Satyaki vanquished Kritavarma! | Shalya-Parva-Section-21 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)
[1] போரில் திறன்மிக்கவனான சால்வன் என்று இருந்திருக்க வேண்டும். சபைகளின் ரத்தினம் என்பது சல்லியனைக் குறிக்கும் அடைமொழியாகும். கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் "சபைகளின் ரத்தினமான சால்வன்" என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "யுத்தத்தில் தேர்ச்சியுள்ளவனான சால்வன்" என்றிருக்கிறது. அல்லது சால்வனல்லாமல் இது சல்லியனையே குறிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சால்வனுக்கும் Shalva, சல்லியனுக்கும் Shalya ஓரெழுத்தே வேறுபாடு. ஆதிபர்வத்தில் கூட, பீஷ்மர் காசி மன்னனின் மகள்களான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரைக் கடத்தி வரும்போது, எதிர்த்து வந்த மன்னர்களில் சால்வனுக்குப் பதில் சல்லியனின் பெயரையே ஆங்கிலப் பதிப்புகளில் காண முடிகிறது.
நண்பர்கள் மிகக்கடுமையான சாதனைகளைச் செய்வதைக் கண்ட அவர்களது நண்பர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, சொர்க்கத்தையே எட்டுமளவுக்கு உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் அச்சமடைந்தனர். அப்போது சிநியின் பேரனான சாத்யகி அவ்விடத்திற்கு வந்தான்.(7) பெரும் பலம் கொண்டவனான மன்னன் க்ஷேமகீர்த்தியை {க்ஷேகதூர்த்தியை} அணுகிய சாத்யகி, ஏழு கூரிய கணைக்களால் அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(8) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தேர்வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கூரிய கணைகளை ஏவியபடியே வந்தபோது, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவனை {சாத்யகியை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(9) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், முதன்மையான ஆயுதங்களைத் தரித்து வந்தவர்களுமான அவ்விரு வில்லாளிகளும், சிங்கங்களைப் போல முழங்கி, பெரும்பலத்துடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(10)
பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மற்றும் பிற போர்வீரர்களும், அவ்விரு வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதலின் பார்வையாளர்களானார்கள்.(11) விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தைச் சேர்ந்த அவ்விரு வீரர்களும், மகிழ்ச்சியால் நிறைந்த இரு யானைகளைப் போல, நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளாலும் {வத்சதந்தங்களாலும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(12) பல்வேறு வகையான தடங்களில் திரிந்தவர்களான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, அந்தச் சிநிகுலத்துக் காளையும் {சாத்யகியும்}, விரைவில் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(13) அந்த இரு விருஷ்ணி சிங்கங்களின் விற்களில் இருந்து பெரும் பலத்துடன் ஏவப்பட்ட கணைகள், வேகமாகச் செல்லும் பூச்சிகளுக்கு ஒப்பாக ஆகாயத்தில் பறப்பது காணப்பட்டது.(14) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான சாத்யகியை அணுகி, அவனது நான்கு குதிரைகளையும் நான் கூரிய கணைகளால் துளைத்தான்.(15)
நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, வேலால் தாக்கப்பட்ட ஒரு யானையைப் போல இதனால் சினம் தூண்டப்பட்டு, எட்டு முதன்மையான கணைகளால் கிருதவர்மனைத் துளைத்தான்.(16) பிறகு கிருதவர்மன், முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தான்.(17) முறிந்த தன் வில்லை ஒருபுறம் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, கணைபொருத்தப்பட்ட மற்றொன்றை {மற்றொரு வில்லை} வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) முதன்மையான அந்த வில்லை எடுத்து, அதற்கு நாண்பொருத்தியவனும், பெரும் நுண்ணறிவும், பெரும் பலமும் கொண்டவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான அந்த அதிரதன் {சாத்யகி}, கிருதவர்மனால் தன் வில் வெட்டப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சீற்றத்தால் நிறைந்து, பின்னவனை {கிருதவர்மனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(19,20)
அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பத்து கூரிய கணைகளால், கிருதவர்மனின் சாரதி, குதிரைகள் மற்றும் கொடிமரத்தைத் தாக்கினான்.(21) இதன் காரணமாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேர் சாரதியற்றதாக, குதிரைகளற்றதாகச் செய்யப்பட்டதைக் கண்டு(22) சினத்தால் நிறைந்தான். கூர்முனை கொண்ட ஒரு வேலை உயர்த்திய அவன் {கிருதவர்மன்}, அந்தச் சிநிகுலத்துக் காளையைக் கொல்லும் விருப்பத்தால் தன் கரவலிமை முழுவதையும் பயன்படுத்தி அஃதை அவன் {சாத்யகி} மீது வீசினான்.(23) எனினும், அந்தச் சாத்வத குலத்தின் சாத்யகி, பல கூரிய கணைகளால் அந்த வேலைத் தாக்கி பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தி, மதுகுலத்துக் கிருதவர்மனை (தன் சுறுசுறுப்பாலும், ஆற்றலாலும்) திகைப்படையச் செய்தான். மற்றுமோர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவன் கிருதவர்மனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்தப் போரில் ஆயுதங்களில் திறன் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்}, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட கிருதவர்மன் கீழே பூமியில் இறங்கினான்.(25)
அந்த வீரக் கிருதவர்மன், அந்தத் தனிப்போரில் சாத்யகியால் தன் தேரை இழந்ததால், (கௌரவர்களின்) துருப்புகள் அனைத்தும் பேரச்சத்தால் நிறைந்தன.(26) கிருதவர்மன் இவ்வாறு குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாகச் செய்யப்பட்ட போது உமது மகன்களின் இதயங்கள் பெரும் சோகத்தால் பீடிக்கப்பட்டன.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்ட கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி அவனை நோக்கி விரைந்தார்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருபர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிருதவர்மனைத் தமது தேரில் ஏற்றிக் கொண்டு, போரின் நெருக்கத்தில் இருந்து அவனை வெளியே கொண்டு சென்றார்.(29) கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, சிநியின் பேரன் {சாத்யகி} அக்களத்தில் பலம் நிறைந்தவனாக ஆனதும், துரியோதனனின் மொத்த படையும் போரில் இருந்து புறமுதுகிட்டது.(30)
எனினும், (குரு) படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டிருந்ததால், எதிரியால் அதைப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} மன்னன் துரியோதனனைத் தவிர உமது போர்வீரர்களான மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.(31) தன் படை முறியடிக்கப்பட்டதை அருகில் இருந்து கண்ட அவன், வேகமாக விரைந்து, வெற்றியடைந்த எதிரியைத் தாக்கி, தனியொருவனாக அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(32) அந்த வெல்லப்பட முடியாத வீரன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, பாண்டுக்கள், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும் மற்றும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சோமகர்கள் ஆகியோரின் பெருங்கூட்டத்தையும் கூரிய கணைகளால் அச்சமில்லாமல் தாக்கினான்.(33,34) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட வேள்வி மேடையில் எரியும் சுடர்மிக்கப் பெரும் நெருப்பைப் போல, வலிமைமிக்கவனான உமது மகன் {துரியோதனன்}, உறுதியான தீர்மானத்துடன் களத்தில் நின்று கொண்டிருந்தான். இவ்வாறே மன்னன் துரியோதனன் அந்தப் போரில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(35) அப்போது, அந்தகனை அணுகமுடியாத உயிரினங்களைப் போலவே, அவனது எதிரிகளால் அவனை {துரியோதனனை} நெருங்க முடியவில்லை. பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு அங்கே வந்தான்" {என்றான் சஞ்சயன்}.(36)
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 36
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |