The policy recited by Kripa to Duryodhana! | Shalya-Parva-Section-04 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : போரில் கௌரவர்கள் சந்தித்திருக்கும் வீழ்ச்சியையும், அர்ஜுனன் மற்றும் பீமசேனனின் வீரத்தையும் துரியோதனனிடம் எடுத்துரைத்த கிருபர், பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள அவனிடம் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வீழ்ந்து கிடக்கும் தேர்களின் நீடங்கள், உயர் ஆன்மப் போர்வீரர்களின் தேர்கள், யானைகள் ஆகியவற்றையும், போரில் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களையும் கண்டும்,(1) போர்க்களமானது, ருத்ரனின் விளையாட்டு மைதானத்தின் தன்மையை அடைந்திருப்பதைப் பார்த்தும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் மகிமையற்ற முடிவுகளை நோக்கியும்,(2) துயரத்தால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} பின்வாங்கிய பிறகு, பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டும், கவலையால் நிறைந்த துருப்புகள் பெருந்துயரத்தில் விழுந்து,(3) அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கையில், நசுக்கப்பட்ட கௌரவப் போர்வீரர்களின் உரத்த ஓலங்களைக் கேட்டும், ஓ! பாரதரே,(4) முறையின்றி இடம்பெயர்ந்திருக்கும் பெரும் மன்னர்களின் அடையாளச்சின்னங்களைக் கண்டும், வயதையும், நன்னடத்தையையும் கொண்டவரும், கருணையால் நிறைந்தவரும், சொல்வன்மை கொண்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான குரு தலைவர் கிருபர், மன்னன் துரியோதனனை அணுகி, கோபத்துடன் இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(6)
அவர் {கிருபர்}, "ஓ! துரியோதனா, ஓ! பாரதா, நான் உன்னிடம் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. அதைக் கேட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! பாவமற்றவனே, உனக்கு விருப்பமுண்டானால் அவற்றின்படி செயல்படுவாயாக.(7) ஓ! ஏகாதிபதி, போர்க்கடமையைவிடச் சிறந்த பாதை வேறேதும் கிடையாது. ஓ! க்ஷத்திரிய ஒழுங்கின் காளையே, அப்பாதையை அடைந்த க்ஷத்திரியர்களே போரில் ஈடுபடுகிறார்கள்.(8) க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்று வாழ்பவன், தன் மகன், தந்தை, சகோதரன், சகோதரியின் மகன், தாய்மாமன், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் போரிடுகிறான்.(9) போரில் அவன் கொல்லப்பட்டால், அதில் {அவனுக்குப்} பெரும் தகுதி {புண்ணியம்} கிடைக்கிறது. அதே போல, களத்திலிருந்து அவன் ஓடினாலோ, பெரும் பாவமே கிடைக்கிறது. இதன் காரணமாகத் தான், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி வாழ விரும்பும் மனிதனின் வாழ்வு மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.(10)
இதைப் பொறுத்தவரை, உனக்கு நான் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லப் போகிறேன். பீஷ்மர், துரோணர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் ஆகியோர் வீழ்ந்த பிறகு,(11) ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, ஜெயத்ரதன், உனது சகோதரர்கள், உனது மகன் லக்ஷ்மணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?(12) யாவர் மீது சுமைகள் அனைத்தையும் வைத்து, நாம் அரசுரிமையில் இன்புற்றோமோ, அவர்கள் அனைவரும் தங்கள் உடல்களைத் துறந்து, பிரம்மத்தை அறிந்த மனிதர்களால் அடையத்தக்க அருள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர்.(13) நம்மைப் பொறுத்தவரை, எண்ணற்ற சாதனைகளைக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களை இழந்துவிட்டு, எண்ணற்ற மன்னர்களை அழிவடையச் செய்து, துன்பத்திலேயே நாம் நமது காலத்தைக் கடத்தப் போகிறோம்.(14) அந்த வீரர்கள் அனைவரும் உயிரோடு இருக்கும்போதுகூட, பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். கிருஷ்ணனைத் தன் கண்களாகக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, தேவர்களாலேயே கூட வீழ்த்தப்பட முடியாதவனாவான்.(15)
பரந்த (கௌரவப்) படையானது, (வசந்தகாலத்தில் நிறுவப்படும்) இந்திரத்வஜத்தைப் போல உயர்ந்திருப்பதும், இந்திரவில்லை {வானவில்லைப்} போலப் பிரகாசிப்பதும், குரங்கைத் தாங்கியிருப்பதுமான அவனது {அர்ஜுனனின்} கொடிமரத்தை அணுகி, எப்போதும் அச்சத்திலேயே நடுங்கியது.(16) பீமசேனனின் சிங்கமுழக்கம், பாஞ்சஜன்யத்தின் சங்கொலி, காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக்கேட்டே நமது இதயங்கள் நமக்குள் இறந்து விழுந்தன {நமது மனம் மயக்கமடைந்தது}.(17) மின்னலின் கீற்றுகளைப் போல அசைந்து, நம் கண்களைக் குருடாக்கிய அர்ஜுனனின் காண்டீவமானது, நெருப்பு வளையத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(18) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அந்த உறுதிமிக்க வில் {காண்டீவம்} அசைக்கப்படும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அசையும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிகிறது.(19) வெண்ணிறத்தையும், பெரும் வேகத்தையும், சந்திரன் அல்லது குசப் புல்லின் காந்தியையும் கொண்டவையும், வானத்தையே விழுங்கியபடி ஓடக்கூடியவையுமான குதிரைகள் அவனது {அர்ஜுனனின்} தேரில் பூட்டப்பட்டிருக்கின்றன.(20) காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போலக் கிருஷ்ணனால் தூண்டப்பட்டும், தங்கத்தால் தங்கள் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டும், போரில் அவை அர்ஜுனனைச் சுமந்து செல்கின்றன.(21)
குளிர்காலத்தில் காட்டில் உலர்ந்த புற்களை எரித்துப் பெருகும் காட்டுத்தீயைப் போலவே ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அர்ஜுனன் போரில் உமது பெரும்படையை எரித்தான்.(22) இந்திரனின் காந்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நமது படையணிகளுக்குள் நுழையும்போது, நான்கு தந்தங்களைக் கொண்ட யானையொன்றைப் போல அவன் தெரிவதை நாம் கண்டிருக்கிறோம்.(23) உமது படையைக் கலங்கடித்து மன்னர்களை அச்சுறுத்தியபோது, தாமரைகள் நிறைந்திருக்கும் தடாகத்தைக் கலங்கடிக்கும் ஒரு யானைக்கு ஒப்பாகவே தனஞ்சயனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(24) தன் வில்லின் நாணொலியால் போர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தும்போது, சிறு விலங்குகளைத் திகிலடையச் செய்யும் சிங்கத்திற்கு ஒப்பாகவே அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(25)
உலகங்கள் அனைத்திலும் உள்ள வில்லாளிகளில் முதன்மையானவர்களும், வில் தரித்தோரில் காளைகளுமான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ர்ஜுனன்}, கவசம் பூண்டபடி மிக அழகாகத் தெரிகிறார்கள்.(26) ஓ! பாரதா {துரியோதனா}, களத்தில் இன்று கொல்லப்படுவோருக்கு, இது பயங்கரமான பனினேழாவது {17வது} நாள் போராகும்.(27) காற்றால் கலைக்கப்படும் கூதிர்கால மேகங்களைப் போல உனது படையின் பல்வேறு பிரிவுகள் பிளந்துவிட்டன.(28) ஓ! ஏகாதிபதி, புயலால் கலங்கடிக்கப்பட்ட படகானது, பெருங்கடலின் மத்தியில் வெளிப்படுத்தப் படுவதைப்போல {மூழ்கடிக்கப்படுவதைப் போல}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, உனது படையை நடுங்கச் செய்தான்.(29)
(ஜெயத்ரதன் கொல்லப்பட்டபோது) சூதன் மகன் {கர்ணன்} எங்கே சென்றான்? தமது தொண்டர்களுடன் கூடிய துரோணர் எங்கே சென்றார்? நான் எங்கே சென்றேன்? நீ எங்கே சென்றாய்? ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எங்கே சென்றான்? தன் சகோதரர்களுடன் கூடிய உன் சகோதரன் துச்சாசனன் எங்கே சென்றான்?(30) ஜெயத்ரதனைக் கண்டும், அவன் தன் கணைகள் அடையும் தொலைவில் இருக்கிறான் என்பதையும் அறிந்த அர்ஜுனன், உனது உறவினர்கள், சகோதரர்கள், கூட்டாளிகள், தாய்மாமன்கள் ஆகியோர் மீது தனது காலை வைத்து, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றான். அப்போது செய்ய முடியாததை இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?(31,32) உன் துருப்பில் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல எவன் இருக்கிறான்?(33) அந்த உயர் ஆன்மப் போர்வீரன் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைக் கொண்டுள்ளான். மேலும் காண்டீவத்தின் நாணொலியே நமது சக்திகளை அபகரித்துவிடுகிறது.(34) இப்போது தலைவனில்லாமல் இருக்கும் இந்த உனது படையானது, நிலவில்லாது ஓரிரவைப் போலவோ, யானைகளால் முறிக்கப்பட்ட மரங்களைத் தன் கரைகளில் கொண்ட நீர்வற்றிய ஓர் ஆற்றைப் போலவோ இருக்கிறது.(35)
வெண்குதிரைகளையும், வலிய கரங்களையும் கொண்ட அர்ஜுனன், உலர்ந்த புற்களுக்கிடையில் பரவும் காட்டுத்தீயைப் போல, தலைவனற்ற இந்த உன் படைக்குள் ஊடுருவி, தன் விருப்பம் போலத் திரிவான்.(36) சாத்யகி, பீமசேனன் ஆகிய இருவரின் மூர்க்கமும், மலைகள் அனைத்தையும் பிளக்கவோ, பெருங்கடல்கள் அனைத்தையும் வற்றச்செய்வோ வல்லமைபெற்றதாகும்.(37) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சபைக்கு மத்தியில் பீமன் பேசிய வார்த்தைகள்[1] அனைத்தும் கிட்டத்தட்ட அவனால் நிறைவேற்றப்பட்டுவிட்டன. நிறைவேற்றப்படாமல் எஞ்சியிருப்பவனையும் அவனால் நிறைவேற்றப்படும்[1].(38) வீழ்த்தக் கடினமான பாண்டவர்களின் படைக்கு எதிராகக் கர்ணன் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே, அது காண்டீவதாரியால் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டது.(39) எக்காரணமும் இன்றி, நீதிமான்களான பாண்டவர்களுக்கு நீ இன்னல்கள் பலவற்றை விளைவித்திருக்கிறய். அச்செயல்பாடுகளின் கனிகளே இப்போது வருகின்றன.(40)
[1] பாஞ்சாலி துகிலுரிப்புக்குப் பிறகு, துரியோதனனையும், அவனது தம்பிகள் 100 பேரையும் கொல்வதாகப் பீமன் சூளுரைத்தது இங்கே நினைவுகூரப்படுகிறது.
உன் நோக்கங்களுக்காகவே நீ பெருங்கவனத்துன் ஒரு பெரும் படையைத் திரட்டினாய். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பரந்த படையும், நீயும் கூட இப்போது பேராபத்தில் விழுந்துவிட்டீர்கள்.(41) சுயமே {ஆத்மாவே} அனைத்திற்கும் புகலிடம் என்பதால், இப்போது உன்னை நீ பாதுகாத்துக் கொள்வாயாக. {ஆதாரமான} அந்தப் புகலிடம் உடைந்துபோனால், ஓ! ஐயா, அதிலுள்ள அனைத்தும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறிப் போகும்[2].(42) பலவீனமடைந்தவன், சமரசத்தின் மூலம் அமைதியை நாட வேண்டும். வளர்பவனோ, போரிட வேண்டும். இதுவே பிருஹஸ்பதி கற்பித்திருக்கும் கொள்கையாகும் {நீதியாகும்}.(43) நமது படை பலத்தைப் பொறுத்தவரை நாம் இப்போது பாண்டு மகன்களைவிடக் குறைவடைந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தலைவா, பாண்டவர்களோடு அமைதியேற்படுத்திக் கொள்வதே நமக்கு நன்மையாகும் என நான் நினைக்கிறேன்.(44) எவன் தனக்கான நன்மையை அறிந்து கொள்ளவில்லையோ, தனக்கான நன்மையை (அறிந்தே) அலட்சியம் செய்வானோ, அவன் எந்த நன்மையையும் அடையமாட்டான்.(45)
[2] கும்பகோணம் பதிப்பில், "நீ உன் ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள். ஆத்மாவே அனைத்திற்கும் ஆதாரம். பாத்திரமுடைந்துபோனால், அதிலுள்ள வஸ்துவானது திசைகளிற் செல்லுகின்றது" என்றிருக்கிறது.
மன்னன் யுதிஷ்டிரனைப் பணிந்தால், அரசுரிமை நம்மிடமே இருக்கும் என்றால், அதுவும் நமக்கு நன்மையையே உண்டாக்கும், மூடத்தனத்தின் மூலம் (பாண்டவர்களிடம்) தோற்பது நன்மையைத் தராது.(46) யுதிஷ்டிரன் கருணையுள்ளவன். விசித்திரவீரியன் மகனும் {திருதராஷ்டிரனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} வேண்டினால், அவன் உன்னையே மன்னனாகத் தொடர அனுமதிப்பான்.(47) வெற்றியாளர்களான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகியோரிடம் ரிஷிகேசன் என்ன சொன்னாலும், அதற்கு அவர்கள் அனைவரும் ஐயமறக் கீழ்ப்படிவார்கள்.(48) கிருஷ்ணன், குருகுலத்தின் திருதராஷ்டிரன் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும், அதே போல, பாண்டுவின் மகனும் கிருஷ்ணனின் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும் நான் நினைக்கிறேன்.(49) பிருதையின் {குந்தியின்} மகன்களுடனான பகைமைகள் நிறுத்தப்படுவதே உனக்கான நன்மை என நான் கருதுகிறேன். குறுகிய நோக்கங்களுக்காகவோ, என் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவோ இதை நான் உனக்குச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, நன்மையெனக் கருதுவதையே நான் உனக்குச் சொல்கிறேன். (இப்போது இவற்றை நீ புறக்கணித்தால்) இவ்வார்த்தைகளை நீ உன் மரணத் தருவாயில் நினைவுகூர்வாய்" என்றார் {கிருபர்}.(50) வயதில் முதிர்ந்தவரும், சரத்வானின் மகனுமான கிருபர் அழுதுகொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னார். வெப்பப் பெருமூச்சுகளை விட்ட அவர் கவலையடைந்தவராகக் கிட்டத்தட்ட தமது புலனுணர்வுகளை இழந்தார்" {என்றான் சஞ்சயன்}.(51)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 51
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |