Shakuni made Yudhishthira carless! | Shalya-Parva-Section-22 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : துரியோதனனின் அருஞ்செயல்; பாண்டவப்பட்டையைத் தனியொருவனாக எதிர்கொண்ட துரியோதனன்; தப்பி ஓடிய போர்வீரர்கள் துரியோதனன் போரிடுவதைக் கண்டு மீண்டும் வந்தது; அஸ்வத்தாமன் பீமனோடும், சகுனி யுதிஷ்டிரனோடும் போரிட்டது; யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி; மற்றொரு தேரில் ஏறிவந்த யுதிஷ்டிரன்; உலூகன் நகுலனோடும், துரியோதனன் திருஷ்டத்யும்னனோடும், கிருபர் திரௌபதியின் மகன்களோடும் போரிட்டது; களமெங்கும் அடர்த்தியாக எழுந்த புழுதி மேகம், போர்வீரர்களின் குருதியால் நனைந்து தணிவையடைந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்வீரர்களில் முதன்மையானவனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தேரைச் செலுத்திக் கொண்டு, மனத்தளர்ச்சியால் ஏற்பட்ட துணிவால் நிறைந்து, பெரும் வீரத்தோடு கூடிய ருத்திரனைப் போல அந்தப் போரில் தெரிந்தான்.(1) அவனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமி முற்றிலும் மறைக்கப்பட்டது. உண்மையில் அவன் {துரியோதனன்}, மலைச்சாரல்களில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் தன் எதிரிகளை நனைத்தான்.(2) அப்போது அந்தப் பெரும்போரில் பாண்டவர்களில் எந்த ஒரு மனிதனோ, குதிரையோ, யானையோ, தேரோ, துரியோதனனின் கணைகளால் தாக்கப்படாதவர்களாகவோ, தாக்கப்படாததாகவோ இல்லை.(3) போர்வீரர்களில் யார்மீதெல்லாம் நான் கண்களைச் செலுத்தினேனோ, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே, அவர்கள் அனைவரும் உமது மகனின் {துரியோதனனின்} கணைகளால் தாக்கப்பட்டிருந்தனர்.(4) போரில் விரையும்போதோ, அணிவகுத்துச் செல்லும்போதே எழும் புழுதியால் மறைக்கப்படும் ஒரு கூட்டத்தைப் போல, அந்தப் பாண்டவப் படையானது அப்போது அந்தச் சிறப்புமிக்க வீரனின் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தது.(5)
அப்போது பூமியானது, ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பெரும் கரநளினம் கொண்ட வில்லாளியான உமது மகன் துரியோதனனின் கணைகளாலான ஒரே பரப்பாக என்னால் காணப்பட்டது.(6) உமது தரப்பையும், எதிரியின் தரப்பையும் சேர்ந்தவர்களான களத்தில் இருந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களில், அப்போது துரியோதனன் என்ற ஒரு மனிதன் மட்டுமே எனக்குத் தெரிந்தான்.(7) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பார்த்தர்களால், தனியொருவனான உமது மகனை {துரியோதனனை} அணுக முடியாததால், அப்போது அவனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(8) அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, யுதிஷ்டிரனை நூறு கணைகளாலும், பீமசேனனை எழுபதாலும், சகாதேவனை ஏழாலும் துளைத்தான்.(9) அவன், நகுலனை அறுபத்துநான்காலும், திருஷ்டத்யும்னனை ஐந்தாலும், திரௌபதியின் மகன்களை ஏழாலும், சாத்யகியை மூன்று கணைகளாலும் துளைத்தான். பிறகு அவன், ஓ! ஐயா ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} சகாதேவனின் வில்லையும் அறுத்தான்.(10)
முறிந்த வில்லை ஒருபுறம் கிடத்திய மாத்ரியின் வீரப் புதல்வன் {சகாதேவன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு மன்னன் துரியோதனனை எதிர்த்து விரைந்து, அந்தப் போரில் பத்து கணைகளால் அவனைத் துளைத்தான்.(11) பெரும் வில்லாளியும், துணிவுமிக்கவனுமான நகுலன், மேலும் பயங்கரமான ஒன்பது கணைகளால் மன்னனைத் {துரியோதனனைத்} துளைத்து உரக்க முழங்கினான்.(12) சாத்யகி நேரான ஒற்றைக் கணையால் மன்னனை {துரியோதனனைத்} தாக்கினான்; திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஐந்தாலும் அவனைத் தாக்கினர். பீமசேனன் அம்மன்னனை எண்பது கணைகளால் பீடித்தான்.(13) இவ்வாறு பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த துருப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டாலும் துரியோதனன் நடுங்கவில்லை.(14) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் வேகம், திறம், ஆற்றல் ஆகியவை அனைத்து உயிரினங்களையும் விஞ்சுவதாக மனிதர்கள் அனைவராலும் காணப்பட்டது.(15)
அதேவேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற தார்தராஷ்டிரர்கள், மன்னனைக் கண்டு மீண்டும் அணிதிரண்டு, கவசம் தரித்தவர்களாக அங்கே திரும்பி வந்தனர்.(16) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, மழைக்காலங்களில் பொங்கும் கடலைப் போல மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(17) அந்தப் போரில் வெல்லப்படாத தங்கள் மன்னனை {துரியோதனனை} அணுகிய அந்தப் பெரும் வில்லாளிகள், போரிடுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்.(18) அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பீமசேனனத் தடுத்தான். ஓ! ஏகாதிபதி, துணிச்சல்மிக்கப் போராளிகளால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு அந்தப் போரில் ஏவப்பட்ட கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் முற்றிலும் மறைக்கப்பட்டன.(19,20)
அஸ்வத்தாமன் மற்றும் பீமசேனனைப் பொறுத்தவரையில், ஓ! பாரதரே, அவர்கள் இருவரும் கொடுஞ்சாதனைகளைப் புரிபவர்களாக இருந்தனர். அவ்விருவரும் போரில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வில்லின் நாண்கயிற்றை இழுத்ததால் இருவரின் கரங்களும் பல வடுக்களைக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சாதனைகளில் பதிலடி கொடுத்து, மொத்த அண்டத்தையே அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து போரிட்டனர்.(21) வீரனான சகுனி அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்கினான். சுபலனின் வலிமைமிக்க மகன் {சகுனி}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, துருப்புகள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தபடியே உரக்க முழங்கினான்.(22) அதேவேளையில் வீரச் சகாதேவன், வீரனும், வெல்லப்பட்டவனுமான மன்னனை {யுதிஷ்டிரனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தப் போரில் இருந்து கொண்டு சென்றான்.(23) மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு (போருக்குத் திரும்பி வந்த) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், முதலில் ஒன்பது கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஐந்தால் அவனை மேலும் துளைத்தான். பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்} உரத்த முழக்கம் செய்தான்.(24) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அச்சத்தை ஏற்படுத்துவதான அந்தப் போர் இவ்வாறே காண்பதற்கு அற்புதமானதாக இருந்தது. பார்வையாளர்களை மகிழ்ச்சியில் நிறைத்த அந்தப் போர், சித்தர்களாலும், சாரணர்களாலும் புகழப்பட்டது.(25)
அளவிலா ஆன்மா கொண்ட {சகுனியின் மகன்} உலூகன், அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவியபடியே வலிமைமிக்க வில்லாளியான நகுலனை எதிர்த்து விரைந்தான்.(26) வீர நகுலனோ, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான கணைமாரிகளை அந்தச் சகுனியின் மகனை {உலூகனைத்} தடுத்தான்}.(27) அந்தத் தேர்வீரர்கள் இருவரும் நற்பிறப்பையும், வலிமையையும் கொண்டவர்களாக இருந்தனர். பெரும் சினத்துடன் ஒருவரோடொருவர் போரிடுவதாக அவர்கள் இருவரும் காணப்பட்டனர்.(28) அதேபோலக் கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசுரன் பலனோடு போரிடும் சக்ரனை {இந்திரனைப்} போல, எதிரிகளை எரிப்பவனான சிநியின் பேரனோடு {சாத்யகியோடு} போரிட்டுப் பிரகாசமாகத் தெரிந்தான்.(29) துரியோதனன், அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் வில்லை வெட்டி, வில்லற்றிருந்த தன் எதிராளியைக் கூரிய கணைகளால் துளைத்தான்.(30) அம்மோதலில் மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட திருஷ்டத்யும்னன், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மன்னனோடு {துரியோதனனோடு} போரிட்டுக் கொண்டிருந்தான்.(31) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதநீர் பெரும் இரு காட்டு யானைகளுக்கிடையில் நடக்கும் மோதலைப் போல அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(32)
அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட வீரக்கௌதமர் {கிருபர்}, நேரான கணைகள் பலவற்றால் திரௌபதியின் வலிமைமிக்க மகன்களைத் துளைத்தார்.(33) உடல் படைத்த ஒருவன், தன் (ஐந்து) புலன்களோடு போரிடுவதற்கு ஒப்பாக அவருக்கும் அந்த ஐவருக்கும் இடையில் நடைபெற்ற போர் இருந்தது. அச்சத்தை ஏற்படுத்துவதும், மிகக் கடுமையானதாகவும் இருந்த அந்தப் போரில் எத்தரப்பும் அடுத்தவருக்கு எக்கருணையும் காட்டவில்லை.(34) திரௌபதியின் (ஐந்து) மகன்களும், மூடனைப் பீடிக்கும் (ஐம்)புலன்களைப் போலக் கிருபரைப் பீடித்தனர். மறுபுறம் அவரோ அவர்களோடு மிகத் தீவிரமாகப் போரிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தினார்.(35) ஓ! பாரதரே, இவ்வாறே, அவருக்கும் {கிருபருக்கும்}, அவர்களுக்கும் {திரௌபதியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது மிக அற்புதமானதாக இருந்தது.(36)
மனிதர்கள் மனிதர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைகள் குதிரைகளோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் அந்தப் போரானது, சாதாரணமானதாகவும், அச்சந்தருவதுமாக மாறியது.(37) ஓ! தலைவா, இங்கே ஒரு மோதல் அழகானதாக இருந்தால், அங்கே மற்றொரு மோதல் அச்சம்தருவதாகவும், வேறு இடத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் பயங்கரமான பல மோதல்கள் நடைபெற்றன.(38) (இரு படைகளையும் சார்ந்தவர்களான) அந்த எதிரிகளைத் தண்டிப்போர் ஒருவரோடொருவர் மோதி, அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் துளைத்துக் கொன்றனர்.(39) போர்வீரர்களின் வாகனங்களாலும், விலங்குகளாலும் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி மேகம் அங்க காணப்பட்டது. ஓ! மன்னா, ஓடும் குதிரைகளால் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதியும், காற்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.(40) சக்கரங்களாலும், யானைகளின் மூச்சுக்காற்றாலும் எழுப்பப்பட்ட புழுதியானது, மாலை மேகத்தைப் போல வானத்தில் அடர்த்தியாக எழுந்தது.(41)
புழுதி எழுந்து, சூரியன் ஒளியை இழந்து, பூமி மறைக்கப்பட்டபோது, வீரமும், வலிமையும் கொண்ட தேர்வீரர்களைக் காண முடியவில்லை.(42) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, வீரர்களின் குருதியால் பூமி நனைக்கப்பட்டபோது, ஒருகணத்தில் புழுதி மறைந்து அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது.(43) உண்மையில், அடர்த்தியானதும், பயங்கரமானதுமான அந்தப் புழுதி மேகம் தணிக்கப்பட்டது. அப்போது, ஓ! பாரதரே, அந்த நடுப்பகலில் போராளிகளுக்கிடையில் தங்கள் தங்கள் பலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் உண்டானவையும், மிகக் கடுமையானவையுமான பல்வேறு தனிப்போர்களை என்னால் காண முடிந்தது. அந்த அருஞ்செயல்களின் பிரகாசமான காந்தி முழுமையாகக் காட்சியில் தோன்றியது.(44,45) அந்தப் போரில் பாய்ந்த கணைகளின் ஒலியானது, அனைத்துப் பக்கங்களிலும் எரிந்து கொண்டிருக்கும் பரந்த மூங்கில் காட்டில் எழும் ஒலிக்கு ஒப்பான போரொலியாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(46)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 46
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |