Nakula killed Karna's sons! | Shalya-Parva-Section-10 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது....
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், "மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ! சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்" என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)
சல்லியன், வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் படை மீது திடீரெனப் பாய்ந்தான். பொங்கும் கடலை அடக்கும் கரைகளைப் போலத் தனியொருவனாகவே அவன் அதைத் தடுத்தான்.(5) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மலையை நோக்கி விரையும் கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையானது, அந்தப் போரில் சல்லியனை எதிர்த்துச் சென்று அசையாமல் நின்றது.(6) போர்க்களத்தில் நிற்கும் மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட கௌரவர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு திரும்பிவந்தனர்.(7) அவர்கள் திரும்பியதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நன்றாக அணிவகுக்கப்பட்ட அந்த வியூகத்தில் தனித்தனியாகத் தங்கள் நிலைகளை எடுத்துக் கொண்டதும், நீரைப் போலக் குருதிபாயும் பயங்கரமான போர் தொடங்கியது.
வெல்லப்பட முடியாதவனான நகுலன், {கர்ணன் மகனான} சித்திரசேனனுடன் மோதினான்.(8) சிறந்த வில்லாளிகளான அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் அணுகி, ஆகாயத்தின் தெற்கிலும் வடக்கிலும் எழுந்த இரு மேகங்கள் மழை பொழிவதைப் போல, அந்தப் போரில் தங்கள் கணைமாரியால் ஒருவரையொருவர் நனைத்தனர். பாண்டுவின் மகனுக்கும் {நகுலனுக்கும்}, எதிராளிக்கும் {சித்திரசேனனுக்கும்} இடையிலான எந்த வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.(9,10) அவர்கள் இருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும், வலிமைமிக்கவர்களாகவும், தேர்வீரர்களின் நடைமுறையை அறிந்தவர்களாகவும் இருந்தனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அவர்கள், அடுத்தவரின் குறைபாடுகளையும், தாமதத்தையும் கவனமாகத் தேடினர்.(11) அப்போது சித்திரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்கு கடினமாக்கப்பட்டும், கூர்மையானதுமான ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, நகுலனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(12)
அப்போது கர்ணனின் மகன் {சித்திரசேனன்}, வில்லற்றிருந்த நகுலனின் நெற்றியில், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையுமான மூன்று கணைகளால் தாக்கினான்.(13) இன்னும் சில கூரிய கணைகளால் அவன் {சித்திரசேனன்} நகுலனின் குதிரைகளை யமலோகம் அனுப்பி வைத்தான். அடுத்ததாக, அவன் தன் எதிராளியின் கொடிமரத்தையும் சாரதியையும் மும்மூன்று கணைகளால் வீழ்த்தினான்.(14) தன் எதிரியின் கரங்களால் ஏவப்பட்ட அம்மூன்று கணைகளை, தன் நெற்றியில் தைத்திருக்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போல நகுலன் மிக அழகாகத் தெரிந்தான்.(15) தன் வில்லையும், தேரையும் இழந்த நகுலன், ஒரு வாளை எடுத்துக் கொண்டு, மலைச்சிகரத்தில் இருந்து குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போலத் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(16)
எனினும் அவன் {நகுலன்} தரையில் நடந்து விரைந்து சென்ற போது, அவனுடைய எதிராளி {சித்திரசேனன்} அவன் {நகுலன்} மீது கணைமாரியைப் பொழிந்தான். சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்ட நகுலன், அந்தக் கணைமாரியை தன் கேடயத்தில் ஏற்றான்.(17) பிறகு சித்திரசேனனின் தேரை அடைந்தவனும், போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், உழைப்பால் களைக்காதவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனுமான அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதில் {அந்தத் தேரில்} ஏறினான்.(18) பிறகு அந்தப் பாண்டுவின் மகன், கிரீடத்தாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய நாசி மற்றும் அகன்ற பெரிய இரு கண்கள் ஆகியவற்றால் அருளப்பட்டதுமான சித்திரசேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். சூரியனின் காந்தியுடன் கூடிய சித்திரசேனன் இதனால் தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(19) சித்திரசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களாலும் புகழ்ச்சியாலும் உரக்கக் கதறினர்.(20)
அதேவேளையில் கர்ணன் மகன்களான சுஷேனன் மற்றும் சத்தியசேனன் ஆகிய பெரும் தேர்வீரர்கள் இருவரும், தன் சகோதரன் {சித்திரசேனன்} கொல்லப்பட்டதைக் கண்டு, கூரிய கணைமாரியை ஏவினர்.(21) தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அவர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனை} நோக்கி, இரு புலிகளைப் போல வேகமாக விரைந்தனர்.(22) அவர்கள் இருவரும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன் மீது கூரிய கணைகளைப் பொழிந்தனர். உண்மையில், அவர்கள் அந்தக் கணைகளைப் பொழிந்தபோது, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களுக்கு ஒப்பானவர்களாக அவர்கள் தெரிந்தனர்.(23) மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், பாண்டுவின் அந்த வீரமகன், மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சினத்துடன் இருக்கும் யமனைப் போலப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான்.(24) பிறகு அந்த இரு சகோதரர்களும் {கர்ணனின் மகன்களும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் நேரான கணைகளால் நகுலனின் தேரைத் துண்டுகளாகச் சிதறடித்தனர்.(25)
அப்போது நகுலன், அம்மோதலில் சிரித்துக் கொண்டே நான்கு கூரிய கணைகளால் சத்தியசேனனின் குதிரைகளைத் தாக்கினான்.(26) அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்ட நீண்ட கணையொன்றைக் {நாராசத்தை} குறிபார்த்து சத்தியசேனனின் வில்லை அறுத்தான்.(27) இதன்காரணமாக மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவனும் {சத்தியசேனனும்}, அவனது சகோதரனான சுஷேனனும், பாண்டுவின் மகனை {நகுலனை} எதிர்த்து விரைந்தனர்.(28) மாத்ரியின் வீர மகனோ {நகுலனோ}, ஓ! ஏகாதிபதி போரின் முன்னணியில் இருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் அச்சமில்லாமல் துளைத்தான்.(29) பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான சுஷேனன், கோபத்தால் நிறைந்து, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் பாண்டுவின் மகனுடைய உறுதிமிக்க வில்லை ஒரு கத்தி முனை கணையால் {க்ஷுரப்ரத்தால்} அறுத்தான்.(30)
அப்போது கோபத்தால் உணர்விழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சுஷேனனையும், ஒன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(31) பிறகு ஒரு கணத்தையும் இழக்காத அவன் {நகுலன்}, சத்யசேனனின் தோல் கவசத்தையும் {கையுறையையும்} அறுத்ததால், ஓ! ஐயா, துருப்புகள் அனைத்தும் உரத்த கூச்சலிட்டன.(32) எதிரியைக் கொல்லவல்லதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சத்தியசேனன், அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுவின் மகனைக் கணைகளால் மறைத்தான்.(33) அந்தக் கணைகளைக் கலங்கடித்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், தன் எதிராளிகள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் துளைத்தான்.(34) பின்னவர்களில் ஒவ்வொருவரும், நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனைப் பல கூரிய கணைகளால் துளைத்தனர்.(35)
அப்போது, பெரும் கரநளினம் கொண்ட வீர சத்தியசேனன், தன் சகோதரனின் துணையில்லாமலேயே நகுலனுடைய தேரின் ஏர்க்காலையும், அவனது வில்லையும் இரு கணைகளால் அறுத்தான்.(36) எனினும், அதிரதனான நகுலன், தன் தேரில் நின்று கொண்டு, தங்கக் கைப்பிடி கொண்டதும், கூர்முனை கொண்டதும், எண்ணெயில் ஊற வைத்ததும், மிகப் பிரகாசமானதுமான ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(37) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அஃது {அந்த ஈட்டி}, அடிக்கடி தன் நாவை வெளியே தள்ளும் கடும் நஞ்சுமிக்க ஒரு பெண்பாம்புக்கு ஒப்பாக இருந்தது. அவ்வாயுதத்தை உயர்த்திய அவன் {நகுலன்}, அம்மோதலில் சத்தியசேனன் மீது அதை ஏவினான்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஈட்டியானது, அந்தப் போரில் சத்தியசேனனின் இதயத்தைத் துளைத்து, அதை நூறு துண்டுகளாக்கியது. புலன் உணர்வையும், உயிரையும் இழந்த அவன் {சத்தியசேனன்}, தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(39) தன் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட சுஷேனன், சினத்தால் உணர்விழந்தவனாக அந்தப் போரில் திடீரென நகுலனைத் தேரற்றவனாகச் செய்தான்.ஒரு கணத்தையும் இழக்காத அவன், தரையில் நின்று போராடிய அந்தப் பாண்டுவின் மகன் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(40)
நகுலன் தேரற்றவனாக இருப்பதைக் கண்ட திரௌபதியின் மகன் சுதசோமன், அந்தப் போரில் தன் தந்தையைக் {நகுலனைக்} காக்க அந்த இடத்தில் விரைந்து வந்தான்.(41) சுதசோமனின் தேரில் ஏறிக் கொண்டவனும், பாரதக் குலத்தின் வீரனுமான நகுலன், மலையில் இருக்கும் ஒரு சிங்கம் போல மிக அழகாகத் தெரிந்தான்.(42) அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் கணைமாரிகளை ஏவியபடி ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரின் அழிவுக்கு முயற்சி செய்தனர்.(43)_ அப்போது சினத்தால் நிறைந்த சுஷேனன், மூன்று கணைகளால் பாண்டுவின் மகனையும் {நகுலனையும்}, இருபதால் {நகுலனின் மகன்} சுதசோமனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(44) ஓ! ஏகாதிபதி, இதனால் மூர்க்கமடைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் தன் கணைகளால் மறைத்தான்.(45)
பெரும் சக்தி கொண்டதும், அரை வட்டத் தலை கொண்டதுமான ஒரு கூரிய கணையை {அர்த்தச்சந்திர பாணத்தை} எடுத்துக் கொண்ட நகுலன், அந்தப் போரில் அதைக் கர்ணனின் மகன் {சுஷேணன்} மீது பெரும் வேகத்தோடு ஏவினான்.(46) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} அந்தக் கணையைக் கொண்டு, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுஷேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(47) இவ்வாறு சிறப்புமிக்க நகுலனால் கொல்லப்பட்ட கர்ணனின் மகன் {சுஷேனன்}, ஆற்றங்கரையில் நிற்கும் நெடிய மரம் ஒன்று நீரோட்டத்தால் தூக்கி வீசப்படுவதைப் போலக் கீழே விழுந்தான்.(48) கர்ணன் மகன்களின் படுகொலையையும், நகுலனின் ஆற்றலையும் கண்ட உமது படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அச்சத்தால் அங்கிருந்து தப்பி ஓடியது.(50) எனினும், அவர்களது படைத்தலைவனும், துணிச்சல்மிக்கவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் துருப்புகளைப் பாதுகாத்தான்.(50)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் படையை அணிதிரட்டிய அந்தச் சல்லியன், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், தன் வில்லில் சீற்றத்துடன் நாணொலி எழுப்பியபடியும் போரில் அச்சமற்று நின்றிருந்தான்.(51) அப்போது, அந்த உறுதிமிக்க வில்லாளியால் {சல்லியனால்} அந்தப் போரில் பாதுகாக்கப்பட்ட உமது துருப்புகள், ஓ! மன்னா, எதிரியை எதிர்த்து மீண்டும் உற்சாகமாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சென்றன.(52) ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் போரிட விரும்பி அந்தப் பெரும் வில்லாளியான மத்ரர்களின் ஆட்சியாளனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்றனர்.(53) அப்போது, சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான அந்த இரு பாண்டவர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோர், பணிவின் வசிப்பிடமும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான யுதிஷ்டிரனைத் தங்களுக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு,(54) போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்று உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். மேலும் அந்த வீரர்கள், தாங்கள் ஏவிய கணைகளால் "விஸ்" ஒலியை உண்டாக்கியும், பல்வேறு வகைகளில் அடிக்கடி கூச்சலிட்டபடியும் இருந்தனர்.(55) உமது வீரர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே சினத்தால் நிறைந்து, போரிடும் விருப்பத்தால், மத்ரர்களின் ஆட்சியாளனைச் சூழ்ந்து நின்றனர்.(56)
அப்போது, மருண்டோரின் அச்சத்தைத் தூண்டும் வகையில், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்ட உமது படைவீரர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பினருக்கிடையில் ஒரு போர் தொடங்கியது.(57) யமனுடைய அரசின் மக்கள் தொகையை அதிகரித்தபடி அச்சமற்ற போராளிகளுக்கிடையில் நடந்த அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது.(58) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரங்குக் கொடியைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டு, கௌரவப் படையின் அந்தப் பகுதியை எதிர்த்து விரைந்து வந்தான்.(59) திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே அதே படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, கூரிய கணைமாரிகளைப் பொழிந்தனர்.(60) பாண்டவர்களால் விஞ்சப்பட்ட அந்தக் கௌரவப் படை திகைப்படைந்து மலைத்து நின்றது. உண்மையில், அப்போது அந்தப் படைப்பிரிவினால், திசைகள் மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(61)
பாண்டவர்களால் ஏவப்பட்ட கூரிய கணைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் கௌரவப் படையானது, தன் முதன்மையான வீரர்களை இழந்து, நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது. உண்மையில், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படையானது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களால் கொல்லப்பட நேர்ந்தது.(62) அதேபோல, ஓ! மன்னா, பாண்டவப் படையும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உமது மகன்களால் அந்தப் போரில் ஏவப்பட்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளால் கொல்லப்பட நேர்ந்தது.(63) மிகவும் தூண்டப்பட்டவையாக இருந்த அந்த இருபடைகளும் ஒன்றையொன்று கொன்று கொண்டிருந்தபோது, மழைக்காலங்களில் கலங்கும் ஓடைகள் இரண்டைப் போல மிகவும் கலக்கமடைந்திருந்தன.(64) அந்தப் பயங்கரப் போரின் போது, ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் மற்றும் பாண்டவர்களின் போர்வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது" {என்றான் சஞ்சயன்}.(65)
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 65--------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |