The mace fight between Shalya and Bhima, | Shalya-Parva-Section-12 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : சல்லியனுக்கும், பீமனுக்கும் இடையில் நேர்ந்த கடுமையான கதாயுதப் போர்; ஒரே நேரத்தில் கீழே விழுந்த சல்லியனும், பீமனும்; கீழே விழுந்த சல்லியனைப் போர்க்களத்தைவிட்டு வெளியே கொண்டு போன கிருபர்; நொடிப்பொழுதில் எழுந்து நின்று, மீண்டும் சல்லியனை அறைகூவியழைத்த பீமசேனன்; சேகிதானனைக் கொன்ற துரியோதனன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட சல்லியன்; சல்லியனின் தேர்ச்சக்கரப் பாதுகாவலர்களைக் கொன்று, சல்லியனின் கொடிமரத்தையும் வெட்டிய யுதிஷ்டிரன்; சல்லியனுக்கு முன்பு ஆற்றலை இழந்து நின்ற யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தன் சாரதி வீழ்ந்துவிட்டதைக் கண்ட சல்லியன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, அசையாத மலையென நின்றான்.(1) எனினும், வலிமைமிக்கக் கதாயுதத்துடன் கூடிய பீமன், சுடர்மிக்க யுகநெருப்பையோ, பாசக்கயிற்றைக் கொண்ட யமனையோ, உறுதியான சிகரத்தைக் கொண்ட கைலாச மலையையோ, வஜ்ரத்துடன் கூடிய இந்திரனையோ, திரிசூலத்துடன் கூடிய மஹாதேவனையோ, காட்டில் உள்ள மதங்கொண்ட யானையொன்றையோ போலத் தெரிந்த சல்லியனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(2,3) அந்நேரத்தில், வீரர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்படி, ஆயிரக்கணக்கான சங்கொலிகளும், கொம்பு {எக்காள} ஒலிகளும், சிங்க முழக்கங்களும் எழுந்தன.(4) அந்த இரு முதன்மையான போர்வீரர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் இருந்த பார்த்த இரு படைகளின் போராளிகளும், "நன்று, நன்று" என்று சொல்லி அவர்கள் இருவரையும் பாராட்டினர்.(5)
மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ}, யதுக்களைத் திளைக்கச் செய்யும் ராமனையோ {பலராமனையோ} தவிர, போரில் பீமனின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்டோர் வேறு எவரும் இல்லை.(6) அதே போலவே, பீமனைத் தவிர, மத்ரர்களின் சிறப்புமிக்க மன்னனின் {சல்லியனின்} கதாயுத சக்தியைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்ட வேறு எந்தப் போர்வீரனும் அங்கே இல்லை.(7) விருகோதரன் {பீமன்} மற்றும் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகிய அந்தப் போராளிகள் இருவரும், காளைகளைப் போல முழங்கிக் கொண்டு, அடிக்கடி காற்றில் குதித்து எழுந்தவாறு, வட்டமாகச் சுழன்றனர் {மண்டகதிகளோடு சஞ்சரித்தனர்}.(8) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அம்மோதலில், வட்டமாகச் சுழல்வதிலோ {மண்டலகதிகளிலோ}, கதாயுதத்தைப் பயன்படுத்துவதிலோ அவர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(9)
பிரகாசமான தங்கத்துணியால் சுற்றிலும் கட்டப்பட்டு நெருப்புப் பட்டையாகத் தெரிந்த சல்லியனின் கதாயுதமானது, பார்வையாளர்களிடம் அச்சத்தைத் தூண்டியது.(10) அதே போலவே, உயர் ஆன்ம பீமனின் கதாயுதமும், அவன் வட்டமாகச் சுழல்கையில், மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போலத் தெரிந்தது.(11) மத்ர ஆட்சியாளனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட பீமனின் கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் தீப்பொறிகளை உண்டாக்கி எரிவது போலத் தெரிந்தது.(12) அதே போல, பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட சல்லியனின் கதாயுதமும், சுடர்மிக்கத் தணல் மழையைப் பொழிந்து கொண்டு அற்புதமாகத் தெரிந்தது.(13) பெரும் யானைகள் இரண்டு, தங்கள் தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ, பெரும் காளைகள் இரண்டு தங்கள் கொம்புங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ அந்த இருவீரர்களும், இரும்பால் கட்டப்பட்ட தண்டங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் இரு போராளிகளைப் போலத் தங்கள் முதன்மையான கதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(14) கதாயுதங்களால் தாக்கப்பட்ட அவர்களது அங்கங்கள், விரைவில் குருதியில் குளித்து, மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களைப் போலத் தெரிந்த விளைவால் அழகாகத் தெரிந்தன.(15)
மத்ர ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கமும், வலப்பக்கமும் தாக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் மலையொன்றைப் போல அசையாதவனாக நின்றான்.(16) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கதாயுதத்தால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டாலும், யானையின் தந்தங்களால் தாக்கப்படும் மலையொன்றைப் போலச் சல்லியன் அசையாது நின்றான்.(17) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கதாயுத வீச்சுகளால் உண்டான ஒலியானது, அடுத்தடுத்த இடியொலிகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.(18) ஒரு கணம் நின்றவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மிக நெருக்கத்தில் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர்.(19) மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் தொடங்கிய மோதலில், அவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டுகள் {நடையடிகள்} மட்டும் அடுத்தவனை நோக்கி முன்னேறி, உயர்த்தப்பட்ட இரும்பு தண்டங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(20)
அப்போது, ஒருவரையொருவர் அடைய விரும்பிய அவர்கள் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர். (கதாயுதப்பயன்பாட்டில்) சாதித்தவர்களான அவ்விருவரும் தங்கள் தங்கள் திறன்மேன்மையை வெளிக்காட்டத் தொடங்கினர்.(21) தங்கள் பயங்கர ஆயுதங்களை உயர்த்திக் கொண்ட அவர்கள், நிலநடுக்கத்தின்போது, சிகரங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் மலைகளைப் போல மீண்டும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(22) அவர்களின் பலத்தின் விளைவால் ஒருவரையொருவர் அதிகமாக நொறுக்கிய அந்த வீரர்கள் இருவரும், இந்திர வழிபாட்டுக்காக நடப்பட்ட கம்புகள் இரண்டைப் போல ஒரே நேரத்தில் கீழே விழுந்தனர்.(23) அப்போது அந்தக் காட்சியைக் கண்டவர்களும், இருபடைகளைச் சேர்ந்தவர்களுமான துணிச்சல்மீக்க போராளிகள், ஓ என்றும் ஐயோ என்றும் கூச்சலிட்டனர். பெரும் பலத்தோடு முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் மிகவும் கலங்கிப் போயிருந்தனர்.(24) அப்போது வலிமைமிக்கக் கிருபர், மத்ரர்களில் காளையான சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, போர்க்களத்தில் இருந்து அவனை வேகமாகக் கொண்டு சென்றார்.(25)
எனினும், கண்ணிமைப்பதற்குள் எழுந்து நின்ற பீமசேனன், மதுவுண்டவன் போலத் தள்ளாடியபடியே உயர்த்திப்பிடித்த கதாயுதத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அறைகூவியழைத்தான்.(26) அப்போது வீரத்துடன் கூடிய உமது படையின் போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளை முழக்கி இசைத்தபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(27) கரங்களையும், ஆயுதங்களையும் உயர்த்திக் கொண்டு, பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்த உமது போராளிகள், ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தலைமையில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தனர்.(28) கௌரவப் படையைக் கண்ட பாண்டுமகன்கள், துரியோதனன் தலைமையிலான அந்தப்போர்வீரர்களை எதிர்த்து சிங்க முழக்கங்களுடன் விரைந்தனர்.(29)
பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வரும் வீரர்களில் சேகிதானானைத்[1] தனிமைப்படுத்தி, ஒரு வேலால் அவனது மார்பை ஆழமாகத் துளைத்தான்.(30) இவ்வாறு உமது மகனால் தாக்கப்பட்ட சேகிதானன், குருதியால் மறைக்கப்பட்டு, ஆழ்ந்த மயக்கத்தை அடைந்து தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(31) பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்கள், சேகிதானன் கொல்லப்பட்டதைக் கண்டு, (கௌரவர்கள் மீது) இடையறாத கணைமாரியைப் பொழிந்தனர்.(32) உண்மையில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, உமது படைப்பிரிவுகளின் அனைத்துப் பக்கங்களிலும் அழகாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(33) கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கவனான சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் முன் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடன் போரிட்டனர்.(34) துரியோதனன், ஓ! ஏகாதிபதி, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொன்றவனும், அபரிமிதமான சக்தியும், ஆற்றலும் கொண்ட வீரனான திருஷ்டத்யும்னனுடன் போரிட்டான்.(35)
[1] இவன் விருஷ்ணி குல வீரனாவான்.
உமது மகனால் {துரியோதனனால்} அனுப்பப்பட்ட, துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மூவாயிரம் {3000} தேர்கள் விஜயனோடு (அர்ஜுனனோடு) போரிட்டுக் கொண்டிருந்தன.(36) அந்தப் போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, உயிரின் மீது கொண்ட அச்சத்தைத் துறந்தனர். உண்மையில், ஓ! மன்னா, ஒரு தடாகத்தினுள் செல்லும் அன்னங்களைப் போலவே, உமது போர்வீரர்கள், பாண்டவப்படைக்கு மத்தியில் ஊடுருவின.(37) அப்போது, அடி கொடுப்பதிலும், வாங்குவதிலும் இன்பங்கொண்டு ஒருவரையொருவர் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட போராளிகளைக் கொண்ட குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும் போர் நடந்தது.(38) ஓ! மன்னா, வீரர்களுக்கு அழிவை ஏற்படுத்திய அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, காணப் பயங்கரமான பூமியின் புழுதி காற்று எழுந்தது.(39) போர் நடந்து கொண்டிருந்த போது, சொல்லப்பட்ட (பாண்டவப் போர்வீரர்களின்) பெயர்களையும், பாண்டவர்களால் சொல்லப்பட்ட (குரு போர்வீரர்களின்) பெயர்களையும் கேட்டே, அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போராளிகளை நாங்கள் அறிந்தோம்.(40)
எனினும், ஓ! மனிதர்களில் புலியே , விரைவில் அந்தப் புழுதியானது, அப்போது சிந்தப்பட்ட குருதியால் விலக்கப்பட்டு, புழுதியோடு கூடிய இருளும் விரட்டப்பட்டு, மீண்டும் திசைகளின் புள்ளிகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(41) உண்மையில், அச்சந்தருவதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களிலோ, எதிரியின் போர்வீரர்களிலோ எவரும் புறமுதுகிடவில்லை.(42) பிரம்மலோகத்தை அடையும் விருப்பத்தாலும், நியாயமாகப் போரிட்டு வெற்றியை அடையும் விருப்பத்தாலும், சொர்க்கத்தை அடையும் நம்பிக்கையாலும் தூண்டப்பட்ட போராளிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.(43) தங்கள் தலைவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதரங்களின் நிமித்தமாக அவர்களுக்குப் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவோ, தங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் உறுதியான தீர்மானம் கொண்டோ, சொர்க்கத்தில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்த போர்வீரர்கள், அந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(44) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவியும், வீசியும் கொண்டிருந்த பெரும் தேர்வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிக் கொண்டோ, தாக்கிக் கொண்டோ இருந்தனர்.(45) உமது போர்வீரர்களும், எதிரியின் போர்வீரர்களும், "கொல்வாயாக, துளைப்பாயாக, கைப்பற்றுவாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக" என்ற வார்த்தைகளைச் சொல்வதே அந்தப் போர்க்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.(46)
அப்போது சல்லியன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனைக் கொல்லவிரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் துளைத்தான்.(47) எனினும், உடலின் முக்கிய அங்கங்கள் எவை என்பதை அறிந்த பிருதையின் மகனோ {யுதிஷ்டிரனோ}, ஓ! ஏகாதிபதி, மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து, பதினான்கு துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} மிக எளிதாக அவனைத் தாக்கினான்.(48) பெரும் புகழைக் கொண்ட சல்லியன், தன் கணைகளால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுத்து, சினத்தால் நிறைந்து, தன் எதிராளியைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் கங்க இறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் அவனைத் துளைத்தான்.(49) ஓ! ஏகாதிபதி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் {சல்லியன்}, நேரான கணையொன்றால் யுதிஷ்டிரனை மீண்டும் தாக்கினான்.(50)
பெரும் புகழைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான்.(51) பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்} எழுபது கணைகளால் சந்திரசேனனையும், ஒன்பதால் சல்லியனின் சாரதியையும், அறுபத்து நான்கால் துருமசேனனையும் துளைத்தான்.(52) உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} (இவ்வாறு) சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களும் கொல்லப்பட்ட போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, சேதிகளுக்கு மத்தியில் இருபத்தைந்து போர்வீரர்களைக் கொன்றான்.(53) மேலும் அந்தப் போரில் அவன் {சல்லியன்}, சாத்யகியை இருபத்தைந்து கூரிய கணைகளாலும், பீமசேனனை ஏழாலும், மாத்ரியின் இரு மகன்களை {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை} நூறு கணைகளாலும் துளைத்தான்.(54) சல்லிய்ன இவ்வாறு போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் சிறந்தவனான பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பல கணைகளை அவன் மீது ஏவினான்.(55)
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் எதிராளி முன்னணியில் நின்று கொண்டிருந்தபோது, ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு அவனது தேரில் உள்ள கொடிமரநுனியை அறுத்தான்.(56) அந்தப் பெரும்போரில் பாண்டுவின் மகனால் இவ்வாறு வெட்டப்பட்ட சல்லியனின் கொடிமரம், பிளக்கப்பட்ட மலைச்சிகரத்தைப் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம்.(57) தன் கொடிமரம் கீழே விழுந்ததையும், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தன் முன் நின்று கொண்டிருப்பதையும் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சினத்தால் நிறைந்து, கணைமாரிகளை ஏவினான்.(58) க்ஷத்திரியர்களில் காளையும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல அந்தப் போரில் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(59) சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்த அவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனையும் பெரிதாகப் பீடித்தான்.(60)
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகத்திரள்கள் எழுந்ததைப் போலப் பாண்டு மகனின் மார்புக்கு முன்பு பரவியிருந்த கணைகளின் வலையொன்றை நாங்கள் கண்டோம்.(61) அந்தப் போரில் சினத்தால் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சல்லியன், நேரான கணைகளால் யுதிஷ்டிரனை மறைத்தான்.(62) அந்தக் கணை மாரிகளால் பீடிக்கப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், விருத்திரனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} முன்பு அசுரன் ஜம்பனைப் போலவே தன் ஆற்றலை இழந்தவனாக உணர்ந்தான்" {என்றான் சஞ்சயன்}.(63)
-------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 63
-------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |