Will he forget the naked Draupadi? | Shalya-Parva-Section-05 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : கிருபரின் வார்த்தைகள் நன்மையளிப்பனவாக இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள முடியாத நிலையைக் கிருபருக்கு எடுத்துச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுக்குத் தான் இழைத்த தீமைகளைச் சொன்னது; துரியோதனனின் பேச்சால் உற்சாகமடைந்த வீரர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌதமரின் கொண்டாடப்பட்ட மகனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் (துரியோதனன்), சூடான பெருமூச்சுகளை விட்டபடி மௌனமாக இருந்தான்.(1) சிறிது நேரம் சிந்தித்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சரத்வான் மகனான கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(2) "ஒரு நண்பன் சொல்லும் அத்தனையும் என்னிடம் நீர் சொல்லியிருக்கிறீர். மேலும், போரிடும்போதும், உமது உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைகொள்ளமால் எனக்காக அனைத்தையும் செய்திருக்கிறீர்.(3) பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் ஊடுருவி, பெரும் சக்தி கொண்டவர்களான பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் நீர் போராடியதை இந்த உலகம் கண்டிருக்கிறது.(4) ஒரு நண்பனால் சொல்லப்பட வேண்டியது எதுவோ, அஃது உம்மால் சொல்லப்பட்டது. எனினும், மரணத்தருவாயில் இருக்கும் ஒரு மனிதனுக்கு மருந்தைப் போல, உமது வார்த்தைகள் எனக்கு மகிழ்வைத் தரவில்லை.(5)
நன்மையானதும், சிறப்பானதும், காரணம் நிறைந்ததுமான நீர் சொன்ன இந்த வார்த்தைகள், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {கிருபரே}, எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.(6) (முன்பொரு சமயம்) நம்மால் நாடிழந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, எவ்வாறு நம்மீது நம்பிக்கை வைப்பான்? அந்த வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்} ஒருமுறை நம்மால் பகடையில் வீழ்த்தப்பட்டான். என் வார்த்தைகள் அவன் எவ்வாறு நம்புவான்?(7) அதேபோல, பார்த்தர்களின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடும் கிருஷ்ணன், நம்மிடம் தூதனாக வந்தபோது, நம்மால் வஞ்சிக்கப்பட்டான். நமது அந்தச் செயல்பாடு ஆய்வமைவற்றதாகும் {தவறான முடிவாகும்}. ஓ! மறுபிறப்பாளரே, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} எவ்வாறு என் வார்த்தைகளை நம்புவான்?(8) இளவரசி கிருஷ்ணை {திரௌபதி} சபையில் நின்று கொண்டிருந்தபோது, பரிதாபகரமாக அழுதாள். நமது அந்தச் செயல்பாட்டையோ, நம்மால் யுதிஷ்டிரன் நாடிழந்ததையோ ஒருபோதும் கிருஷ்ணன் மறக்கமாட்டான்.(9) இந்த இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} தங்களுக்குள் ஒரே இதயத்தைக் கொண்டவர்கள் என்றும், ஒருவர் மீதொருவர் உறுதியான பற்றுடையவர்கள் என்றும் முன்பே நாம் கேட்டிருந்தோம். ஓ! தலைவரே {கிருபரே}, இன்று அதை நம் கண்களாலேயே நாம் காண்கிறோம்.(10)
தன் தங்கை {சுபத்திரை} மகனின் {அபிமன்யுவின்} படுகொலையைக் கேட்ட கேசவன் {கிருஷ்ணன்}, தன் இரவுகளைக் கவலையிலேயே கழிக்கிறான். அவனுக்கு நாம் பெரிய தீங்கை இழைத்திருக்கிறோம். அவன் நம்மை எவ்வாறு மன்னிப்பான்?(11) அபிமன்யுவுடைய மரணத்தின் விளைவாக அர்ஜுனனும், அவலமான நிலையை அடைந்திருக்கிறான். வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் கூட, அவன் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வான்?(12) பாண்டுவின் இரண்டாவது மகனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், மிகவும் சீற்றத்துடன் இருக்கிறான். அவன் ஒரு பயங்கரமான சபதத்தைச் செய்திருக்கிறான். அவன் {பீமன்} உடைவானேயொழிய ஒருபோதும் வளையமாட்டான். {இறப்பானேயொழிய பணியமாட்டான்}.(13) நமக்கு எதிராகப் பகைமையையே சுவாசிக்கும் அந்த வீர இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, கவசம்பூட்டி, வாள் தரிக்கும்போது இரு யமன்களுக்கு ஒப்பாக இருக்கின்றனர்.(14) திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் எனக்கு எதிராகத் தங்கள் வாள்களை உருவியிருக்கிறார்கள். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கிருபரே}, அவர்கள் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வார்கள்?(15)
ஒற்றையாடையுடுத்தி {வீட்டுக்கு விலக்காகத்} தன் பருவ காலத்தில் இருந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் சபைக்கு மத்தியில் வைத்துத் துச்சாசனனால் கொடூரமாக நடத்தப்பட்டாள்.(16) துயரில் மூழ்கிய அந்த நிர்வாண திரௌபதியை[1] இன்னும் நினைவில் வைத்திருப்பவர்களும், எதிரிகளை எரிப்பவர்களுமான பாண்டவர்களைப் போரில் இருந்து விலக்கவே முடியாது.(17) மேலும் துருபதனின் மகளான கிருஷ்ணை {திரௌபதி}, என் அழிவுக்காகவும், தன் கணவர்களால் பேணப்படும் நோக்கங்களின் வெற்றிக்காகவும் கடும் நோன்புகளை நோற்று, அனைத்து நாட்களிலும் வெறுந்தரையில் படுத்து, பகைமைகள் முடியும் வரை அந்நிலையிலேயே தொடரவே நினைத்திருக்கிறாள்.(18) கௌரவம் மற்றும் செருக்கைக் கைவிட்டவளான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடன் பிறந்த தங்கை (சுபத்ரை), உண்மையான ஒரு பணிப்பெண்ணாகவே மாறி திரௌபதிக்கு எப்போதும் பணிவிடைகளைச் செய்கிறாள்.(19) எனவே, அனைத்தும் தழல்விட்டெரிகின்றன. அந்த நெருப்பை ஒருபோதும் தணிக்க முடியாது. அபிமன்யுவுடைய படுகொலையின் விளைவால் அவர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமற்றதாகிவிட்டது.(20)
[1] மகாபாரதம் நெடுகிலும் பாஞ்சாலி சபைக்கு இழுத்து வரப்பட்டதையே பாண்டவர்களும் மற்றவர்களும் நினைவுகூர்கிறார்கள். எனவே துகிலுரிப்பு என்பது இடைசெருகலாகவே இருக்க வேண்டும் என்று பலரால் நம்பப்படுகிறது. சபா பர்வத்தில் நடக்கும் அந்நிகழ்வுக்குப் பிறகு, திரௌபதியின் ஆடை களையப்பட்ட அந்நிகழ்வு கர்ண பர்வம் பகுதி 83ல் சுட்டப்படுகிறது. இருப்பினும் அங்கும் பீமன் நினைத்ததாகவே சஞ்சயனால் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இங்கே இப்பகுதியில், "நிர்வாண திரௌபதி" என்று துரியோதனனே நேரடியாகக் கிருபரிடம் வாக்குமூலம் அளிப்பதாகத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் கூறுகின்றான். கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளும் அதையே உறுதிசெய்கின்றன. கும்பகோணம் பதிப்பிலும் "துகிலை இழந்தாள்" என்றே சொல்லப்பட்டுள்ளது.
கும்பகோணம் பதிப்பில், "அவ்வாறு அந்தப் பாஞ்சாலி துகிலையிழந்ததையும், எளிமையடைந்ததையும் பாண்டவர்கள் இன்னும் நினைக்கிறார்கள். பகைவரை வாட்டுபவர்களான அப்பாண்டவர்கள் யுத்தத்தினின்று தடுக்கப்படுதற்கு அஸாத்தியமானவர்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "{வீட்டுக்கு விலக்காகத்} தன் பருவ காலத்தில் இருந்த கிருஷ்ணை {திரௌபதி}, ஒற்றையாடையுடுத்தியிருந்தாள். உலகங்கள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தபோது, சபைக்கு மத்தியில் வைத்து அவள் துச்சாசனனால் ஒடுக்கப்பட்டாள். நிர்வாணமாக இருந்த அவளது துயரைப் பாண்டவர்கள் நினைவில் கொண்டிருக்கின்றனர். அந்த எதிரிகளை எரிப்பவர்கள் போரிடுவதிலிருந்து யாராலும் அவர்களைத் தடுக்க முடியாது" என்றிருக்கிறது.
கடல் சூழ்ந்த இந்தப் பூமியின் அரசுரிமையை அனுபவித்த நான், பாண்டவர்களின் உதவியின் கீழ் ஓர் அரசை எவ்வாறு அமைதியாக அனுபவிக்க முடியும்?(21) மன்னர்கள் அனைவரின் தலைகளின் மீது, சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த நான், யுதிஷ்டிரனின் பின்னால் ஓர் அடிமையைப் போல எவ்வாறு நடந்து செல்ல முடியும்?(22) மகிழத்தக்க பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் கருணையை வெளிப்படுத்திய நான், இப்போது இரங்கத்தக்கவர்களை என் தோழர்களாக அடைந்து ஓர் இரங்கத்தக்க வாழ்வை எவ்வாறு நோற்க முடியும்?(23) நீர் பேசிய மென்மையான நன்மையான அந்த வார்த்தைகளை நான் வெறுக்கவில்லை. எனினும், அமைதிக்கான நேரம் இதுவல்ல என்றே நான் நினைக்கிறேன்.(24) ஓ! எதிரிகளை எரிப்பவரே {கிருபரே}, நேர்மையாகப் போரிடுவதே நல்ல கொள்கை என நான் கருதுகிறேன். ஓர் அலியைப் போலச் செயல்படுவதற்கு இது நேரமல்ல. மறுபுறம், இது போருக்கான நேரமாகும்.(25)
நான் பல வேள்விகளைச் செய்திருக்கிறேன். பிராமணர்களுக்குத் தக்ஷிணைகளைக் கொடுத்திருக்கிறேன். என் விருப்பங்கள் அனைத்தையும் நான் அடைந்திருக்கிறேன். வேத உரைகளை நான் கேட்டிருக்கிறேன். என் எதிரிகளின் தலைகளின் மீது நான் நடந்திருக்கிறேன்.(26) என் பணியாட்கள் அனைவரும் என்னால் நன்கு பேணப்பட்டனர். மக்களைத் துயரில் இருந்து விடுவித்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்களிடம் இத்தகு எளிய வார்த்தைகளைப் பேச நான் ஒருபோதும் துணியமாட்டேன்.(27) வெளிநாட்டு அரசுகளை நான் கைப்பற்றியிருக்கிறேன். என் சொந்த அரசையும் நான் முறையாகவே ஆண்டிருக்கிறேன். இன்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களை நான் அனுபவித்திருக்கிறேன். பித்ருக்கள் மற்றும் க்ஷத்திரியக்கடமைக்கு நான் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தியிருக்கிறேன்.(28) நிச்சயமாக இங்கே இனி மகிழ்ச்சியில்லை. அரசாலோ, நற்பெயராலோ என்ன நேரப்போகிறது? இங்கே அடையத்தக்கது புகழ் மட்டுமே. அந்தப் புகழைப் போரின் மூலமே அடையலாம்; வேறு எவ்வழியிலும் அடையமுடியாது.(29) க்ஷத்திரியன் ஒருவன் தன் வீட்டில் மரணமடைவது நிந்திக்கத்தக்கதாகும். வீட்டிலுள்ள படுக்கையில் மரணம் என்பது ஒருவனுக்கு மிகவும் பாவம் நிறைந்ததாகும்.(30)
வேள்விகளைச் செய்த பிறகு, தன் உடலைக் காடுகளிலோ, போரிலோ துறக்கும் ஒரு மனிதன் பெரும் மகிமையை அடைகிறான்.(31) அழுதுகொண்டிருக்கும் உறவினர்களுக்கு மத்தியில், நோய் மற்றும் முதுமையால் பீடிக்கப்பட்டு, வலியில் பரிதாபமாக அழுதவாறு இறப்பவன் மனிதனே அல்ல.(32) பல்வேறு இன்பநுகர் பொருட்களைக் கைவிட்டு, நேர்மையாகப் போரிடப் போகும் நான், உயர்ந்த எல்லையை அடைந்தோரின் தோழமையை அடைந்து, சக்ரனின் {இந்திரனின்} உலகங்களுக்குச் செல்லப் போகிறேன்.(33) போரில் இருந்து பின்வாங்காதவர்களும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களும், உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், வேள்விகளைச் செய்தவர்களும், ஆயுதவேள்வியில் {போரில்} தூய்மையடைந்தவர்களும் {புனிதமடைந்தவர்களும் [இறந்தவர்களும்]}, நேர்மையான நடத்தை கொண்டவர்களுமான வீரர்களின் வசிப்பிடம் சொர்க்கமேயாகும் என்பதில் ஐயமில்லை.(34) போரில் ஈடுபடும் அத்தகு வீரர்களை, பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் இன்பமாகப் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை. அப்சரஸ்களின் தோழமையுடன், சொர்க்கத்தில் இன்புற்று, தேவர்களின் சபையில் வழிபடப்படும் அவர்களைப் பித்ருக்கள் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை.(35)
போரில் இருந்து திரும்பாதவர்களும், தேவர்களும் செல்லும் பாதையில் நாம் இப்போது உயர்வோமாக.(36) அந்தப் பாதையிலேயே நம் மதிப்பிற்குரிய பாட்டனும் {பீஷ்மரும்}, பெரும் அறிவைக் கொண்ட ஆசானும் {துரோணரும்}, ஜெயத்ரதனும், கர்ணனும், துச்சாசனனும் சென்றனர்.(37) இந்தப் போரில் எனக்காகத் தீவிரமாகப் போராடிய துணிச்சல்மிக்க மன்னர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். கணைகளால் சிதைக்கப்பட்டு, குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய அவர்கள் வெறுந்தரையில் இப்போது கிடக்கிறார்கள்.(38) பெரும் துணிச்சலைக் கொண்டவர்களும், சிறந்த ஆயுதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்தவர்களுமான அம்மன்னர்கள், தங்கள் கடமைகளைச் செய்து தங்கள் உயிர்மூச்சைத் துறந்து இப்போது இந்திரலோகவாசிகளாகிவிட்டனர்.(39) (அருள் உலகத்திற்குச் செல்ல) அவர்கள் வழிவகுத்துக் கொடுத்துள்ளனர். அந்த அருள் இலக்கை அடைய விரைந்து செல்லும் வீரர்களுடைய கூட்டத்தின் விளைவாக மீண்டும் அவ்வழி அடைவதற்கரிதாக மாறும்[2].(40)
[2] இங்கே பல பதிப்புகளில் "அடைவதற்கெளிதாகும்" என்று உரைவேறுபாடு காணப்படுகிறது எனக் கங்குலி விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவர்களால் ஸ்வயமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற வழியானது மீண்டும் (நடக்கப்படாமல் போமாகில்) பிரவேசிக்க முடியாததாகிவிடும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் பாதையை அமைத்திருக்கின்றனர். அறத்தின் எல்லையை நோக்கி பெரும் வேகத்தோடும் பயணிக்கும் பெருங்கூட்டத்தினரால் அப்பயணம் கடினமானதாகக்கூடும்" என்றிருக்கிறது.
எனக்காக இறந்த அந்த வீரர்களின் சாதனைகளை நன்றியுடன் நினைவுகூரும் நான், என் இதயத்தை அரசில் நிலைக்கச் செய்யாமல், அவர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனையே அடைக்க விரும்புகிறேன்.(41) என் நண்பர்கள், தம்பிகள் மற்றும் பாட்டன்கள் கொல்லப்படக் காரணமான நான் என் உயிரைக் காத்துக் கொண்டால், உலகம் என்னை நிந்திக்கும் என்பதில் ஐயமில்லை.(42) பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனைப்} பணிந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இல்லாமல் நான் அனுபவிக்கப்போவது எத்தகைய அரசாக இருக்கக்கூடும்?(43) அண்டத்தில் அதை அடைந்து தலைவனாக இருந்த நான், இப்போது நல்ல போரின் மூலம் சொர்க்கத்தை அடையப் போகிறேன். இது வேறுவிதமாகாது" என்றான் {துரியோதனன்}.(44) துரியோதனனால் இவ்வாறு சொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்தப் பேச்சை மெச்சி, மன்னனை உற்சாகமூட்டும் வகையில், "நல்லது, நல்லது" என்றனர்.(45)
தங்கள் தோல்விக்காக எவ்வருத்தமும் கொள்ளாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், போரிடத் தீர்மானித்த பிறகு, உற்சாகத்தால் நிறைந்தனர்.(46) தங்கள் விலங்குகளைத் தேற்றிய கௌரவர்கள், போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியை அடைந்து, களத்தில் இருந்து சற்றே இரு யோஜனைகளுக்குக் குறைந்த தொலைவில் (அந்த இரவுக்கான) தங்கள் முகாமை அமைத்தனர்.(47) புனிதமான சரஸ்வதியின் {சரஸ்வதி நதியின்} சிவந்த நீரையும், இமய மலையின் அடிவாரத்தில் மேட்டுச் சமவெளியை அடைந்த அவர்கள், அந்நீரில் குளித்து, அதைக் கொண்டு தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டனர். உமது மகனால் {துரியோதனனால்} உற்காசமடைந்த அவர்கள் (அந்த ஓய்வுக் களத்தில்) காத்திருந்தனர்.(48) மீண்டும் தங்களை ஒருவரோடொருவர் அணிதிரட்டிக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், விதியால் உந்தப்பட்டு (தங்கள் முகாமில்) காத்திருந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(49)
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 5ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |