The valourous speech of Duryodhana! | Shalya-Parva-Section-03 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : கர்ணன் கொல்லப்பட்ட பிறகு தப்பி ஓடிய கௌரவப்படையின் நிலை; தன் சாரதியிடம் பேசிய துரியோதனன்; இருபத்தைந்தாயிரம் பேரைத் தன் கதாயுதத்தால் கொன்ற பீமசேனன்; திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் மற்றும் சாத்யகி ஆகியோர் செய்த போர்; பாண்டவர்கள் அனைவரையும் தடுத்த துரியோதனன்; மீண்டும் தப்பி ஓடிய கௌரவப் படை; துரியோதனன் ஆற்றிய வீர உரை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பேரழிவு நடந்தது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(1) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்}, சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டபிறகு, மீண்டும் மீண்டும் துருப்புகள் திரட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் அவை தப்பி ஓடிய பிறகு,(2) கர்ணனின் மரணத்தை அடுத்து நடந்த போரில் மனிதர்களுக்குப் பேரழிவு நேர்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} சிங்க முழக்கங்களைச் செய்தான். அந்நேரத்தில் உமது மகன்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(3) உண்மையில், கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, உமது படையில் எவனாலும், துருப்புகளைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிக்காட்டுவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்த முடியவில்லை.(4) அடியற்ற பெருங்கடலில் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பம் இல்லாத கப்பலுடைந்த வியாபாரிகளைப் போல அவர்கள் தெரிந்தனர். தங்கள் பாதுகாவலன் {கர்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் கொல்லப்பட்ட போது, அவர்கள் பரந்த கடலில் இருந்து பாதுகாப்பாக ஏதோ ஒரு கரையை அடைய விரும்பும் மனிதர்களைப் போல இருந்தனர்.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பீதியடைந்த உமது துருப்பினர், பாதுகாவலனை விரும்பும் பாதுகாப்பற்ற மனிதர்களைப் போலவோ, சிங்கத்தால் பீடிக்கப்படும் மான்கூட்டம் போலவோ இருந்தனர்.(6)
சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், கொம்புகளொடிந்த காளைகளைப் போலவோ, நச்சுப்பற்கள் உடைபட்ட பாம்புகளைப் போலவோ மாலை வேளையில் திரும்பினார்கள்.(7) அவர்களது வீரர்களில் முதன்மையானவர்கள் கொல்லப்பட்டதும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டுக் குழம்பிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள் அனைவரும், தங்கள் புலனுணர்வுகளையும் இழந்து எந்தத் திசையில் ஓடுவது என்பதை அறியாதிருந்தனர். அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் கண்களைச் செலுத்திக்கொண்டே அவர்களில் பலர் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(9) பலர், "என்னைத்தான் பீபத்சு {அர்ஜுனன்} பின்தொடர்ந்து வருகிறான். என்னைத்தான் விருகோதரன் {பீமன்} பின்தொடர்ந்து வருகிறான்" என்றெண்ணி கீழே விழுந்தனர், அல்லது வாட்டமடைந்தனர்.(10)
சிலர் வேகமாகக் குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், சிலர் வேகமான தேர்களிலும், சிலர் வேகமான யானைகளிலும், எனப் பெரும் தேர்வீரர்கள் பலர், காலாட்படைவீரர்களைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடியபோது, யானைகளால் தேர்கள் உடைக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கப்பட்டனர், குதிரைக்கூட்டங்களால் காலாட்படையினர் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, கள்வர்களும், இரைதேடும் விலங்குகளும் நிறைந்த காட்டில் வணிகர்க்கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்களைப்போல உமது துருப்பினர் இருந்தனர்.(13) பாகர்கள் கொல்லப்பட்ட சில யானைகளும், துதிக்கைகள் வெட்டப்பட்ட சில யானைகளும் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மொத்த உலகமும் பார்த்தனால் {அர்ஜுனனால்} நிறைந்திருப்பதைப் போலக் கண்டன.(14)
பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தப்பி ஓடும் தன் துருப்புகளைக் கண்ட துரியோதனன், ஓ! என்றும் ஐயோ! என்று கதறிக் கொண்டே தன் சாரதியிடம்,(15) "வில் தரித்துக் கொண்டு, படையின் பின்புறத்தில் நான் நிலைகொண்டால், பார்த்தனால் என்னை மீறிச் செல்ல இயலாது. எனவே, குதிரைகளை வேகமாகச் செலுத்துவாயாக.(16) போரில் நான் என் வீரத்தை வெளிப்படுத்தினால், கரைகளை ஒருபோதும் மீறத் துணியாத பெருங்கடலைப் போலவே குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்னை மீறத் துணிய மாட்டான்.(17) இன்று, அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் {பீமன்} மற்றும் எஞ்சியிருக்கும் என் எதிரிகளையும் கொன்றுவிட்டு, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்" என்றான் {துரியோதனன்}.(18) இவ்வாறு வீரனாகவும், மதிப்புமிக்க மனிதனாகவும் மாறிய குருமன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை மெதுவாகவே தூண்டினான்.(19) அந்நேரத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை இழந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலரும், இருபத்தைந்தாயிரம் {25,000} காலாட்படை வீரர்களும் (போரிடுவதற்காக) மெதுவாகச் சென்றனர்.(20)
அப்போது கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும் நால்வகைப் படைகளின் துணையுடன் அந்தத் துருப்புகளைச் சூழ்ந்து கொண்டு, கணைகளால் அவர்களை அழித்தனர்.(21) அவர்கள் அனைவரும் பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} தீவிரமாகப் போரிட்டனர். அவர்களில் பலர், அந்தப் பாண்டவ வீரர்கள் இருவரின் பெயர்களையும் சொல்லி அவர்களை அறைகூவியழைத்தனர்.(22) போரில் அவர்களால் சூழப்பட்ட பீமன் அவர்களிடம் சினம் கொண்டவனானான். வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கிய அவன் {பீமன்}, தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(23) தன் சொந்த கரங்களின் பலத்தைச் சார்ந்திருந்தவனும், குந்தியின் மகனுமான விருகோதரன் {பீமன்}, தேரில் இருந்தவனானாலும், நியாயமான போர்விதிகளை நோற்பவனாக, தரையில் இருந்த அந்த எதிரிகளோடு போரிடவில்லை.(24) முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், தாங்கு கயிற்றைக் கொண்டதும், யுகமுடிவின் அந்தகனுக்கு ஒப்பானதுமான அந்தக் கனத்த கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், யமன் தன் தண்டத்தால் உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதைப் போல அவர்கள் அனைவரையும் கொன்றான்.(25)
சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் காலாட்படைவீரர்கள், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் இழந்த நிலையில், தங்கள் உயிர்களையும் விடத் தயாராகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை நோக்கி விரைந்தனர்.(26) உண்மையில், சினத்தால் நிறைந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பீமசேனனை அணுகி, யமனின் பார்வைபட்ட உயிரினங்களைப் போலத் திடீரென மடிந்தனர்.(27) வாளையும், கதாயுதத்தையும் எடுத்துக் கொண்ட பீமன், ஒரு பருந்தைப் போலத் தெரிந்து, உமது அந்த இருபத்தைந்தாயிரம் போர்வீரர்களையும் கொன்றான்.(28) அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவைக் கொன்ற பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், தன் முன் திருஷ்டத்யும்னனைக் கொண்டு மீண்டும் நின்றான்.(29)
அதே வேளையில் பெரும் சக்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} (குருக்களின்) தேர்ப்படைப்பிரிவை நோக்கிச் சென்றான். பெரும் பலத்தைக் கொண்டவர்களான மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன், சகாதேவன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், சகுனியைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துப் பெரும் வேகத்தில் உற்சாகமாக விரைந்து சென்றனர்.(30) சகுனியின் எண்ணற்ற குதிரைப்படையைக் கூரிய கணைகளால் கொன்ற அந்தப் பாண்டவ வீரர்கள், சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, ஒரு பயங்கரப் போரைச் செய்தனர்.(31) அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகிலும் கொண்டாடப்பட்ட தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டு, கௌரவர்களின் தேர்ப்படைப் பிரிவுக்கு மத்தியில் ஊடுருவினான்.(32) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், அர்ஜுனனை அதிலிருக்கும் போர்வீரனாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்ட உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(33) தேர்கள் மற்றும் குதிரைகளை இழந்தவர்களும், அனைத்துப் பக்கத்திலும் கணைகளால் துளைக்கப்பட்டவர்களுமான இருபத்தைந்தாயிரம் காலாட்படைவீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(34)
அப்போது பாஞ்சாலர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரனாக இருந்தவன் (திருஷ்டத்யும்னன்), தன் தலைமையில் பீமசேனனைக் கொண்டு, அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவை வேகமாகக் கொன்று, வெற்றியாளனாக நின்றான்.(35) பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனும், கொண்டாடப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன் பேரழகு கொண்டவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நொறுக்கப்பவனாகவும் இருந்தான்.(36) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டவனும், உயர்ந்த கோவிதார மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டதும், உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(37) தங்களுக்கு மத்தியில் சாத்யகியைக் கொண்ட மாத்ரியின் கொண்டாடப்பட்ட மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்), ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவனான காந்தார மன்னனை {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று வேகமாக எங்கள் முன் தோன்றினர்.(38) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேகிதானன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான உமது துருப்பினரைக் கொன்று தங்கள் சங்குகளை முழங்கினர்.(39) களத்தில் இருந்து முகங்களைத் திருப்பிக் கொண்டு ஓடும் உமது துருப்பினர் அனைவரையும் கண்ட அந்த (பாண்டவ) வீரர்கள், வெல்லப்பட்ட காளைகளைத் துரத்தும் காளைகளைப் போல அவர்களைத் துரத்திச் சென்று தாக்கினர்.(40)
அப்போது பாண்டுவின் மகனான வலிமைமிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் களத்தில் எஞ்சி நின்ற உமது படையைக் கண்டு சினத்தால் நிறைந்தான்.(41) ஓ! ஏகாதிபதி, அந்த எஞ்சிய உமது படையினரைத் திடீரென அவன் தன் கணைகளால் மறைத்தான். எனினும், அப்போது எழுந்த புழுதியால் காட்சி மறைக்கப்பட்டதன் விளைவால் எதையுமே {என்னால்} காண முடியவில்லை.(42) போர்க்களம் கணைகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியிலும் இருள் பரவியது. ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(43) அவனது {துரியோதனனது} படை இவ்வாறு பிளக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி, அந்தக் குருமன்னன் {துரியோதனன்}, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் எதிர்த்து விரைந்தான்.(44) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, அசுரன் பலி, தேவர்கள் அனைவரையும் அறைகூவியழைத்ததைப் போலவே, துரியோதனன் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(45)
பிறகு சினத்தால் நிறைந்து, ஒன்று கூடிய பாண்டவர்கள், முழங்கிக் கொண்டிருக்கும் துரியோதனனை எதிர்த்து, மீண்டும் மீண்டும் அவனை நிந்தித்தபடியும், பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும் சென்றனர்.(46) எனினும் பின்னவன் {துரியோதனன்}, அச்சமில்லாமல் தன் எதிரிகளைக் கணைகளால் தாக்கினான். அப்போது உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(47) ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} மீறிச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர். இந்த நேரத்தில், சற்றுத் தொலைவில் இருந்தவர்களும் கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தப்பி ஓடத் தயாராக இருந்தவர்களுமான தன் துருப்புகளைத் துரியோதனன் கண்டான். ஓ! ஏகாதிபதி, அவர்களை அணிதிரட்டிய உமது மகன் {துரியோதனன்}, போரிடத் தீர்மானித்தவனாகவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பியவனாகவும் அந்தப் போர்வீரர்களிடம்,(48,49) "இங்கிருந்து நீங்கள் தப்பி ஓடினாலும், சமவெளியிலோ, மலைகளிலோ, பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத இடமொன்றையும் நான் காணவில்லை. தப்பி ஓடுவதால் என்ன பயன்?(50) பாண்டவப் படையினர் இப்போது எஞ்சியிருக்கும் சிலராகக் குறைக்கப்பட்டுள்ளனர். இரு கிருஷ்ணர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே நாம் அனைவரும் ஒரு நிலையை எடுத்தால், நாம் வெற்றியை அடைவது உறுதியே.(51)
எனினும், உங்கள் வியூகத்தைப் பிளந்து நீங்கள் தப்பி ஓடினாலோ, பாவிகளான உங்களைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் பாண்டவர்கள் கொல்வார்கள். எனவே, போரில் மரணமானது, நமக்கு நன்மையே.(52) க்ஷத்திரிய நடைமுறையின்படி, போர்க்களத்தில் போரிடுகையில் மரணித்தல் இனிமையானதாகும். அத்தகு மரணம் {மரணிப்பவனுக்கு} எந்தத் துயரையும் தராது. அத்தகு மரணத்தை அடைவதால், ஒரு மனிதன் அடுத்த உலகில் அழிவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(53) இங்கே கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேட்பீராக. உங்கள் மூதாதையரின் காலத்தில் இருந்து, உங்களால் பயிலப்படும் கடமைகளைத் துறப்பதைவிட, நீங்கள் கோபக்கார பீமசேனனின் சக்திக்குச் சரணடைவதே சிறந்ததாகும்.(54) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவம் நிறைந்த செயல் வேறொன்றும் இல்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை.(55) பிறரால் நெடுங்காலத்தில் அடையப்படும் (அடுத்த உலகத்தில் {மறுமையில்} உள்ள) அருள் நிறைந்த பகுதிகளை, ஒரு போர்வீரன் ஒரே நாளில் அடையலாம்" என்றான் {துரியோதனன்}[1].
[1] கர்ண பர்வம் பகுதி 93லும் துரியோதனனின் இந்த வீர உரை சிற்சில வேறுபாடுகளுடன் இடம்பெற்றிருக்கிறது.
மன்னனின் இந்த வார்த்தைகளை நிறைவேற்றிய பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள்,(56) தங்கள் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(57) அப்போது உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான மிகப் பயங்கரமான போர் மீண்டும் தொடங்கியது.(58) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன் துரியோதனன் தன் துருப்புகள் அனைத்துடன், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்" {என்றான் சஞ்சயன்}[2].(59)
-------------------------------------------------------------------------------------[2] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பகுதி முழுவதும் அதிகபாட அத்யாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சல்லிய பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |