Kritavarma flew away! | Shalya-Parva-Section-11 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கரப் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)
சூரியன் உதித்த அந்தக் காலை வேளையில், உண்மையில், மருண்டோரை அச்சுறுத்தும்வகையில் அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது,(7) உயர் ஆன்ம யுதிஷ்டிரனால் பாதுகாக்கப்பட்டவர்களும் துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான பாண்டவ வீரர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு உமது படைகளுடன் போரிட்டனர்.(8) ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் கொண்டதும், தாக்குவதில் திறன் கொண்டதும், இலக்கில் துல்லியம் கொண்டதுமான செருக்குமிக்கப் பாண்டவர்களுடன் மோதி அந்தக் குரு படை, காட்டுத்தீயால் அச்சமடைந்த ஒரு மந்தையின் பெண்மானைப் போலப் பலவீனமடைந்து, கலங்கிப் போனது.(9)
புழுதியில் மூழ்கும் மாட்டைப் போல ஆதரவற்றுப் பலவீனமாக இருந்த அந்தப் படையைக் கண்ட சல்லியன், அதை மீட்க விரும்பி, பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றான்.(10) சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவ எதிரிகளை எதிர்த்துப் போரிட விரைந்தான்.(11) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் வெற்றியடைய விரும்பி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தனர்.(12) அப்போது, பெரும்பலத்தைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரிய கணைகளால் அப்படையைப் பீடித்தான்.(13)
அச்சமயத்தில் பல்வேறு சகுனங்கள் தோன்றின. மலைகளுடன் கூடிய பூமியானவள் {பூமாதேவி} பேரொலியை உண்டாக்கியபடியே நடுங்கினாள்.(14) கைப்பிடிகளுடன் கூடிய வேல்களைப் போலப் பிரகாசமான கூர்முனைகளைக் கொண்ட எரிநட்சத்திரங்கள், ஆகாயத்தில் இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே பூமியில் விழுந்தன.(15) பெரும் எண்ணிக்கையிலான மான்கள், எருமைகள் மற்றும் பறவைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன[1].(16) வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்கள், புதனுடன் சேர்ந்து பாண்டவர்களுக்குப் பின்புறமாகவும், பூமியின் தலைவர்கள் (கௌரவர்கள்) அனைவருக்கும் முன்னிலையிலும் {எதிர்ப்புறத்திலும்} தோன்றின[2].(17) ஆயுதங்களின் முனைகள், (போர்வீரர்களின்) கண்களைக் கூசச் செய்யும் வகையில் சுடர்மிக்கத் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான காகங்கங்களும், ஆந்தைகளும் போராளிகளின் தலைகளிலும், அவர்களது கொடிமர நுனிகளிலும் அமர்ந்தன.(18)
[1] அவ்விலங்குகள் பேரழிவையும், தோல்வியையும் முன்னறிவிக்கும் வகையில் குரு படையின் இடது புறத்தில் கடந்து செல்வது தெரிந்தது என்பது பொருளாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், அவ்விலங்குகள் உமது படையை இடது புறத்தில் கடந்து சென்றான என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ஜனநாதரே, மிருகங்களும், எருமைக்கடாக்களும் பக்ஷிகளும் அப்பொழுது உம்முடைய ஸேனையைப் பலதடவை இடமாகச் சுற்றி வந்தன" என்றிருக்கிறது.[2] "பூமி முழுவதும் அனுபவிக்கப் போகின்றவர்களான பாண்டவர்களுக்கு முதல்வரான தர்மநந்தனரை நோக்கிச் சுக்ரன் அங்காரகன் புதன் இந்த மூன்று கிரஹங்களும் ஏழாவது ஸ்தானத்தில் இருந்து கொண்டு பலத்தை உண்டு பண்ணுகின்றவைகளாயிருந்தன" என்பது பழைய உரை என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
பிறகு, பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் போராளிகளுக்கு இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(19) அப்போது, ஓ! மன்னா, கௌரவர்கள் தங்கள் படைப்பிரிவுகளைத் திரட்டிக் கொண்டு பாண்டவப் படையை எதிர்த்து விரைந்தனர்.(20) தளர்வடைய இயலா ஆன்மா கொண்ட சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் ஆயிரங்கண் இந்திரனைப் போலக் குந்தியின் மகனான யுதிஷ்டிரனின் மீது அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(21) பெரும் பலம் கொண்ட அவன் {சல்லியன்}, பீமசேனன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாண்டுவின் மூலம் மாத்ரியிடம் பிறந்த இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி ஆகிய ஒவ்வொருவரையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பத்து கணைகளால் துளைத்தான்.(22,23) உண்மையில் அவன் {சல்லியன்}, கோடைகால நெருக்கத்தில் மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போலத் தன் கணைமாரிகளைப் பொழியத் தொடங்கினான்.(24)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியனுடைய கணைகளான் விளைவால், பிரபத்ரகர்களும், சோமகர்களும் ஆயிரக்கணக்கில் வீழ்வது காணப்பட்டது.(25) வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலவும், மேகங்களில் இருந்து விழும் இடியைப் போலவும் சல்லியனின் கணைகள் விழுவது அங்கே காணப்பட்டது.(26) யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் சல்லியனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, கீழே விழவோ, திரியவோ, உரத்த ஓலமிடவோ செய்தனர்.(27) சினத்திலும், ஆற்றலிலும் மதங்கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, யுகத்தின் முடிவில் வரும் அந்தகனைப் போலப் போரில் தன் எதிரிகளை மறைத்தான். மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் மேகங்களைப் போல உரக்க முழங்கத் தொடங்கினான்.(28) இவ்வாறு சல்லியனால் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, (பாதுகாப்பு நாடி) குந்தியின் மகனான யுதிஷ்டிரனை நோக்கி ஓடியது.(29)
பெருங்கரநளினம் கொண்ட சல்லியன், அவர்களைக் கூரிய கணைகளால் போரில் நொறுக்கிய பிறகு, அடர்த்தியான கணைமாரியால் யுதிஷ்டிரனைப் பீடிக்கத் தொடங்கினான்.(30) குதிரை மற்றும் காலாட்படையுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் சல்லியனைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, அங்குசத்தால் தடுக்கப்படும் மதங்கொண்ட யானையைப் போலக் கூரிய கணைகளால் அவனைத் தடுத்தான்.(31) அப்போது சல்லியன் கடும் நஞ்சுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றை யுதிஷ்டிரன் மீது ஏவினான். அந்தக் கணையானது, குந்தியின் உயர் ஆன்ம மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்து வேகமாகப் பூமியில் விழுந்தது.(32) அப்போது, கோபத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, ஏழு கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும், நகுலன் பத்தாலும் சல்லியனைத் துளைத்தனர்.(33) திரௌபதியின் (ஐந்து) மகன்கள், எதிரிகளைக் கொல்பவனும், மூர்க்கமாக இருப்பவனுமான ஆர்தாயனியின் {சல்லியனின்} மீது, மலையின் மீது மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலக் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(34)
சல்லியன் அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தர்களால் தாக்கப்படுவதைக் கண்ட கிருதவர்மனும், கிருபரும் அந்த இடத்திற்குக் கோபத்துடன் விரைந்தனர்.(35) வலிமையும், சக்தியும் கொண்ட உலூகன், சுபலனின் மகனான சகுனி, உதடுகளில் புன்னகையைக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் ஆகியோரும், உமது மகன்கள் அனைவரும், அந்தப் போரில் அனைத்து வழிகளிலும் சல்லியனைப் பாதுகாத்தனர்.(36) பீமசேனனை மூன்று கணைகளால் துளைத்த கிருதவர்மன், அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, கோபத்தின் வடிவமாகத் தெரிந்த அந்தப் போர்வீரனை {பீமனைத்} தடுத்தான்.(37) சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பல கைகளால் திருஷ்டத்யும்னனைத் தாக்கினார். சகுனி, திரௌபதியின் மகன்களை எதிர்த்துச் சென்றான், அஸ்வத்தாமன் இரட்டையர்களை {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரை எதிர்த்துச் சென்றான்.(38) போர்வீரர்களில் முதன்மையானவனும், கடும் சக்தி கொண்டவனுமான துரியோதனன், அந்தப் போரில் வலிமை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, மற்றும் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று பல கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(39) இவ்வாறு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தின் பல்வேறு பகுதிகளில் சீற்றமிக்கவர்களும், அழகானவர்களுமான நூற்றுக்கணக்கான மோதல்கள் உமது படைக்கும், எதிரியின் படைக்கும் இடையில் நடைபெற்றன.(40)
அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் பீமசேனனுடைய தேரின் பழுப்பு நிற {கரடி நிற} குதிரைகளைக் கொன்றான். குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி, தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(41) சகாதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுடைய குதிரைகளைக் கொன்றான். அப்போது சகாதேவன் தன் வாளால் சல்லியனின் மகனைக் கொன்றான்.(42) ஆசானான கௌதமர் {கிருபர்}, மீண்டும் அச்சமில்லாமல் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டார். அவர்கள் இருவரும் மிகக் கவனமான முயற்சியுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(43) ஆசானின் மகனான அஸ்வத்தாமன், அதிகக் கோபம் இல்லாமல் போரில் சிரித்துக் கொண்டே, திரௌபதியின் ஐந்து வீரமகன்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(44) மீண்டும் அந்தப் போரில் பீமசேனனின் குதிரைகள் கொல்லப்பட்டன. குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி,(45) தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கினான். கிருதவர்மன் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் தப்பி ஓடினான்.(46)
சினத்தால் தூண்டப்பட்ட சல்லியனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாண்டவர்கள் பலரைக் கொன்று, கூரிய கணைகள் பலவற்றால் மீண்டும் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(47) அப்போது வீரப் பீமன், தன் கீழுதட்டைக் கடித்தவாறு, சினத்தில் மதங்கொண்டு, அந்தப் போரில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனைக் கொல்வதற்காக அவனையே இலக்காக நோக்கினான்.(48) மரண இரவைப் போல (எதிரியின் தலையை) எதிர்நோக்கும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதும், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு அழிவைத் தரக்கூடியதும்,(49) தங்கத் துணியால் கட்டப்பட்டதும், சுடர்மிக்க எரிநட்சத்திரத்தைப் போலத் தெரிவதும், தாங்குக் கயிற்றுடன் கூடியதும், பெண் பாம்பைப் போலச் சீற்றமிக்கதும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதும், முழுக்க இரும்பாலானதும்,(50) இனிய மங்கையைப் போலச் சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களால் பூசப்பட்டதும், கொழுப்பு, குருதி, ஊனிர் ஆகியவற்றைச் சிந்தத் செய்வதும், யமனின் நாவுக்கு ஒப்பானதும்,(51) அதனுடன் இணைக்கப்பட்ட மணிகளின் விளைவால் கீச்சொலிகளை உண்டாக்குவதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், புதிதாகச் சட்டை உரித்து விடுபட்ட கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், யானைகளின் மதநீரால் நனைந்ததும்,(52) பகைவரின் துருப்புகளை அச்சுறுத்துவதும், நட்பு துருப்புகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதும், உலக மனிதர்களால் கொண்டாடப்படுவதும், மலைச்சிகரங்களையே பிளக்கவல்லதும்,(53) எதைக் கொண்டு, கைலாசத்தில் அந்தக் குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, மகேஸ்வரனின் நண்பனான தலைவன் அளகனையே {குபேரனையே}[3] அறைகூவி அழைத்தானோ,(54) திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்து மந்தார மலர்களை அடையும் பொருட்டுக் கந்தமாதன மலைச்சாரலில் பலரால் தடுக்கப்பட்டாலும், கோபத்துடன் கூடிய பீமன், செருக்கு மிக்கவர்களும், மாயசக்திகளைக் கொண்டவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான குஹ்யர்களை எந்த ஆயுதத்தைக் கொண்டு பீமன் கோபத்துடன் கொன்றானோ,(55) வைரங்கள், ரத்தினங்கள் நிறைந்ததும், எட்டு பட்டைகளைக் கொண்டுதும், இந்திரனின் வஜ்ரத்தைப் போலக் கொண்டாடப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, வலிமைமிக்கக் கரத்தைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} சல்லியனை எதிர்த்து விரைந்தான்.(56)
[3] அளகாபுரியின் தலைவன் குபேரன்
பயங்கர ஒலியைக் கொண்ட அந்தக் கதாயுதத்துடன் கூடியவனும், போரில் திறன்மிக்கவனுமான பீமன், பெரும் வேகம் கொண்ட சல்லியனின் நான்கு குதிரைகளை நொறுக்கினான்.(57) அப்போது அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட வீரச் சல்லியன், பீமசேனனின் அகன்ற மார்பின் மீது ஒரு வேலை வீசி உரக்கக் கூச்சலிட்டான். அந்த வேலானது, பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று அவனது உடலுக்குள் ஊடுருவியது.(58) எனினும், விருகோதரன், அவ்வாயுதத்தைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டே சல்லியனுடைய சாரதியைத் துளைத்தான்.(59) முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்தச் சாரதி, குருதி கக்கிக் கலங்கிய இதயத்துடன் கீழே விழுந்தான். இதனால் தன் தேரில் இருந்து கீழே இறங்கி வந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியாகப் பீமனைப் பார்த்தான்.(60) தன் அருஞ்செயலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டதைக் கண்ட சல்லியன் ஆச்சரியத்தால் நிறைந்தான். அமைதியான ஆன்மா கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் எதிரியின் மீது தன் பார்வையைச் செலுத்துத் தொடங்கினான்.(61) போரில் பீமனின் பயங்கரச் சாதனையைக் கண்ட பார்த்தர்கள், மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன், உழைப்பால் களைப்படைய முடியாதவனான அவனை {பீமனை} வழிபட்டனர்" {என்றான் சஞ்சயன்}.(62)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 62
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 62
ஆங்கிலத்தில் | In English |