிக்கும் என்னை, அன்பு மற்றும் மரியாதை நிறைந்த வார்த்தைகளால், "ஓ! அப்பா, ஓ! அப்பா, ஓ! பெரும் மன்னா, ஓ! உலகத்தின் தலைவா" என்று இனி அழைக்கப்போவது எவன்?(13) கண்ணீர் நிறைந்த கண்களுடன் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "ஓ! குருகுலத்தவரே, எனக்கு ஆணையிடுவீராக" என்று இனி என்னிடம் கேட்கப் போவது எவன்?(14)
ஓ! அன்புக்குழந்தாய், உன் உதடுகளில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டேனே, "இந்தப் பரந்த உலகம் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு எவ்வளவோ, அவ்வளவு நமக்கும் இருக்கிறது[1].(15) பகதத்தர், கிருபர், சல்லியர், அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சோமதத்தர், பாஹ்லீகர்,(16) அஸ்வத்தாமர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, மகதத்தின் வலிமைமிக்க இளவரசன், பிருஹத்பலன், காசிகளின் ஆட்சியாளன், சுபலனின் மகன் சகுனி,(17) பல்லாயிரக்கணக்கான மிலேச்சர்கள், சகர்கள், யவனர்கள், கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்},(18) பாட்டன் பீஷ்மர், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் மகன் {கிருபர்}[2], சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ், பெரும் சக்தி கொண்ட சதாயுஷ்,(19) ஜலசந்தன், ரிஷ்யசிருங்கனின் மகன் {ஆர்ஷ்யஸ்ருங்கி}, ராட்சசன் அலாயுதன், வலிய கரங்களைக் கொண்ட அலம்புசன், பெரும் தேர்வீரனான சுபாகு ஆகிய இவர்களும், இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பெரும்போரில் என் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாயிருக்கிறார்கள்.(21) களத்தில் இவர்களுக்கு மத்தியில், என் தம்பிகள் சூழ நிற்கும் நான், ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள், பாஞ்சாலர்கள்,(22) சேதிகள், திரௌபதியின் மகன்கள், சாத்யகி, குந்திபோஜன், ராட்சசன் கடோத்கசன் ஆகிய அனைவருடனும் போரிடவேன்.(23) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட இவர்களில் ஒருவனே கூட, ஓ! மன்னா, போரில் தன்னை நோக்கி விரையும் பாண்டவர்களைத் தடுக்க இயன்றவனே.(24) {அப்படியிருக்கையில்}, பாண்டவர்களோடு பகை கொண்டவர்களும், வீரர்களுமான இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! ஏகாதிபதி, இவர்கள் அனைவரும் பாண்டவர்களைப் பின்தொடர்வோருடன் போரிட்டு, அவர்களைப் போரில் கொல்வார்கள்.(25) கர்ணன் மட்டுமே கூட, என்னுடன் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்றுவிடுவான். பிறகு வீர மன்னர்கள் அனைவரும் என் அதிகாரத்தின் கீழ் வாழ்வார்கள்.(26) ஓ! மன்னா, எவன் அவர்களுக்குத் தலைவனோ, அந்த வலிமைமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்}, கவசந்தரிக்கமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்".(27) {என்று துரியோதனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து சொன்ன திருதராஷ்டிரன், சஞ்சயனிடம் திரும்பி}, இவ்வாறே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் எப்போதும் என்னிடம் பேசுவான். இதைக் கேட்டே நானும் போரில் பாண்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நம்பினேன்.(28) எனினும், என் மகன்கள் அனைவரும், அந்த வீரர்களுக்கு மத்தியில் நின்று போரில் தீவிரமாக முயன்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்கள் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(29)
[1] கும்பகோணம் பதிப்பில், "அப்பா, எனக்கு இந்தப் பூமியானது அதிகமாயிருக்கிறன்றது; பார்த்தனுக்கு அவ்வாறு இல்லை" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[2] கிருபரின் பெயர் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. மீண்டும் சொல்லப்படுவதன் காரணம் தெரியவில்லை.
உலகின் தலைவரான வீரப் பீஷ்மர், சிகண்டியோடு மோதி, நரியால் கொல்லப்படும் சிங்கமாக மரணத்தை அடைந்தார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(30) தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தின் ஆசானான பிராமணர் துரோணர், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(31) பூரிஸ்ரவஸ், சோமதத்தன், மன்னர் பாஹ்லீகர் ஆகியோரும் போரில் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(32) யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடம் திறன்பெற்ற பகதத்தன் கொல்லப்பட்டான், ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(33) சுதக்ஷிணன், பூரு குலத்தின் ஜலசந்தன், சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(34) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான பாண்டியன் {சாரங்கத்வஜன்}, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(35)
பிருஹத்பலன் கொல்லப்பட்டான், மகதர்களின் வலிமைமிக்க மன்னன், வீர உக்ராயுதன், அந்த வகை வில்லாளிகள் அனைவரும்,(36) அவந்தியின் இளவரசர்கள் இருவரும் (விந்தன் மற்றும் அனுவிந்தன்), திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, எண்ணற்ற சம்சப்தகர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(37) மன்னன் அலம்புசன், ராட்சசன் அலாயுதன், ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஷ்யசிருங்கி} ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(38) நாராயணர்கள், கோபாலர்கள் ஆகியரை உள்ளடக்கிய, போரில் வெல்லப்பட முடியாத உருப்புகளும், பல்லாயிரம் மிலேச்சர்களும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(39) சுபலனின் மகன் சகுனி, சூதாடியின் மகன் என்றழைக்கப்படுபவனும், தன் படைகளின் தலைமையில் நிற்கும் வீரனுமான வலிமைமிக்க உலூகன் ஆகியோர் கொல்லப்பட்டர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(40)
தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், ஓ! சூதா, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களுமான எண்ணிலடங்கா உயர் ஆன்ம வீரர்கள் ஆகியோரும்,(41) பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(42) பெரும் வலிமை கொண்டவர்களான என் மகன்கள், என் பேரப்பிள்ளைகள், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(43) விதிக்கு உட்பட்டே மனிதன் பிறப்பை எய்துகிறான் என்பதில் ஐயமில்லை. நற்பேறு பெற்ற மனிதனே நன்மையைச் சந்திக்கிறான்.(44) ஓ! சஞ்சயா, நான் நற்பேற்றை இழந்தவனாதலால், என் பிள்ளைகளை இழந்தேன். கிழவனான நான், இப்போது என் எதிரிகளின் ஆளுகைக்கு எவ்வாறு அடிபணிவது?(45)
ஓ! தலைவா {சஞ்சயா}, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர எனக்கு நன்மை வேறேதும் இல்லை என நான் நினைக்கிறேன். உறவினர்களையும், சொந்தங்களையும் இழந்தவனாக இருப்பதால், நான் காடுகளுக்கே செல்லப் போகிறேன்.(46) ஓ! சஞ்சயா, சிறகுகளை இழந்து அவல நிலையில் வீழ்ந்திருக்கும் எனக்கு, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர வேறேதும் சிறந்ததாக இருக்க முடியாது.(47) துரியோதனன், சல்லியன், துச்சாசனன், விவிம்சன், வலிமைமிக்க விகர்ணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு,(48) போரில் ஒருவனாகவே என் நூறு மகன்களைக் கொன்ற பீமசேனனின் முழக்கங்களை நான் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறேன்?(49) அவன் {பீமன்}, நான் கேட்டுக் கொண்டிருக்கும்போதே துரியோதனனின் படுகொலையை அடிக்கடிப் பேசுவான். துயரிலும், கவலையிலும் எரிந்து கொண்டிருக்கும் என்னால் அவனது கொடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள இயலாது" என்றான் {திருதராஷ்டிரன்}."(50)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறே உறவினர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவனும், துயரில் எரிந்து கொண்டிருந்தவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரரன்}, தன் மகன்களின் மரணத்தால் உண்டான சோகத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்தான்.(51) நீண்ட நேரம் அழுத பிறகு, தன் தோல்வியை எண்ணியவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் சூடான பெருமூச்சுகளை விட்டான்.(52) கவலையில் மூழ்கி, துயரில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பாரதக் குலத்துக் காளை {திருதராஷ்டிரன்}, என்ன நடந்தது என்ற விபரங்களைக் கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் மீண்டும் கேட்டான்.(53)
திருதராஷ்டிரன், "பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, சூதன் மகனும் {கர்ணனும்} வீழ்ந்த பிறகு, என் போர்வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாகக் கொண்டனர்?(54) போரில் என் வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாக்குகிறார்களோ அவரை எந்தத் தாமதமும் இல்லாமல் பாண்டவர்கள் கொன்று வருகின்றனர்.(55) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால், போரின் முன்னணியில் பீஷ்மர் கொல்லப்பட்டார். துரோணரும் நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்.(56) அதே போலவே சூதன் மகனான வீரக் கர்ணனும், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(57)
துரியோதனனுடைய குற்றத்தின் மூலம் இந்தப் பூமியின் மக்கள்தொகை அழிக்கப்படும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே உயர் ஆன்ம விதுரன் என்னிடம் சொன்னான்.(58) காரியங்களில் தங்கள் கண்களைச் செலுத்தினாலும், அவற்றைப் பார்க்காத மூடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூடனான எனக்கு விதுரனின் சொற்கள் அவ்வாறே ஆகின.(59) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த நீதிமிக்க ஆன்மாவான விதுரனின் சொற்கள் உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என்பதால், அப்போது அவன் என்ன சொன்னானோ, சரியாக அதுவே நடந்திருக்கிறது.(60) விதியால் பீடிக்கப்பட்ட நான், அந்தச் சொற்களின்படி நடந்து கொள்ளவில்லை. அத்தீய வழியின் கனிகளே இப்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, மீண்டும் அவற்றை எனக்கு விவரிப்பாயாக.(61) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு எவன் நமது படையின் தலைவனானான்? அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எதிர்த்துச் சென்ற தேர்வீரன் எவன்?(62) போரில் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்? அந்த வீரன் {சல்லியன்} போரிடச் சென்ற போது, அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்?அவனது பின்புறத்தைப் பாதுகாத்தது யார்?(63)
நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தபோது, ஓ! சஞ்சயா, வலிமைமிக்க மத்ரர்களின் மன்னனையும் {சல்லியனையும்}, எனது மகனையும் {துரியோதனனையும்} பாண்டவர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(64) பாரதர்கள் பேரழிவை அடைந்த விவரங்களை எனக்குச் சொல்வாயாக. என் மகன் துரியோதனன் போரில் எவ்வாறு வீழ்ந்தான், என்பதை எனக்குச் சொல்வாயாக.(65) பாஞ்சாலர்கள், அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும் எவ்வாறு வீழ்ந்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(66) பாண்டவர்கள் (ஐவர்), சாத்வதர்கள் இருவர் (கிருஷ்ணன் மற்றும் சாத்யகி), கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் உயிருடன் தப்பியது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(67) போர் நடந்த முறை, அந்தப் போரின் தன்மை ஆகியவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, உரைப்பதில் நீ திறம் பெற்றவனாய் இருக்கிறாய். அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}."(68)
---------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 68
---------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 68
ஆங்கிலத்தில் | In English |